
ஒன்றோ இரண்டோ அல்ல நூற்றுக்கணக்கான வேலைக்காரக் கறையான்கள் தலை தெறிக்க ஓடிவந்தன. அவற்றின் வேகத்தைக் கண்டதுமே கானமூர்த்திக்கு விஷயம் புரிந்துவிட்டது. கரையான்களைத் தின்னும் ஏதோ ஒரு விலங்கு வருகிறது. இங்கிருந்து வேகமாகத் தப்ப வேண்டும்.
வேகமாக வந்த கறையான்கள் உள்ளே அடுக்கி வைக்கப்படிருந்த மரத்துகள்களின் அடியில் சென்று மறையத் தொடங்கின. அதே நேரம் உள்ளிருந்து படைவீரர் கறையான்கள் வாசலை நோக்கி ஓடத் தொடங்கின.
“எ.. என்னாச்சு.. ஏன் இப்படி உள்ளேயும் வெளியேயுமாக எல்லோரும் ஓடிட்டு இருக்காங்க!?” என்று தயங்கியபடிக் கேட்டான் வளன்.
“நீங்கள் வந்த வாசல் வழியாக ஒரு பாம்பு உள்ளே வரப் பார்த்துள்ளது.” என்றது டெர்மித்.
“என்னது பாம்பா..” என்று நடுங்கினான் வளன்.
“ஐயையோ.. செத்தோம்!” என்றான் குமார்.
“டேய், இதெல்லாம் ரொம்ப ஓவர்டா! நாம நேரடியாக அங்கே இல்லை. முத்திரள் உருவமாகத்தான் இருக்கோம். நமக்கு ஒரு ஆபத்துமில்லை” என்றான் அமீர்.
“இங்கே இருப்பவர்களும் அச்சப்படத் தேவை இல்லை. அந்தப் பாம்பை எதிர்கொள்ளவே இங்கேயும் அங்கேயும் சிதறிக்கிடந்த படைவீரர்கள் வாசலை நோக்கி ஓடுகின்றனர். அதைப் பார்த்த எங்கள் பணியாளர்கள்தான் அச்சமடைந்து உள்ளே ஓடிவந்துவிட்டனர். நீங்கள் இங்கே கொஞ்ச நேரமிருங்கள் நானும் வாயில்வரைச் சென்று வருகிறேன்.” என்று வாசலைப் பார்த்து ஓடியது டெர்மித்.
அது ஓடிய பின்னரும் பின்னாடியே இன்னும் பல படைவீரக் கறையான்கள் ஓடிக்கொண்டிருந்தன.
“இத்தனை கறையான்களா?” என்று வியந்தான் வளன்.
“ஆமாம். ஒவ்வொரு புற்றிலும் குறைந்தது 5 ஆயிரம் வரை கறையான்கள் வாழும். இதுவும் மனிதர்கள் போலவே கூட்டமாக வாழக்கூடியவை.” என்றார் கானமூர்த்தி.
கொஞ்ச நேரம் பதட்டத்துடனே அமர்ந்திருந்தனர். வெற்றிப் புன்னகையோடு வந்த டெர்மித், “எதிரி ஓடி விட்டது” என்றது.
“என்னது ஓடி விட்டதா?”
“ஆம்.. ரொம்ப நாளாகவே எங்கள் குடியிருப்பை கபளீகரம் செய்ய காத்திருந்தது அந்தப் பாம்பு. இன்று அது உள்ளே நுழைய முற்பட்டதும் எங்கள் ஆட்கள் ஓடினார்கள் இல்லையா.. அந்த பாம்பு உள்ளே நுழைய முற்பட்ட சமயம், ஒரு கீரி வந்து அதன் வாலைக் கடித்து இழுத்துவிட்டது.
“ஓ..”
“பாம்புக்கும் கீரிக்கும் நடந்த சண்டையில் அந்த பாம்பும் ஓடிவிட்டது. இந்த களேபரத்தில் எங்கள் வீரர்கள் சில நூறு பேரை இழந்து விட்டோம். ஆம்! அந்த பாம்பு விழுங்கி விட்டது. ம்.. எங்கள் விதி இது! சரி வாருங்கள் நாம் கிளம்புவோம்” என்று டெர்மித் நடக்கத் தொடங்கியது. இவர்களும் அதனைப் பின் தொடர்ந்தனர்.
வழியில் நிறைய இடங்களில் பூஞ்சைகளாக முளைத்திருந்ததைப் பார்த்த ஜான்சனுக்கு வியப்புத் தாளவில்லை.
