எனது தோழி ஒருத்தியின் பெண், இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தாள். அவளுக்கு ஒரே பெண். நாங்கள் அவள் இல்லத்துக்கோ, அல்லது அவள் எங்கள் வீட்டுக்கோ வரும் சந்தர்ப்பங்களில் எல்லாம், தன் பிள்ளையைப் பற்றி புலம்பியபடியே இருப்பாள் தோழி.

‘எப்படியாச்சும் ஒரு டிகிரிய படிக்கவெச்சிட்டா போதும். ஒரு கல்யாணத்தைக் கட்டிவெச்சிடலாம். படிப்பே வரமாட்டேங்குது’ என, விதவிதமான புகார்ப் பட்டியலை வாசித்தபடியே இருப்பாள்.

அவளது குழந்தை, ஆங்கிலவழிக் கல்வியான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டதில் படிப்பவள் என்பதால், ஊடரங்கு காலத்துக்கு முன்னரே அவளது தேர்வு முடிந்துவிட்டது. அதன் முடிவுகளுக்காகத் தோழியின் வீட்டார் காத்துக்கொண்டிருந்தனர்.

சில நாள்களுக்கு முன் தேர்வு முடிவுகள் வந்த அன்று, தோழியின் மகள் குறித்து எண்ணம் வந்தது. ஆனால் அவளுக்குப் போன் செய்து பேசவும் தயக்கமாக இருந்தது. அவளோ, ஏற்கெனவே படிப்பதில் சுணக்கமானவள் என்று தோழி கூறி உள்ளாள். ஒருவேளை, இத்தேர்வில் அவள் வெற்றிபெறமால் இருந்தால், நாமாகப் பேசி, அவர்களின் வலியை அதிகரித்துவிடக் கூடாது என்ற எண்ணமும் மேலோங்க, போன் செய்யவே இல்லை. மதியம் போல தோழியே போன் செய்தாள். மிகுந்த தயக்கத்துடன் அழைப்பை எடுத்துப் பேசினேன்.

‘டேய், என் பொண்ணு பாஸ் பண்ணிட்டா. 84 பர்சண்டேஜ் எடுத்திருக்கா. இதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன். சரி, அப்புறம் பேசுகிறேன்’ என்று தொடர்பைத் துண்டித்துவிட்டாள்.

எனக்குள் ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், மற்றொரு பக்கம் குழப்பம். தோழியின் மகளை நாம்தான் தவறாக நினைத்துவிட்டோம்போல என்று எண்ணிக்கொண்டேன்.

‘மகளுக்கு வாழ்த்துகளைக் கூறு. அப்படியே அவளின் மதிப்பெண் விவரங்களை அனுப்பு என்று தோழிக்கு வாட்ஸ் ஆப்பில் செய்தி அனுப்பிவிட்டுக் காத்திருந்தேன்.

அவளும், மகளின் மதிப்பெண்களை அனுப்பியிருந்தாள். கணிதத்தில் 74. மற்ற எல்லா பாடங்களிலும் 80-க்கும் மேல். மொழிப்பாடத்தில் 92. அந்த மதிப்பெண்கள் எனக்கு இன்னொரு விஷயத்தைக் கோடிட்டுக் காட்டின.

இவ்வளவு மதிப்பெண்கள் எடுக்கக்கூடிய அச் சிறுபெண்ணை, படிக்கவே முடியாதவள்போல ஏன் சித்தரித்தனர், என் தோழியும் அவள் வீட்டாரும் என்ற சிந்தனை எனக்குள் எழுந்தது.

அவள் அனுப்பிய மதிப்பெண்களை மீண்டும் ஒருமுறை பார்த்தேன். நிச்சயம், நான் பத்தாவதில் எடுத்ததைவிட பன்மடங்கு அதிகம். இப்படி படிக்கக்கூடிய ஒரு பிள்ளையை ஏன் அவள் கரித்துக்கொட்டிக்கொண்டே இருந்தாள் என்ற கேள்வி எனக்குள் சுற்றிக்கொண்டே இருந்தது. அதற்கான விடை அடுத்தநாள்தான் கிடைத்தது.

நாலு தெரு தள்ளித்தான் இருக்கிறார்கள் என்பதால், வீட்டில் ஒரு இனிப்பு செய்து, அவள் வீட்டில் கொண்டுபோய் கொடுத்துவிட்டு வரலாம் என்று போனோம்.

எப்போதுமே மௌனமாக இருக்கும் தோழியின் மகள், உற்சாகமாக இருந்தாள். எங்களை முகம் மலர வரவேற்றாள். ஓடிச்சென்று, சாக்லேட் எடுத்துவந்து நீட்டினாள். நாங்கள் கொண்டு சென்ற இனிப்பைக் கொடுத்துவிட்டு, வாழ்த்தினோம். கொஞ்ச நேரம் அவர்களோடு பேசிவிட்டுக் கிளம்பி வந்துவிட்டோம்.

இதற்கிடையில், தோழியின் மகளிடம், ‘என்னமா.. எப்பவுமே உங்க அம்மா புலம்பிட்டே இருப்பாளே. ஆனா, உன் மார்க்க வெச்சிப் பார்க்கும்போது நல்லா படிப்ப போலிருக்கே!?’ என்று கேட்டேன்.

