தொழில் சார்ந்து, நான் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுடன் உரையாடுவது உண்டு. அத்தகைய சந்தர்ப்பங்களில், இன்றைய இளம் வயதுடையோரின் எண்ணங்கள் என்ன மாதிரி இருக்கின்றன, அவர்களுக்கு தங்களைப் பற்றியும், தங்கள் குடும்பத்தினரைப் பற்றியும், இச்சமூகம் பற்றியெல்லாம் என்ன நினைக்கிறார்கள் என்பதை கொஞ்சம் அறிந்தவனாக இருக்கிறேன்.

இன்றைய பல பெற்றோர் முக்கியமானதாகக் கருதும் விஷயங்களில் ஒன்று, பிள்ளைகளுக்கு அறிவுரைகள் + நீதி போதனை வேண்டாம். படித்து நிறைய மதிப்பெண்கள் வாங்கி, நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளைத் தவிர, வேறு எந்த அறிவுரையும் சுத்த ஹம்பக் என்றே அவர்கள் நினைக்கிறார்கள்.

இதே எண்ணங்கள், இன்று சிறுவர்களுக்காக எழுதும் சில எழுத்தாளர்களிடமும் காண்கிறேன். சிறுவர்களின் வாசிப்பு இன்பத்துக்காக மட்டும் கதை எழுதினால் போதும், அதில் நீதி எதுவுமே வேண்டாம் என்றும், அப்படி எழுதுவது தேவையற்ற சுமை என்றும் சொல்கிறார்கள்.

பள்ளிகளைப் பற்றியோ கேட்கவே வேண்டாம். மாரல் சயின்ஸ் வகுப்புகளுக்குப் பதில், அந்த நேரத்தில் வேறு ஏதேனும் ஒரு கோச்சிங் தந்தால், பெற்றோரிடம் அதற்கும் கூடுதல் கட்டணம் வாங்கலாமே என்று அவர்களின் சிந்தனை ஓடுகிறது.

இவற்றின் விளைவாக, கடந்த பல ஆண்டுகளாகவே நம் குழந்தைகளுக்கு அறிவுரைகள் போதிப்பதை பெரும்பாலும் கைவிட்டுவிட்டோம். நீதி போதனை என்பது நம் சமூகத்துக்குத் தேவையற்ற சுமைதானா? நீதி போதனையை இன, மொழி, மதம் சார்ந்த விஷயமாகக் குறுக்கி மட்டும் பார்க்க வேண்டாம். அது, குடிமைப் பண்புகளையும் உள்ளடக்கியதாகவே இருக்கும்.

இட்லி மாவுக்கு எங்கள் பகுதியில் பிரபலமான கடை அது. ஒருநாள், மாவு வாங்குவதற்காக அக்கடைக்குச் சென்றிருந்தேன். எனக்கு முன்னால் மூன்று பேர் நின்றிருந்தனர். நான்காவதாக நான் சென்று நின்றுகொண்டேன். கடையின் வாசல் அகலமானது என்பதால், இடைவெளி விட்டு தள்ளித் தள்ளி நின்றுகொண்டிருந்தோம். நூல் பிடித்தால் போல் வரிசை இல்லை என்றாலும்கூட, கடைக்காரர், வாடிக்கையாளர்கள் வரும்போதே மனத்துக்குள் வரிசைப்படுத்திக்கொண்டு, அதன்படி அவரவர்க்குத் தேவையான பொருள்களைக் கொடுத்து அனுப்பிக்கொண்டிருந்தார்.

