அதிர்வு ஏற்பட்டதும் முன்னால் சென்று கொண்டிருந்த டெர்மித்,  பதுங்கிக் கொள்வோம் என்று ஓடத் தொடங்கியதும் பின்னாடியே கானமூர்த்தியும் அருள்வளனும் ஓடத் தொடங்கினர்.

ஓடும் வழியில் ஏன் மண் துகள்கள் சரிந்து விழுகின்றன என்ற சந்தேகம் எழ, திரும்பிப்பார்த்த வளன் அதிர்ச்சியடைந்தான்.

அங்கே, ஒரு பெரிய உருண்டை உருண்டு வந்து கொண்டிருந்தது. ஓடிக் கொண்டே, பதுங்குவதற்கு இடம் தேடிக் கொண்டிருந்தான். கால்கள் எல்லாம் வலி எடுக்கத் தொடங்கின. டெர்மித் குறிப்பிட்ட வளைவு திரும்பியதும் அடுத்த அதிர்ச்சி தென்பட்டது. பின்னால் வரும் உருண்டை போலவே முன்னாலும் ஒரு உருண்டை உருண்டுகொண்டிருந்தது.

“ஐயையோ.. பின்னாடியும் முன்னாடியும் உருண்டை ஏதோ உருளுதே.. நடுவுல நசுங்கப்போறோம்” என்று கத்தினான்.

“அது உருண்டை எல்லாம் இல்லை. அதுவும் ஒரு உயிர் தான்”

“என்னது உயிரா?”

“ஆமாம், நல்லா கூர்ந்து கவனி”

மீண்டும் திரும்பிப் பார்த்தான். உருளையின் அளவு சின்னதாகி மீண்டும் பெரியதானது போலத் தோன்றியது. ஓடிக்கொண்டிருப்பதால் அப்படி தோன்றுகிறதோ என்னவோ என்று யோசித்தான். எப்படிப் பார்த்தாலும் அந்த உருளை என்ன உயிராக இருக்கும் என்று அவனால் கனிக்க முடியவில்லை. “என்னால் கண்டுபிடிக்க முடியலையே.” என்றான்.

“இரு.. அதோ.. அந்த இடத்தில் இன்னொரு வளைவு வருது, அங்கே பதுங்கிக்கொள்வோம்” என்றபடியே முன்னால் டெர்மித் ஓடிக்கொண்டிருந்தது.

சிறிது தூரம் ஓடி, மூன்றுபேரும் அங்கே பதுங்கினர். பின்னால் வந்த உருளை இவர்களின் இடத்தைக் மெதுவாகக் கடந்து போனது.. அப்போதுதான் கவனித்தான் வளன், அது உருளை அல்ல. சுருங்கி விரிந்து ஓடும் நீளமான ஏதோவொரு உயிரினம். திரும்பி, டெர்மித்தைப் பார்த்தான். ‘என்ன கண்டுபிடித்தாயா?’ என்பது போல அது பார்த்தது. இவனும் பதிலுக்கு ‘இல்லை’ என்று உதடு பிதுக்கினான்.

“இது மண்புழு!” என்று சிரித்தது டெர்மித்.

“என்னது மண்புழுவா.. இவ்வளவு பெரிசா இருக்கு?”

“ஹா..ஹா.. அது அதன் அளவில் தான் இருக்கிறது. நாம்தான் ஒரு கறையான் அளவுக்கு சுருங்கிப் போய் இருக்கிறோம்” என்றார் கானமூர்த்தி.

அதைக்கேட்டதும்தான் அருள்வளனுக்கு தான் சுருங்கி சின்ன உருவமாக இருக்கிறோம் என்பதே நினைவு வந்தது.

“இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் கால்கள் வலிக்கின்றன”

“இந்த மண்புழுவின் பின்னாடியே சென்றால் நாம் செல்ல வேண்டிய இடத்தை அடைந்து விடலாம்.” என்றது டெர்மித்.

“பேசாமல், இந்த மண்புழுவின் மீது ஏறி சவாரி செய்ய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?”

”அவ்வளவுதானே? கொஞ்சம் இங்கேயே இருங்கள். இதோ நான் வருகிறேன்.” என்ற டெர்மித், நின்றிருந்த இடத்திலேயே வேகமாக ஒரு சுரங்கம் தோண்டத்தொடங்கியது.

அது வேலை செய்யும் வேகத்தைக் கண்டு வியந்து நின்றான் வளன். “ஆமா.. பின்னாடி வந்துகொண்டிருந்த உன் நண்பர்கள் எங்கேப்பா..?”

“நாங்களும் இங்கே தான் இருக்கிறோம்” என்ற குரல் வந்தது. சுற்றிலும் பார்த்தால் யாரையுமே காணவில்லை.

“ஆனால் உங்களை பார்க்க முடியலையே?”