‘நல்லாவா இல்லையான்னு எல்லாம் தெரியாது அங்கிள். புரிஞ்சு படிப்பேன். எப்பவுமே 80-க்கு கீழ எடுத்ததே இல்லை. ஆனா, அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நான் 90 பர்சன்ட் எடுக்கணும். இல்லாட்டி, செண்டம் அடிக்கணும்னு ஆசை. என்னால இவ்வளவுதான் முடியும்’.

‘என்னம்மா.. அடுத்து?’

‘சயின்ஸ்தான் அங்கிள். மெடிக்கல்தான் என் ஆசை‘ என்றாள், உற்சாகமாக.

இந்தக் கட்டுரையை எழுதும்போது, என் தோழியின் முகமும், அவளது குழந்தையின் முகமுமே வந்துபோனது.

உண்மையில், நாம் நம் பிள்ளைகளை நன்றாகத்தான் வளர்க்கிறோமா என்று, ஒவ்வொரு பிள்ளையின் பெற்றோரும் சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

ஓட்டப்பந்தய மைதானத்தில், ஓடுகளத்தில் தயாராக நிற்கும் அனைவருமே, தாம் முதலில் வர வேண்டும் என்று நினைப்பதைக்கூட என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அப்படி முதலில் வர முடியாத எல்லோருமே ஓடத் தெரியாதவன் என்று பிறர் நினைத்தால், அது எவ்வளவு பெரிய அறியாமை.

80 சதவீத மதிப்பெண்கள் பெறும் ஒரு குழந்தையை, நீ இன்னும் எடு, இன்னும் எடு என்று அழுத்தம் கொடுப்பதோடு, அக்குழந்தையை, படிப்பே வராத, படிக்கவே இயலாத பிள்ளையைப்போல் பேசித் திரிந்த என் தோழியை என்ன சொல்வது?!

இது ஏதோ என் தோழியின் வீட்டில் மட்டும் என்று எண்ணிவிட வேண்டாம். தம் பிள்ளைகளின் மீது அழுத்தம் கொடுக்கும் எண்ணற்ற பெற்றோரை நான் அறிவேன்.

*

நான் பள்ளியில் படிக்கும் சமயத்தில், ஒரு ஆசிரியர் இருந்தார். கோபமே படமாட்டார். எனக்கு நினைவுதெரிந்து, ஒரு மாணவனையும் அவர் அடித்ததில்லை. அன்பானவர். அதனாலேயே அவரது வகுப்பு என்றாலே, வகுப்பறைக்குள் மாணவர்களின் சத்தம் அதிகமாக இருக்கும். அப்படியும்கூட அவர் அடிக்கமாட்டார். ஆனால், கண்டிப்பானவர்.

அவரது பாட வகுப்புகளையோ, அவரது பாடப்பிரிவு தேர்வுகளையோ யாரும் ஆப்செண்ட் ஆகக் கூடாது. தேர்வில் வெற்றியே பெறாவிட்டாலும் பரவாயில்லை. தேர்வு எழுது என்பது அவரது மந்திரம். அவர் அடிக்கடி வகுப்பறையில் சொல்லும் வார்த்தை, இப்போதும் எனக்குள் கேட்டுக்கொண்டே இருக்கும்.

‘தோல்வியோ, வெற்றியோ.. முடிவைப் பற்றி சிந்திக்காமல், முயற்சி செய். அதுவும், முழு ஈடுபாட்டோடு செய். அதுவே போதும். அந்த முயற்சி உன்னை முன்நகர்த்தும்’ என்பார்.

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், நாம் நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டிய நிஜமான பாடம் என்பது, இதுவாகத்தான் இருக்கமுடியும் என்று நம்புகிறேன்.

நம் பிள்ளைகளின் மனத்தில், முயற்சி செய்யும் எண்ணத்தை உருவாக்குவோம். நம் ஊக்குவிப்பில் அது ஊன்றி வளரட்டும். முயற்சியே பெரிதுதான். முடிவுகளைக் காட்டி, எதையுமே அவர்கள் மீது திணிக்காதிருப்போம்.

(தொடர்ந்து உரையாடுவோம்).




+++++++++++++++++++
(எனது பத்திரிக்கை நண்பர் பார்த்தசாரதி கேட்டுக்கொண்டதிற்கு இணங்க, அவரது புதிய தளமான இன்றைய செய்தி தளத்தில் பெற்றோரிய தொடர் கட்டுரை ஒன்று கேட்டார். அதற்காக வாராவாரம் எழுதப்பட்ட தொடர்கட்டுரையின் முதல் கட்டுரை இது.)


Comments

2 responses to “பிள்ளைத் தமிழ்..!”

  1. Lakshmipathy Avatar
    Lakshmipathy

    நான் உங்கள் புத்தக வாசகர்களில் ஒருவர். நன்றி இந்த கட்டுரைக்கு.

  2. மிகச்சிறப்பான கட்டுரை.

    நீங்கள் கூறுவதை முற்றிலும் ஏற்றுக்கொள்கிறேன். இதோடு பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பாராட்டுவதில்லை.

    தவறு செய்தால் சுட்டிக்காட்டி திட்டுவதில் உள்ள முனைப்பு, நன்றாகச் செய்து இருந்தால் பாராட்டுவதில் இல்லை.

    எப்போதுமே திட்டிக்கொண்டே இருப்பது வருத்தம் அளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *