போலிகள் போலிகள்



“சாப்பிடவில்லை என்று போன் காட்டின அம்மாவை – அம்மா என்று அழைக்காத குழந்தைதான் ஆட்டிசம் என்று அழைக்கப்படும்” மேற்சொன்ன கருத்தை தனது முகநூலில் எழுதி உள்ளார் ஹோமியோபதி டாக்டர் ஆஷா லெனின்.

தனக்கு ஆனா, ஆவன்னா கூடத் தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றி பொதுத்தளத்தில் அடித்து விளாச ஒரு தனித் திறன் வேண்டும். இந்தக்காவுக்கு அது நிறையவே இருக்கு. இவங்கதான்  ஆட்டிசக் குழந்தைகள காப்பாத்த புதுசா அவதாரமெடுத்திருக்கும் நவயுக அன்னை தெரசா.

தொடர்புடைய பதிவில் பல பெற்றோர் சென்று இக்கருத்து தவறானது என்று சொல்லியும் இம்மியும் அசைந்துகொடுக்காதவராக இவர் இருக்கிறார்.

கொஞ்சக் காலம் முன்புவரை ஆட்டிசத்தை முழுமையாக குணப்படுத்துகிறேன் என்று பல மருத்துவர்கள் கல்லா கட்டிக்கொண்டிருந்தனர். இப்போது, அடுத்த லெவலுக்குச் சென்று விட்டனர். அதாவது, என்னிடம் மருந்து வாங்கு, அப்படியே தெரபிகளையும் தொடர்ந்து செய். எல்லாம் சரியாகிவிடும்.

முழுப் பொய் கூட பரவால்ல, எப்படியாவது நிரூபிச்சுடலாம். சொல்றவன் ஒத்துக்காட்டியும், கேக்கறவங்களுக்காவது புரிஞ்சு தொலைச்சுரும். ஆனா அரைப்பொய் + அரை உண்மை இருக்கே… ரொம்ப அபாயகரமான காம்போ. இந்தம்மா பேசறது அப்படியான ஒரு சமாச்சாரம்தான். ஆம் இவர் மேற்ச்சொன்ன அடுத்த லெவல் மருத்துவர்.

தொடு திறன் பேசி குழந்தைகளின் வளர்ச்சிக்கு எதிரிதான். அது எல்லாக் குழந்தைகளுக்குமே பொருந்தும். எங்கள் குழந்தைக்கு ஆட்டிசம் போலிருக்கேன்னு எங்ககிட்ட வந்த பல சாதாரண குழந்தைகளை இந்த ஒரே அட்வைசால் (போன், டிவி இல்லாம நாள் முழுக்க நீங்க நேரடியா குழந்தை கூட விளையாடுங்க) காப்பாற்றியிருக்கிறோம்.

ஆனால் அதனால்தான் ஆட்டிசம் வருகிறதா? செல்போனை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் அம்மாக்கள்தான் ஆட்டிசத்துக்கான காரணகர்த்தாக்களா? நிச்சயம் இல்லை.

மரபணு, சூழல் சீர்கேடு, கர்ப்பகால மன அழுத்தங்கள், பிரசவத்தில் ஏற்படும் எதிர்பாரா சிக்கல்கள் என்று ஒரு பெரிய பட்டியலைப் போடும் அறிவியல் கடைசியில் இன்ன பிற(miscellaneous) என்றொரு கருந்துளையையும் வைத்திருக்கிறது.

அதாவது மேற்சொன்ன எவ்விதக் காரணங்களும் இல்லாவிட்டாலும் கூட ஆட்டிசம் ஏற்படத்தான் செய்கிறது என்று பொருள்.

நிறைகுடமாக இருக்கும் அறிவியல் ஆய்வாளர்கள் இப்படி பட்டியலில் ஓர் இடத்தை காலியாக விட்டு வைத்துவிட்டு, அமைதியாக அடுத்த ஆராய்ச்சியை நோக்கிப் போகிறார்கள். இவர் போன்ற குறை குடங்களோ ஆணித்தரமாக தங்கள் கண்ணுக்குப்படும் ஏதோ ஒரு விஷயத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு கூத்தாடுகிறார்கள்.

இவரது வீடியோ ஒன்றில் தெரபி செண்டர்களுக்கு குழந்தைகளை அழைத்துப் போகலாமா என்று கேட்ட ஒரு பெற்றொருக்கான பதிலைப் பார்த்துப் பரவசமாகிவிட்டேன். அதில்,  â€à®†à®Ÿà¯à®Ÿà®¿à®šà®•à¯ குழந்தைகளுக்கு நார்மல் குழந்தைகளோடு விளையாடறது ரொம்ப முக்கியம். அதுனால நார்மல் குழந்தைகள் வரக்கூடிய தெரபி செண்டர்களுக்கு கூட்டிப் போறதுல தப்பில்ல” என்று அம்மையார் திருவாய் மலர்ந்தருளுகிறார்.

