
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, அரசு விதித்த ஊரடங்கினால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எப்படியாவது உதவ முடிந்தால் நன்றாக இருக்கும் என்று நண்பர்களுக்கும் பேச்சு எழுந்தபோது, எல்லோரும் வீட்டுக்குள் இருந்துகொண்டு, வீதியில் கஷ்டப்படும் மக்களுக்கு எப்படி உதவ முடியும் என்ற கேள்வியும் எழுந்தது.
தன்னிடம் ஒரு யோசனை இருப்பதாகச் சொன்னது காகிதப்பாப்பா.
எல்லோரும் ஆர்வமாக, “என்ன யோசனை?” என்று கேட்டனர்.
“என்னால் காற்றில் பறக்க முடியும். அதுவும் காற்று அண்ணன் நினைத்தால் எவ்வளவு வேகமாக வேண்டுமானாலும் என்னைக்கொண்டு போவார். அவரிடம் விஷயத்தை சொல்லிவிட்டால், உங்கள் ஊரைச்சுற்றிலும் நான் பறந்து பறந்து பார்க்கிறேன்.”
”சரி.. நீ பார்ப்ப.. ஆனால் எப்படி உதவமுடியும்?”
“முதலில் என் பேச்சை முடிக்கவிடுங்கப்பா..” என்ற காகித்தப் பாப்பா தொடர்ந்து பேசியது, “ பறக்கும்போது நான் காண்பதை அப்படியே உங்களுக்கு தகவலாகச் சொல்லிவிடுகிறேன். நீங்கள் உள்ளூரில் இருக்கும் காவல்துறைக்கு அழைத்து விஷயத்தைக்கூறுங்கள்.”
“உண்மையில் நல்ல யோசனை”
“மிகவும் நல்ல காரியம்.காகிதப்பாப்பா.. நீ பறந்தாலும் எங்களுக்கு முத்திரளாகத் தெரிவாய்!” என்றான் சுந்தரன்.
“நன்றி சுந்தரா” என்றது பாபா
“நான் என்னமோன்னு நினைச்சேன். சிறப்பான யோசனை”
“ஆனா.. காகிதப்பாப்பா, பறக்கும்போது கவனமாக இரு” என்றாள் மயில்.
“அது எல்லாம் கவலைப்படாதே.. கவனமாக இருந்துகொளிறேன்” என்ற அது, காற்று அண்ணனின் வருகைக்காக தயாராக நின்றது. சில வினாடிகளில் மெல்லியக்காற்று வீசியது. அது அப்படியே காக்கிதப்பாப்பாவைத் தூக்கிக்கொண்டு பறந்தது.
மேலிருந்து காகிதப்பாப்பா, கீழே பார்த்தது. மயிலின் ஊர் மலைக்கிராமம் என்பதால்.. அமைதியாக இருந்தது. ஊரைச்சுற்றிய மரங்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாய் இருந்தன. மலைக்குச் செல்லும் சாலைகள் வெறிச்சோடி இருந்தன.
“நண்பர்களே! மயிலின் ஊரைச்சுற்றிலும் சாலையில் யாருமில்லை. அடுத்து நான் எந்த ஊருக்கு பயணிக்கட்டும்?”
“எங்க ஊருக்கு வாயேன் பாப்பா?” என்றான் குமார்.
“அவ்வளவு தானே.. இதோ.. ஒளியைவிட வேகமாக, எனது காற்று அண்ணன் என்னை ராமேஸ்வரம் நோக்கி அழைத்துச்செல்லப்போகிறார்.” என்று அது சொல்லிக்கொண்டிருக்கும் போதே.. காற்று அண்ணன் அதை அள்ளிக்கொண்டு வேகமாகப் பறந்தது.
மேலிருந்து கீழே தெரிந்த கோவில்கள், பெரிய பெரிய கட்டடங்கள், நீண்டு கிடந்த தேசிய நெடுஞ்சாலை, அதனை ஒட்டிய நகரங்கள் என்று எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தபடியே பறந்துகொண்டிருந்தது காகிதப் பாப்பா.
