கிழிந்து போன காகிதப் பாப்பாவை சரி செய்ய என்ன செய்வது என்று எல்லோரும் கலங்கிக் கொண்டிருந்தபோது, அமீர் கொடுத்த ஆலோசனையின் படி, தன் வீட்டில் இருக்கும் முருங்கை மரப்பிசின் டப்பாவை எடுக்க ஓடினாள் மயில்.

வீட்டின் முன்பக்கம் இருந்த மர நிழலில் நார் கட்டிலைப் போட்டு அதில் அவளது அப்பா படுத்திருந்தார். அம்மவோ, அந்தப்பக்கம் கல் அடுப்பில் வெந்நீர் வைத்துக்கொண்டிருந்தார்.

வீட்டுக்குள் ஓடிய மயில், காகிதப் பாப்பாவையும் மரப்பாச்சியையும் கீழே வைத்துவிட்டு, அந்த மரப்பிசின் டப்பாவைத் தேடினாள். அதிகம் வேலை கொடுக்காமல் எப்பவும் இருக்குமிடத்தில் அது இருந்தது. முகம் பார்க்கும் கண்ணாடியை சுவற்றில் இருந்து கழட்டினாள்.

அவளின் பின்னாடியே அத்தனை பேரின் முத்திரள் உருவமும் இருந்தன.

“குட்! இப்போ.. அந்த பிசின் டப்பாவில் இருந்து, பிசினை எடுத்து அந்த கண்ணாடியின் மீது நீளமாகத் தடவு” என்றான் அமீர்.

குழப்பிப்போன மயில் அமீரையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

”என்ன மயிலு?”

“இல்லைங்கண்ணா.. எனக்கு புரியலை. கண்ணாடியில பிசினைத் தடவினா.. காகிதப்பாப்பா எப்படி சரியாவும்?”

“அதானே..?” என்றான் குமார்.

“அடடா.. கண்ணாடியில பிசினைத் தடவினா.. காகிதப் பாப்பா சரியாகாது. மொதல்ல சொல்லுறதை செய் மயிலு. அடுத்தடுத்தும் வேலை இருக்கு..!” என்றான் அமீர்.

பலருக்கும் அமீர், என்ன செய்ய நினைக்கிறான் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. ஆகவே அமையாக நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

பிசின் டப்பாவின் செருகப்பட்டிருந்த பிரஷ் போன்ற குச்சியையை எடுத்து முகம்பார்க்கும் கண்ணாடியில் கீழிருந்து மேலாகவும் மேல் இருந்து கீழாகவும் பிசினைத் தீட்டினாள் மயில்.

”சரி! இப்ப அந்தக்கண்ணாடியைக் கொண்டுபோய் வெயிலில் வை. கொஞ்ச நேரம் ஆனதும். நீ பட்டையாகத் தீட்டின, அந்த பிசின் காய்ஞ்சி போயிடும். அப்புறம் ஒரு பக்கத்தை நைசா, கிளறி எடுத்தா.. அப்படியே நீளமா கையில் வந்துடும். அதை அப்படியே எடுத்துக்கொண்டுபோய், காகிதப்ப் பாப்பாவின் கிழிந்த பகுதியின் மேல் வைத்து ரெண்டு சொட்டு நீர் விடு. அவ்வளவுதான் பசை கெட்டியாக ஒட்டிக்கொள்ளும்.” என்றான் அமீர்.

“வாவ்.. செம்மையான யோசனையாக இருக்கேண்ணா” என்றாள் மயில்.

“இது தற்காலிகத் தீர்வுதாம்மா.. கொரோனா பிரச்சனை முடிஞ்சதும், நல்ல டேப் வாங்கி ஒட்டி விட்டுடுங்க” என்றான் அமீர்.

”இதோ நான் ஒட்டிவிட்டு வருகிறேன்” என்று ஓடினாள் மயில்.

”அருமையான யோசனை வழங்கினாய் அமீர்” என்று கூறிய சுந்தரன் கைதட்டினான். எல்லோரும் சேர்ந்து கைதட்டினர்.

“எங்க டீமிலேயே அமீர் தான் லீடர். ஆளு பார்க்க பாவம்போல இருந்தாலும் பயங்கரமான மூளைக்காரன் என்று சொல்லி சிரித்தான் குமார். அனைவரும் சிரித்தனர்.

