“வளா.. வளா..” என்று குரல் கேட்டு கண்விழித்துப் பார்த்தான் அருள்வளன். ஒரு நிமிடம் தான் எங்கிருக்கிறோம் என்று புரியாமல் பார்த்தான். ஏதோ சிறைக்குள் இருப்பது போலத் தோன்றவே.. பதறிப்போய் சுற்றிலும் தேடினான். சற்று தொலைவில் டெர்மித்தும் கின்னரர் கானமூர்த்தியும் மரத்தின் வேர்களைப் பற்றியபடி அமர்ந்திருந்தனர். இவன் கண் விழித்ததைப் பார்த்ததும் ஒரே நேரத்தில், “அடடா, எழுந்துவிட்டாயா?” என்றனர். குழப்பத்துடன் அவர்களைப் பார்த்தான் வளன்.

“நெடு நேரமாக ஓடிய மழை நீரையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தோமா.. அப்படியே நீ முதலில் உறங்கி விட்டாய். கொஞ்ச நேரத்தில் நாங்களும் உறங்கிப் போனோம்” என்றார் கானமூர்த்தி.

“தூங்கிட்டேனா..”

“ஆமாம்.” என்றபடியே கீழே இறங்கி நடக்கலாயினர். கரடு முரடான சாலையை புல்டோசர் வைத்து சரி செய்தது போல, மணல்வெளிப் பாதையை சரி செய்திருந்தது, ஓடிய மழை நீர்.

நடப்பதற்கே இலகுவாக இருப்பது போலத்தோன்றியது. “மழைத்தண்ணீர் இப்படி ஓடினால் மணல் நல்லா பதமாகி, நடக்கவே நல்லா இருக்கு” என்றான் வளன்.

”ஆமாம்” என்றார் கானமூர்த்தி.

“உங்களுக்கு அப்படித் தோன்றலாம். ஆனால் எங்களைப் போன்றவர்களுக்கு மணல் கொஞ்சம் தளர்வாகவும் இருக்கவேண்டும். அதுதான் எங்களைப் போன்றவர்களுக்கு வசதியானது.” என்றது டெர்மித்.

சிறிது தூரம் சென்றதும், “அடுத்து நாம எங்கே போகப் போகிறோம்” என்று கேட்டான் வளன்.

”அவ்வளவு தான் நாம் கிளம்பி மேலே செல்லவேண்டியதுதான்” என்றது டெர்மித்.

“இதுக்கு கீழே போக முடியாதா? ஒண்ணும் இல்லையா?”

”ஏன் இல்லாம.. விதவிதமா இருக்கு. நாமதான் அங்கே போகமுடியாது.”

“ஏன்?”

“நாம, இப்ப நிற்குறதுக்கு கீழே இருந்து பாறைகளின் பகுதி தொடங்கிவிடும். அங்கே எங்களால் செல்ல முடியாது என்பதால் உங்களை அங்கே அழைத்துச்செல்லமுடியாது”

”எல்லாமே பாறைகள் தானா?”

“ஆமா முதலில் மென்பாறைகள், அதற்கும் கீழே கடுமையான பாறைகள் எல்லாம் இருக்கும்”

”ஓ! அப்ப நாம மேலே போகத்தான் வேண்டுமா?”

“ஆமாம் வளன்! இங்கே இருக்கமுடியாது.” என்றார் கானமூர்த்தி.

“சரி வாருங்கள்! அதோ.. அந்த பக்கம் வழியாக நாம் வெளியே செல்வோம்” என்றபடியே டெர்மித் நடக்க, இருவரும் அதன் பின்னால் அணிவகுத்தனர்.

சமதளத்தில் இருந்து சிறிது தொலைவு நடந்ததும், சரிவான பாதையில் ஏறத்தொடங்கினர். அந்த சரிவுப்பாதையின் உச்சியில் லேசான வெளிச்சம் தெரிந்தது. ஏற ஏற பாதை நீண்டுகொண்டே சென்றதுபோல இருந்தது.

“ரொம்ப நேரமாக நடப்பது மாதிரித்தோணுதே?” என்றான் அருள்வளன்.

“நமது உருவம் மிகவும் சின்னதாகி இருப்பதால் இந்தப் பாதை உனக்கு மிகவும் நீண்ட நெடியதாகத் தோன்றுகிறது. மற்றபடி நீ சாதாரண உருவத்தில் இருந்தால் இந்த உயரம் என்பது உனது ரெண்டு மூன்று அடிக்குள் முடிந்துவிடக்கூடியதே!” என்றார் கானமூர்த்தி.

