நமது குழந்தைகள் யாரோடு அதிக நேரம் செலவழிக்கிறார்கள் என்று கேட்டால், சந்தேகமே இல்லாமல் பெற்றோர்களாகிய நம்மோடுதான். ஆனால், அதில் எவ்வளவு நேரம் பயனுறு நேரம் என்ற கேள்விக்குப் பெரும்பாலான பெற்றோரிடம் பதில் இருக்காது என்றே நினைக்கிறேன்.

பயனுறு நேரம் என்றால் என்ன? பல் தேய்த்தல், குளித்தல், சாப்பிடுதல் போன்ற அன்றாடச் செயல்பாடுகள், வீட்டுப்பாடம் செய்ய வைப்பது போன்ற படிப்பு சார்ந்த வேலைகள் என, இதில் பாதிக்கும் மேற்பட்ட நேரம் கழிந்துவிடும். அதுபோக, மீதமுள்ள நேரத்தில் குழந்தைகளுடனான நம் உறவை பலப்படுத்துவதாக, அர்த்தபூர்வமான அதே நேரத்தில் ஆக்கபூர்வமான விஷயங்களைச் செய்யும்போதுதான் அது பயனுறு நேரமாகிறது.

உண்மையில், இன்றைய பெற்றோரில் மிகக் குறைவானவர்களே குழந்தைகளுடன் பயனுறு நேரம் செலவழிப்பவர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கையும் தற்போது குறைந்துகொண்டே வருகிறது. குழந்தைகள் ஒரு வகுப்பிலிருந்து இன்னொரு வகுப்புக்கு ஓடவும், மீதமிருக்கும் நேரங்களில் செல்போன் விளையாட்டுகளிலோ அல்லது டிவி முன்னாலோ ஆழ்ந்துகிடக்கவுமாகக் காலம் கரைகிறது.

பெற்றோர் பரபரப்பாக ஓட, தொழில், வேலை, சம்பாத்தியம் என ஒவ்வொருவருக்கும் ஏதோவொரு காரணம் இருக்கலாம். நான் சின்ன வயதில் இருந்தபோது, என்னோடு என் பெற்றோர் நேரமா செலவழித்தார்கள்? ஏன் நான் நன்றாக வளரவில்லையா? என்று கேட்போரையும் பார்த்திருக்கிறேன். இப்படிக் கேட்பவர்களில் பலரும் ஒரு விஷயத்தை வசதியாக மறந்துவிடுகின்றனர். அந்தக்காலத்தில் மொபைல் இல்லை, இண்டர்நெட் இல்லை, கம்ப்யூட்டர் இல்லை என, இல்லாதவற்றின் பட்டியல் நீளம். அதனால், அன்றைய குழந்தைகளின் பொழுதுபோக்கு என்பது வீதியிலும், வீட்டுத் திண்ணைகளிலும் கழிந்தது.

இன்றைய காலகட்டத்தில், எங்கும் நிறைந்துள்ள எலக்ட்ரானிக் கேட்ஜெட்டுகளின் பிடியில் பெற்றோரே சிக்கித் தவிக்கும்போது, பிள்ளைகள் மட்டும் தப்பிப்பார்களா என்ன? அதோடு, அன்றைய காலகட்டம் மாதிரி இல்லாமல், இன்று மதிப்பெண்களின் பின்னால் பிள்ளைகள் ஓடவேண்டி இருக்கிறது. சிறுவயதில் எடுக்கும் மதிப்பெண்களே, அவர்களை அடுத்தடுத்த இலக்கு நோக்கி பயணப்படவும், நுழைத்துதேர்வுகள் எழுதவும் உதவும்படியான சூழலை உருவாக்கி வைத்துள்ளோம்.

குழந்தைகளுடன் பயனுறு நேரத்தை செலவழிப்பது என்பது, அவர்கள் படிக்கும்போது பாடம் சொல்லிக் கொடுப்பது அல்ல. பாடங்கள், மதிப்பெண்கள், நுழைவுத்தேர்வுக்கான பயிற்சிகள் என, எதிர்காலக் கனவுகளைத் துரத்திக்கொண்டு ஓடாமல் சும்மா பேசுவது.

நான் பல வீடுகளில் பார்த்திருக்கிறேன். இன்றைய பெற்றோரில் பலருக்கும், தங்கள் பிள்ளையின் சக வயது நண்பர்கள் எவரையுமே தெரியவில்லை. அதோடு, குழந்தைகள் வீட்டுக்குள் எவருடனும் பேசாமல் தனிமை விரும்பிகளாகவே வளர்வதும் கண்கூடு.

இப்படியான பிரிவுகளே, எதிர்கால வாழ்க்கையில் பிளவுகளை ஏற்படுத்துகின்றன. தினமும், குறைந்தது அரைமணி நேரத்தையாவது தங்கள் பிள்ளைகளுடன் பயனுறு நேரமாகச் செலவழிக்க இன்றைய பெற்றோர் முயற்சிக்க வேண்டும்.