“இது என்ன, உங்கள் புற்றுக்குள் இத்தனை இடங்களில் பூஞ்சை மாதிரி இருக்கே..?”
“ஆமா, அவை பூஞ்சை தான். நாங்க கொண்டுவரும் மரத்துண்டுகளை எல்லாம் அடுக்கி வைத்திருப்போம். அதுல பூஞ்சை வளரும். அதன் பின்னர்தான் எங்களால் அந்த உணவை சாப்பிட முடியும்.”
“எனக்கு இன்னொரு கேள்வி இருக்கு?” என்றான் வளன்.
“ம்.. கேளுங்க. நம்ம புற்றின் இறுதி பக்கத்தை நெருங்கிட்டோம். நடையை எட்டிப் போடுங்க.”
“புற்றுக்குள்ள வந்ததில் இருந்து பார்க்கிறேன். புற்றின் உள்ளே நல்ல குளிர்ச்சியா இருக்கே.. எப்படி?”
“நாங்க புற்றை கட்டும்போதே, காற்று உள்ளே வந்து செல்லும்படியான அமைப்பில்தான் கட்டுவோம். அப்போதுதான் இந்த பூஞ்சைகள் வளர்ந்து எங்களுக்கும் உணவுப் பஞ்சம் ஏற்படாது. பாதாளத்தில் இருப்பது போன்ற வடிவில் இருந்தாலும் நாங்கள் அமைத்திருக்கும் கூம்புகளின் வழியே காற்று உள்ளே வந்து சுற்றிவிட்டுத்தான் செல்லும்.”
“ஓ..அதுனாலதான் ஜில்லுனு இருக்கா..?”
“ஆமா! வெளியே எவ்வளவு வெயில் அடித்தாலும் உள்ளே குளு குளுன்னுதான் இருக்கும்”
நடந்து நடந்து அவர்கள் கறையான் புற்றைத் தாண்டி வெளியே வந்துவிட்டனர். புற்று மண்ணை விட, இப்போது நடக்கும் மண்ணின் தன்மை கொஞ்சம் இலகுவாக இருப்பதாக உணர்ந்தான் வளன்.
“இங்கே மண்ணு கொஞ்சம் லூசா இருக்கே..?”
“ஆமா.. புற்றைவிட்டு வெளியே வந்துட்டோம்ல.. அப்படித்தான் இருக்கும். பார்த்து நடந்துவாங்க.” என்றபடியே டெர்மித் நடந்தது.
சிறிது தூரம் நடந்ததும், நடந்து செல்லும் பாதையில் மண் துகள்கள் சரிந்து விழத் தொடங்கின. பூகம்பம் வருவதுபோல, ஒரு அதிர்வை உணர்ந்தான்.
“என்ன, அதிர்வது போல இருக்கே..?”
“ஆமா.. கொஞ்சம் வேகமாக எட்டி நடங்கள். அங்கே ஒரு வளைவு இருக்கிறது அங்கே சென்று பதுங்கிக் கொள்வோம்” என்று வேகமாக ஓடத் தொடங்கியது டெர்மித்.
பின்னாடியே, கானமூர்த்தியும், வளவனும் ஓடினர். பூமியில் அதிர்வு அதிகமாவதை உணரமுடிந்தது. ஓடிக்கொண்டே திரும்பிப்பார்த்த வளன் அதிர்ந்து போனான்.
அங்கே..
(வளன் எதைக்கண்டு பயந்தான்? நாளை)
+++++++++++
+++++++++++
பாகம்1: https://blog.balabharathi.net/?p=1973
பாகம்2: https://blog.balabharathi.net/?p=1977
பாகம்3: https://blog.balabharathi.net/?p=1981
பாகம்4: https://blog.balabharathi.net/?p=1986
பாகம்5: https://blog.balabharathi.net/?p=1989
பாகம்6: https://blog.balabharathi.net/?p=1997
பாகம்7: https://blog.balabharathi.net/?p=2003
பாகம்8: https://blog.balabharathi.net/?p=2008
பாகம்9: https://blog.balabharathi.net/?p=2013
பாகம்10: http://blog.balabharathi.net/?p=2018
பாகம்11: http://blog.balabharathi.net/?p=2022
பாகம்12: https://blog.balabharathi.net/?p=2029
பாகம்13: https://blog.balabharathi.net/?p=2033
பாகம்14: https://blog.balabharathi.net/?p=2037
பாகம்15: https://blog.balabharathi.net/?p=2041