மந்திரச் சந்திப்பு -11

தலைகீழ் புஸ்வாணம் கதையில் வந்த அருள்வளனை சந்திக்க எண்ணிய நண்பர்கள் அவனை அழைத்தனர். அவனிருந்த அறைக்குள் உருவங்கள் ஏதுமற்று, குரல் மட்டும் கேட்கவும் பயந்து போன அவன் வீறிட்டு கத்தியபடி மயங்கிப்போனான்.

அவனது சத்தம் கேட்டு அறைக்குள் எட்டிப் பார்த்தார் அவன் அம்மா.

வெயிலில் வாடிய கீரைத்தண்டுபோல விழுந்து கிடந்தான் அருள்வளன். அவனை எடுத்து, மடியில் கிடத்தி, “அருளு.. அருளு..” என்று அழைத்தார். அவனிடம் அசைவில்லை.

“ஏங்க.. அருளுப்பா..” என்று அவர் சத்தம் போட்டு கூப்பிட, அருள்வளனின் அப்பா எட்டிப்பார்த்தார். “என்னடீ?”

“ம்.. புள்ள மயங்கிக்கெடக்கான். கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வாங்க” என்று அவர் சொல்ல, அவரசமாக தண்ணீர் எடுத்துவர ஓடினார்.

கையில் தண்ணீரைப் பிடித்து, அவன் முகத்தில் வேகமாக அறைந்தார். தண்ணீர் பட்டதும் அருள்வளன் மயக்கம் தெளிந்து எழுந்து உட்கார்ந்தான். அறையைச் சுற்றிலும் நோட்டமிட்டான். அம்மாவையும் அப்பாவையும் தவிர அங்கே யாருமில்லை.

“என்னப்பா ஆச்சு? ஏன் அப்படிக் கத்தின?” வாஞ்சையுடன் கேட்ட அம்மா, அவனது தலையைக் கோதிவிட்டார்.

“ம்..” என்றவன் பதில் ஏதும் கூறாமல் மீண்டும் அறையை நோட்டமிட்டான். அவன் பார்ப்பதைக் கவனித்த அவனது அப்பாவும் அறையை சுற்றிலும் பார்த்தார்.

“என்னடா?”

“இல்ல.. இந்த ரூமுக்குள்ள படுத்துட்டு, ஒரிகாமி செஞ்சுட்டு இருந்தேனா?”

“ஒரிகாமியா? அப்படீன்னா..?”

“அதுதான்ப்பா, கலர்ப் பேப்பர்ல பொம்மை செய்வோமே!” என்று ஏற்கெனவே செய்து வைத்திருந்த, காகித வண்ணத்துப் பூச்சியைக் காட்டினான்.

“சரி.. இதை செஞ்சுட்டு இருந்த..?”

“அப்போ, யாரோ என்னைக் கூப்பிட்ட மாதிரி இருந்துச்சா.. திரும்பிப் பார்த்தேன். யாருமில்லை. கொஞ்ச நேரங்கழிச்சும் நிறையப்பேரு கூப்பிட்ட மாதிரி இருந்துச்சு”

“ம்..”

“திரும்பிப் பார்த்தால் யாருமில்லை. யாருன்னு கேட்டேன். உன்னோட பிரண்ட்சுன்னு சத்தம் கேட்டுச்சா.. ஆளு யாருமே இல்லை. சத்தம் மட்டும் கேட்டதும் பயந்து போயிட்டேன். அப்புறம் எதுமே ஞாபகத்துல இல்லை” என்றான்.

“புள்ளை எதைப் பார்த்தோ பயந்து போயிருக்கு” என்ற அவனது அம்மா, அவசரமாக உள்ளே எழுந்து சென்றார்.

“இங்கே யாருமில்லடா.. அனாவசியமா பயப்படாதே.. பயமா இருந்தா.. வா, எங்களோட வந்து உட்கார்ந்துக்கோ” என்றார் அவனது அப்பா.

“கொஞ்சம் தள்ளுங்க!” என்றபடியே வந்த அவனது அம்மா, ஒரு சின்ன பாட்டிலைக் கையோடு எடுத்துக் கொண்டுவந்தார். வளனை வாயைத் திறக்கச்சொல்லி, அதிலிருந்த தண்ணீரை அவன் வாயில் ஊற்றினார். “வேளாங்கன்னி தீர்த்தம். எல்லாம் சரியாப்போகும். பயப்படாத..” என்று பாட்டிலை மூடினார்.

அறைக்குள் திரும்பவும் நோட்டமிட்டான். நிச்சயம் யாருமில்லை. நமக்குத்தான் யாரோ அழைப்பது மாதிரி தோன்றி இருக்கும் போல. அவனையே பார்த்துக் கொண்டிருந்த அப்பாவைப் பார்த்து, “நான் இங்கேயே இருக்கேன்ப்பா..” இன்னும் ரெண்டு மூணு பட்டர்பிளை செய்யனும். செஞ்சதும் வந்துடுறேன்” என்றான்.

அவரும் சரியென கிளம்பிப்போனார். அவரின் பின்னாடியே வளனின் அம்மாவும் கிளம்பிப்போனார்.

