மந்திரச் சந்திப்பு- 5

திடீரென குறுக்கிட்ட குரலைக் கேட்டு குழம்பிப்போன சுந்தரன், குரலுக்குச் சொந்தக்காரரை அடையாளம் காட்டும்படி, தனக்கு மந்திரங்கள் கற்பித்த குருவை வேண்டினான்.

அவரோ, ஒரு பழைய காகிதத்தைக் காட்டினார்.

காகிதம் எங்காவது பேசுமா என்ன? அதுவும் செய்தித்தாள் போல இருந்தது.

சுந்தரன், இம்முறை கண்ணை மூடி, அந்த செய்தித்தாள் எங்கே இருகிறது எனக்கண்டறிய முயன்றான். சூர்யா தொடங்கி, கடைசியாக உரையாடலில் இணைந்துகொண்ட குமார் வரை எல்லோரைச் சுற்றிலும் நோட்டமிடுவதுதான் அவனது திட்டமாக இருந்தது.

அப்படி அவன் சூர்யாவிற்கு பின் ஷாலுவைச் சுற்றிலும் கவனிக்கும்போது, “தம்பி சுந்தரா! ரொம்பவும் சிரமப்படவேண்டாம். நான் பழைய செய்தித்தாளே தான். இப்போது மயிலின் காலடிக்குப் பக்கத்தில் இருக்கிறேன்.” என்றது அக்குரல்.

அக்குரலைக்கேட்ட மயில் கீழே குனிந்து பார்த்தாள். கசக்கி, எறியப்பட்ட செய்தித்தாள் உருண்டைபோல கிடந்தது.

“ஆமா, மயில் என்னைத்தான் கசக்கி எறிந்துள்ளனர். என்னை கொஞ்சம் கையில் எடுத்து விரித்து, சரி செய்யேன்” என்றது அக்குரல்.

அவள் தயக்கத்துடன் முத்திரள் உருவத்தில் தெரியும் சூர்யாவைப் பார்க்க, அவன் சுந்தரனைப் பார்க்க, அவன் பயப்படாதே செய் என்பதுபோல சைகை செய்தான். சின்னத்தயக்கத்துடன் அந்த காகிதப் பந்து உருண்டையை கையில் எடுத்துப் பார்த்தாள். ஒன்றும் வித்தியாசமாகத் தெரியவில்லை.

அந்த காகிதப் பந்தை மண் தரையில் வைத்து, மெதுவாக, நீவி நீவி விரித்தாள் மயில். எல்லோரும் ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தனர். முழுக்காகிததையும் நன்றாக விரித்தபின் அதில் ஒரு சிறுவனின் உருவம் தெரிந்தது.

செய்தித்தாளில் படம் வரையப்பட்டு, அதை யாரோ வெட்டி தனியே எடுத்துவிட்டதுபோலத் தெரியது. மயிலுக்கு வியப்பாக இருந்தது.

“ஆமா.. யார் நீ?” என்று கேட்டாள்.

“என்னை மீட்டதற்கு உங்கள் எல்லோருக்கும் நன்றி! நான் தான் காகிதப்பாப்பா” என்றது அந்த காகிதச்சிறுவன்.

”என்னது.. காகிதப்பாப்பாவா..?! எங்கேயோ கேள்விப்பட்டது மாதிரி இருக்கே?” என்றபடியோ யோசித்தான் சுந்தரன்.

மற்ற எவருக்கும் அப்படி ஒரு பெயரைக் கேள்விப்பட்டதாக நினைவு இல்லை. வித்தியாசமான தோற்றத்தில் இருந்த அந்த உயிரை வினோதமாகப் பார்த்துக்கொண்டிருந்தன.

“ஆ..ஆங்.. எங்கள் நாட்டின் நூலகத்தில் பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்” என்றான் சுந்தரன்.

“ஹா..ஹா.. அபாரமான ஞாபக சக்தி உனக்கு சுந்தரா” என்று சிரித்தது காகிதப் பாப்பா.

“எங்களுக்கு ஏதும் தெரியாதே.. நீயே சொல்லிவிடேன்.” என்று கேட்டாள் மயில்.

”சரி!” என்று ஒப்புக்கொண்ட காகிதப் பாப்பா, தன்னுடைய கதையைச் சொல்ல ஆரம்பித்தது.