”நாங்களோ முத்திரள் உருவத்தில் இருக்கோம். அதுக்கு கொஞ்சமாவது இடம்வேண்டாமா.. இவ்வளவு நெருக்கடியான மணல்துகளுக்குள் நாங்கள் எப்படித் தெரிவோம்” என்று கேட்டான் சுந்தரன்.

“சரி.. இங்கே தெரிவதைப் பார்க்க முடிகிறதா?”

“அதெல்லாம் முடிகிறது. உங்களின் குரல்களையும் கேட்க முடிகிறது. அதிலெல்லாம் பிரச்சனை இல்லை”

“இப்படி ஆள் தெரியாமல் உங்களின் குரல் கேட்டு மட்டும் பேசுவது அந்தக் கால சினிமாக்களில் கேட்பது போல இருக்கு!”

“ஆமா.. அதற்கு அசரீரி என்று பெயர்!” என்றார் கானமூர்த்தி.

ஹா..ஹா.. என்று எல்லோரும் சிரித்துக் கொண்டிருக்கும் போது, “மகனே வேண்டுவன கேள்” என்று மயிலின் குரல் கேட்டது.

மீண்டும் அங்கே சிரிப்பலை எழுந்தது.

தான் போன வழியில் அல்லாமல் இன்னொரு இடத்தில் மணல்துகளைத் தள்ளிக்கொண்டு வந்தது டெர்மித்.

”மண்புழு, ஒப்புக் கொண்டுவிட்டது. வாருங்கள்” என்று அவசரப்படுத்திய  அந்த கறையான் இன்னொரு பக்கம் வேகமாகச் சுரங்கம் தோண்டத்தொடங்கியது.

அந்த சுரங்கத்தில் வழியே மூவரும் சென்றனர். கொஞ்ச தூரம் சென்றதும் சுரங்கம் முடிவுக்கு வந்தது. அதன் வெளியே மண்புழுவின் உடல் தெரிந்தது. “இம் இப்போது அதன்மீது குதியுங்கள்.” என்ற டெர்மித் முதலில் அதன் மீது குதித்தது. பின்னாடியே இவர்கள் இருவரும் குதித்தனர். மூவரும் அதன் மீது ஏறி வசதியாக அமர்ந்துகொண்டாலும் மண்புழு நகரத்தொடங்கியது.

மண்புழுவின் மீதான இந்த சவாரி, வளனுக்கு எப்போதோ சென்ற, படகுசவாரியை ஞாபகப்படுத்தியது.

நீங்கள் கடலில் படகு சவாரி செய்திருக்கிறீர்களா? ஏரி, குளங்களில் செய்திருக்கும் படகு சவாரிக்கும் கடலில் படகு சவாரி செய்வதற்கும் வித்தியாசமிருக்கிறது. கடலில் அடிக்கும் அலையை மீறிக் கொண்டு படகு செல்லும், அப்போது படகு, இடதும் வலதுமாக ஒருவிதமாக ஆடும். படகுடன் சேர்ந்து அதில் பயணிப்பவர்களும் அந்த ஆட்டத்தை அனுபவிக்க முடியும். அதுபோன்றதோறு ஆட்டம் போல இருந்தது இந்த பயணம். அந்த ஆட்டத்தை ரசித்தபடியே பயணம் செய்தான் வளன்.

தான் தன்னுடைய இயல்பான உருவத்தில் இருக்கும் போது பார்த்த மண்புழுக்களின் ஊர்ந்து செல்லும் வேகத்திற்கும் தன்னுடைய உருவம் சின்னதான பின் உணரும் இந்த மண்புழுவின் வேகத்திற்குமான மாறுபாடு அவனுக்கு வியப்பாக இருந்தது.

கொஞ்ச தூரம் சென்றதும்.. மணற்பாதை முழுவதும் இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்த சின்ன உருவங்கள் தென்பட்டன. நிறைய குச்சிகள் போன்ற எதுவோ குறுக்கு நெடுக்குமாக தென்பட்டன.

“இதெல்லாம் என்ன? நாம் எங்கே வந்துள்ளோம்?”

+++++++++++

பாகம்1: https://blog.balabharathi.net/?p=1973
பாகம்2: https://blog.balabharathi.net/?p=1977
பாகம்3: https://blog.balabharathi.net/?p=1981
பாகம்4: https://blog.balabharathi.net/?p=1986
பாகம்5: https://blog.balabharathi.net/?p=1989
பாகம்6: https://blog.balabharathi.net/?p=1997
பாகம்7: https://blog.balabharathi.net/?p=2003
பாகம்8: https://blog.balabharathi.net/?p=2008
பாகம்9: https://blog.balabharathi.net/?p=2013
பாகம்10: http://blog.balabharathi.net/?p=2018
பாகம்11: http://blog.balabharathi.net/?p=2022
பாகம்12: https://blog.balabharathi.net/?p=2029
பாகம்13: https://blog.balabharathi.net/?p=2033
பாகம்14: https://blog.balabharathi.net/?p=2037
பாகம்15: https://blog.balabharathi.net/?p=2041

பாகம்16: https://blog.balabharathi.net/?p=2048