மந்திரச் சந்திப்பு – 10

அம்மாவின் குரல் கேட்டதும் அறையின் வாசலுக்கு வந்தான் ஜான்சன்.

ஒரு பக்கெட் நிறைய துவைத்த துணிகளை உலர்த்தக் கொண்டு வந்திருந்தார் அவன் அம்மா. இவனைப் பார்த்ததும், “கொஞ்ச நாளாகவே உன் போக்கு சரியில்லையேடா.. எப்பப் பார்த்தாலும் ஓடி ஓடி இங்க வந்துடுற, என்னடா விஷயம்?” என்று கேட்டார்.

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைம்மா.. எவ்வளவு நேரம் தான் டிவியையே பார்த்துட்டு இருக்கிறது. அதுதான் இங்க வந்தா.. என் புக்ஸ் படிக்கலாம். கொஞ்சம் கிராப்ட் ஒர்க்கெல்லாம் செஞ்சு பார்க்கலாம். அதுக்குத்தான் மாடிக்கு வர்றேம்மா”

“சரி, சரி.. வெயிலில் கிடந்து காயாம இருந்துக்கோ..!” என்றார்.

“சரிம்மா” என்றான் ஜான்சன்.

“செருப்பு போட்டிருக்கிற?” என்றவரே அவனது காலைக் கவனித்தார். அவன் செருப்பு அணிந்திருந்தான்.

“சரி சரி…வா.. இந்த பக்கெட்டுல இருந்து ஒவ்வொரு துணியா எடுத்துக்கொடு” என்றவாரே பக்கெட்டை அவன் பக்கம் நகர்த்தினார். அவன் எடுதுக்கொடுக்க, கொடியில் ஒவ்வொரு துணியாக காயப்போட்டுக் கொண்டிருந்தார் ஜான்சன் அம்மா.

எல்லா துணிகளையும் காயப்போட்டுவிட்டு, பக்கெட்டை எடுத்துக்கொண்டு, கீழே சென்றுவிட்டார். அவர் அந்தப் பக்கம் போனதும் ஜான்சன் அவசரமாக அறைக்குள் ஓடி வந்தான்.

மடங்கி விழுந்த இடத்தில் காகிதப் பாப்பாவைக் காணவில்லை. ஒரு கணம் திகைத்தவன் எங்கே போயிருக்கும் என்று யோசனையுடன் திரும்பிய போது, அவனுக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தது.

“ஏய்! என்ன இங்கே நிக்குற? நான் அங்க தேடிகிட்டு இருக்கேன்”

“உன் அம்மா போயிட்டாங்களான்னு பார்க்க வந்தேன்”

“ம்.. போயிட்டாங்க. ஆமா, முத்திரள் உருவம்னு சொன்னியே, அது ஏன் எனக்கு தெரிய மாட்டேங்குது.”

“வானத்துல பறந்துட்டே இருக்கும்போது பார்க்கிறது கஷ்டமாக இருக்குமேன்னு அமைதியாக இருந்தேன். இப்போ பார்” என்ற காகிதப்பாப்பா, “சுந்தரா..” என்று என்று அழைத்தது.

அடுத்த சில வினாடிகளிலேயே அந்த அறைக்குள் அனைவரின் முத்திரள் உருவங்களும் தோன்றின. அவற்றைப் பார்த்து, ஒருகணம் திகைத்துப்போனான் ஜான்சன். நம்ப முடியாதவனாக அதில் தெரிந்த குமாரின் உருவத்தை தொட்டுப் பார்க்க முயன்றான். ஆனால் குமாரின் உருவத்தை ஊடுருவிச் சென்றது அவனது கை.

“நான் பேசுவதும் அவர்களுக்கு கேட்குமா?” என்று காகிதப்பாப்பாவைப் பார்த்துக் கேட்டான் ஜான்சன்.

“கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம் ஜான்சன்” என்று பதிலுரைத்தான் சுந்தரன்.

“வாவ்..” என்றான் ஜான்சன்.

“ஆமாம்! நாங்கள் இங்கிருந்தே காகிதப் பாப்பாவை பார்த்துக்கொண்டுதான் இருந்தோம். நீ இப்போதுதான் எங்களைப் பார்க்கிறாய்.”

“ஆமா.. போலீஸுக்கு போன் செய்தால் நம்பர் தெரியாமல் செய்யும் அந்த கல்லு என்ன கல்லு?”

“இதோ.. இந்த கல்லுதான்” என்று அதை எடுத்துக்காட்டினான்.

“பார்க்க கருங்கல்லு மாதிரி இருக்கே.. இது என்ன செய்யும்?”