அப்போது, பதினான்கு அல்லது பதினைந்து வயது சிறுவன் ஒருவன் சைக்கிளில் வந்தான். எவர் மீதும் பட்டுவிடாமல், லாகவமாக நகர்ந்து முன் வரிசைக்குச் சென்று மாவு கேட்டான். கடைக்காரர் பதில் ஏதும் சொல்லாமல், முன்னால் வந்தவர்களுக்கு வரிசையாகக் கொடுத்துக்கொண்டிருந்தார். அவனோ விடாமல், ‘அண்ணா ஒரு கிலோ மாவு.. அண்ணா எனக்கு நைட்டுக்கு ஒரு கிலோ மாவு..’ என்று கேட்டுக்கொண்டே இருந்தான். எனக்கு முன்னால் நின்றிருந்த பெரியவர், ’ஏம்பா.. நாங்கல்லாம் உனக்கு முன்னாடியே நிக்கிறோமே தெரியலையா?’ என்று கேட்ட பிறகுதான், அவன் அமைதியானான். ஆனாலும், அந்தப் பெரியவரை முறைத்துக்கொண்டேதான் நின்றான்.

இது மாதிரி வரிசை மீறி முன்னே செல்வது, குறிப்பாக இளம் வயதுடையவர்கள் செல்வது என்பதை பல இடங்களில் பார்த்துவருகிறேன். மருந்துக் கடைகள், உணவகங்கள், பார்கிங் ஏரியாவில் டோக்கன் போடுமிடம், பயணச்சீட்டு வாங்கும் வரிசையில் நிற்கும்போது என பல இடங்களில் முண்டியடித்து முன் செல்லுபவர்களில் பலரும், இள வயதுடையோராகவே இருக்கின்றனர்.

இதேபோன்று, சென்னையில் கிரிக்கெட் போட்டி நடந்துகொண்டிருந்த சமயம், மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்க நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருந்தேன். அப்போது வேகவேகமாக வந்த ஒரு சிறுவன், அங்கிள் ப்ளீஸ்.. என்று சொல்லிக்கொண்டே, நேராக டிக்கெட் கவுண்டர் அருகில் சென்று உள்ளே கை நீட்டி சேப்பாக்கம் என்று சொல்லி டிக்கெட் எடுத்துவிட்டு, வெற்றிப் புன்னகையோடு வந்தான்.

’ஏண்டா தம்பி, நாங்க எல்லாம் வரிசையில நிக்கிறது தெரியலையா?’ என்றேன்.

‘என்ன சார் பண்ணுறது.. டிரைன் வந்துடுமே..’ என்று பின்னால் இருந்து குரல் கேட்டது. அங்கே ஒரு சிறுமியுடன் காத்துக்கொண்டிருந்தார், அந்தச் சிறுவனின் தந்தை. ஆம்! வரிசைகளை மீறிச்சென்று அச்சிறுவனை டிக்கெட் எடுக்கப் பணித்ததே அந்த மகானுபாவர்தான். ‘வாடா.. போலாம்’ என்று இரு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு, வேகவேகமாகப் படியேறிச் சென்றுவிட்டார் அந்த அப்பா.

அடுத்த அரைமணி நேரத்துக்கும் மேலாக, இத்தனை பேர் வரிசையில் நிற்க, ஒரு சிறுவனை முன்னால் அனுப்பி, டிக்கெட் எடுத்துக்கொண்ட அவர்களின் செயல் மனத்தில் ஓடிக்கொண்டே இருந்தது.

இது என்ன மாதிரியான பழக்கம், குடிமைப் பண்பு இல்லாமல் அல்லது சொல்லிக் கொடுக்காமலேயே ஒரு தலைமுறையை வளர்த்துவிட்டோமோ என்று வருத்தமாக இருந்தது.

பாதையில் இரு வாகனங்கள் நேரெதிராக நின்றுகொண்டிருக்கும்போது, அந்த வாகனங்களைப் பின்னுக்கு எடுக்கக்கூட விடாமல், இருக்கும் சிறு இடைவெளியைப் பயன்படுத்தி, முன்னேறிக்கொண்டிருக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் பலரைப் பார்த்திருப்போம். இது வேறு ஒன்றும் இல்லை. குடிமைப்பண்பு இல்லாததன் விளைவே, இதுபோன்ற செயல்கள்.

