மந்திரச் சந்திப்பு- 6

காகிதப் பாப்பா சொன்னபடியே, சூர்யாவும் ஷாலுவும் மொட்டைமாடிக்கு வந்துவிட்டனர். மயிலும் குமாரும் வெட்டவெளியில் நின்றனர். மயிலுக்கு ஓர் அடி இடைவெளியில் தரையில் பரப்பப்பட்டிருந்தது காகிதப்பாப்பா.

ஆள் நடமாட்டம் இல்லாத அரண்மனையின் உடற்பயிற்சி மைதானத்தில் நின்று கொண்டிருந்தான் சுந்தரன்.

மெதுவாக காற்று வீசத்தொடங்கியது. தரையில் விரித்துவைக்கப்பட்டிருந்த காகிதப் பாப்பா, இங்குமங்கும் காற்றில் ஆடியது. மெல்ல மெல்ல,, அப்படியே மேலே எழுந்து பறக்கத்தொடங்கியது.

அது பறப்பதையே எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். இப்போது காற்று சற்றே பலமாக வீசியதுபோல இருந்தது. எல்லோரின் முன்னாடியும் அவர்களின் முத்திரள் உருவங்களும் அங்கேயே இருந்தன.

“டேய் குமாரு, வீட்டு வாசலில் ஏண்டா நிக்குற?”

திடீரெனக் கேட்ட குரலால் திடுக்கிட்டான் குமார். தாயக்கத்துடன் திரும்பிப்பார்த்தான் குமார். யாரும் பின்னால் இல்லை.

“திரும்பவும் இங்கே பாருடா” இம்முறை கேட்ட குரல் மேலிருந்து கேட்டதுபோல இருந்தது, அது வந்த திசையை நோக்கினான்.

நாலுவீடு தள்ளி, ஒரு வீட்டின் மொட்டைமாடியில் இருந்து கையாட்டினான் அமீர்.

”சும்மாத்தான்டா அமீர்” என்று இங்கிருந்து குரல்கொடுத்தான் குமார்.

அமீர் பெயரைக்கேட்டதுமே ஜூஜோ , “ஐ.. அமீரும் வந்துட்டானா?” என்று கேட்டது.

”இல்லை ஜூஜோ, அவன் நாலு வீடு தள்ளி இருக்கான்.”

“அவனையும் நம்மோடு சேர்த்துக்கலாமே..”

“சுந்தரன், அமீரையும் நம்ம முத்திரள் கூட்டத்தில் இணைக்குறீங்களா?” என்று கேட்டான் குமார்.

“நிச்சயமாக” என்று சுந்தரன் கூறிய சில வினாடிகளில், அமீர் முன்னால் அனைவரின் உருவங்களும் தோன்றின. நீல வண்ணத்தில் தோன்றிய முத்திரள் உருவங்களைப் பயத்தில் அவன் ஓடத்தொடங்கினான். அதைப் பார்த்த எல்லோரும் சத்தம்போட்டு சிரிக்க, சில அடிகள் ஓடிய அமீர் நின்று திரும்பிப் பார்த்தான்.

ஜூஜோவைப் பார்த்ததும் கொஞ்சம் தைரியம் வந்த்து. “ஐ! ஜூஜோ! என்ன இதெல்லாம்?” என்று கேட்டான்.

குமாரும், ஜூஜோவும் அவனுக்கு விவரமாக எடுத்துச்சொன்னார்கள்.

எல்லாவற்றையும் வாய் பிளந்து கேட்டிருக்கொண்டிருந்தான். அவனால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

“அப்ப, அந்த காகிதப் பாப்பா, நம்மை பறக்கவைக்கிறேன் சொல்லிட்டு, அது பறந்து போயிடுச்சா..” என்று கேட்ட அமீர் சிரித்தான்.

“அப்படியெல்லாம் இல்லடா.. முதலில் அதுபோய் காற்றிடம் பேசிவிட்டு வரவேண்டாமா?”

“அதுவும் சரிதான்” என்று அமீர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, காற்று பலமாக வீசியது.

“நண்பர்களே, மன்னிக்க” என்றபடியே பறந்துவந்தது காகிதப் பாப்பா.

“ஏன் என்ன ஆச்சு..?”

“காற்று அண்ணனால் என்னை மட்டும்தான் பறக்க வைக்க முடியுமாம். முத்திரள் உருவத்தை எல்லாம் அவரால் பறக்க வைக்கமுடியாதுன்னு சொல்லிவிட்டார்.” என்று சோகமாக சொன்னது.

“ஐயையோ..” என்று கத்தினாள் மயில்.

“ஏய்.. என்னாச்சு..?”

“காகிதப்பாப்பா.. உன் காலைப் பார்” என்று கத்தினாள் மயில்.

அப்போதுதான் காகிதப்பாப்பா, தன் காலைப் பார்த்தது. அதன் வலது பக்க இடுப்புக்கு கீழே தொடைப் பகுதி கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தது.

“ஐயையோ.. இது எப்படி ஆச்சு மயில்” என்று கேட்டாள் ஷாலு.

“தெரியலையே..”

“கசக்கப்பட்டு வீசிய என்னை, நீதானே மயில், சரி செய்தாய்..?”

