
மந்திரச்சந்திப்பு-12
மீண்டும் உருவமில்லாது வந்த குரலைக் கேட்டு, நடுங்கினான் அருள்வளன்.
“வளா, நீ அச்சப்படத்தேவை இல்லை.” என்றது அக்குரல்.
“சொல்லுறது எல்லாம் சரி. ஆனா.. ஆளைக்காணோமே.”
“நான் தான் உன் முன்னாடியே இருப்பதாகச்சொல்கிறேனே” என்றது அந்த மெல்லியகுரல்.
“நீயும் சொல்லுற.. ஆன என்னுடைய கண்ணுக்கு எதுவுமே தெரியமாட்டேங்குதே..”
“உன் அளவிலேயே பார்த்துக்கொண்டிருக்கிறாயே.. கொஞ்சம் கீழே பார்” என்றது அந்தக்குரல்.
குழப்பமாக கீழே குனிந்து தேடினான். அந்த அறையின் நிலைப்படிக்கு அருகில் சின்னதாக ஓர் உருவம் தெரிந்தது. முதலில் அது வெட்டுக்கிளி போலத்தோன்றியதால் வேறு ஏதாவது இருக்குமென பார்வையை அகற்றியபோது, “நான் தான் .. நான் தான்” என்று குரல் கேட்டது.
மீண்டும் வெட்டுக்கிளி போலத்தோன்றியதைப் பார்த்தான். அது துள்ளிக்கொண்டிருந்தது. பின்னால் தெரிந்த முத்திரள்: உருவத்தினரைப் பார்த்தான்.
“என்ன வளன்?”
“அதோ அங்கே, வெட்டுக்கிளி போல ஒன்று தெரிகிறது. அதுதான் பேசியது போல..” என்றான் வளன்.
“நான் வெட்டுக்கிளி அல்ல. கொஞ்சம் அருகில் வந்துதான் பாரேன்” என்று அந்த குரல் சொல்லிற்று.
அவன் அச்சத்துடன் நண்பர்களைப் பார்த்தான். “இந்தக்கதையில் ஆமை, மரப்பாச்சி, காகிதப்பாப்பாவாகிய நான் எல்லாம் பேசும்போது வெட்டுக்கிளி பேசக்கூடாதா.. என்ன? அருகில் சென்றுதான் பாரேன்” என்றது காகிதப்பாப்பா.
“நான் வெட்டுக்கிளி இல்லை”
கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, குனிந்து அந்த உருவத்தின் அருகில் சென்று பார்த்தான். அப்போதுதான் அது வெட்டுக்கிளி அல்ல என்பது புலப்பட்டது.
அந்த உருவம் கொஞ்சம் விசித்திரமாக இருந்தது. தங்க வண்ணத்தில் இருந்த அது, இடுப்புக்கு மேல் மனித உருவத்திலும், இடுப்புக்கு கீழ் ஏதோ பறவை போன்றும் இருந்தது.
“ஆமா, யார் நீ!”
“நான் ஒரு கின்னரன், அதாவது கின்னரர் இனத்தைச் சேர்ந்தவன்”
“என்னது கின்னரரா?”
“ஆமா, நாங்கள் பறவையும், மனித இனமும் கலந்த கந்தர்வர்கள்”
“ம்.. படிச்சிருக்கேன். நீங்க ஆடற்கலையிலும் இசைக் கலையிலும் சிறந்தவர்களாமே..!” என்று கேட்டான் அமீர்.
“ஆமாம்.. நீ கூறுவது சரிதான்.” என்றார் அந்த கின்னரன்.
“நீ ஏன் இத்துணூண்டா இருக்க?”
“அதுவொரு சாபம். அடுத்த அமாவாசையில் தான் எனக்கு விமோசனம் கிடைக்கும்.”
“ஏன் நீ என்ன செய்தாய்?”
“எங்கள் உலகில் இருக்கும் ஒரு விலக்கப்பட்ட கனியை ஆர்வமிகுதியில் சாப்பிட்டுவிட்டேன். அதைச் சாப்பிட்டால் ஆறு மாதத்திற்கு சின்னஞ்சிறு உருவமாகிவிடுவோம், எங்கள் உலகிற்குள்ளும் நுழைய முடியாது. பூமியிலேயே யார் கண்ணிலும் படாமல் உலவ வேண்டியதுதான்”
“ஓ! சரி! உங்க கின்னரர் இனத்தை சேர்ந்தவங்களுக்குத் தனிப் பெயர் எல்லாம் இல்லையா என்ன?”
