மந்திரச் சந்திப்பு – 17

மண்புழுவின் மேலிருந்து, சறுக்கிக்கொண்டு கீழே இறங்கியதும், அதற்கு நன்றி சொன்ன வளன் அதன் பெயரைக் கேட்டான்.

“சின்ன மாத்தன்” என்றது அந்த மண்புழு.

“சின்ன மாத்தனா?”

“ஆமா, எங்க தாத்தா பெயர் ‘மாத்தன் மண்புழு’ மிகவும் பிரபலம். பென்ஷன் கேட்டு கேஸ் எல்லாம் நடத்தி இருக்கார்!” என்றது சின்ன மாத்தன்.

“அப்படியா..?”

“ஆமா, ’மாத்தன் மண்புழுவின் வழக்கு’ என்னும் பெயரில் தனிக்கதையாகவே வந்திருக்கு. வாங்கிப் படித்து அறிந்துகொள்” என்றது சின்ன மாத்தன்.

“ஓ.. கண்டிப்பாகப் படிக்கிறேன். சரி! எங்களைத் தூக்கிக் கொண்டு வந்து இங்கே இறக்கி விட்டமைக்கு மீண்டும் நன்றி சின்ன மாத்தன்” என்றான் வளன்.

“நன்றியை வார்த்தைகளில் இல்லாமல் செயலில் காட்டுங்கள். இனியாவது மண்ணைக் கெடுக்காமல் இருங்கள்” என்றது சின்ன மாத்தன்.

சின்ன மாத்தன் கூறியதின் பொருள் புரியாமல் அதையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் வளன்.

“மண்ணில் ரசாயனக் கழிவுகளை விடுவது, வனங்களை அழிப்பது, ஆற்று மணலை எல்லாம் சுரண்டுவது என எல்லாமே மண்ணைக் கெடுப்பதுதான். அதையெல்லாம் மனிதர்களாகிய நீங்கள்தானே செய்கிறீர்கள்? இனியாவது அதையெல்லாம் நிறுத்துங்கள் என்றுதான் சொன்னேன்.”

“ம்.. இதை எல்லாம் என்னிடம் சொல்லி என்ன ஆகப்போகிறது. நான் சொல்லி யார் கேட்கப்போறாங்க?” என்று கேட்டான் வளன்.

“சரிவிடுடா.. அதுக்கும் மனிதர்களிடம் பேச வேற எப்பத்தான் வாய்ப்பு கிடைக்கும். இப்ப கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்தி அது சொல்லுது”

“சரி, சின்ன மாத்தன். நான் ஒரு போதும் மண் கெட்டுப்போக காரணமாக இருப்பேன்”

“ரொம்ப நன்றி நண்பா! எங்கள் இனமே உம்மைப் போற்றும்” என்று கூறிவிட்டு, மெதுவாக ஊர்ந்து சென்றது.  சின்ன மாத்தன் ஊர்ந்து செல்லும் அழகினை வியப்போடு பார்த்துக்கொண்டிருந்தான் வளன்.

“சரி.. நாம் நடக்கத்தொடங்கலாம்” என்றது டெர்மித்.

“ம்.. இது என்ன இடம்?”

“நாம் அடுத்த அடுக்குக்கு வந்துவிட்டோம்.”

“அடுக்கா?”

“ஆம். மணல் அடுக்குகளால் ஆனது என்று படித்திருப்பாயே? நாம் தற்போது இரண்டாவது அடுக்கில் நிற்கிறோம்”

“ரெண்டாவது அடுக்கா?”

“ஆமா.. மேல் அடுக்கு என்பது இலைகள், தழை போன்ற மக்கும் குப்பைகள், விலங்குகளின் கழிவுகள் எல்லாம் இருப்பது. அடுத்த அடுக்கு என்பது இப்ப நான் இருப்பது. மண்புழுக்கள் பூச்சிகள் எல்லாம் இங்கு வந்துபோகும். இதில் குறுக்கும் நெடுக்குமாக செல்லும் இவை எல்லாம் மண்ணுக்கு மேலே இருக்கும் மரங்களின் வேர்கள்” என்றது டெர்மித்.

“இதெல்லாமே வேர்களா?” என்ற வளன் வியப்போடு அவற்றைத் தொட்டுப் பார்த்தான். அவன் கறையான் அளவிலான உருவத்தில் இருப்பதால் வேர்கள் கூட பெரிய பெரிய மரங்களைப் போன்று தெரிந்தது.

திடீரென குட்டி குட்டியான உருவங்களில் சிலர் அங்குமிங்குமாக ஓடினர். அவர்களில் சிலர் இவனை ஓரமாக தள்ளி நிறுத்திவிட்டு, இவன் தொட்டுக்கொண்டு நின்ற வேரை, இழுத்துக் கொண்டு வேறு புறம் ஓடினார்கள்.

“யார் இவர்கள்? என்ன செய்கிறார்கள்?”

“இவர்கள் தாவரங்களின் பாதுகாவலர்கள். தாவரங்களின் வேர்களை, நீர் இருக்கும் இடத்திற்கு தூக்கிச்சென்று வைப்பர். அவை நீரை உறிஞ்சிக் கொள்ளும்.” என்றது டெர்மித்.

“பச்சையாகத் தெரிவதெல்லாம்..” என்று சிலரைக் காட்டினான்.

“அவர்கள் தாவரங்களின் வண்ணப் பாதுகாவலர்கள். இவர்கள் தான் எல்லா தாவரங்களின் இலைகளுக்கும் பச்சை, பழுப்பு என தேவைப்படும் வண்ணம் பூசுபவர்கள்” என்றது டெர்மித்.

தங்கள் உலகத்திற்குள் புதியதாக வந்திருப்பவர்களைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் அந்த பாதுகாப்பு வீரர்கள் அவர்களின் பணியைச் செய்து கொண்டிருந்தனர்.

எல்லாவற்றையும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் வளன்.

(நாளை)

+++++++++

பாகம்1: https://blog.balabharathi.net/?p=1973
பாகம்2: https://blog.balabharathi.net/?p=1977
பாகம்3: https://blog.balabharathi.net/?p=1981
பாகம்4: https://blog.balabharathi.net/?p=1986
பாகம்5: https://blog.balabharathi.net/?p=1989
பாகம்6: https://blog.balabharathi.net/?p=1997
பாகம்7: https://blog.balabharathi.net/?p=2003
பாகம்8: https://blog.balabharathi.net/?p=2008
பாகம்9: https://blog.balabharathi.net/?p=2013
பாகம்10: http://blog.balabharathi.net/?p=2018
பாகம்11: http://blog.balabharathi.net/?p=2022
பாகம்12: https://blog.balabharathi.net/?p=2029
பாகம்13: https://blog.balabharathi.net/?p=2033
பாகம்14: https://blog.balabharathi.net/?p=2037
பாகம்15: https://blog.balabharathi.net/?p=2041
பாகம்16: https://blog.balabharathi.net/?p=2048
பாகம்17: https://blog.balabharathi.net/?p=2052