புவியாழத்தில் வேர்விட்டு வானளாவிச் செழிக்கட்டும் குழந்தைகள்! -யூமாவாசுகி நேர்காணல்

யூமா வாசுகி, தமிழின் குறிப்பிடத்தக்க நவீன எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர், கவிதை, சிறுகதை, நாவல் என இலக்கியத்தின் சகல வடிவங்களிலும் தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்தவர்.

தமிழ்ச் சிறார் இலக்கியத்திற்கு மிகச்சிறப்பான பிறமொழிபடைப்புக்களைக் கொண்டுவந்து சேர்க்கும் முதன்மையான ஆளுமை இவர். தனது மனம் திறக்கிறார்.

  1. தீவிரமான இலக்கிய உலகில் இயங்கிக்கொண்டிருந்த நீங்கள் சிறார் இலக்கியத்தின் பக்கம் எப்படி நுழைந்தீர்கள்?

என் பாலபருவத்தில் சிறார் இலக்கியம் அதிகம் வாசித்தேன். வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் அது நின்றுவிட்டது. பிறகு, மலையாளம் கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. இந்த ஆர்வம் ஏற்படக் காரணம் எழுத்தாளர் ஜெயமோகன். அவர் இதற்கு என்னை ஊக்கப்படுத்தினார். அப்புறம் நான் பல காலம் மலையாள அரிச்சுவடி பயின்றேன். எழுத்துக்கூட்டி வாசிக்கப் பழகினேன். மலையாளத்தின் தாய் தமிழ் என்றாலும், அந்த மொழியில் தமிழின்  சாயல் அதிகம் உண்டு என்றாலும், மலையாளத்தில் சமஸ்கிருதக் கலப்பு அதிகமாக ஆக, அதைப் புரிந்துகொள்வது கடினம். அது தமிழோடு நெருங்கி வருகையில் (தமிழோடு வெகு இணக்கம் கொண்ட மலையாளத்தை ‘பச்ச மலயாளம்’ என்கிறார்கள்) நாம் அதை எளிதில் விளங்கிக்கொள்ளலாம். இரண்டாவது,  பிராந்தியந்தோறும் மாறுபடும் வட்டார வழக்குகளையும் அணுகுவது கடுமையான சிரமம். இதைப் புரிந்துகொள்ள பல்வேறு முயற்சிகள் தேவைப்படும். பலரின் உதவியும் போதுமான காலமும் கூர்ந்த அவதானிப்பும் அவசியப்படும். இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். பாரேம்மாக்கல் கோவர்ணதோர் மலையாளத்தில் எழுதிய இந்தியாவின் முதல் பயண விவரண நூலான ‘ரோமாபுரி  யாத்திரை’ யை (சந்தியா பதிப்பக வெளியீடு, அச்சில் 448 பக்கங்கள்) வெகுவேகமாக எந்தத் தடங்களும் இன்று மிகக் குறுகிய காலத்தில் மொழிபெயர்த்து முடித்தேன். தமிழை அப்படியே வேறு எழுத்துகளில் எழுதியதுபோன்று இருந்தது அதன் மொழி. அப்புறம் பலகாலத்துக்குப் பிறகு ஓ.வி. விஜயனின் ‘கசாக்கின் இதிகாசம்’ நூலை  மொழிபெயர்க்க ஆரம்பித்தேன். (காலச்சுவடு வெளியீடு, அச்சில் ஏறத்தாழ 200 பக்கங்கள்) அதன் உரையாடல்கள் எல்லாம் முழக்கவும் வட்டார வழக்கால் நிரம்பியவை. இந்த வேலையை முடிப்பதற்கு எனக்கு இரண்டு வருட காலம் ஆயிற்று. இதற்குச் சில நண்பர்கள் உதவினார்கள்.

நான் மலையாளம் கற்றுக்கொள்ள ஆரம்பித்த காலத்தில், மொழியை சுலபமாக உள்வாங்கிக்கொள்வதற்கு நான் முதலில் மலையாள சிறார் இதழ்களை, சிறார் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன். அது எனக்கு மொழி அறிமுகமாகவும், மலையாள சிறார் இலக்கியத்தின் நல்ல படைப்புகளை வாசிக்கவும் உதவியது. அப்படிப்பட்ட நல்ல சிறார் இலக்கியங்களை இங்கே கொண்டுவர விரும்பினேன். அவை சிறந்த வகைமாதிரியாக, முன்மாதிரியாக இருக்கும் என்று நம்பினேன்.

  • உங்களுடைய பள்ளிப் பருவத்தோடு இன்றைய சூழலை ஒப்பிட்டுப் பார்த்துச் சொல்லுங்கள். சிறார் கதைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் எத்தகையது?

