மந்திரச் சந்திப்பு -21 (நிறைவுப் பகுதி)

டெர்மித் தன்னுடைய புற்றின் அருகில் வந்ததும், கானமூர்த்தியையும், அருள்வளனையும் பார்த்தது.

“எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. ரொம்ப தாங்க்ஸ் டெர்மித்!” என்று கை கூப்பி வணக்கம் தெரிவித்தான் வளன்.

“அடடா! நாம் இப்போது நண்பர்கள் வளன். நண்பர்களுக்கிடையே நன்றி எல்லாம் வேண்டாம்ப்பா..” என்றது டெர்மித்.

“நீ சொல்றது சரியா இருக்கலாம். பஸ்ஸுல காசு கொடுத்து டிக்கெட் வாங்கும்போது கூட கண்டக்டர்ட்ட நன்றி சொல்லணும்னு சொல்லிக் கொடுத்திருக்காங்க. நீயோ பூமிக்கு அடியிலேயே ரவுண்ட் கூட்டிட்டு போயிருக்க.. நன்றி சொல்லாட்டி எப்படி? அதனாலதான் நன்றி சொன்னேன்” என்றான் வளன்.

“நன்றிங்கிற ஒற்றை வார்த்தையை வச்சுகிட்டு, எவ்வளவு நேரம்தான் பேசுவீங்க” என்றார் கானமூர்த்தி.

“அதுவும் சரிதான். எனக்கும் அங்கே நிறைய வேலை மீதமிருக்கும். நான் கிளம்புகிறேன். பொதுவாக எங்கள் இல்லம் வரும் எல்லோருக்கும் நாங்கள் எதாவது பரிசு கொடுப்போம். இம்முறை அது இயலாமல் போயிற்று. வாய்ப்பிருதால் இன்னொரு முறை சந்திப்போம்.” என்று சொல்லிவிட்டு, டெர்மித் புற்றுக்குள் நுழைந்தது. அது செல்வதையே பார்த்துக்கொண்டு சிறிது நேரம் நின்றுகொண்டிருந்தனர்.

“இப்படியே நின்று கொண்டே இருந்தால் இந்த கதையை எப்ப முடிக்கிறதாம். சீக்கிரம் கிளம்புப்பா..!” என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தான். காகிதப் பாப்பா நின்றுகொண்டிருந்தது.

”என்னது கதை முடியப்போகுதா?” என்று அதிர்ச்சியாகக் கேட்டான் வளன்.

“ஷாக்கைக் குறை!  ஷாக்கைக் குறை!!”

“நீ சொல்லுறது நிஜமா?”

“ ஆமாப்பா! கதைன்னு இருந்தா அதுக்கு முடிவுன்னு ஒண்ணு இருந்தே ஆகும். புரியுதா? கிளம்பு” என்று திரும்பி நின்று தன் முதுகைக் காட்டினார் கானமூர்த்தி. எதுவும் பேசாமல் அவரின் முதுகில் ஏறி அமர்ந்து கொண்டான் வளன். அவனைச் சுமந்து கொண்டு, அவனது வீடு நோக்கி பறந்தார் கானமூர்த்தி. அவரின் பின்னாடியே பறந்தது காகிதப் பாப்பா.

++++

அருள்வளன் சோகமாக அமர்ந்திருந்தான். அவனுக்கு எதிரில் முத்திரள் உருவத்தினர் எல்லோரும் நின்றிருந்தனர். அவர்களுக்கு அருகில் காகிதப் பாப்பாவும், கானமூர்த்தியும் நின்றிருந்தனர்.

“சொன்னா புரிஞ்சுக்கோ வளன். நாம இப்போதைக்கு பிரிஞ்சுதான் ஆகணும்.”

“_ _ _ _ _”

“இப்படியே அமைதியா எவ்வளவு நேரம்தான் உட்கார்ந்திருப்ப?”

“எல்லோருமே பொய் சொல்லிட்டீங்க!” என்றான் வளன்.

“பொய் சொன்னோமா.. என்ன பொய் சொன்னோம்?”

