மந்திரச் சந்திப்பு- 13

பூமிக்கு அடியில் அழைத்துச்செல்வதாக கின்னரர் கானமூர்த்தி கூறியதை நம்பாதவனாக நின்றான் அருள்வளன்.

“என்ன அப்படிப் பார்க்கிறாய்? நம்பிக்கை வரவில்லையோ!”

‘அட! இத்தூணூண்டுக்கு இருந்துட்டு, நாம நினைக்கிறதை சரியாகச் சொல்கிறாரே இவர்’ என்ற வியப்பு அவனுக்கு. அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் முத்திரள் உருவத்தினரைப் பார்த்தான்.

‘ம்.. போ’ என்பதுபோல சைகை செய்தான் அமீர்.

முத்திரள் உருவங்களைப் பார்த்து, “நீங்களும் உடன் வரலாம்” என்றார் கானமூர்த்தி. அவர்கள் எல்லோரும் கதை தட்டி தங்களின் உற்சாகத்தை வெளிக்காட்டினர்.

“அவங்களுக்கு பிரச்சனை இல்லை. முத்திரள் உருவம் என்பதால் அப்படியே வந்துடுவாங்க. ஆனால் நான் எப்படி வருவேன்” என்று கேட்டான் வளன்.

“அதையெல்லாம் என்னிடம் விட்டுவிடு, நான்தான் இருக்கேனே!” என்றவர்,
தன் கையை நெஞ்சுக்கு நேராகவைத்து ஏதோ முணுமுணுத்தார். பின் தனது கையை வாய்க்கு அருகில் வைத்து, வளனை நோக்கி திரும்பி, ஊதினார். அவர் ஊதியகாற்று அருள்வளனின் கால் கட்டைவிரலில் மோதியது. அடுத்த நொடியே அவனது உருவம் சுருங்கத்தொடங்கியது. இப்போது கானமூர்த்தியைவிட, சின்ன உருவமாகி இருந்தான் வளன். அவனைத்தூக்கி தன்னுடைய முதுகில் வைத்துக்கொண்டார் கானமூர்த்தி.

“இறுகப் பற்றிக்கொள்” என்று சொன்னார். அவனும் அவரைப் பற்றிக் கொண்டான். மெதுவாகப் பறக்கத்தொடங்கினார்.

“இப்ப எங்க போறோம்?”

“வீட்டுக்குள்ள இருந்து, பூமிக்கு அடியில் செல்ல ஒரு ஓட்டை வேண்டாமா..?”

“ஆமா.. வேணும்!”

“அதற்குத்தான் போறோம். அதோ, அங்கே இருக்கும் கறையான் புற்று வழியாகாத்தான் கீழே போகப்போகிறோம்.”

“ஐயோ கறையானா..?”

“பயப்பாடாதே.. அங்கே இருக்கும் ராணிக்கறையான் என் தோழிதான். அதனிடம் ஏற்கெனவே சொல்லி வைத்திருக்கிறேன். அதனால் அச்சப்படாமல் வா போவோம்” என்றார் கானமூர்த்தி.

அவரின் பின்னாடியே முத்திரள் உருவத்தின் வழியே நண்பர்களும் பின் தொடர்ந்தனர்.

கானமூர்த்தி, குறிப்பிட்ட கறையான் புற்றின் அருகில் சென்று இறங்கினார். வளனையும் கீழே இறக்கிவிட்டார். அங்கே இப்படியும் அப்படியுமாக நிறைய கரையான்கள் ஓடிக்கொண்டிருந்தன. சுறு சுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த கறையான் கூட்டத்தைப் பார்த்து வியந்துபோய் நின்றான் அவன். இதுநாள் வரையில் இவ்வளவு அருகில் கரையான் உருவத்தை அவன் பார்த்ததில்லை.

ஒரு கறையானை அழைத்து, கானமூர்த்தி ஏதோ சொல்ல, வேகமாக புற்றினுள் ஓடியது. இவற்றை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த வளனைப் பார்த்து, “ நாம் வந்திருக்கும் செய்தியைச் சொல்லி அனுப்பி இருக்கிறேன். ராணியின் ஒப்புதல் கிடைத்ததும் நாம் செல்லலாம்” என்று அவர் கூறிக்கொண்டிருக்கும் போதே, ஒரு கறையான் வந்து, “எங்கள் ராணி, உங்கள் இருவரையும் அழைத்து வரச்சொன்னார். இச்சிறுவனின் உடலில் இந்த எண்ணெயை பூசிக்கொள்ளும்படியும் கூறினார்” என்று ஒரு சிறு குப்பியை எடுத்து நீட்டியது.

அதை வாங்கிய கானமூர்த்தி, அருள்வளன் பக்கம் திரும்பினார். அந்த குப்பியில் இருந்த ஒரு சொட்டு எண்ணையை அவன் தலையில் ஊற்றினார். சுறுங்கி இருந்த அவனது முழு உருவத்திற்கும் அந்த ஒரு சொட்டு எண்ணெயே போதுமானதாக இருந்தது. அந்த ஒரு சொட்டு எண்ணெய் அவனை கொப்பரைக்குள் அமிழ்ந்தி எடுத்ததுபோன்று உடல்முழுவதும் நனைத்துவிட்டிருந்தது.

இவர்களின் முன்னால் ஒரு கறையான் நடக்க. இவர்களும் அதனைப் பின் தொடர்ந்தனர். புற்றின் ஒரு வாயில் வழியாக உள்ளே அந்த கறையான் நுழைய, கானமூர்த்தி இன்னும் தனது உருவத்தை சுறுக்கி சின்னதாக்கிக்கொண்டார். அவரும் அருள்வளனும் அந்தக் கறையானைப்பின் தொடர்ந்தனர். இவர்களின் பின்னாடியே முத்திரள் உருவத்தினரும் தொடர்ந்தனர்.

(நாளை)

+++++++++++++

பாகம்1: https://blog.balabharathi.net/?p=1973
பாகம்2: https://blog.balabharathi.net/?p=1977
பாகம்3: https://blog.balabharathi.net/?p=1981
பாகம்4: https://blog.balabharathi.net/?p=1986
பாகம்5: https://blog.balabharathi.net/?p=1989
பாகம்6: https://blog.balabharathi.net/?p=1997
பாகம்7: https://blog.balabharathi.net/?p=2003
பாகம்8: https://blog.balabharathi.net/?p=2008
பாகம்9: https://blog.balabharathi.net/?p=2013
பாகம்10: http://blog.balabharathi.net/?p=2018
பாகம்11: http://blog.balabharathi.net/?p=2022
பாகம்12: https://blog.balabharathi.net/?p=2029
பாகம்13: https://blog.balabharathi.net/?p=2033