இப்போது இருக்கும் சூழ்நிலைக்கு நேர் எதிரானது அந்தக் காலம். தொலைக்காட்சியோ, போன் வசதியோ மற்ற தொழில்நுட்ப வளர்ச்சிகளோ இல்லாத காலம். ஆனால் அது மிகவும் அழகானது. எங்கள் பிராந்தியத்தில் இருக்கும் பெரும்பாலான சிறுவர்கள், சிறார் புத்தகங்கள் வாசிப்பதில் தீவிர ஆர்வம் கொண்டு அலைந்துகொண்டிருந்தோம். அதாவது, பெரும்பாலும் ஆறிலிருந்து எட்டு வகுப்புவரையிலான மாணவர்கள். நாங்கள் புத்தகங்களைப் பரிமாறிக்கொள்வது பெரிய குழு நடவடிக்கைபோன்று இருக்கும். சிலர் படக்கதைகள் வாங்குவார்கள், சிலர் மாயாஜாலக் கதைகள் வாங்குவார்கள், சிலரிடம் சிறார் இதழ்கள் கிடைக்கும், சிலர் துப்பறியும் நாவல்களும் பேய்க் கதைகளும் சேகரிப்பார்கள். நான் என் நண்பனிடம் ஒரு படக் கதைப் புத்தகத்தைக் கொடுத்துவிட்டு அதற்கு மாற்றாக அவனிடமிருந்து ஒரு மர்ம நாவலை வாங்குகிறேன் என்றால், இன்னொருவரிடம் மாயாஜால நாலை வாங்கிக்கொண்டு அதற்குப் பதிலாக மர்ம நாவலைக் கொடுப்பேன். இப்படிப் பல வகையான புத்தகங்கள் பலரிடமும் மாறிமாறி இடையறாது பயணித்துக்கொண்டிருக்கும்.

என் நண்பர்கள் பெரும்பாலோர் வீட்டில் மின் வசதி இருக்காது. அவர்களெல்லாம் இரவுகளில் சிம்னி விளக்கு வெளிச்சத்தில் படிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள். புத்தகங்கள் வாங்க சிலருக்கு பெற்றோர் காசு கொடுப்பார்கள். சிலர் புத்தகங்கள்  வாங்குவதற்காக உண்டியலில் காசு சேர்ப்பார்கள். இதற்காக வீட்டில் சில்லறைக் காசுகள் திருடுபவர்களும் உண்டு. அரிதாக, ஒன்றிரண்டு அம்மாக்களும் அக்காக்களும் எங்களிடமிருந்து புத்தகங்கள் வாங்கிப் படிப்பார்கள்.

பத்திரிகைகளில் வரும் தொடர்கதைகள் சேகரித்து பைண்டு செய்யப்பட்டு சுற்றுக்கு வரும். கையெழுத்துப் பிரதிகள் நடத்தினோம். எங்களின் புத்தக வாசிப்புக்கு ஆதரவும் இருந்தது, எதிர்ப்பும் இருந்தது. எதிர்ப்பு இருக்கும் இடங்களில் பரிமாற்றம் வெகு ரகசியமாக இருக்கும்.

அப்போது சிறுவர்களுக்கு நிறையப் பத்திரிகைள் வந்தன. ரத்னபாலா, பாலமித்ரா, அம்புலிமாமா, பொம்மை வீடு, மணிப்பாப்பா, நந்தாவிளக்கு, பூந்தளிர், கோகுலம், கண்ணன், பொன்னி காமிக்ஸ், முத்து காமிக்ஸ், இந்திரஜால் காமிக்ஸ், நாவல் பண்ணை காமிக்ஸ், பாப்பா மலர் முதலிய பத்திரிகைகளும் பல வகைப் புத்தகங்களும் நிறைய வெளிவந்தன. நூற்றம்பது பக்கமுள்ள ஒரு மாயாஜால கதைப் புத்தகம் ஒரு ரூபாய் ஐம்பது காசுக்குக் கிடைத்தது. குறைந்த அளவு பக்கமுள்ள சிறார் புத்தகங்களை கடைகளில் கிளிப் மாட்டி, சரம் சரமாகத் தொங்கவிட்டிருப்பார்கள். ஒரு புத்தகம் முப்பது பைசா. அந்தக் காலத்தை இப்போது நினைத்துப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. எந்த வசதியும் இல்லாத வறிய குழந்தைகள் கதைப் புத்தகங்கள் வாசிப்பதில்தான் எவ்வளவு ஆர்வம் கொண்டிருந்தார்கள்! வாசிப்பதில் அவர்கள் எவ்வளவு மலர்ச்சியையும் மகிழ்ச்சியையும் அனுபவித்தார்கள்! வாசிப்பின் வழியாக அவர்கள் எல்லையற்று புதிது புதிதாக அறிந்துகொண்டே இருந்தார்கள். புத்தகம் இரவல் பெறுவதற்காக நெடுந்தூரம் நடக்கவும் வெகுநேரம் காத்திருக்கவும் தயாராக இருந்தார்கள்.

இப்போது அப்படிப்பட்ட சூழல் இல்லை. சிறுவர்கள் புத்தகங்களிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகள் வாசிக்க வேண்டியதன் அவசியம் குறித்த பிரக்ஞை இல்லை. புத்தங்கள் இருக்க வேண்டிய சிறுவர்களின் கரங்களில் இப்போது திறன்பேசிகள் இடம்பிடித்திருக்கின்றன. குழந்தைகள் பிறந்த அக்கணமே தனக்கான திறன்பேசியைத் தேடி கைகளால் துழாவும் காலம் வந்துவிடுமோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது. இது மிக அபாயகரமானது. திறன்பேசிகளால் குழந்தைகளுக்கு வரக்கூடிய ஆபத்துகள் அனேகம். நேர்மையற்ற வர்த்தகமும் அதிகபட்ச லாபமுமே முதலும் முற்றிலுமான நோக்கமாகக் கொண்ட இந்த உலகில், சிறாரின் ஆளுமைச் சிதைவைப் பற்றியோ, அவர்களுக்கு உண்டாகக்கூடிய மனச் சீர்கேடு பற்றியோ சிந்திப்பவர் வெகு குறைவு.

