பூமிக்கு அடியில் தாவரங்களின் பாதுகாவலர்களையும், வண்ண வீரர்களையும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் வளன்.

அவர்களில் வண்ண வீரர்கள் அனைவருமே சின்னச் சின்னதாக வண்ண பைகளை இடுப்பில் கட்டிருந்தனர். அவற்றில் பச்சை நிறம் அல்லது பழுப்பு நிறக் கலவைகள் இருந்தன. இவனே கறையான் அளவில் இருந்தான். அந்த வீரர்கள் இவனை விட, சின்னதாக இருந்தனர். தன் கண்களை அவனாலேயே நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

பழுப்பு வண்ணப் பையுடன் சென்றுகொண்டிருந்த ஒரு வண்ண வீரனை, கை நீட்டி நிறுத்தினான் வளன்.

“எங்கே இவ்வளவு அவசரமாகப் போறீங்க?”

“நான் எங்கேயும் போகவில்லை. வருகிறேன்” என்றது அந்த பசுமை வண்ண வீரன்.

“எங்கே இருந்து வர்றீங்க?”

“இங்கே இருந்து சற்றுத்தொலைவில் உள்ள ஒரு மரம் பல நாட்களாக ஒருதுளி நீர் உணவு கூட  எடுத்துக்கொள்ள மறுக்கிறது. அதனால் என்னைப் போல பலரும் சென்று, அதன் இலைகளுக்கு பழுப்பு நிறத்தை இன்று பூசிவிட்டு வருகிறோம்.”

“ஐயோ பாவமே.. ஏன் அந்த மரம் உணவு எடுக்கமாட்டேங்கிறது?”

“சரியான காரணமெல்லாம் தெரியவில்லை. ஏதாவது ஒவ்வாமைகூட இருக்கலாம். அது கொஞ்சம் வயதான பழமையான மரம்”

“ஓ.. அதுசரி..” என்று ஆரம்பித்தவனை இடைமறித்து, “நீ இந்த கறையானோட வந்திருப்பதால் உன்னையும் மதித்துப் பேசினேன். எங்களுக்கு பேசுவதை விட, செயல் புரிவதுதான் முக்கியம் நான் வருகிறேன்” என்று வேகமாக சென்றுவிட்டது.

மெதுவாக வேடிக்கை பார்த்தபடியே நடக்கலாயினர். சிறிது தூரம் சென்றவுடன், கானமூர்த்தியிடம் “நீங்க ஏன் அமைதியா வர்றீங்க?” என்று  கேட்டான் வளன்.

“வளா, உனக்கு இதெல்லாம் புதுசு.. அதனால் வேடிக்கை பார்க்கிறாய்! நான் உருவம் சின்னதாக மாறிய பின் எவர் காலிலும் மிதி பட்டுவிடலாமல் இருக்க.. இப்படி மண்ணுக்குள் தான் பல நாட்கள் வாழ்ந்து வருகிறேன்” என்றார் கானமூர்த்தி.

இவர்களுடன் நடந்துகொண்டிருந்த டெர்மித், திடீரென உஷார் ஆனது. இடது பக்கமும் வலது பக்கமும் திரும்பிப் பார்த்தது. தலையை சாய்த்துத் திருப்பியபடி முகர்ந்து வாசனை பிடித்தது.

அது என்ன செய்கிறது என்று வளன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தாவரங்களின் பசுமை வீரர்கள் அவசர அவசரமாக நின்ற இடத்திலேயே குழிவெட்டிக்கொண்டு பதுங்கத்தொடங்கினர்.

“ஆபத்து.. ஓடுவோம் வாருங்கள்” என்று கூச்சலிட்டபடியே ஓடத் தொடங்கியது டெர்மித். அதன் பின்னாலேயே வளனும், கானமூர்த்தியும் ஓடினார்கள்.

“ச்சே.. நல்ல இடைவெளி இருந்தால் பறக்கவாவது முடியும். இறக்கை இருந்தும் நானும் ஓடிக்கொண்டிருக்கிறேன்” என்று சலித்துக்கொண்டார் கானமூர்த்தி.

“டெர்மித், நாம் இப்போ எங்கே ஓடுகிறோம்? என்ன ஆபத்து!?” என்று கேட்டான் வளன்.

“இதோ.. இன்னும் கொஞ்ச தூரம்தான். அதோ அங்கே ஒரு மரத்தின் வேர்கள் தொகுப்பு இருக்கும். நாம் வேகமாகச் சென்று அந்த இடத்தை அடைந்துவிட்டால் பாதுகாப்பாகிவிடுவோம்” என்றபடியே ஓடியது டெர்மித்.