குடிமைப் பண்பு என்பது தனிமனித ஒழுக்கம் மட்டுமல்ல, நாம் வாழும் இச்சமூகத்துக்கான கூட்டு ஒழுக்கமும் கூடத்தான். தனக்கு மட்டும் நல்லது வேண்டும் என்று எண்ணுவது அல்ல, ஒட்டுமொத்த சமூகத்துக்கும் கிடைக்கும் நன்மை பற்றிய எண்ணங்களை வளர்த்தெடுப்பதே குடிமைப் பண்பு. இதுவே உண்மையான தேசப்பற்றாக வளரும். இல்லையெனில், குடிமைப் பண்புகளற்ற தேசப்பற்று என்பது பாசிஸமாகவே இருக்கும்.

*

எனது பள்ளிப் பருவத்தில், எங்கள் ஊர் பக்கம், கோயில் திருவிழாக்களில், தெருவில் திரை கட்டி, திரைப்படங்கள் ஓட்டுவார்கள். அப்போது, குட்டிக்குட்டியாக நியூஸ் ரீலும் கண்டிப்பாகக் காட்டப்படும். அதில், இருபரிமாண அனிமேஷன் வழி கருத்துச் செறிவு மிக்க, சின்னச்சின்ன படங்களும் காட்டப்படும்.

ஒரு சிறுவன், வாழைப்பழத்தோலை சாலையில் வீசிவிட்டுச் செல்வான். கொஞ்ச நேரத்தில் அவனது தந்தை அதே வாழைப் பழத்தோலில் காலை வைத்து வழுக்கி விழுவார். குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடுங்கள் என்ற அறிவுரையுடன் அத்துணுக்கு முடியும். பொது இடங்களில் எச்சில் துப்பாமல் இருப்பது, பேருந்தில் வரிசையாக ஏறுவது, முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உட்கார இடம் கொடுப்பது என்று பல விஷயங்களை இத்தகைய கருத்துப் படங்களில் பார்த்ததுண்டு.

இன்று நாம், பிள்ளைகளுக்கு நீதி போதனைகள் வேண்டாம் என்று நினைப்பவர்களாக மாறிப்போய் இருக்கிறோம். ஆனால், அதற்காக குடிமைப் பண்புகளைக்கூட சொல்லிக் கொடுக்காது இருக்க வேண்டுமா? அப்படியெனில், வளரும் தலைமுறை, வலுத்தவன் மட்டுமே வாழ்ந்தால் போதும் என்று எண்ணும் ஒரு கூட்டமாக மாறிவிடாதா?

கருத்துப் படங்களோ, நீதி போதனை வகுப்போகூட வேண்டாம். குழந்தைகளுக்குப் பெற்றோராகிய நாமே என்றும் வாழும் உதாரணங்கள் அல்லவா? டூவிலர்களில் முன்னால் குழந்தையை அமர்த்திக்கொண்டு, டிராபிக் சிக்னலில் நிற்காமல் செல்லும் பல பெற்றோரை பார்த்திருக்கிறேன். குழந்தைகள் வளரும்போது எப்படி சாலை விதிகளை மதிப்பார்கள் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அவர்கள் முன்னால், பெற்றோராகிய நாம் குடிமைப் பண்புகளை, சமூக விதிகளை ஒழுங்காகக் கடைப்பிடித்து வாழ்ந்தாலே போதும். அவர்களும் அந்த ஒழுங்குகளை தாமாகவே கடைப்பிடிப்பார்கள். இளமையின் குறும்பினால் எப்போதேனும் அவர்கள் மீறல்களில் ஈடுபட்டாலும், அது தவறு என்று எடுத்துச்சொல்லி, அவர்களைப் பண்பானவர்களாக வளர்த்தெடுக்க வேண்டியது, பொறுப்புள்ள குடிமகன்களாகிய நமது கடமை!