சில அடிதூரம் நடந்ததுமே வெளியில் இருந்த வெளிச்சம் உள்ளே இல்லை. ஆனாலும் அருள்வளனால் நன்றாகப் பார்க்க முடிந்தது. சாரை சாரையாக கறையான்கள் நடந்துகொண்டிருந்தன. தானும் ஒரு கறையான் அளவுக்கு மாறிப்போய் உள்ளோம் என்பதால் ஏற்பட்ட வியப்பும், கறையான் புற்றின் உள்பக்கம் தான் பார்க்கும் வினோத உலகமும் அவனுக்கு மிகுந்த வியப்பளிப்பதாக இருந்தது.

“ஆமா.. இதற்கு உள்ளேயும் என்னால் மூச்சுவிட முடிகிறதே..?” என்றான்.

அதனைக் கேட்ட, அந்த வழிகாட்டிக் கறையான், “உள்ளே வரும் முன் உங்கள் மீது ஒரு திரவத்தை பூசினோமே.. அது உங்களின் உடல் மீது படந்துள்ளது. அதனால் இப்போது நீங்களும் எங்கள் இனத்தவர் மாதிரித்தான். பார்க்க பேச எல்லாமே முடியும்.” என்று சொன்னது.

“வாவ்.. இந்த திரவம் என் உடலில் எவ்வளவு நேரம் இப்படியே இருக்கும்.”

“ஒருநாள். அதன் பின்னர் இதன் வீரியம் இல்லாமல் போய்விடும்” என்றது.

“இன்னும் எவ்வளவு தூரம் இப்படியே வளைந்து நெளிந்து எங்களை அழைத்துச்செல்வாய். ?” என்று கேட்டார் கானமூர்த்தி.

“இன்னும் கொஞ்ச நேரம் ஐயா, பொதுவாக ராணி வெளியாட்களை அனுமதிப்பதில்லை. அப்படியே யாரேனும் வெளியாட்களைக் காணுவதாக இருந்தாலும் அது எங்களின் உணவு கிட்டங்கியில் வைத்துத்தான் பார்ப்பார். உங்களை மட்டும் தனது பிரசவ அறைக்கு அருகில் அழைத்து வரச்சொல்லி இருக்கிறார்” என்றது அந்தக் கறையான்.

”பிரசவ அறையா?”

“ஆமாம். எங்கள் ராணி முட்டைபோடும் அறை. அது கீழே இருக்கிறது”

அந்தக் கறையான் வேகமாகச் செல்கிறது என்பதை உணரமுடிந்தது. ஆனால் தானும் மூச்சிரைப்பு ஏதும் இல்லாமல் இவ்வளவு வேகமாக நடக்கமுடிகிறதே என்று எண்ணியபடியே நடந்தான் வளன். திடீரென நண்பர்களின் நினைவு வர அவர்களைத் திரும்பிப் பார்த்தான். அவர்களின் முத்திரள் உருவங்கள் அப்படியே காற்றில் மிதப்பது போல மிதந்து வந்துகொண்டிருந்தன.

“நான் கறையான் புற்றுக்குள்ள இப்பத்தான் பர்ஸ்ட் டைமா வர்றேன். த்ரிலிங்கான எக்ஸ்பீரியன்ஸ்தான்” என்றாள் பூஜா.

“ஆமா.. நாங்க எல்லோரும் வாரத்திற்கு ரெண்டு முறை வந்துட்டுப் போறோமா என்ன? எங்களுக்கும் இதுதான் முதல் முறை” என்றான் சூர்யா.

எல்லோரும் சிரித்தனர்.

இப்படி ஒரு கூட்டம் தங்களின் புற்றுக்குள் வந்திருப்பதைப் பற்றி எந்த கறையானும் கண்டுகொண்டதாகவேத் தெரியவில்லை. ஒவ்வொன்றும் தன்னாலான அளவில் ஒரு சிறு உணவுத் துண்டை எடுத்துக்கொண்டு வரிசையாக நடந்துகொண்டிருந்தன. இன்னொரு பக்கம் வேறு சில கறையான்கள் மண்ணைத் தோண்டி, ஈர மண்ணை அள்ளியள்ளி ஒரு இடத்தில் பூசி மொழுகிக் கொண்டிருந்தன.

”இந்த பூச்சிங்க எல்லாம் என்ன செய்யுறாங்க?” என்று மயில் கேட்டாள்.

மயில் என்ன கேட்கிறாள் என்று திரும்பிப் பார்த்தது வழிகாட்டி கறையான்.

“அவர்கள் எங்களுக்கான குடியிருப்புகளை உருவாக்குபவர்கள். அந்தப்பணியில் ஈடுபட்டுள்ளனர்”

“அட!” என்று வியந்தாள் மயில்.

“சோல்ஜர்ஸ் கறையான்கள் எங்கே இருக்கும்?” என்று கேட்டான் அமீர்.

“புரியலையே..”

“கறையான்களில் வீரர்கள் உண்டு என்று படித்திருக்கிறேன். அவற்றைப் பார்க்க முடியுமா என்று கேட்டேன்.”

