மேலே செல்வதற்கான பாதைக்கு வெளியே ஏதோவொரு பறவை நின்று கிளறிக் கிளிறி கொத்தித் தின்று கொண்டிருந்தது. அதற்கு பயந்து, ஓரமாக பதுங்கிக் கொண்டனர் கானமூர்த்தியும் அருள்வளனும்.

பறவையின் கிளறல் நிற்க வெகுநேரம் ஆனது. அதுவரை இருவரும் அப்படியே ஒளிந்து கொண்டிருந்தனர். அது நின்றதும் வளன், வெளியே எட்டிப்பார்க்க முயன்றான். அவனை கானமூர்த்தி தடுத்தார். அவரே மெதுவாக வெளியே சென்று எட்டிப் பார்த்தார். எந்தப் பறவையையும் காணவில்லை. ஆபத்தில்லை என்பதை உணர்ந்தும் வளனை வெளியே வரச்சொன்னார். அவனும் தயங்கித் தயங்கி வந்தான்.

மணற்பகுதி முழுக்க, இரைதேடிய அந்த பறவை கீறி விட்ட கோடுகளின் தடத்தைப் பார்த்து வளன் கொஞ்சம் பயந்துதான் போனான்.

“பாவம்! டெர்மித்” என்றான் வளன்.

“என்னப்பா செய்றது? மனிதர்களுக்கு எப்படி உயிர் நிரந்தரமில்லையோ, அதே மாதிரித்தான் இந்த பூமியில் இருக்கிற எல்லா உயிர்களுக்கும். நல்லவேளை மனிதர்களை உணவாக்கிக் கொள்ளும் எந்த உயிர்களும் நாட்டுக்குள் இல்லை. இருந்திருந்தால் மனிதர்களும் அஞ்சி அஞ்சியே வாழவேண்டியதிருக்கும்.”

கானமூர்த்தி சொல்லுவது புரிந்த மாதிரியும் இருந்தது. புரியாத மாதிரியும் இருந்தது. பதில் ஏதும் சொல்லத் தெரியாமல் அமைதியாக நடந்தான் வளன். அப்போது பூமியில் கிடந்த மணற்குவியலில் ஓர் இடம் லேசாக அசைவது போல இருந்தது. கானமூர்த்தியிடம் அந்த இடத்தைக் காட்டினான். அவரும் அங்கே பார்த்தார். மணலை முட்டிக்கொண்டு எதுவோ வெளியே வருவது போலத் தோன்றியது.

இருவரும் சேர்ந்து உற்று நோக்கினர். மண்ணை முட்டிக்கொண்டு மெதுவாக வெளியே வந்த உருவத்தைப் பார்த்ததும் இருவரின் கண்களும் விரிந்தன. ஆம்! மண்ணை முட்டிக்கொண்டு, வெளியே வந்தது டெர்மித்.

“ஹேய்.. டெர்மித்..” என்று கத்தினான் வளன்.

மெதுவாக எழுந்து நின்ற டெர்மித், ஒருமுறை தன்னுடைய உடலை சிலிர்த்துக் கொண்டு, உடலில் ஒட்டி இருந்த மணல் உதிர்த்துவிட்டான்.

“உன்னை திரும்பவும் பார்ப்பேன்னு நினைச்சுக்கூடப் பார்க்கவே இல்லை” என்றார் கானமூர்த்தி.

“ஆமாம்! நானே கூட அந்த கோழியின் வயிற்றுக்குள் போய் விட்டதாகவே நினைத்தேன். அது அவசரமாக கிளறி கிளறி இரை தேடிச்சா… அப்போது என் மீது மணல் விழ, அப்படியே படுத்துவிட்டேன்.” என்று சிரித்தது டெர்மித்.

“எனக்கு நிறைய கேள்விகள் இருந்துச்சு. உன்னையும் காணமா, ஒரு பக்கம் நீ இரையாகிட்டியோன்னு வருத்தம். இன்னொரு பக்கம் பதில் சொல்ல ஆளில்லையேன்னு கவலை” என்றான் வளன்.

“அடப்பாவி, ஆளு போயிட்டானேன்னு கவலைப்பட்டதை விட, பதில் சொல்ல ஆளில்லைன்னுதான் ரொம்பக் கவலைப்பட்ட போல! ம், சொல்லு என்ன சந்தேகம்?”