என் பாலபருவத்தில், சிறார் படைப்புகள் வாசிக்கும் குழந்தைகளிடையே பெருக்கெடுக்கும் கற்பனையை நான் பார்த்திருக்கிறேன். ஒரு கதை படித்துவிட்டு அதையே மாற்றி வேறு வேறு விதங்களில் சொல்லும் பழக்கமும் இருந்தது. ஹாஜா எனும் சிறுவன்  தன் கீச்சுக் குரலால் கதை சொல்ல ஆரம்பிக்கும்போது அவனைச் சுற்றி நாங்கள் பத்துப் பதினைந்துபேர் கூடியிருப்போம். அவன் கதை நீண்டு நீண்டு போக வேண்டு்ம் என்றும் அது ஒருபோதும் முடிந்துவிடக் கூடாது என்றும் நாங்கள் மனம் பதைக்கக் கேட்டுக்கொண்டிருப்போம்.

இக்காலக் குழந்தைகளிடையே இதுபோன்று பார்க்க முடியவில்லை. தமிழர் ஒவ்வொருவரின் தலைக்கு மேலும் ஒரு அரூப ஒளிவட்டம் இருப்பதாக நான் எண்ணுவதுண்டு. அந்தளவு கலாசார, பாரம்பரிய,  இலக்கியப் பெருமை கொண்டிருப்பவர்கள் நாம். அந்தளவு அற்புதமும் அதிசயமும் மிக்கது நம் மொழி. ஈடற்ற மகத்துவம் கொண்டிருந்தது  தமிழர் வாழ்க்கை. ஆனால் இப்போது நம் குழந்தைகளுக்கு என்று நல்லதொரு பத்திரிகை, ஒரு புத்தாக்கமான பத்திரிகை இல்லை. இது அளவிடற்கரிய துயர். பன்னெடுங்காலமாக வந்துகொண்டிருந்த  கோகுலத்தையும் நிறுத்திவிட்டார்கள். மிகப் பெரிய நிறுவனமான ஆனந்த விகடன் குழுமத்திலிருந்து வந்துகொண்டிருந்த சுட்டி விகடனையும் நிறுத்திவிட்டார்கள். அவர்களுக்கு லாபம் மட்டுமே வேண்டும். மேலும் மேலும் மேலும் லாபம்…

இப்போது வெளிவந்துகொண்டிருக்கும் சிறார் இலக்கியப் படைப்புகளை நான் கவனித்துவருகிறேன். நான் இப்படிச் சொல்வதால் இன்று சிறார் படைப்பாளிகளாக இருக்கும் பலருக்குக் கோபம் வரும், இன்று, நல்ல சிறார் இலக்கியப் படைப்புகளைத் தரும் எழுத்தாளர்கள் ஒருசிலரே! சட்டையைக் கிழித்துக்கொண்டு, நெஞ்சுத் தோலையும் வகிர்ந்துகொண்டு, ஓங்கி ஓங்கி ஆவேசமாக மார்பில் அறைந்து, ‘நான்!’, ‘நான்!’ என்று அறைகூவி தங்களை முன்னிலைப்படுத்தப் பிரம்மப் பிரயத்தனம் செய்யும் பல சிறார் இலக்கியக்காரர்களின் படைப்புகள் மிகவும் பரிதாபகரமாக உள்ளன. அவர்கள் குறித்து நான் இரக்கப்படுகிறேன். அவர்கள் மனந்திரும்புதலுக்கு ஆளாகி, சிறார் படைப்பின் தரம், கற்பனை, கவித்துவம், மொழி, சரளம், ஈர்ப்பு முதலியவை குறித்தெல்லாம் கருத்துச் செலுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.

சிறிய அளவில் வந்துகொண்டு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும், ‘தும்பி’, ‘பஞ்சு மிட்டாய்’, ‘குட்டி ஆகாயம்’, வெகுகாலமாக தடையற்று வந்துகொண்டிருக்கும் சிறார் அறிவியல் இதழான ‘துளிர்’ முதலிய பத்திரிகளைக்கு என் வணக்கத்தையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தக் காலகட்டத்தில் இதுபோன்ற பத்திரிகைகளின் தேவை மிகப் பெரிது. அதே நேரத்தில், தற்கால தமிழ்ச் சிறார் இலக்கிய உலகில், ஆயிஷா இரா. நடராசன், உதயசங்கர், யெஸ்.பாலபாரதி, விஷ்ணுபுரம் சரவணன் ஆகியோரின் எழுத்துகள் உவகையளிக்கின்றன; நம்பிக்கையூட்டுகின்றன. இவர்களைப்போன்று இன்னும் மிகப் பலர் உருவாகி வர வேண்டும்.

  • பக்கத்து மாநிலமான கேரளத்தோடு ஒப்பிடும்போது, தமிழ் சிறார் இலக்கியம் எப்படி உள்ளது?