“உணவை சேமிக்க, அவற்றைத் தூக்கிக்கொண்டு சாரை சாரையாகப் போகிறார்களே.. அவர்களை எல்லாம் வேலைக்கார கறையான்கள். எதிரிகளிடமிருந்து எங்களைப் பாதுகாக்க எப்போதும் விழிப்புணர்வோடு பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்கள் எல்லோரும் கறையான் வீரர்கள். நானும் கூட ஒரு கறையான் வீரன்தான்” என்றது அந்த வழிகாட்டி.

”உங்களுக்கு எல்லாம் பெயர்கள் உண்டா..?”

”ம்.. ’டெர்மித்’ என்பது என்னுடைய பெயர்” என்றது அந்த வழிகாட்டிக் கறையான்.

உடனே, ”என் பெயர் அமீர்” என்றான். அவனைத்தொடர்ந்து எல்லோரும் டெர்மித்திடம் தங்களின் பெயர்களோடு அறிமுகம் செய்துகொண்டனர்.

நடந்துகொண்டிருந்த டெர்மித் நின்றது. அதனை பின் தொடர்ந்தவர்களும் நின்றனர். எதிரில் ஒரு இடத்தில் நிறைய கறையான்களின் நடமாட்டம் தெரிந்தது. இவர்களை அங்கே நிற்கச்சொல்லிவிட்டு, டெர்மித் வேகமாக முன்னே சென்றது. அங்கே பாதுகாப்பிற்காக நின்றிருந்த ஒரு கறையானிடம் ஏதோ சொல்ல, அது டெர்மித்தையும் அழைத்துக்கொண்டு உள்ளே சென்றது. சில வினாடிகளிலேயே அவை இரண்டும் வெளியில் வந்தன. டெர்மித், இவர்களிடம் வந்து ராணியைப் பார்க்கப் போகலாம் என்று அழைத்துச்சென்றது.

அதுவரை இங்குமங்கும் குறுக்கும் நெடுக்கமாக ஓடிக்கொண்டிருந்த கரையான்கள் ஓரமாக நின்று விட்டன. கானமூர்த்தி முன்னாலும் அவர் பின்னால் அருள் வளனும், பின்னாடியே முத்திரள் உருவங்களாக நண்பர்களும் கறையான் ராணியைப் பார்க்கச் சென்றனர்.

ராணி மற்ற கறையான்களைவிட உருவத்தில் பெரியதாக இருந்தது. ஒரு பக்கமாக சாய்ந்து படுத்திருந்தது. அதன் கால்களை அமுக்கிவிடவும், கைகளை நீவி விடவும், இறக்கைகளைத் துடைத்தபடியும் சுற்றிலும் ஏகப்பட்ட வேலைக்கார கறையான்கள் இருந்தன. இன்னும் சில கறையான்களோ சாய்ந்திருந்த ராணி கறையானுக்கு உணவை ஊட்டிவிட்டுச் சென்றன.

“வாருங்கள் கானமூர்த்தியாரே!” என்றது ராணி கறையான். அதன் குரல் கணீர் என்றிருந்தது. வரிசையாய் ஓடிக்கொண்டிருந்த சில வேலைக்கார கறையான்கள், தீடீரென ராணியின் குரல் கேட்டு வரிசை தடுமாறி கீழே விழுந்து பின் சுதாரித்து ஓடத்துவங்கின.

ராணி கறையானை வணங்கிவிட்டு, அருள்வளன் பற்றியும் அவன் நண்பர்கள் பற்றியும் அறிமுகத்தை எடுத்துரைத்தார் கானமூர்த்தி. நண்பர்களும் அவர்களைப் பார்த்து வணங்கினர். எல்லோரின் வணக்கத்தைம் ஏற்றுக்கொண்ட, ராணி, பூமிக்குள் பயணப்பட, டெர்மித்தையும் வேறு சில வேலைக்கார கறையான்களையும் அழைத்துச்செல்லும் படி உத்தரவு கொடுத்தது.

ராணி கறையானுக்கு நன்றி தெரிவித்துவிட்டு எல்லோரும் வெளியே வரும் நேரம்.. திபுதிபுவென வேலைக்கார கறையான்கள் கூட்டமாக ஓடிவருவது தெரிந்தது. அவர்கள் வரும் வேகத்தைப் பார்த்துமே ஏதோ பெரிய ஆபத்தில் சிக்கிக்கொண்டோம் போல என்று கானமூர்த்திக்கும் தோன்றியது.

(தொடரும்)

++++++++++++

பாகம்1: https://blog.balabharathi.net/?p=1973
பாகம்2: https://blog.balabharathi.net/?p=1977
பாகம்3: https://blog.balabharathi.net/?p=1981
பாகம்4: https://blog.balabharathi.net/?p=1986
பாகம்5: https://blog.balabharathi.net/?p=1989
பாகம்6: https://blog.balabharathi.net/?p=1997
பாகம்7: https://blog.balabharathi.net/?p=2003
பாகம்8: https://blog.balabharathi.net/?p=2008
பாகம்9: https://blog.balabharathi.net/?p=2013
பாகம்10: http://blog.balabharathi.net/?p=2018
பாகம்11: http://blog.balabharathi.net/?p=2022
பாகம்12: https://blog.balabharathi.net/?p=2029
பாகம்13: https://blog.balabharathi.net/?p=2033
பாகம்14: https://blog.balabharathi.net/?p=2037