“இந்த ஊரடங்கு முடியுறவரை நாம தினம் தினம் சந்திக்கலாம். ஏதாவது செய்யலாம்னு சொன்னீங்களே..?”

“சொன்னது உண்மைதான்” என்ற சுந்தரன் “ஆனா” என்று இழுத்தான்.

“ஆனா ஆவன்னா எல்லாம் சொல்லாதே..” என்று கத்தினான் அருள்வளன்.

“இப்படி அடம்பிடிப்பது நல்ல பழக்கம் இல்லை வளா! அரசின் தடை உத்தரவை விலக்கும் வரை, நாம் ஒன்றாக இருக்க எண்ணியது என்னவோ நிஜமாக இருக்கலாம். ஆனால் இன்று உலகின் பல பகுதிகளில், பல நாடுகளில் தடையை நீக்கிவிட்டனர். கொரோனா பாதிப்பு குறைந்த அந்த நாடுகளுக்கு சென்று வர எங்கள் நாட்டிலும் அனுமதி கொடுத்து விட்டனர். எங்கள் வியாசபுரி நாட்டினருக்கு, பல்வேறு நாடுகளிலிருந்து பல பொருட்கள் தேவைப்படும். அவற்றைப் பெற நாங்கள் பயணப்பட்டுக் கொண்டே இருப்போம். எனக்கும் வேலை இருக்கிறது வளன். அதனால் தான் தற்காலிகமாக பிரிந்து செல்வோம் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.” என்று பொறுமையாக எடுத்துரைத்தான் சுந்தரன்.

“ஆமா வளன், சும்மா ஒரு சந்திப்புன்னு இதை நினைச்சோம். ஆனால் காகிதப்பாப்பா வந்தது ஆச்சரியம். மயிலைப் பார்த்தது சந்தோசம். சொந்த ஊருக்கு சாலையில் நடந்து சென்ற பலருக்கும் தண்ணீர் வழங்கியது, உணவு கொடுத்தது எல்லாமே செம்மையான அனுபவமாக இருந்துச்சு.” என்றான் சூர்யா.

“உன்கூட கான மூர்த்தி இருக்கார். இந்த ஊரடங்கு முடியும்வரை அவரை இசையமைத்து பாடச்சொல். மிக அற்புதமாகப் பாடக்கூடியவர்” என்று சொன்னான் சுந்தரன்.

“அதனால் என்ன.. பாடிவிட்டால் போச்சு” என்றார் கானமூர்த்தி.

“உங்களை எல்லாம் எனக்கு நேரில் பார்க்கனும் போல இருக்கு!” என்றாள் மயில்.

”கண்டிப்பாக நாம் எல்லோரும் ஒருநாள் சந்திப்போம்.” என்றான் குமார்.

“ஆமா! எல்லோரையும் நான் கடலுக்குள் அழைச்சுட்டுப் போறேன்” என்றது ஜூஜோ.

“அதுகென்ன.. சந்திந்தால் போச்சு” என்றான் ஜான்சன்.

“பிரிவு என்பதே சந்திப்பதற்காகத்தான்” என்றான் அமீர்.

“அடடா! தத்துவமாக பேச ஆரம்பிச்சுட்டீங்களே..” என்று கானமூர்த்தி சொன்னதும் எல்லோரும் சிரித்தனர். அருள்வளனும் அந்த சிரிப்பில் இணைந்துகொண்டான்.

அப்போது, “ஏலேலே.. ஐலசா” என்று ஒருவர் குரல் கேட்க, பின்னாடியே பல குரல்கள் கோரஸில் “ஐலசா.. ஐலசா” என்று கேட்டது. 

அருள் வளனின் அறையை ஒட்டி வெளியே இருந்துதான் இந்த ‘ஐலசா’ சத்தம் கேட்டது. பறந்து ஜன்னலில் அமர்ந்து எட்டிப் பார்த்தார் கானமூர்த்தி.