”ஆக.. நம்மால் பறக்க முடியாது” என்று வருத்தத்துடன் கேட்டது ஜூஜோ!

“கவலைப்படாதே ஜூஜோ! நாட்டின் இந்த நெருக்கடியான நிலைமை மாறட்டும் நான் வந்து உன்னை கையோடு தூக்கிக்கொண்டு பறக்கிறேன்.” என்றான் சுந்தரன்.

“அதுவும் சரிதான். வானத்தில் இருந்து இந்த பூமியைப் பார்க்கவேண்டும் என்பதே எனது நெடுநாள் ஆசை”

“அதெல்லாம் கண்டிப்பாக ஒருநாள் நிறைவேறும்” என்றான் குமார்.

”ச்சே..! வெளியேவும் போகமுடியாது. வீட்டுக்குள்ளேயே பயங்கரமாக போர் அடிக்குது. என்ன செய்யுறதுன்னே தெரியலையே..” என்று வருத்தப்பட்டாள் ஷாலு.

“ஷாலு, நமக்காச்சும் வீடுன்னு ஒண்ணு இருக்கு. அம்மா அப்பா எல்லோரும் கூடவே இருக்காங்க. ஆனா.. இதுவும் இல்லாமல் பலரும் நடந்து போறாங்க. ட்ரைன் இல்லை, பஸ் இல்லை. இருக்கும் ஊரில் வேலையும் இல்லை. அதனால வருமானமும் இல்லை. சாப்பாடுமில்லை. சொந்த ஊரிலாவது போனால் பசியாறலாம்னு நடக்குறாங்களாம். டிவியில கூட காட்டினாங்க” என்றான் அமீர்.

“ச்..ச்.. பாவம் அவங்க எல்லாம். நாமளோ சின்ன பசங்க. நாம எப்படி அவங்களுக்கு உதவ முடியும்?” என்று கேட்டாள் ஷாலு.

“எனக்கும் தெரியலையே.. தெரிஞ்சா உதவி இருப்பேனே!” என்றான் அமீர்.

”யாமிருக்கப் பயம் ஏன்?”

குரல் வந்த திசையில் இடுப்பில் கைவத்தபடி நின்றிருந்தது காகிதப்பாப்பா.

“அட..! அதுக்குள்ள சரியாகிட்டியா?”

“எல்லாம் அமீர் ஐடியாவும், மயிலின் சேவையும்தான்” என்ற காகிதப் பாப்பா, தனது உடலின் முன் பக்கமும், பின் பக்கமும் காட்டியது. கிழிந்திருந்த பகுதியின் இரு பக்கமும் பிசின் போட்டு அருமையாக ஒட்டி இருந்தாள் மயில்.

“இப்ப நான் ஆடுவேன். ஓடுவேன். பல்டியும் அடிப்பேன்” என்றபடியே ஒரு குட்டிக்கரணம் அடித்தது.

“ஆகா.. அசத்திவிட்டாய் மயில்” என்றான் அமீர்.

“எல்லாம் நீங்க கொடுத்த ஐடியாதான்ணா” என்றாள் மயில்.

“இப்படியே மாறி, மாறி புகழ்ந்துகொண்டு இருந்தால் போதுமா..! நீங்கள் பேசியதைக் கேட்டேன். கஷ்டப்படும் மக்களுக்கு நிச்சயம் உதவமுடியும். அதற்கு என்னிடமும் ஒரு யோசனை இருக்கு!”

”என்ன யோசனை..?” என்றனர் எல்லோரும் ஆர்வமாக!

(காகிதப்பாப்பா, கூறிய யோசனை என்ன? இவர்களால் அதைச் செய்ய முடியுமா? நாளை பார்க்கலாம்)

பாகம1: https://blog.balabharathi.net/?p=1973
பாகம்2: https://blog.balabharathi.net/?p=1977
பாகம்3: https://blog.balabharathi.net/?p=1981
பாகம்4: https://blog.balabharathi.net/?p=1986
பாகம்5: https://blog.balabharathi.net/?p=1989
பாகம்6: https://blog.balabharathi.net/?p=1997
பாகம்7: https://blog.balabharathi.net/?p=2003