கேரளத்தில் நம்மைவிட சிறார் இலக்கியம் பல்மடங்கு மேலோங்கியுள்ளது. அங்கே குழந்தைகளுக்கான நல்ல பத்திரிகைகள் வருகின்றன. இந்தப் பத்திரிகைகளை வெளியிடுபவர்கள், லாபம் என்பதற்கு அப்பாற்பட்டு சமூகக் கடப்பாட்டு உணர்வுடனும் சிறார் பத்திரிகைகளை பல்லாண்டுகளாக நடந்தி வருகிறார்கள். பெரியவர்களுக்காக எழுதும் பல முன்னோடி எழுத்தாளர்கள் சிறார் இலக்கியத்திலும் தங்களின் பங்களிப்பை செய்கிறார்கள். சமூகத்தில் பல்வேறுபட்ட துறையில் மேதைமை கொண்டவர்கள் தங்கள் அறிவை, ரசனையை, அனுபவத்தை குழந்தைகளிடம் பகிர்வதில் அக்கறை கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் கேரளத்தோடு தமிழ்நாட்டை ஒப்பிடுகையில் மிகவும் விரக்தி ஏற்படுகிறது.

நான் பலதடவை இதைச் சொல்லியிருக்கிறேன் என்றாலும் மீண்டும் மீண்டும் பேச வேண்டிய அவசியம் இருக்கிறது. கேரளத்தில் சிறார் இலக்கிய அரசு நிறுவனம் (பாலசாகித்ய இன்ஸ்டிட்யூட்) திருவனந்தபுரத்தில் பல்லாண்டுகளாகச் செயல்படுகிறது. அந்த நிறுவனம் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் மிகுதரம்கொண்ட  சிறார் நூல்களை வெளியிட்டுவருகிறது. அங்கிருந்து ஒரு சிறார் பத்திரிகைதான் ‘தளிர்.’ இதைப்போன்ற சிறார் இலக்கிய  அரசு நிறுவனம் இன்னும் நமக்கு ஏன் சாத்தியமாகவில்லை? ஆட்சியில் உள்ளவர்கள் ஏன்  இன்றளவும் இதுகுறித்து சிந்திக்கவில்லை.

நம் ‘தமிழ்நாடு அறிவியல் இயக்கம்’போன்று  அங்கு இருக்கும் பெரிய அமைப்பான  ‘கேரள அறிவியல் இலக்கியப் பேரவை’ (கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத்) குழந்தைகளுக்காக எண்ணற்ற நூல்களை வெளியிடுகிறது. கலையின் துணை கொண்டு சிறாரிடையே அறிவியல் பரப்பும் பணியை அற்பணிப்புடன் மேற்கொள்கிறது. கேரளத்தில் தலித் இலக்கியம், பெண்ணியம், சூழலியம்போன்ற தளங்களில் இயங்குபவர்கள் கலை இலக்கிய வடிவில் தங்கள் கருத்துகளை குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கிறார்கள். அதுபோன்ற செயல்பாடுகளுக்கெல்லாம் ஆதாரமாகத் தேவைப்படுவது குழந்தைகள்பாற்பட்டு, அவர்கள் அறிவு – பார்வை – கலையுணர்வு மேம்பாடு குறித்த, அவர்களின் – இப்புவியின் எதிர்காலம் பற்றிய அக்கறை. இதைச் சாத்தியமாக்க, இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒட்டுமொத்த மனோபாவம் அவசியமாகிறது.  இது அவர்களுக்கு இருக்கிறது. நமக்கு குழந்தைகள் என்றால் அற்பப் பிறவிகள்தான், நம் இரக்கத்தை யாசிக்கும் பலவீனச் சிற்றுயிர்கள்தான்.

  • பொதுவாக அனேக பெற்றோர் பாடநூல் தவிர்த்த இதர நூல்களை வாங்கிக் கொடுப்பதில்லை. பிள்ளைகளுக்கு கதைப் புத்த வாசிப்பு ஏன் அவசியம்?

பெற்றோர் பாவம். அவர்கள் எதுமறிய மாட்டார்கள். அவர்களுக்கு தங்கள் குழந்தைகள் படித்து, பெரிய பெரிய மதிப்பெண்கள் வாங்கி, முதலுக்கும் முதலான முதல் வகுப்புப் பெற்று. அதிகாரமும் பணமும் செல்வாக்கும் குவிந்துகிடக்கும் பதவிகளின் அரியணையில் அமர வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். இதைத் தவிர  அவர்களுக்கு வேறு நோக்கம் இல்லை.  தங்கள் பிள்ளைகள் மனிதம் உணர்ந்தவர்களாக வளர வேண்டும், மானுடத் தோழமை கொள்ள வேண்டும், அவர்கள் தங்களை பிரபஞ்சக் குடும்பத்தின் அங்கங்கள் என உணரவேண்டும், கலை இலக்கியங்களில் ஆளுமை பெறவேண்டும், அரியவற்றைத் தவறவிடாது அறிந்தனுபவித்து ரசிக்கத் தெரிய வேண்டும் என்றெல்லாம் பெற்றோர் அறிய மாட்டார்கள். பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்டு, மதிப்பெண்களைத் தாண்டி அற்புத உலகங்கள் எண்ணற்றவை உண்டு என அவர்களுக்குக் காட்டுபவர்கள் யார்?