வளன் நிமிர்ந்து பார்த்தான்.  உயரத்தில் வெகு தொலைவில் சென்று கொண்டிருந்தது டெர்மித். வேகமாக நடையைப் போட்டான். இவர்கள் அப்பாதையின் வாசலை அடையும்போது, வந்துகொண்டிருந்த வெளிச்சம் தடைபட்டது போல இருந்தது. நிமிர்ந்து பார்த்தனர். வெளியேறுவதற்கான அந்த ஓட்டை வழியாக ஒரு பெரிய கண் உள்ளே எட்டிப் பார்த்தது.

“வளா, வெளியே ஆபத்து இருக்கிறது போல.. கொஞ்சம் கவனமாக பதுக்கிப் பதுக்கிச் செல்வோம்” என்ற கானமூர்த்தி, அப்படியே அப்பாதையின் ஓரமாய் நடக்கலானார்.

தீடீரென அந்த பாதையின் வளைவு வழியாக பெரிய கொக்கி ஒன்று உள்ளே வந்து மணலைக் கீறிக்கொண்டு வெளியே சென்றது.

“எ..எ.. என்னது அது?” என்று நடுங்கியபடியே கேட்டான் வளன்.

“நாம் செல்லும் இந்தப் பாதையின் வெளியே, உணவுக்காக கோழி போன்ற ஏதோவொரு பறவை நின்றுகொண்டிருக்கிறது என நினைக்கிறேன். அதன் கால்தான் இப்போது கொக்கி போல வந்தது.” என்றார் அவர்.

“ஐயையோ.. முன்னால் டெர்மித் சென்றுகொண்டிருந்ததே..” என்றவன்

“டெர்மீத்த்த்த்த்” குரல் எழுப்பினான்.

“பதில் இல்லை”

மீண்டும் கத்தினான்.

“டெர்ர்ர்ர்ர்ர்ர்மீமீமீத்த்த்த்”

ம்ஹூம்! பதில் இல்லை. முகத்தில் அச்சரேகைப் படர, கானமூர்த்தியைப் பார்த்தான். அவரோ, “டெர்மித், அந்த பறவையின் பசிக்கு இரையாகிவிட்டது போல!” என்றார்.

“ஐயோ.. அப்போ நாம எப்படி வெளியில் போறது?”

“கொஞ்சம் பொறுமையாக இரு. அந்த பறவைக்கு மாட்டாமல் நாம் இங்கே இன்னும் கொஞ்ச நேரம் இருப்போம். அது நகர்ந்து சென்றதும் வெளியில் ஓடிவிடலாம்” என்றார் கானமூர்த்தி.

சிறிது நேரம் இடைவெளிவிட்டு, மீண்டும் மீண்டும் அந்த பறவையின் வளைந்த நகம் கொண்ட கால் மண்ணைக் கிளறிவிட்டுச் சென்றபடியே இருந்தது. இவர்கள் அசைவே இல்லாமல் காத்திருந்தனர்.

(தொடரும்)

++++++++++++++

பாகம்1: https://blog.balabharathi.net/?p=1973
பாகம்2: https://blog.balabharathi.net/?p=1977
பாகம்3: https://blog.balabharathi.net/?p=1981
பாகம்4: https://blog.balabharathi.net/?p=1986
பாகம்5: https://blog.balabharathi.net/?p=1989
பாகம்6: https://blog.balabharathi.net/?p=1997
பாகம்7: https://blog.balabharathi.net/?p=2003
பாகம்8: https://blog.balabharathi.net/?p=2008
பாகம்9: https://blog.balabharathi.net/?p=2013
பாகம்10: http://blog.balabharathi.net/?p=2018
பாகம்11: http://blog.balabharathi.net/?p=2022
பாகம்12: https://blog.balabharathi.net/?p=2029
பாகம்13: https://blog.balabharathi.net/?p=2033
பாகம்14: https://blog.balabharathi.net/?p=2037
பாகம்15: https://blog.balabharathi.net/?p=2041
பாகம்16: https://blog.balabharathi.net/?p=2048
பாகம்17: https://blog.balabharathi.net/?p=2052
பாகம்18: https://blog.balabharathi.net/?p=2058
பாகம்19: https://blog.balabharathi.net/?p=2062