’அட்ரா சக்க, அட்ரா சக்க, அட்ரா சக்க’ என்று கவுண்டர் ஸ்டைலில் கத்த வேண்டும் போல இருந்தது. தெரபி செண்டர் என்றாலே ஏதேனும் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு பயிற்சியளிக்கும் இடம்தானே?, அங்கே எதற்கம்மா சாதாரணப் பிள்ளைகளை அழைத்து வரப் போறாங்க? என்று இவரிடம் எந்தப் பெற்றோரும் கேட்கவில்லை போலிருக்கிறது. அது சரி, அவ்வளவுக்கு விவரம் உள்ள ஆட்களாக இருந்திருந்தால் இவரைப் போன்ற டுபாக்கூர்களிடம் ஏன் மாட்டிக் கொள்ளப் போகிறார்கள்?

இன்னொரு வீடியோவில் அடிப்படையான ஒரு சென்சரி பயிற்சியைப் பற்றி அழகாக விளக்குகிறார். நிப்மெட் போன்ற பயிற்சி மையங்களால் ஏற்கனவே பரிந்துரைக்கப்படும் ’சென்சரி பாத்’ அது. கருங்கல், ஜல்லி, சற்றுப் பொடியான ஜல்லி, மணல், மென் மணல், வெல்வெட் துணி என வரிசையாக வெவ்வேறு தொடுதன்மை(Texture) கொண்ட பொருட்களின் மீது தொடர்ச்சியாக நடக்க வைப்பது என்பதுதான் அது. ஆகா, உருப்படியான ஒரு விஷயத்தைதானே சொல்கிறார் என்று நாம் நம்பி,  à®‰à®±à¯à®šà®¾à®•à®®à®¾à®•à¯à®®à¯à®ªà¯‹à®¤à¯ ஓங்கி ஒரு அடி அடிக்கிறார். சுந்தர் சி படங்களின் கிளைமாக்சில் உருட்டுக் கட்டையோடு சுற்றுவார்களே, அது போல எப்போது வேண்டுமானாலும் ஒரே போடு – இந்தப் பயிற்சியெல்லாம் பண்ணினாலும் நான் கொடுக்கற மருந்துகள சாப்பிட்டால் மட்டும்தான் முழுசா குணமாகும்.

இப்போது இந்த மொபைல் போன் காட்டும் அம்மாக்கள்தான் ஆட்டிசத்துக்கு காரணம் என்கிற அரிய தத்துவ முத்தை உதிர்த்திருக்கிறார். அங்கே கமெண்ட் பகுதியில் போய் இப்படியெல்லாம் அவதூறுகளைக் கிளப்பாதீர்கள் என்று சிலர் பதிவு செய்ததற்கு அந்தம்மணியின் பதில் “Dear all don’t give mobile phone to kid’s less than 3 years is my request to the society   if u do so I will feel happy   if u say no I feel sad   matter is that’s all !! Not to show all ur egos in comments    & ur poor understanding !!!! ”

திரும்பவும் ஒரு அழகான திசை திருப்பல். அங்கு பேசிய யாரும் மொபைல் போனை குழந்தைகள் கையில் கொடுப்பது நல்ல விஷயம் என்று சொல்லவில்லை. அது நிச்சயம் வளர்ச்சிக்குத் தடைதான். ஆனால் மொபைலால்தான் ஆட்டிசம் உருவாகிறது என்பது தவறான சிந்தனை. அதிலும் போனைக் குழந்தைகளின் கையில் கொடுக்கும் அம்மாக்களால்தான் ஆட்டிசம் வருகிறது என்ற இவரது கூற்று மாபெரும் தவறு என்பதைத்தான் அங்கு பேசும் அனைவரும் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று கூட புரிந்து கொள்ளாமல், அல்லது புரியாதது போல நடிக்கும் இவரிடம் பேசுவதில் ஒரு பயனுமில்லை.

கடைந்தெடுத்த பொய்களை விட பொய்யும் மெய்யும் சரிசமமாகக் கலந்து புகலும் கலை மிக மிக அபாயகரமானது. இணையத்தில் கொட்டிக் கிடக்கும் கட்டுரைகள், காணொலிகள் மூலம் சில அடிப்படை விஷயங்களை மட்டும் தெரிந்து கொண்டு அத்தோடு தங்கள் கைசரக்கையும் சேர்த்து கடைபரப்புவதில் இவரைப் போன்றவர்கள் மிகவும் திறமைசாலிகளாக இருப்பது நமது துரதிர்ஷ்டம்.

அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவமோ, சித்த மருத்துவமோ, ஆயுர்வேதமோ, ஹோமியோவோ, யுனானியோ, பாட்டி வைத்தியமோ எதுவானாலும் சரி, எதிலும் இன்றுவரை ஆட்டிசத்துக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மருந்துகொடுத்து குணப்படுத்தவும் முடியாது. அப்படி யாரேனும் சொல்லிக் கொண்டால் அவர்கள் போலி என்று உணர்க. அன்பான பெற்றோரே இப்படியான போலிகளை நம்பி ஏமாறாதீர்கள்.

இதையே தான் மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்ல வேண்டியிருக்கிறது.