“ஆமா..”

“பல ஆண்டுகளாக கசங்கிய காகிதமாகக் கிடந்த நான், உன் கைபட்டு முழு உருவத்தை அடைந்தாலும்.. கசங்கிய பாகங்கள் முழுமையாக சரியாகி இருக்காதுதானே.. அதோடு, காற்று அண்ணனுடன் பறந்துவிட்டு வந்ததால்.. இப்பகுதி கிழிந்து போயிருக்கும். இதனால் தான் என்னால் பழைய படி பறப்பதின் சுகத்தை அனுபவிக்க முடியவில்லை போல. கீழே வருவதிலும் அதனால் தான் தாமதம் ஆகி இருக்கு. ம்.. என் கதை அவ்வளவுதான்” என்று சோகத்துடன் கூறியது காகிதப்பாப்பா.

”ச்சூ.. அப்படியெல்லாம் சொல்லாதே” என்று சத்தம்போட்டான் அமீர்.

“ஐயோ.. உனக்கு வலிக்குமே..?”

“ஹா..ஹா… எனக்கு உயிர் மட்டுமே உண்டு. உணர்ச்சிக்கள் இல்லை. அதனால கவலைப்படவேண்டாம். அறுபது ஆண்டு கால பழைய காகிதம் அல்லவா.. நான்! ம்.. இனி என்னால நடக்கவே முடியாது”

“ஐயையோ..”

“அடப்பாவமே..”

“பசை சொண்டு ஒட்டினால்?”

“செலஃபன் டேப் வச்சு ஒட்டிப்பார்ப்போம்”

“அதைவிட, பேப்பர் டேப்ன்னு ஒண்ணு விக்குது! அதை வச்சு ஒட்டிடலாம்”

ஆளாளுக்கு ஆலோசனைகளை அள்ளிவிட்டுக் கொண்டிருக்க, தலைகுனிந்தபடி, காகிதப் பாப்பாவையே பார்த்தபடி இருந்தாள் மயில்.

“நீ எதுவும் பேசமாட்டியா மயில்”

“என்ன பேசுறதுன்னே தெரியலையே.. நீங்க சொல்லுற டேப் எல்லாம் எங்க வீட்டில் இல்லை. வாங்கனும்னா.. கடைக்குப் போகனும். ஆனா.. இங்கேதான் கடைகள் எல்லாம் மூடி இருக்கே!”

“அங்க மட்டுமில்ல மயில். நாடு முழுவதுமே மூடித்தான் இருக்கும்..”

“பேப்பர் கிழிந்தால் ஒட்டுவதற்கு ஏதாவது பசை உங்கவீட்டில் இருக்கா?” என்று கேட்டான் அமீர்.

“ம்.. அது இருக்கு.. முருங்கைமரத்து பிசினை ஒரு டப்பாவில் போட்டு வச்சிருப்போம். அதைத்தான் நாங்க, பசை மாதிரித்தான் பயன்படுத்துவேம். நல்லா ஒட்டுமே..” என்றாள் மயில்.

“ஒரு நிமிஷம் மயில்..” என்று யோசித்தான் அமீர்.

”—”

எல்லோரும் அமீரையே பார்த்துக்கொண்டிருந்தனர். அவனோ கண்களை மூடி யோசித்துக் கொண்டிருந்தான்.

”உங்க வீட்டில் கண்ணாடி பிரேம் போட்ட போட்டோ, அல்லது முகம் பார்க்குற கண்ணாடி, இப்படி எதுனா இருக்கா மயிலு?” என்று கேட்டான் அமீர்.

“இருக்குங்க அண்ணா..!”

“வெரிகுட்! என்ன இருக்கு?”

”செவ்வகமா முகம் பாக்குற கண்ணாடி இருக்கு. சுவத்துல மாட்டி வச்சிருக்கோம்!”

“சூப்பர். நான் சொல்லுறதை அப்படியே செய்யுறியா? அந்த கண்ணாடியை கழட்டி எடுத்து தரையில படுக்கவை..”

“அதுக்கு நான் வீட்டுக்குள்ள போகனும்.”

“சரி.. காகிதப்பாப்பாவையும் தூக்கிக்கிட்டு, உங்க வீட்டுக்குள்ள போ..”

அவளும் சரியென, ஒரு கையில் மரப்பாச்சியை இறுகப் பற்றிக்கொண்டு, காகிதப்பாப்பாவையும் பத்திரமாக எடுத்துக்கொண்டு வீடுநோக்கி ஓடினாள்.

(காகிதப்பாப்பா சரியானதா? இனி அதனால் பழையபடி நடக்கமுடியுமா?- நாளை)

++++++++++++++

பாகம் 1: https://blog.balabharathi.net/?p=1973
பாகம்2: https://blog.balabharathi.net/?p=1977
பாகம்3: https://blog.balabharathi.net/?p=1981
பாகம்4: https://blog.balabharathi.net/?p=1986
பாகம்5: https://blog.balabharathi.net/?p=1989
பாகம்6: https://blog.balabharathi.net/?p=1997

This entry was posted in சிறுவர் இலக்கியம், புனைவு and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 4 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.