அந்த இடத்தை அடைந்து, மேல் நோக்கி வேகமாக ஏறத்தொடங்கியது டெர்மித். பின்னாடியே இவர்களும் ஏறினார்கள். குறிப்பிட்ட உயரம் வந்ததும் ஒரு வசதியான இடத்தில் அமர்ந்துகொண்டனர்.

சடசடனென ஏதோ சத்தம் கேட்கத்தொடங்கியதும் டெர்மித்தைப் பார்த்தான் வளன். வேரை இறுகப் பற்றிக்கொள் என சைகை காட்டியது. இவனும் பற்றிக்கொண்டான்.

சில வினாடிகளில் அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் வருபதுபோல, அவர்கள் இருந்த இடத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஓடத் தொடங்கியது. மணலை அரித்துக்கொண்டு ஓடிய வெள்ளத்தைப் பார்த்ததுமே நடுங்கிவிட்டான் வளன்.

“என்ன திடீர்ன்னு வெள்ளம்?”

“வெளியே மழை பெய்கிறதோ என்னவோ.. அதனால் தான் ஓடிவந்து இங்கே ஒளிந்துகொள்வோம் என்றேன். இது பாதுகாப்பான இடம்” என்றது டெர்மித். அப்போதுதான் அந்த இடத்தை சுற்றிலும் பார்த்தான் வளன். டெர்மித் கூறிய அந்த வேர்களின் தொகுப்பு என்பது ஏதோ கூண்டு போல இருந்தது. சிறிதும் பெரிதுமாக பல அளவுகளில் நிறைய வேர்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து இருந்தன.

“மழை நீர் எவ்வளவு அதிகமாக வந்தாலும் நமக்கு கவலை இல்லை. ஏனெனில் நாம் அந்த நீரில் அடித்துச்செல்லமாட்டோம். இந்த வேர்த் தொகுப்பு வலை போல நம்மை பிடித்துவைத்துகொள்ளும்” என்றது டெர்மித்.

“ஆனா.. இது மழை சீசன் இல்லையே.. சம்மராச்சே..?”

“ஏன்.. கோடையில் மழை பெய்யாதா என்ன? இது கோடைமழை! சகோதரா!” என்றது டெர்மித்.

“ஆஹா.. வெளியே மழை பெய்கிறதா? அப்படியெனில் நாங்கள் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது உதவி தேவையா என்று பார்க்கிறோம்” என்று முத்திரள் உருவத்தில் இருந்து குரல் கொடுத்தான் ஜான்சன்.

“ஆமா.. இங்கே எங்களால் எல்லாவற்றையும் பார்க்க முடிகிறது என்றாலும் உங்களால் எங்களை பார்க்க முடியவே இல்லை என்பதால் நாங்கள் இருந்தும் பெரிய பயனில்லை. அதனால் ஊரடங்கினால் பாதிக்கப்பட்டு உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவச் செல்கிறேன். நீங்கள் இங்கே சுற்றி முடித்துவிட்டு வந்ததும் நாங்களும் இணைந்து கொள்கிறோம்” என்றான் குமார்.

“சரி! நண்பர்களே.. பூமிக்கு மேல் வந்ததும் சந்திப்போம்” என்றனர் கானமூர்த்தியும் அருள்வளனும்.

“பை.. பை” என்று அவர்களின் குரல் கேட்டது.

அங்கே ஓடிக் கொண்டிருந்த மழை நீரின் வரத்து அதிகமாகி, இவர்களின் பாதம் நனைத்து.

(தொடரும்)

++++++++++

பாகம்1: https://blog.balabharathi.net/?p=1973
பாகம்2: https://blog.balabharathi.net/?p=1977
பாகம்3: https://blog.balabharathi.net/?p=1981
பாகம்4: https://blog.balabharathi.net/?p=1986
பாகம்5: https://blog.balabharathi.net/?p=1989
பாகம்6: https://blog.balabharathi.net/?p=1997
பாகம்7: https://blog.balabharathi.net/?p=2003
பாகம்8: https://blog.balabharathi.net/?p=2008
பாகம்9: https://blog.balabharathi.net/?p=2013
பாகம்10: http://blog.balabharathi.net/?p=2018
பாகம்11: http://blog.balabharathi.net/?p=2022
பாகம்12: https://blog.balabharathi.net/?p=2029
பாகம்13: https://blog.balabharathi.net/?p=2033
பாகம்14: https://blog.balabharathi.net/?p=2037
பாகம்15: https://blog.balabharathi.net/?p=2041
பாகம்16: https://blog.balabharathi.net/?p=2048
பாகம்17: https://blog.balabharathi.net/?p=2052

பாகம்18: https://blog.balabharathi.net/?p=2058