“மணி என்னும் சிறுவன் கையில் ஒரு மந்திரநூல் கிடைக்கிறது. அந்த மந்திரநூலில் ஒரு மந்திரம் எதற்கும் உயிர்கொடுக்கூடியது என்று சொல்லப்பட்டு இருந்தது. அதை சோதித்துப் பார்க்க விரும்பிய அவன், ஒரு செய்தித்தாளில் என் உருவத்தை வரைந்து மந்திரத்தைச் சொல்ல, எனக்கு உயிர் வந்துவிட்டது. அதோடு நான் காகிதம் என்பதால் அப்படியே வானில் பறந்துவிட்டேன். அப்போதுதான் எனக்கு காற்று அண்ணாவின் பழக்கம் ஏற்பட்டது. அவரின் உதவியோடு உலகம் முழுக்க சுற்றிப் பார்த்தேன். என் கதையை, ’பறக்கும் பாப்பா’ என்று ‘கல்வி’ கோபாலகிருஷ்ணன் என்ற எழுத்தாளர் எழுதினார். அறுபது ஆண்டுகளுக்கு முன்னாடியே சிறந்த சிறுவர் நூலுக்கான மத்திய அரசு விருதை என் கதை வாங்கி இருக்கு தெரியுமா?

மீண்டும் என்னையே முக்கிய கதாபாத்திரமாக்கி, ”பண்டைய உலகில் பறக்கும் பாப்பா” என்று இன்னொரு கதை எழுதினார். அதற்கும் பரிசு கிடைத்தது. அந்தக் காலத்தில் நான் குழந்தைகளிடையே ரொம்ப பிரபலம்.” என்றது காகிதப்பாப்பா.

“நீ எப்பவுமே பிரபலம்தான் பாப்பா, எங்க ஆசிரியர், நூலகர் எல்லாம் உன் கதையை எனக்கு சொல்லி இருக்காங்க” என்றான் சுந்தரன்.

“ஓ.. அப்படியா.. ரொம்ப சந்தோஷம். ஆமா.. முத்திரள் உருவமாக இப்படி சந்திக்கிற யோசனை நல்லாத்தான் இருக்கு. ஆனா ஒரே இடத்துக்குள் இருந்தால் ரொம்பவும் சலிப்பு தோன்றிடுமே?”

“ஊரடங்கு, வீடடங்குன்னு அரசு சொல்லுது. அப்புறம் எப்படி வெளியே போகமுடியும்.?”

“நான் காகிதமாக இருப்பதால் என்னை, காற்று அண்ணன் பறக்க வைத்தார். ஆனால் வீட்டுக்குள் இருக்கும் உங்களுடைய இந்த முத்திரள் உருவங்களை பறக்க வைக்க முடியுமான்னு தெரியலையே..?” என்றது காகிதப் பாப்பா!

“புரியலையே?!” என்றான் சுந்தரன்.

“மூடி அறைக்குள் இல்லாமல், என்னைப்போல, மயில் போல வெட்ட வெளிக்கு உங்களால் வரமுடியுமா?”

“இப்போதைய சூழலில் வெட்டவெளி என்றால் மொட்டை மாடிக்கோ, வீட்டு வாசலுக்கோ வரமுடியும்”

“மொட்டை மாடியோ, வீட்டு வாசலோ வெட்டவெளியில் உங்களின் முத்திரள் உருவம் இருந்தால் காற்று அண்ணன் நம்மை பறக்க வைப்பார் என நம்புகிறேன்” என்றது காகிதப் பாப்பா.

“வாவ்..” என்றாள் ஷாலு.

காகிதப்பாப்பா சொன்னதைக் கேட்டதுமே உற்சாகமாக இருந்தது. கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் இது எவ்வளவு தூரம் சாந்தியம் என்ற எண்ணம் வந்துமே எல்லோரின் உற்சாகமும் வடிந்துவிட்டது. யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தனர்.

(காகிதப்பாப்பாவின் யோசனை பலிக்குமா? நாளை பார்க்கலாம்)

பாகம் 1: https://blog.balabharathi.net/?p=1973
பாகம்2: https://blog.balabharathi.net/?p=1977
பாகம்3: https://blog.balabharathi.net/?p=1981
பாகம்4: https://blog.balabharathi.net/?p=1986
பாகம்5: https://blog.balabharathi.net/?p=1989

This entry was posted in சிறுவர் இலக்கியம் and tagged , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 4 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.