சிறார் இலக்கியப் படைப்புகளை குழந்தைகள் வாசிப்பது என்பது, அவர்களுக்கான புதுப்புது உலகங்களைத் திறந்து கொடுக்கிறது. அறிந்திராத அனுபவங்களைச் சேர்க்கிறது. அறிவு, ரசனையின் எல்லைகள் விரிகின்றன. பற்பல வாழ்க்கைகளும், அந்த வாழ்க்கைகளின் எண்ணற்ற உணர்வு அடுக்குகளும் அறிமுகமாகின்றன. கவிதையின் ஊற்று உதயமாகிறது. மனம் கனிந்து அகண்டு, பார்வை கூர்மையாகிறது. தேடல்கள் தோன்றுகின்றன, அதன் அடிப்படையிலான பயணங்கள் தொடங்குகின்றன, அந்தப் பயணங்களில் எல்லாம் அன்பு செழிக்கிறது. தொடர்ந்த புத்தக வாசிப்பு, கலை இலக்கிய நுகர்ச்சி கொண்ட சிறுவர்கள், உலகத்தைத் தன் உள்ளத்தில் கொண்ட மனிதர்களாக மாறுவார்கள். அவர்கள் எதிர்காலத்தை மாற்றியமைப்பார்கள். புத்தக வாசிப்பு, குழந்தைகளின் மனதை பல்லாயிரம் பரிமாணப் பட்டைகள் ஒளிரும் ஒரு வைர விகாசமாக மாற்றுகிறது.

  • இன்றைய பல கதைகள் மந்திர தந்திரங்களாகவே நிறைந்துள்ளன. இவற்றைப் படிக்கும் குழந்தைகள் அவற்றை நிஜம் என்று நம்பி வளரமாட்டார்களா?

மாயாஜாலக் கதைகள் குழந்தைகளின் வாசிப்பு ஆர்வத்துக்கு அமுதம்தான்! உலகச் சிறார் இலக்கியக் களஞ்சித்தில் பெருங் கவித்துவமும் அசாத்திய கற்பனை வளமும் கொண்ட மாயக் கதைகள், வாசித்தாலும் வாசித்தாலும் தீராதவை. மாயாஜாலக் கதைகளைப் பொறுத்தவரை ஒரு கோணத்திலிருந்து, கனவில் சர்வநிஜமெனும் நம்பகத்தில் நிகழ்பவை – நிகழும் நேரத்தில் நம்மைப் பலவித உக்கிர உணர்ச்சிகளின் கலவையாக ஆக்குபவை, கனவு கலைந்ததும் கரைந்துபோவதைப்போல்தான் என்று சொல்லலாம். வாழ்வில் மேலேறும் படிகள் ஒவ்வொன்றும் ஏதேனும் ஒரு புதிரை அவிழ்த்தபடியே உள்ளன. தன் மீது பாதம் பதிக்கும்  சிறுமியிடம் ஒரு படி சொல்லும்: ‘மாயக் கம்பளத்தில் பறப்பதெல்லாம் உண்மை என்று நம்பிக்கொண்டிருந்தாயே? இப்போது அது பொய் என்று தெரிகிறதா?’ அதற்கு அவள் பதில் சொல்வாள்: “அது  கற்பனை என்று இப்போது அறிகிறேன். ஆனால் அந்த மாயக் கம்பளத்தில் பறந்து பறந்து நான் கொய்தெடுத்த கவிதைக் கதிர்கள் எண்ணற்றவை. இன்னமும் அவற்றின் மணம் நுகர்கிறேன். காற்றசைவில் உலையும் எழில் பார்க்கிறேன், அவற்றில் அமர்ந்த பறவைகளின் பாடல் கேட்கிறேன். அவை என் வாழ்வை உருவாக்கிய அம்சங்களில் ஒன்று!”

சிறிய வகுப்பில் படிக்கும்போது என் நண்பன் என் வலது கையில் ஒரு கருப்புக் கயிறு கட்டிவிட்டுச் சொன்னான்: ‘இது மந்திரக் கயிறு. எப்போதும் உன் கையில்தான் இருக்க வேண்டும். தப்பித்தவறி இந்தக் கயிறு தரையில் பட்டுவிட்டால் அத்துடன் உலகம் அழிந்துவிடும்.’

ஒரு நாள் அந்தக் கயிறு இற்றுப்போய் அறுந்து தரையில் விழத்தான் செய்தது. அப்போது உலகம் அழியவில்லை. நான் அடைந்த வியப்புக்கு அளவில்லை. மந்திரக் கயிறு அறுந்து விழுந்தும் உலகம் அழியவில்லையே! ஆனால் இந்த நிகழ்வு, என் மனதில் உள்ள அற்புத சேகரக் குடுவையில் முக்கியமான ஒன்றாக இப்போதும் இருக்கிறது. நினைத்த மாத்திரத்தில் மனமலர்ந்து புன்னகை தோற்றுவிப்பது. என் இதயத்தை நெய்த இழைகளில் ஒன்று, என் கற்பனையின் வேர்களில் ஒன்று.

  • இன்று பல்வேறு தரப்பிலும் குழந்தைக் கதைகளில் அறிவுரையோ, நீதிபோதனையோ வேண்டாம் என்ற குரல்கள் ஒலிக்கின்றனவே? இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?

படைப்பிலக்கியங்கள் யாவற்றிலுமே ஒரு குரல் உண்டு. தொனி, தரப்பு, அரசியல் உண்டு. முற்படும் முனைப்பு உண்டு. சிலவற்றில் அந்தக் குரல் மற்ற அனேகத்துடன் கலந்து மறைந்திருக்கும். படைப்பின் ஏதேனும் ஒரு அடுக்கில், பாறையடியில் உறையும்  ஜீவராசிகளைப்போல உயிர்த்திருக்கும். சிலவற்றில் அது பெரும் மௌனத்தின் குரலாக உரத்து ஒலிக்கும். நம் வாசகப் புரிதலின் பங்கேற்புடன் தன்னை உருவாக்கிப் பிறப்பித்துக்கொள்ளும் நோக்கமும் உண்டு. இந்த நோக்கம் பிரக்ஞையுடனும், படைப்பெழுச்சியின் போக்கில் பிரக்ஞையற்ற தன்மையுடனும் உருப்பெறலாம். ஒரு படைப்பு என்பது, படைப்புச் செயல்பாட்டில் துணை வரும் ரத கஜ துரக பதாதிகளுடனான படைப்பாளியின் ஆளுமைப் பகிர்வு என்றும் சொல்லலாம். படைப்பின் திசைவழியில் பூடகமாகவும் வெளிப்படையாகவும் ஆளுமையின் தடங்களைக் காண்கிறோம்.