பாத்ரூம் சென்றால் நன்றாக இருக்கும் போல இருந்தது. சென்றுவிட்டு, மீண்டும் ஒரிகாமியில் வண்ணத்துப்பூச்சி செய்ய உட்கார்ந்தான்.

முதல் காகிதத்தை எடுத்து, முதல் மடிப்பு மடித்ததுமே, “அச்சப்படவேண்டாம்” என்று குரல் கேட்டது.

திரும்பிப் பார்த்தான். யாருமில்லை.

வளனுக்கு பேசமுடியவில்லை. நாக்கு எழவே இல்லை. கஷ்டப்பட்டுப் பேசினான். “யா.. யா.. ர.. து?” அப்படியும் வார்த்தை துண்டு துண்டாகத்தான் வந்தது.

“முதலில் பயப்படாமல் இரு. நாங்கள் பேய்கள் அல்ல.” என்று சுந்தரன் கூறவும் அனைவரின் முத்திரள் உருவங்களும் அவன் முன்பாகத் தோன்றின. அவற்றைப் பார்த்தவன் வாய் பிளந்தான். சுந்தரன் இதுவரை நடந்த எல்லாவற்றையும் கூற, வியப்புடன் கேட்டுக்கொண்டிருந்தான்.

“என்ன வளன், அப்படியே உறைஞ்சுபோய் நிக்குறியே?”

“சினிமாவில் மட்டுமே பார்த்தது எல்லாம் வாழ்க்கையில் நடந்தால் வேற என்ன செய்யுறது?”

“பரவாயில்லை. இது எல்லாம் நிஜம் தான் நீ நம்பலாம்” இம்முறை பேசியது ஜூஜோ.

“ஆ.. ஆமை.. நீயா பேசினது?”

“ஆமா.. நானேதான்”

“அப்போ, அந்த ஜூஜோ ஆமை நீதானா..? கதையில படிச்சப்போ, முதலில் நான் நம்பவே இல்லை. எனக்கு ஜெமினி கிடைச்சப்பத்தான் இது எல்லாம் நடக்கும்னு நம்பினேன்.”

“அதுசரி.. நம்ம கதையை எழுதுற ஆசிரியர் நினைச்சா.. எதுவுமே சாத்தியம் தான். உன்னோட ஜெமினியோட உறவுக்கார எரிகல்லு ஒண்ணு இருக்கு தெரியுமா?”

“அப்படியா..”

“ஆமாம்.” என்றான் ஜான்சன்.

“சும்மா சொன்னால் போதுமா, அதை எடுத்துக்காட்டுப்பா” என்றது காகிதப்பாப்பா.

“இதோ..” என்று எடுத்துகாட்டினான் ஜான்சன்.

முத்திரள் வடிவத்திலேயே அது ஜெமினியின் சின்ன வடிவம் போன்று தெரிந்தது. அதைப் பார்த்ததுமே, வளனுக்கு ஜெமினியின் ஞாபகங்கள் அதிகரித்தது.

“அட! ஆமா, குட்டி ஜெமினி மாதிரியே இருக்கு”

“அதுமாதிரியே.. டிஸ்பிளே மூலம்தான் இதுவும் பேசும்” என்றான் ஜான்சன்.

“என்னப்பா நடக்குது இங்கே?”

மெல்லிய குரலில் சத்தம் கேட்க, திரும்பிப் பார்த்தான் வளன். யாரையும் காணவில்லை. தனக்கு எதிரில் நின்றிருந்த முத்திரள் உருவங்களைப் பார்த்தான். அவர்கள் இவனையே பார்த்தபடி இருந்தனர்.

“இப்ப நீங்க யாராச்சும் ஏதாவது சொன்னீங்களா?”

“நான்தான் பேசிட்டு இருந்தேனே!” என்றான் ஜான்சன்.

“இல்லை நண்பா, நீ பேசுனது இல்லை. ‘என்னப்பா நடக்குது இங்கே’ன்னு ஒரு குரல் கேட்டுச்சு அதுதான் கேக்குறேன். யார் பேசினான்னு?”

“நாங்க யாரும் அப்படி பேசவில்லையே” என்றனர் எதிரில் இருந்தவர்கள்.

“அட, பேசினது நான் தான்” என்றது குரல். மீண்டும் திரும்பிப் பார்த்தான் யாருமே இல்லை.

“நான்தான்னா, யாரு..?” என்று நடுங்கும் குரலில் கேட்டான் அருள்வளன்.

(அக்குரல் யாருடையது? நாளை)

+++++


பாகம்1: https://blog.balabharathi.net/?p=1973
பாகம்2: https://blog.balabharathi.net/?p=1977
பாகம்3: https://blog.balabharathi.net/?p=1981
பாகம்4: https://blog.balabharathi.net/?p=1986
பாகம்5: https://blog.balabharathi.net/?p=1989
பாகம்6: https://blog.balabharathi.net/?p=1997
பாகம்7: https://blog.balabharathi.net/?p=2003
பாகம்8: https://blog.balabharathi.net/?p=2008
பாகம்9: https://blog.balabharathi.net/?p=2013
பாகம்10: http://blog.balabharathi.net/?p=2018
பாகம்11: http://blog.balabharathi.net/?p=2022