முத்திரள் உருவம் வழியாக நண்பர்களின் சந்திப்பு பற்றியும், தான் பறந்த கதை எல்லாவற்றையும் ஜான்சனுக்குக் கூறியது காகிதப்பாப்பா. அதனிடம் தான் பறக்க ஒரு குழந்தை எழுத்தாளர் காரணம் என்று ஜான்சன் கூறியதும் வியந்துபோன அது, அந்த எழுந்த்தாளர் யார் என்று கேட்டது.
“வாண்டுமாமா” என்றான் ஜான்சன்.
“என்னது வாண்டுமாமாவா?”
”ஆமா, குழந்தைகளுக்காக பல கதைகள் எழுதி இருக்காரே.. அவரே தான். காலத்தால் அழியாப் புகழ்பெற்ற அவரது கதைகளைப் போலவே அவரது பாத்திரப்படைப்புகளும் சாகாவரம் பெற்றவை. அவர் எழுதிய பலே பாலுவும் பறக்கும்டிராயரும் கதை பற்றித் தெரியுமா? அந்த பாலு பயன்படுத்திய டிராயர் என் கையில் கிடைத்தது. அதைநான் கொஞ்சம் ஒட்டுத்துணி எல்லாம் கொடுத்து, முழுப் பேண்ட் ஆகா மாற்றிவிட்டேன்.” என்றான் ஜான்சன்
”ஓஹோ! அப்ப நீ அணிந்திருக்கும் காற்சட்டை பாலுவோடதா?”
“ஆமா! அவனுக்கு அதைக்கொடுத்தது, வாண்டுமாமா. அதனாலதான் அப்படிச்சொன்னேன்” என்று சிரித்தான் ஜான்சன்.
”ஓ..ஓ. ஹா.. ஹா..” என்று சிரித்த காகிதப்பாப்பா, “இந்த ஊரடங்கினால் கஷ்டப்படும் மக்களுக்கு உதவலாம்னு நாங்க எல்லாம் நினைச்சிருக்கோம்” என்றது.
“நானும் அதைத்தான் செய்துட்டு இருந்தேன்” என்றான் ஜான்சன்.

“அப்படியா?! என்ன செய்தாய்”

“சாலை ஓரங்களில் மக்கள் கூட்டமாக நடந்து வருவதைப் பார்த்தாலோ, சாப்பாடு இல்லாமல் யாராவது வயசானவங்க பசியில படுத்துக்கிடப்பதைப் பார்த்தாலோ, உடனடியாக நூறுக்கு கால் செய்து சொல்லிடுவேன். கொஞ்ச நேரத்துலயே போலீஸ் அங்கே போயிடுவாங்க” என்றான் ஜான்சன்.

“வாவ்.. நல்ல யோசனை, நாங்களும் இப்படி ஏதாவது செய்யலாம்னுதான் யோசிச்சுட்டு இருந்தோம். ஆனால் போலீஸுக்கு கால் செய்தால், நம்பரை வச்சு உன்னைக் கண்டு பிடிச்சுட்டால், இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்னு கேட்க மாட்டாங்களா?”

“அதுக்கு என்னிடம் ஒரு மந்திரக்கல்லு இருக்கு” என்றான் ஜான்சன்.

“என்னது அது?” என்று வியப்புடன் கேட்டது காகிதப் பாப்பா.

“அது எங்க வீட்டில் இப்ப வச்சிருக்கேன் வா!” என்று சர்ரென்று தன் வீடு நோக்கி பறந்தான் ஜான்சன். அவனைப் பின் தொடர்ந்து சென்றது காகிதப் பாப்பா.

“அது என்னதுன்னு காட்டு, நண்பர்களிடம் கலந்துபேசி, உன் மூலமே நாங்களும் மக்களுக்கு ஹெல்ப் செய்யுறோம்.”

“ஏதோ.. முத்திரள் உருவம்னு சொன்னியே அது எங்கே..?”

“வரும்.. வரும்” என்றது காகிதப்பாப்பா.
ஜான்சனின் வீட்டு மொட்டை மாடியில் சென்று இறங்கினர்.

மெட்டை மாடியிலேயே ஓர் அறை இருந்தது. ‘வா, வா’ என்று சைகை கட்டியவாறு அங்கே ஓடினான் ஜான்சன்.

அது தட்டுமுட்டு பொருட்கள் வைப்பதற்கான அறை. உடைந்த மர நாற்காலி, கிணற்றுக்குள் விழும் பொருட்களை எடுக்கும் பாதாளக்கரண்டி, பழைய பெயிண்ட் டப்பாக்கள் என்ற பல பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. அவனது பழைய ஸ்கூல் பை ஒன்று சுவர் ஓரம் வைக்கப்பட்டிருந்தது. அந்த அறைக்குள் ஒரு பகுதியை கூட்டி சுத்தப்படுத்தி வைத்திருந்தான் ஜான்சன்.

அந்தப் பையை எடுத்துக்கொண்டு கீழே உட்கார்ந்தான். அதன் ஜிப்பைத் திறந்து, உள்ளே கைவிட்டு, ஒரு கல்லை எடுத்து நீட்டினான் ஜான்சன்.

பார்ப்பதற்கு ஏதோ உடைந்த கருங்கல் போல இருந்தது.

“இதுதான் அந்த மந்திரக்கல்லா?” என்று கேட்டது காகிதப்பாப்பா.

“ஆமாம்!”

“இது என்ன மாதிரியான மந்திரம் செய்யும்?” என்று காகிதப்பாப்பா கேட்டுக்கொண்டிருக்கும்போது, யாரோ நடந்துவரும் ஓசை கேட்டது.

“ஐயையோ.. யாரோ வர்றாங்க போல..”

“இப்ப என்ன செய்யுறது?”

“மறைஞ்சுக்கோ..”

“என்னால மறைய எல்லாம் முடியாது. வேணும்னா.. அப்படியே படுத்துக்கிறேன்” என்ற காகிதப் பாப்பா, அப்படியே மடிந்து கீழே விழுந்தது.

“டேய்.. ஜான்சா…” அவனது அம்மாவின் குரல் அருகில் கேட்டது..

(நாளை)

பாகம்1: https://blog.balabharathi.net/?p=1973
பாகம்2: https://blog.balabharathi.net/?p=1977
பாகம்3: https://blog.balabharathi.net/?p=1981
பாகம்4: https://blog.balabharathi.net/?p=1986
பாகம்5: https://blog.balabharathi.net/?p=1989
பாகம்6: https://blog.balabharathi.net/?p=1997
பாகம்7: https://blog.balabharathi.net/?p=2003
பாகம்8: https://blog.balabharathi.net/?p=2008
பாகம்9: https://blog.balabharathi.net/?p=2013