குழந்தைகள் அதிநுட்பமான புரிதல் கொண்டவர்கள். அறிவுரையும் நீதிபோதனையும் சிறார் கலை இலக்கியங்களில் மிகவும் முக்கியமானவை. அவற்றிற்கு தவிர்க்க முடியாத இடம் உண்டு. ஆனால் அந்தக் கருத்து, வலுவற்ற படைப்பின் மீது வலிந்து தெளிக்கப்படும் வெறும் வறட்டு நெடியாக  அல்லாமல், ரோஜாவின் அழுகுடன் கலந்திருக்கும் நறு மணமாக அமைய வேண்டும். பேரழகான அந்த ரோஜாவால் இயல்பாக ஈர்க்கப்பட்டு, அதை மனந்தழுவி முத்தமிடும் குழந்தை, அந்த நறுமணத்தையும் ஆழச் சுவாசிக்கிறது. அதைத் தன் இதயத்தின் ஆழத்தில் பிரதிஷ்டை செய்கிறது. பிறகு வாழ்வில் ஒருபோதும் அந்த நறுமணம் அதன் நெஞ்சைவிட்டு அகல்வதில்லை. மலர் உதிர்ந்தாலும் மணம் ஊடுருவி திசுக்களில் நிலைபெற்றுவிடுகிறது. செல்லுமிடந்தோறும்  அந்த மணமும் உடன் வருகிறது; சூழலில் சுகந்தம் பரவுகிறது. ஆனால், ஜீவனற்ற தங்கள் படைப்புகளின் மீது தங்கள் அத்தர் புட்டிகளைக் கொட்டிக் கவிழ்த்து அவற்றை மகிமை பெறச்செய்ய முயலும் சிறார் இலக்கியப் படைப்பாளிகள்தான் தற்போது அதிகமாக இருக்கிறார்கள். உயரிய இலக்கிய ஆசான்கள் என்று நாம் கருதும் சிலர் இவர்களை விதந்தோதுவதைப் பார்க்கும்போது பெரும் சோர்வு கவிழ்கிறது.

நிக்கலாய் நோசவ் எழுதிய ‘விளையாட்டுப் பிள்ளைகள்’ (சோவியத்  சிறார் கதைத் தொகுப்பு) படித்திருப்பீர்கள். இதில் முதல் கதை, ‘தோல்யாவின் வினோதங்கள்.’ நாம் போகும் வழியில் பூனை குறுக்கே சென்றால் அபசகுனம், போகும் காரியம் விளங்காது என்றெல்லாம் சொல்கிறார்கள் அல்லவா, அந்த மூட நம்பிக்கைக்கு எதிரான ஒரு அழகுக் கதை இது.

“நான்காம் வகுப்பு மாணவனான தோல்யா கிலியூக்கின் வீட்டிலிருந்து புறப்பட்டு, ஒரு சந்துக்குள் திரும்பி, அவனது நண்பன் ஸ்லாவாவின் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான்…” என்று தொடங்குகிறது கதை. அப்போது அவன் செல்லும் வழியில் ஒரு பூனை குறுக்கே சென்றுவிடுகிறது. பிறகு அவன் அந்த வழியில் தொடர்ந்து செல்லாமல் வேறு வழியில் செல்கிறான். பிறகு அவனுக்கு என்னென்ன அனுபவங்கள் ஏற்படுகின்றன என்பதுதான் கதை. இந்தக் கதையில் மூடநம்பிக்கைக்கு எதிரான ஒரு கருத்து சொல்லப்படுகிறது. ஆனால் அது அற்புதமான கலைத் தன்மையுடன், யாவரையும் வசீகரிக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. சிறார் கதையில் கருத்து வெளிப்பாட்டிற்கான சிறந்த முன்மாதிரி இது. இதுபோன்று இன்னும் நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும்.

  • நீங்கள் சிறுவர் இலக்கியத்தில் நேரடிக் கதைகள் குறைவாகவும் மொழிபெயர்ப்புப் பணிகளை அதிகமாகவும் கொண்டிருப்பதன் ரகசியம் என்ன?

