எனது உறவினர் ஒருவர், குடும்ப வாட்ஸ் ஆப் குழுமத்தில் தனது மகன் பத்தாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களை வெளியிட்டிருந்தார். 97 சதவீதம் பெற்றிருந்தான் அவன். 3 சதவீதம் குறைந்ததற்கு அவனது இதர ஆர்வங்களே காரணம் என்று ஒரு பட்டியலைப் போட்டு அங்கலாய்த்திருந்தார். பலரும் பலவிதத்தில் அவருக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தனர்.

இன்றைக்குப் பெற்றோர் எவ்வளவு மாறிப்போய் உள்ளனர் என்பதைக் கண்டு எனக்கு வியப்பு ஏற்பட்டது. நானெல்லாம் படிக்கும்போது, நல்ல மார்க் எடு என்றும், பாஸானால் போதும் என்றெல்லாம் சொல்வார்களே தவிர, முழு மதிப்பெண் எடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருந்ததில்லை. மதிப்பெண்களில் 3 சதவீதம் குறைந்ததற்கு அந்த உறவினர் புலம்புவதைக் காணும்போது, உண்மையில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

தோல்விகளை நம் பிள்ளைகளுக்கு நாம் பழக்கி இருக்கிறோமா என்ற சந்தேகம் எப்போதும்போல எழுந்தது. இரவும் பகலும் இருந்தால்தான் ஒரு நாள். அதுபோல, வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் இருக்கும்தானே?

இந்த உலகம் என்பது வெறும் வெற்றிகளால் மட்டும் இயங்கவில்லை. தோல்விகளில் இருந்து பெறப்பட்ட அனுபவங்களின் வழியேதான் வெற்றிகரமாக இயங்கிவருகிறது என்பதை நாம் எப்போதுமே மறந்துவிடக் கூடாது.

சமீபத்தில் உங்கள் பிள்ளை அடைந்த தோல்விகள் என்னென்ன என்பதை உங்களால் பட்டியலிட முடியுமா? (100-க்கு 98 மதிப்பெண் எடுப்பது தோல்வி அல்ல என்பதை நினைவில் நிறுத்துங்கள்.) உங்கள் பள்ளிப் பருவத்தில் நீங்கள் அடைந்த (கற்றுக்கொண்ட) தோல்விகளின் எண்ணிக்கையோடு, உங்கள் பிள்ளைகளின் தோல்விகளை ஒப்பிட்டுப் பாருங்கள். தோல்விகளையே அறியாத ஒரு தலைமுறையை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். விளைவு – தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாமல், ஆண்டுக்காண்டு தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கூடவே, உளவியல் ரீதியாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது.

பாடங்களைப் புரிந்துகொண்டு படித்து, முடிந்த அளவு நல்ல மதிப்பெண்களைப் பெற முயற்சிப்பதே நல்ல மாணவனுக்கான பழைய வரையறை. இன்றோ, எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம், ஆனால் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றே ஆக வேண்டும் என்பதுதான் நல்ல மாணவன் என்பதற்கான வரையரையாக மாறியிருக்கிறது.

மாநில அளவில், மாவட்ட அளவில் எல்லாம் முதல் மதிப்பெண் வாங்குபவர்கள் ஒன்றிரண்டு பேர் இருந்த நிலை மாறி, கொத்துக் கொத்தாக மாணவர்கள் முதலிடம் பெற ஆரம்பித்துவிட்டதைப் பார்க்கமுடிகிறது. நல்லவேளையாக, சமீப காலங்களில் அரசு இந்த வகையான அறிவிப்புகளைத் தடை செய்துவிட்டதால், இதுபோன்ற செய்திகள் கண்ணில் படுவதில்லை.

இதுபோன்ற தேவையற்ற அழுத்தங்களைப் பிள்ளைகள் மேல் சுமத்தியதில், பெற்றோர்கள் மட்டுமல்லாது பள்ளி நிர்வாகங்களுக்கும் பங்கு உண்டு. ஏனெனில், இன்றைய மாணவர்களின் மதிப்பெண் என்பது அவர்களது நாளைய வளர்ச்சிக்கான விளம்பரமாகவே பார்க்கப்படுகிறது. அப்படியான ஒரு உலகத்தை உருவாக்கி வைத்துவிட்டனர்.

ஒவ்வொரு தனியார் பள்ளி வாசலிலும் மிகப்பெரிய பேனர் ஒன்று, காற்றில் ஆடிக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அதில், கண்ணுக்கே தெரியாத அளவு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தில் மாணவ மாணவியர் வரிசையாக இருக்க, கீழே அவர்களின் உச்சபட்ச மதிப்பெண்கள் அச்சிடப்பட்டிருக்கும். மேலும் 100 சதவீதம் மாணவர்களின் தேர்ச்சி என்பதும் அவ்விளம்பரத்தில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கும்.

அந்தவழியே போவோர் வருவோர் அனைவர் கண்ணிலும் அந்த பேனர் தென்பட்டாலும், யாரும் அதில் இருக்கும் மாணவர்களை அடையாளம் காண முடியாது. ஆனால், இத்தனை மாணவர்களை இப்பள்ளி நல்ல மதிப்பெண் வாங்கவைத்திருக்கிறது என்ற விவரம் மட்டும் அவர்களின் மனத்தில் பதிந்துவிடும். இதுதான் பள்ளிகளின் எதிர்பார்ப்பும்.