டெர்மித் சலித்துக்கொண்ட விதத்தைப் பார்த்ததும் கானமூர்த்தி சிரித்துவிட்டார். வளன் அசடு வழிந்தபடி சிரிப்பில் இணைந்து கொண்டான்.

“சரிப்பா.. நாம நடப்போம். நடந்தபடியே நீ கேட்குறதைக் கேளு!” என்றபடியே நடக்கத்தொடங்கியது டெர்மித்.

“பூமிக்கி கீழே நாம இருந்தப்போ.. நிறைய மழைபெய்தது”

“ஆமா.. மழை நீர்கூட கால்களை நனைச்சுட்டு ஓடிச்சே” என்றது டெர்மித்.

“கரெக்ட். பூமிக்கு மேல ஓடுற தண்ணி எல்லாம் கீழே போகுதுன்னு சொல்லுவாங்க. நான் கீழே இருந்தபோதும்.. மழைத்தண்ணி ஓடிட்டே இருந்துச்சே அதெல்லாம் எங்கே போச்சு?”

“பூமிக்கு அடியிலதான்.”

“நமக்கு கீழ பாறைதான் இருக்குன்னு சொன்னியே?

“ஆமா! பாறைகள் தான். நாம இருந்த இடத்திலும் பாறைகளிலும் குட்டிக்குட்டியாக ஓட்டைகள் நிறைய இருக்கும். அதுவழியாக இந்தமாதிரி நீர் எல்லாம் பூமிக்கு கீழே போய்விடும்.

“வாவ்..”

“அதன்மூலம்தான் நிலத்தடி நீர் மட்டம் உயருது!”

“ஓ! சரி சரி, நல்ல செய்தியை விளக்கினதுக்கு நன்றி.. ஆமா.. கீழே நாம ஏறி உட்காந்திருந்தது மரத்தோட வேர்கள் தானே.. அது ஏன் எல்லாம் ஜெயில் மாதிரி, நெருக்கமாக இருக்குதுங்க,,…”

“பொதுவாக எல்லா வேர்களுமே இப்படிப் பின்னி பிணைந்துதான் இருக்கும். அப்போதுதான் மண் அரிப்பு நிகழாமல் இருக்கும். மேல் மணல் அரிப்பை தடுப்பது புல்வெளிகள் என்றால் பூமிக்கு கீழே மணல் அரிப்பை தடுப்பது மரங்களில் வேர்கள் தான்”

“மரங்களினால் இவ்வளவு பலன் இருக்கா?”

“ஆமா, மழை நீர் நேரடியாக மண்ணில் கொட்டும்போது ஏற்படும் பாதிப்பைக்கூட மரங்களே தடுக்கின்றன. மரங்களின் வளர்ப்பு என்பது மழை வருவதற்காக மட்டுமல, மண்ணின் வளத்தைப் பாதுகாக்கவும்தான்” என்றது டெர்மித்.

ஒருவழியாக பேசியபடியே எல்லோரும் பயணம் தொடங்கிய கறையான் புற்று அருகில் வந்து சேர்ந்தனர்.

(தொடரும்)

பாகம்1: https://blog.balabharathi.net/?p=1973
பாகம்2: https://blog.balabharathi.net/?p=1977
பாகம்3: https://blog.balabharathi.net/?p=1981
பாகம்4: https://blog.balabharathi.net/?p=1986
பாகம்5: https://blog.balabharathi.net/?p=1989
பாகம்6: https://blog.balabharathi.net/?p=1997
பாகம்7: https://blog.balabharathi.net/?p=2003
பாகம்8: https://blog.balabharathi.net/?p=2008
பாகம்9: https://blog.balabharathi.net/?p=2013
பாகம்10: http://blog.balabharathi.net/?p=2018
பாகம்11: http://blog.balabharathi.net/?p=2022
பாகம்12: https://blog.balabharathi.net/?p=2029
பாகம்13: https://blog.balabharathi.net/?p=2033
பாகம்14: https://blog.balabharathi.net/?p=2037
பாகம்15: https://blog.balabharathi.net/?p=2041
பாகம்16: https://blog.balabharathi.net/?p=2048
பாகம்17: https://blog.balabharathi.net/?p=2052
பாகம்18: https://blog.balabharathi.net/?p=2058
பாகம்19: https://blog.balabharathi.net/?p=2062
பாகம்20:https://blog.balabharathi.net/?p=2066