நான் மலையாளத்தில் ஒரு கதை படிக்கிறேன். எனக்குப் பிடிந்திருந்தால் உடனே அதை மொழிபெயர்க்கும் வேலையில் ஈடுபடுகிறேன். சிறார் இலக்கியத்தில் நல்ல மொழிபெயர்ப்புக் கதைகள் நமக்கு மேலும் மேலும் தேவைப்படுகின்றன. இது என் முக்கியமான ஆர்வமாகவும் மிக விரும்பிச் செய்யும் முதன்மைப் பணியாகவும் இருக்கிறது. நம் சிறார் இலக்கியச் சூழலில் இதுபோன்ற கதைகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நம்பிக்கை. வெகுகாலமாக நான் சிறார் இலக்கியங்களை மொழிபெயர்த்து வருகிறேன். சமீப காலமாகத்தான் சிறுவர் கதைகள் சிலவற்றை எழுதிப்பார்க்கத் துணிந்திருக்கிறேன். தற்போது நான் சிறார் கதைகள் எழுதிவருவதற்கான முக்கியமான தூண்டுதல், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த தோழர் மோகனா, நண்பர்கள் சரா சுப்பிரமணியம் (‘றெக்கை’ சிறார் இதழ் ஆசிரியர்), ஓவியர் கலைச்செல்வன் ஆகியோரிடமிருந்து கிடைத்தது.

  • எந்த வயதில் இருந்து புத்தக வாசிப்பை அறிமுகப்படுத்தலாம்?

கேரளத்தில் நர்சரி குழந்தைகளுக்காக ‘மின்னாமின்னி’, ‘களிக்குடுக்க’ முதலிய வார இதழ்கள் வெளிவருகின்றன. அவற்றில் நர்சரிக் குழந்தைகளுக்கான கதைகள், கவிதைகள், பழமொழிகள், கட்டுரைகள், புதிர்கள், வினோதங்கள், படக்கதை, வரைதல், வண்ணம் தீட்டுதல், வார்த்தை விளையாட்டு என எல்லாமும் உண்டு. இந்த வண்ணமய இதழ்களில் மனம் கவரும் சித்திரங்கள் முக்கிய இடம் பெறுகின்றன. வாசகங்கள் குறைவு. அங்கே  பெருமளவில் விற்பனையாகும் பத்திரிகைகள் இவை. எத்தனை வழிகள் உண்டோ, அத்தனை வழிகளில் குழந்தைகளின் உளவியலை அணுகி, நுணுகி ஆராய்ந்து அழகாகப் பயிற்றுவிக்கும் இதழ்கள் அவை. அவை மிகவும் கற்பனை ஆற்றலுடன் உருவாக்கப்படுகின்றன.

  • குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கம் தொடர, பெற்றோர் என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்?

ஆட்சியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் சிறார் இலக்கியத்தின் முக்கியத்துவத்தையும் தேவையையும் அறிய வேண்டும்.

அரசு, சிறார் இலக்கியத்துக்காக ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும். அந்த அமைப்பிலிருந்து உலக சிறார் இலக்கியங்கள் தமிழில் செம்பதிப்பாக மொழிபெயர்க்கப்பட்டும், தமிழ் சிறார் இலக்கிய, இளையோர் இலக்கியப் புத்தகங்களும் வெளியிடப்படவேண்டும். கேரள  அரசு சிறார் இதழ் வெளியிடுவதைப்போல இங்கும் சாத்தியமாக வேண்டும்.

ஆசிரியர்  பயிற்சியின்போது ஆசிரியர்களுக்கு தற்கால இலக்கியப் போக்கு பற்றியும் சிறார் கலை இலக்கியம் பற்றியும் போதிக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு நூலகம் என்பதை அதிமுக்கிய நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் ஐம்பது புத்தகங்கள் கொண்ட ஒரு அலமாரியேனும் ஒரு குழந்தையின் வீட்டில் இருக்க வேண்டும். பள்ளிகளில் நூலகச் செயல்பாடுகள் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

 ஊடகங்கள் இதில் கவனம் கொண்டு சிறுவர்களின் வாசிப்பை ஊக்கப்படுத்த வேண்டும்.

பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களின்போது, சிறார் கலை இலக்கியமும் ஒரு பொருளாக வேண்டும்.

பள்ளிகளில் சிறார் கலை இலக்கியம் ஒரு பாடமாக நடத்தப்பட வேண்டும்.

உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., பள்ளிக் கல்வித் துறையில் இருந்தபோது, அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ‘தேன்சிட்டு’ எனும் மாத இதழும், ஆசிரியர்களுக்காக ‘கனவு ஆசிரியர்’ எனும் மாத இதழும் வெளியிடும் ஆயத்தம் தீவிரமாக நடந்தது. அவர் வேறு துறைக்கு மாற்றப்படுவதற்கு முன்பே அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

  •  குழந்தை வளர்ப்பு பற்றி?

இந்த இடத்தில், கேரளத்தின் கிறிஸ்தவ மதகுரு, மார் கிரிஸோஸ்டம் சொன்ன ஒரு கதை பொருத்தமாக இருக்கும். ஒரு நேர்காணலின்போது அவரிடத்தில், ‘குழந்தைகளைப் பற்றிய விஷயத்தில் மிகவும் அக்கறை கொண்டிருப்பவர்கள் பெற்றோர். குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?’ என்று கேட்கப்பட்டது. அவர் சொன்ன பதில் இது:

“நான் திருமணம் செய்யாததால் எனக்குக் குழந்தைகள் பிறக்கவில்லை. குழந்தைகள் இல்லாததால் அவர்களை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், நான் கேள்விப்பட்டவற்றின் அடிப்படையில் ஒரு கதை சொல்கிறன்.