அந்த நேரத்தில், தொலைக்காட்சியை, மொபைல் போன்களை கண்டிப்பாகத் தவிர்த்துவிடுங்கள்.

  • ஒரு புத்தகத்தை எடுத்து, அம்மா, அப்பா, பிள்ளைகள் என ஆளுக்கொரு பத்தியை வாசிக்கலாம். குழந்தைகளுக்குப் புரியாத விஷயங்களை எளிமையாக விளக்கலாம்.
  • கேரம்போர்டு, சதுரங்கம், ஆடுபுலி ஆட்டம் போன்ற ’திண்ணை விளையாட்டு’களை விளையாடலாம்.
  • குழந்தைகளுக்கு, செய்தித்தாள் படிப்பது, அல்லது தொலைக்காட்சி செய்திகளைப் பார்ப்பது போன்ற பழக்கங்களை ஏற்படுத்தலாம். அவர்களின் வயதுக்குத் தகுந்த விஷயங்களை அவர்களோடு விவாதித்து, அவர்களின் சமூக அறிவை வளர்க்கலாம்.
  • சமையல், தோட்ட வேலை, வீட்டு வேலை என எந்தவொரு வேலையையும் குழந்தைகளோடு சேர்ந்து செய்யலாம். அந்த நேரத்தில் அறிவுரைகள் ஏதும் சொல்லிக்கொண்டிருக்காமல், எப்போதோ பார்த்த சினிமா பற்றி, உறவுகள், நண்பர்கள், ஏற்கெனவே சென்றுவந்த சுற்றுலா பற்றியெல்லாம் பேசிக்கொள்ளலாம். நகைச்சுவைத் துணுக்குகளைப் பரிமாறிக்கொள்ளலாம்.
  • சின்னச் சின்ன கை வேலைகளை (DIY) குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கலாம். அல்லது நாமும் குழந்தைகளுடன் சேர்ந்து புதிதாக எதையேனும் கற்றுக்கொள்ளலாம்.
  • குடும்பத்தோடு சேர்ந்து நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
  • பத்து வயதுக்குக் குறைவான குழந்தைகள் என்றால், முடிந்தவரை கற்பனை விளையாட்டுகளை விளையாடுங்கள். அது, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் உதவும்.
  • குழந்தைகளுக்குப் பிடித்தமானவற்றை உங்களுக்கும் பிடித்தமானதாக மாற்றிக்கொள்ளுங்கள். மண், சேறு, தண்ணீர் போன்றவற்றில் விளையாட, குழந்தைகளுக்கு எப்போதுமே மிகவும் பிடிக்கும். ஏனோ, வளர்ந்தவுடன் நமக்கு அதெல்லாம் பிடிக்காத விஷயங்களாக மாறிவிடுகின்றன. அப்படி இல்லாமல், அவற்றில் நாமும் இறங்கி, குழந்தைகளோடு விளையாடத் துவங்குவது, குழந்தைகளின் உலகில் நாமும் நுழைவதற்கான சாவியாகும்.
  • இரவு உறங்கப்போகும் முன், கண்டிப்பாக சற்று நேரம் குழந்தைகளோடு பேசுங்கள். மிகவும் சிறு குழந்தைகள் என்றால், கதை சொல்லித் தூங்க வைக்கலாம். சற்று வளர்ந்த குழந்தைகள் என்றால், அவர்களின் பள்ளியிலும், மற்ற வகுப்புகளிலும் நடந்த விஷயங்களைச் சொல்லச் சொல்லி கேட்கலாம்.
  • குழந்தைகளின் நட்பு வட்டம், அவர்களின் பயம், சந்தோஷமான தருணங்கள் இவற்றையெல்லாம் இப்படி அறிந்துகொள்வதன் மூலம், பெற்றோர் – குழந்தை எனும் உறவைத் தாண்டி, நல்லதொரு நட்பு துளிர்விடும். குறிப்பாக, பதின் பருவத்தில் ஏற்படும் அழுத்தங்களில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க, இத்தகைய புரிதலே மிகவும் உதவும்.
  • குடும்ப வரவு – செலவு விவரங்களை அவர்களுக்குப் புரியும் வகையில் விளக்குங்கள். அது நமக்கான சுய தம்பட்டமாகவோ அல்லது பற்றாக்குறை பற்றிய சுயபரிதாபப் புலம்பலாகவோ போய் விடாது, குழந்தைகளுக்கு நம் உண்மையான பொருளாதார பலத்தைப் புரியவைப்பதாக இருக்க வேண்டும். இதன்மூலம், சகவயதுக் குழந்தைகளோடு தங்களை ஒப்பிட்டுக்கொண்டு, தேவையற்ற அழுத்தத்துக்கு உள்ளாவதில் (Peer pressure) இருந்து குழந்தைகள் தப்பிப்பர்.

குழந்தை – பெற்றோர் இடையிலான உறவுக்கு, இப்படியான பயனுறு நேரம் செலவழிப்பது என்பது ஒரு பலமான அஸ்திவாரம். அப்படி உருவாகும் உறவு, எக்காலத்திலும் உடையாது நீடிக்கும்.