அப்போதுதான் எதிர்பாராத அந்த காட்சியைக் கண்டது.
முதலில் அதனால் நம்ப முடியவில்லை. கண்களைக் கசக்கிவிட்டு, மீண்டும் பார்த்தது.
“காற்று அண்ணே.. அந்தக் காட்சியைப் பார்த்தீர்களா?”
“ம்.. பார்க்கிறேன். இதெப்படி சாத்தியம் எனக்கும் வியப்பாக உள்ளதே தம்பி!” என்றது அது.
அங்கே அவர்கள் பார்த்தது வியந்தது, காற்றில் பறந்துகொண்டிருந்த ஒரு சிறுவனை.!
“அண்ணா, அந்தச் சிறுவனின் அருகில் என்னைக்கொண்டு செல்லுங்கள்” என்றது காகிதப்பாப்பா.
காற்று அண்ணனும் பறந்துகொண்டிருந்த அந்தச் சிறுவனின் அருகில் காகிதப் பாப்பாவைக் கொண்டு சென்றது.
பறந்துகொண்டிருந்த அந்த சிறுவன், காற்றில் படுத்து இருந்தான். காகிதப் பாப்பாவை ஏதோ காகிதம் என்று எண்ணியவன், சில வினாடிகளிலேயே அக்காகிதத்தில் இருந்த மாற்றத்தினை உணர்ந்துகொண்டான். காகிதப் பாப்பாவின் உருவத்தைக் கண்டுகொண்டவன், ”ஹாய்.. யார் நீ?” என்று கேட்டான்.
“நான் காகிதப் பாப்பா”
“என்னது, காகிதப் பாப்பாவா?”
“ஆம், காகிதப்பாப்பா தான். ஒரு சிறுவர் எழுத்தாளர்தான் என்னை உருவாக்கினார்” என்றது.
“ஓ.. அப்படியா.. வியப்புதான்” என்றான் அந்தச் சிறுவன்.
“ஆமா! நீ யாருன்னு சொல்லையே..?”
“சாரிப்பா! நான் ஜான்சன். எனது ஊர் தங்கச்சிமடம்” என்றான் அவன். (புதையல் டைரி கதையில் பார்த்தே அதே ஜான்சன் தான்.)
“தங்கச்சிமடம்? ராமேஸ்வரம் பக்கம் இருக்கிறதே அதுவா..?”
“ஆம். அதே தான். இதோ.. இப்படிக்கா போனால் என் ஊர் வருதுவிடும்.” என்று அவன் கையை நீட்டிக்காட்டினான்.
“ஓ.. நாம் வந்துவிட்டோம் போலிருக்கே..” என்றது காகிதப்பாப்பா.
“ஆமாம்.. இன்னும் கொஞ்ச தூரம் தான்” என்றது காற்று அண்னன்.
“ஹே.. இப்ப யார் பேசினது?”
“காற்று அண்ணன்”
“என்னது காற்று அண்ணனா?”
”ஆமாம்.. அவர்தான் பேசினார். நானும் நீயும் இப்படிப் பறப்பதற்கு உதவுகிறவரே அவர்தான். ஆமாம்.. நீ எப்படி பறக்கிறாய்?”
“நான் பறக்கவும் ஒரு குழந்தை எழுதாளர்தான் காரணம்!” என்றான் ஜான்சன்.
“யார் அவர்?” என்று காகிதப் பாப்பா கேட்டது.
(ஜான்சன் பதில் என்னவாக இருக்கும்? அந்த எழுந்த்தாளர் யாராக இருப்பார்? நாளைப் பார்க்கலாம்)
பாகம்1: https://blog.balabharathi.net/?p=1973
பாகம்2: https://blog.balabharathi.net/?p=1977
பாகம்3: https://blog.balabharathi.net/?p=1981
பாகம்4: https://blog.balabharathi.net/?p=1986
பாகம்5: https://blog.balabharathi.net/?p=1989
பாகம்6: https://blog.balabharathi.net/?p=1997
பாகம்7: https://blog.balabharathi.net/?p=2003
பாகம்8: https://blog.balabharathi.net/?p=2008
+++++++++++++++++++++++++