டஒருமுறை இரண்டு நண்பர்கள் உலவப் புறப்பட்டார்கள். அப்போது வழியோரத்தில் ஒருவர் நல்ல மாங்கன்றுகள் விற்றுக்கொண்டிருந்தார். இருவரும் ஒவ்வொரு மாங்கன்று வாங்கி வந்து வீட்டு வாசலில் நட்டு வைத்தார்கள். அவர்களில் ஒருவர் அந்த மாங்கன்றை நன்றாகப் பராமரிக்கத் தொடங்கினார். தேவைக்கு அதிகமாக தண்ணீர் ஊற்றினார், பார்க்கும்போதெல்லாம் உரம் போட்டார். அந்த மாங்கன்று நன்றாக செழித்துப் பருத்து வளர்ந்து வந்தது. மற்றொருவர் தான் வாங்கிய செடிக்கு அப்படி ஒன்றும் பெரிய கவனம் கொடுக்கவில்லை. தன் செடி வாடிக் கருகிப் போகாதிருப்பதற்கான அளவு மட்டும் அவர் தண்ணீர் ஊற்றினார். அப்படி இரண்டு மாமரங்களும் வளர்ந்துவந்தன. ஒரு மாமரம் நன்றாகப் பருத்து பெரிய கிளைகளுடன் வளர்ந்தது. மற்றொரு மாமரம் வாடி மெலிந்து நின்றது.

“அப்படி இருக்கும்போது பெரிய புயலும் கடும் மழையும் ஏற்பட்டது. அந்தப் புயலில், செழித்துப் பருத்து நன்றாக வளர்ந்திருந்த மரம் வேருடன் விழுந்துவிட்டது. வாடி வதங்கி மெலிந்திருந்த மரம் அப்படியே நின்றது.

“பிறகு இரண்டு நண்பர்களும் சந்தித்தபோது பேசிக்கொண்டார்கள். ஒருவர் சொன்னார்: ‘நான் இவ்வளவு கவனமாகவும் அக்கறையாகவும் பராமரித்தும் என் மரம் விழுந்துவிட்டதே!’

“அப்போது இன்னொருவர் சொன்னார்: ‘தேவைக்கு அதிகமாக தண்ணீர் ஊற்றி உரம் போட்டு உன் மரத்தை நீ வளர்த்தாய். அதுதான் பிரச்சினை. அதனால் உன் மாமரத்தின் வேர்கள் பூமியின் அடியில் சென்று பலப்படவில்லை. ஆனால் நான் கொஞ்சம் தண்ணீர் மட்டுமே ஊற்றியதால் என் மாமரத்தின் வேர்கள் தண்ணீரைத் தேடி பூமிக்கு அடியில் வெகு ஆழமாகச் சென்று உறுதிப்பட்டிருந்தன. அதனால்தான் என் மரம்  புயலில் விழவில்லை.’

“இன்றைய காலத்தில் பெற்றோர் தேவைக்கு அதிகமாக தண்ணீரும் உரமும் கொடுத்து பிள்ளைகளைப் போஷிக்கிறார்கள். அப்படியான குழந்தைகள், அனுபவத்தின் வேர்கள் பூமிக்குள் ஆழ்ந்து இறங்காத மரங்கள்போலத்தான். சிறியதொரு காற்றைக்கூட தாங்குவதற்கான திறமை அந்தக் குழந்தைகளுக்கு ஏற்படுவதில்லை. ஆனால், இல்லாமையிலும் வறுமையும் வளரும் குழந்தைகள் அனுபவத்தின் வேர்களை ஆழத்தில் செலுத்தி தங்களை வலுப்படுத்திக்கொள்கிறார்கள்.

“தாய்தந்தையர் அனுபவிக்கும் துன்பங்கள் எதுவாக இருந்தாலும் அது பிள்ளைகளுக்கும் தெரிய வேண்டும். அப்படி இருந்தால்தான் வாழ்க்கையைப் பற்றிய யதார்த்த பிரக்ஞை  அவர்களுக்கு ஏற்படும். வாழ்க்கை எனப்படுவது, பல விதமான அனுபவங்களின் ஊடே கடந்து செல்லும் ஒன்று என்று குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். ‘தீயில் துளிர்த்தது வெயிலில் வாடாது’ என்று நாங்கள் பழைய மனிதர்கள் சொல்வது உண்டு. அனுபவங்களின் தீயில் துளிர்த்த குழந்தைகள் எப்படிப்பட்ட வெயிலிலும் துவண்டுபோக மாட்டார்கள். இப்படிப்பட்ட கல்விமுறை நம்மிடம் இல்லாததால்தான், சிறிய பிரச்சினைக்குக்கூட பிள்ளைகள் தற்கொலைகூட செய்துகொள்கிறார்கள். குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமாக செல்லமும் சௌகரியங்களும் செய்து கொடுப்பதால்தான் பெற்றோர்கள்  அவர்கள் விஷயத்தில் அதிகம் கவலைப்பட வேண்டி வருகிறது. புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் பார்த்தோமானால், அவர்கள் குழந்தைகள்  அப்படியொன்றும் உயர்த்தப்படவில்லை என்பதைப் பார்க்கலாம். தீமைகளின் சூறாவளி எப்போதும் சுழன்றடிக்கும் ஒரு சமூகத்தில் நிற்கும் நம் குழந்தைகளின் வேர்கள் ஆழத்தில் ஊடுருவிச் சென்றிருந்தால் மட்டுமே அவர்கள் வீழாதிருப்பார்கள்.”

∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙

செல்லமே-2020 மாத இதழில் வெளியான நேர்காணலின் முழுவடிவம்

This entry was posted in கட்டுரை, சிறுவர் இலக்கியம், நேர்காணல் and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 3 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.