இதுவே, அப்பள்ளிகளின் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை, பள்ளிக் கட்டணம் போன்றவற்றை நிர்ணயம் செய்யும் முக்கியத் திறன் என்பதால், பள்ளிகள் பல்வேறுவிதங்களில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அழுத்தம் அளிக்கிறது. நல்ல மதிப்பெண் எடுக்க முடியாது என்று கருதப்படும் மாணவர்களை, முந்தைய ஆண்டே பள்ளியில் இருந்து விலகச் சொல்லி நிர்பந்திப்பது, பாடம் நடத்துவதைவிட மாணவர்களின் மனப்பாடத் திறனுக்கு முக்கியத்துவம் தரச் சொல்லி ஆசிரியர்களை ஏவுவது என எண்ணற்ற வழிமுறைகளைப் பள்ளிகள் கையாண்டு வருகின்றன.

பெற்றோர்களும், கல்வியியலாளர்களும் கூட்டாக இணைந்து இச்சூழலை மாற்றியே ஆக வேண்டும். அதற்கு முதற்படியாக, பெற்றோர்கள் முதலில் தங்களது குழந்தைகளைப் போட்டிக் குதிரைகளாகப் பார்க்காமல், சக மனிதனாக மட்டும் பார்க்கத் தொடங்கவேண்டி உள்ளது.

பள்ளியோ, கல்லூரியோ செல்லும் பிள்ளை உங்கள் வீட்டில் இருந்தால், அவர்களுடன் இச்சமயத்தில் சிறிது நேரம் ஒதுக்கி, பேசிப் பாருங்கள்.

தோல்வி என்பது பஞ்சமா பாதகம் போன்ற தோற்றத்தை குழந்தைகளின் மனத்தில் ஏற்படுத்தி வைத்திருக்கிறோம் என்பதை உணர்வீர்கள். அதை மாற்ற வேண்டும். தோல்வியைப் பற்றிய அவர்களது எண்ணம் என்னவாக இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். படிப்பில் தோல்வி, விளையாட்டில் தோல்வி, நட்பில் தோல்வி என்று தோல்விகளைச் சந்திக்கும்போது, அவர்கள் துவண்டுவிடாமல் இருக்க, அதனைப் பற்றிய ஓர் உரையாடல் தேவை. இதற்கான பொறுப்பும் அவசியமும் நமக்கு இருக்கிறது.

எல்லாவற்றையும் கல்வி சொல்லிக்கொடுத்துவிடும் என்று மனப்பால் குடிக்காதீர்கள். சமூக அறிவை நாம்தான் நம்பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்னர், சிதம்பரத்தில் ரயிலில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட, ஓர் இளைஞனின் சடலம் மீட்டெடுக்கப்பட்டது. அவனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு கடிதமும் கண்டெடுக்கப்பட்டது. அதில், தனது இன்ஜினீயரிங் பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ் தொலைந்துபோய்விட்டதால், வீட்டில் சொல்லவும் பயமாக இருப்பதால் தற்கொலை செய்துகொள்வதாக எழுதிவைத்திருந்தான் அவன். இச்செய்தி நாளிதழ்களில் வந்திருந்தது. பட்டப்படிப்பு முடித்த ஒருவனுக்கு, தனது மதிப்பெண் சான்றிதழ் தொலைந்துபோனால் அதன் நகல் பெறமுடியும், கிடைக்கும் என்பதுகூட தெரியாமல் இருந்தானா? பெற்றோர் கடுமையாக நடந்துகொள்கின்றவர்களா? என்றெல்லாம் அடுக்கடுக்காக மனத்தில் எழுந்த கேள்விகளால். நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆட்பட்டேன்.

அன்று முதல், குழந்தைகளுக்குத் தோல்வியையும் பழக்குவோம் என்று, வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் பேசி வருகிறேன். இந்த உரையாடலை, ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளில் தொடங்க வேண்டும். தோல்வியின் சாத்தியக்கூறுகளை மனமார ஏற்றுக்கொண்டால் மட்டுமே, ஒரு முயற்சியில் தோற்றால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற மாற்று ஏற்பாடுகளைச் சிந்திக்க முடியும். பிளான் பி என்றழைக்கப்படும் மாற்றுத் திட்டங்கள், எல்லாத் தொழில் துறைகளிலும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

தலைசிறந்த அறிவியலாளர்களில் ஒருவரான எடிசன், பள்ளியிலிருந்து கற்றல் திறன் குறைவு காரணமாக வெளியேற்றப்பட்டவர். அவரது அறிவியல் சோதனைகளில் ஆயிரக்கணக்கான முயற்சிகளில் தோற்றவர். ஆனால், ‘நான் ஆயிரக்கணக்கான முறை தோல்வியடைந்தேன் என்பது அல்ல, ஆயிரக்கணக்கான செய்முறைகள் ஒத்துவராதவை என்பதைக் கண்டடைந்தேன்’ என்று பெருமிதமாகச் சொன்ன எடிசனின் தன்னம்பிக்கையைத்தான், நமது குழந்தைகளுக்கு நாம் தர வேண்டிய முக்கியமான ஆளுமைத்திறன்.

தோல்வியைப் பழகி, அந்த அச்சம் இல்லாமல் வளரும் பிள்ளைகளே, நாளை நாட்டின் நம்பிக்கை மக்களாக இருப்பர்.

(தொடர்வோம்)