“இருக்கே.. எனது பெயர் கானமூர்த்தி”
“கானமூர்த்தியா. ரொம்பப் பழைய பெயராக இருக்கே?”
“ஆமா.. நான் மட்டும் புது ஆளா என்ன? இதுவொரு ராகத்தின் பெயரும்கூட!” என்றார் கானமூர்த்தி.
“சரி இப்ப என்னைய ஏன் கூப்பிட்டீங்க?”
“எனக்கும் நாட்டு நிலைமை தெரியும். ஒரே இடத்தில் அடைபட்டு இருப்பது மிகுந்த சோர்வைத்தரும். அதனால் உன்னை நான் ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லலாம் என்று நினைத்திருக்கிறேன்” என்றார் கானமூர்த்தி.
“எதுக்கு போலீஸ் அடிக்குறதுக்கா..?”
“நான் கூறிய இடம் வெளியே அல்ல. உள்ளே” என்று சிரித்தார் கானமூர்த்தி.
“புரியலையே”
“நண்பா.. மாங்காடு சாலையில் நூற்றுக்கணக்கான மக்கள் நடந்துசெல்கின்றனர்” என்று கத்தியது காகிதப் பாப்பா.
“என்னது..”
“ஆமா.. அதுவும் சமூக இடைவெளிகூட இல்லாமல் கூட்டமாக நடந்து செல்கிறார்கள்.” என்றது காகிதப்பாப்பா.
“நீ எப்ப வெளியே போன?” என்று கேட்டான் ஜான்சன்.
“நீங்க எல்லாம் பேசிட்டு இருக்கும்போது, சும்மா ஒரு ரவுண்டு பறந்துட்டுவரலாமேன்னு போனபோது பார்த்தேன்”
உடனடியாக ஜான்சன் செல்போனை கையில் எடுத்து, அதில் 100 எண்ணை டயல் செய்தான். மொபைலை ஒட்டியே அந்த எரிகல்லையும் பிடித்திருந்தான். சில வினாடி கணினி குரலின் அறிவிப்புகளுக்குப் பின்னர், எதிர்முனையில் போனை ஒருவர் பேசினார்.
“ஹல்லோ”
“ஹலோ சார், மாங்காடு வழியாக நிறைய மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்து வந்துட்டு இருக்காங்களாம். போலீஸ் வந்துச்சுன்னா.. அவங்களைப் தடுத்துடலாம்”
“ஓ.. அப்படியா.. சரி நீங்க யாரு பேசுறது..”
“சார், நான் தொடர்ந்து கால் செய்து இதுமாதிரி சொல்லிட்டு இருக்கேன். அதனால ஆட்களை காப்பாத்துங்க. நன்றி!” என்று தொடர்பைத் துண்டித்தான்.
“இனி அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்றது காகிதப்பாப்பா.
*****************
“ம்.. இப்ப நீங்க சொல்லுங்க.. எங்க கூட்டிட்டு போறதா சொன்னீங்க..?” என்று கேட்டான் வளன்.
“பூமிக்கு அடியில்!” என்று கூறிவிட்டு தன் இடுப்பில் கைவைத்து நின்றார் கானமூர்த்தி.
(இனி பயணம் ஆரம்பம்)
++++++++++++++
பாகம்1: https://blog.balabharathi.net/?p=1973
பாகம்2: https://blog.balabharathi.net/?p=1977
பாகம்3: https://blog.balabharathi.net/?p=1981
பாகம்4: https://blog.balabharathi.net/?p=1986
பாகம்5: https://blog.balabharathi.net/?p=1989
பாகம்6: https://blog.balabharathi.net/?p=1997
பாகம்7: https://blog.balabharathi.net/?p=2003
பாகம்8: https://blog.balabharathi.net/?p=2008
பாகம்9: https://blog.balabharathi.net/?p=2013
பாகம்10: http://blog.balabharathi.net/?p=2018
பாகம்11: http://blog.balabharathi.net/?p=2022
பாகம் 12: https://blog.balabharathi.net/?p=2029