“இது கருங்கல் இல்லை. வானத்தில் இருந்து விழுந்த ஒரு பெரிய எரிகல்லின் சிறு துண்டு.”

“என்னது வானத்துல இருந்து விழுந்துச்சா..?”

“ஆமா.. ஒருநாள் சாயங்காலம் கடற்கரைப் பக்கம் விளையாடிட்டு இருக்கும்போது வானத்துல இருந்து தீயில எரிஞ்சுட்டே ஒரு பெரிய உண்டை வந்துச்சு. பயந்துபோய் பார்க்கும் போது அது திடீர்ன்னு வெடிச்சு.. இந்த சிறு கல்லு விழுந்துச்சு. அந்த பெரிய உருண்டை அந்தப் பக்கம் எங்கேயோ போய் விழுந்துச்சு” என்றான் ஜான்சன்.

“ஏய்.. என்னப்பா நீ சொல்லுறதை எல்லாம் பார்க்க, அருள்வளன் கையில் கிடைச்ச ஜெமினி கல்லு மாதிரியே இருக்கே..” என்றது காகிதப்பாப்பா.

“ஜெமினி கல்லா?”

“ஆமாப்பா.. தலைகீழ் புஸ்வாணம் கதையில வருவானே.. அந்த அருள்வளன்” என்றது அது.

”இந்த கல்லு பேசாது, ரெண்டு தட்டு தட்டினால், இதிலிருந்து ஒரு ஒளி தோன்றும். அதுல எழுத்துக்கள் தெரியும். ஆனா நாம் பேசுறது இந்த கல்லுக்கு புரியும். ஒருநாள் இந்த கல்லை கையில் வச்சுகிட்டு, என் பிரண்டு, சல்மானுக்கு போன் செய்தேன். அப்ப அவன் கேட்டான், ’எப்படிடா பேசுற.. மொபைலில் உன் நம்பரே வரலையேன்னு’. அப்பத்தான் கண்டுபிடிச்சேன். இந்த கல்லை கையில் வச்சுக்கிட்டு யாருக்காச்சும் போன் செய்தால் தன்னுடைய மின்காந்த அலைகளால் நம்ம எண்ணை மறைச்சுடுதுன்னு, இதுகிட்ட கேட்டதும் ஆமான்னு சொல்லிடுச்சு. இதைப் பயன்படுத்தித்தான் போலிசுக்கு போன் செய்துட்டு இருக்கேன்.” என்றான் ஜான்சன்.

“சூப்பர்ப்பா.. இனி நானும் ஜான்சனும் பறந்து பறந்து கஷ்டப்படுற மக்களைக் கண்டுபிடிச்சு போலிசுக்கு சொல்லிடுறோம்” என்றது காகிதப்பாப்பா.

“அருள்வளனைக் கூப்பிடலாமா?

“லாமே..!” என்று சொன்ன சுந்தரன், மந்திரங்களைச் சொல்லத் தொடங்கினான்.

அந்த அறைக்குள் குப்புறப் படுத்துக்கொண்டிருந்த அருள்வளனின் உருவம் தெரிந்தது.

“ஹல்லோ.. அருளு..” என்று எல்லோரும் ஒரே நேரத்தில் கூற, படம் வரைந்துகொண்டிருந்த அருள்வளன் திரும்பிப்பார்த்தான். அந்த அறையில் அவனைத்தவிர வேறு யாருமே இல்லை. ஆனால் குரல் மட்டும் கேட்டது.

“யா..யா…ரு..” என்று நடுங்கும் குரலில் கேட்டான்.

”நாங்க எல்லாம் உன்னுடைய பிரண்ட்ஸ்”

“என்னது பிரண்ட்ஸா.. உருவமே இல்லாமல் சத்தம் மட்டும் கேக்குதே.. நீங்க எல்லாம் பேயா.., “ என்றவன், “அம்மா…. ” என்று பெருங்குரல் எடுத்து வீறிட்டபடியே மயங்கிச் சரிந்தான் அருள்வளன்.

(நாளை)

++++++++++++++++++++++

பாகம்1: https://blog.balabharathi.net/?p=1973
பாகம்2: https://blog.balabharathi.net/?p=1977
பாகம்3: https://blog.balabharathi.net/?p=1981
பாகம்4: https://blog.balabharathi.net/?p=1986
பாகம்5: https://blog.balabharathi.net/?p=1989
பாகம்6: https://blog.balabharathi.net/?p=1997
பாகம்7: https://blog.balabharathi.net/?p=2003
பாகம்8: https://blog.balabharathi.net/?p=2008
பாகம்9: https://blog.balabharathi.net/?p=2013
பாகம்10: http://blog.balabharathi.net/?p=2018

This entry was posted in சிறுவர் இலக்கியம் and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 3 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.