அங்கே சாரை சாரையாக எறும்புகள் வந்துகொண்டிருந்தன. அந்த எறும்புகள் மரக்குச்சி போன்ற எதையோ சுமந்தபடியே வந்தன. அதை தூக்கியபடி முன்னால் வரும் எறும்பு ‘ஏலேலே ஐலசா’ என்று பாடத்தொடங்கியதும் மற்றவை எல்லாம் ‘ஐலேசா ஐலேசா” என்று பின்பாட்டுபாடின.

மெதுவாக ஊர்ந்துவரும் அவற்றை கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தார் கானமூர்த்தி.

அவன் வெளியில் இருந்து அறைக்குள் வந்து நின்றன.

“இங்கே அருள்வளன் யார்?” என்று கேட்டது ஓர் எறும்பு.

“நான் தான் ஏன்?” என்று கேட்டான் அவன்.

“கறையான் ராணி, உங்களிடம் சேர்க்கச்சொல்லி இந்த பரிசைக் கொடுத்து அனுப்பியுள்ளார்” என்று மற்ற எறும்புகள் சுமந்து வந்த அந்த சிறுதுண்டு மரத்தைக் காட்டியது அந்த எறும்பு.

“இதென்ன மரத்துண்டு.”

“இது மரத்துண்டு அல்ல. ஒரு வேர். அதன் பெயர் ‘காயப்’” என்றது அந்த எறும்பு.

”என்னது!??!”

“காயப் வேர்- இதை உரசி, நீரில் கலந்து பருகினால்.. யாருடைய கண்ணுக்கும் தெரியாமல் மறைந்து போவீர்கள். ராணி கொடுக்கும் உயர்ந்த பரிசு இது”

“வாவ்! ராணி, எங்களுக்கெல்லாம் பரிசு கொடுக்கலையா?” என்று சூர்யா கேட்டான்.

“குகைக்குள் வந்த அனைவருக்குமே இந்த ‘காயப் வேர்’ பரிசு உண்டு. நீங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு ஊர்களில் இருப்பதால்.. எங்கள் ஆட்கள், அதுதான் எறும்புகள் வந்து எல்லோருக்குமே கொடுப்பார்கள். இங்கிருந்து அங்கே வந்து சேர சில நாட்கள் எடுத்துக்கொள்ளும். ஆனால் நிச்சயம் எல்லோருக்கும் பரிசு உண்டு!” என்று அந்த எறும்பு சொல்ல..

அனைவரும்.. “ஐயா…” என்று சந்தோசமாகத் துள்ளிக்குதித்தனர்.

(உருவத்தை மறையச்செய்யும் ‘காயப்’ வேர் கிடைத்ததும் இவர் என்னவெல்லாம் செய்தனர் தெரியுமா? அதெல்லாம் தனிக்கதை!)

மந்திரச் சந்திப்பு முற்றிற்று.

++++++++++++++++++


பாகம்1: https://blog.balabharathi.net/?p=1973
பாகம்2: https://blog.balabharathi.net/?p=1977
பாகம்3: https://blog.balabharathi.net/?p=1981
பாகம்4: https://blog.balabharathi.net/?p=1986
பாகம்5: https://blog.balabharathi.net/?p=1989
பாகம்6: https://blog.balabharathi.net/?p=1997
பாகம்7: https://blog.balabharathi.net/?p=2003
பாகம்8: https://blog.balabharathi.net/?p=2008
பாகம்9: https://blog.balabharathi.net/?p=2013
பாகம்10: http://blog.balabharathi.net/?p=2018
பாகம்11: http://blog.balabharathi.net/?p=2022
பாகம்12: https://blog.balabharathi.net/?p=2029
பாகம்13: https://blog.balabharathi.net/?p=2033
பாகம்14: https://blog.balabharathi.net/?p=2037
பாகம்15: https://blog.balabharathi.net/?p=2041
பாகம்16: https://blog.balabharathi.net/?p=2048
பாகம்17: https://blog.balabharathi.net/?p=2052
பாகம்18: https://blog.balabharathi.net/?p=2058
பாகம்19: https://blog.balabharathi.net/?p=2062
பாகம்20:https://blog.balabharathi.net/?p=2066

பாகம் 21: https://blog.balabharathi.net/?p=2072

This entry was posted in சிறுவர் இலக்கியம் and tagged , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 3 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.