1

யெஸ்.பாலபாரதியின் நாவலைப் படிக்கப்போகிறீர்கள்.

‘முத்திரள் உருவமாக’இந்தக் கதையில் சிலர் சந்திக்கிறார்கள். அவர்கள்  ‘மாய உருவமாகவும்’இருக்கிறார்கள். இந்தச் சொற்களுக்கிடையே இருக்கும் வேறுபாடு, அவற்றின் பொருள் உங்களுக்குப் புரிகிறதா?

2

இது அறிவியல் புனைகதையா, மிகுபுனைவா?

மேலே சொன்ன இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

‘எல்லாம் ஒண்ணுதானே, படிக்க சுவாரசியமாக இருந்தால் போதாதா?’ என்று கேட்பவர்கள், இந்த அளவில் இதை வாசிப்பதை நிறுத்திவிட்டு, கதைக்குள் போய்விடுங்கள். இங்கே அந்த இரு வகைகளுக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டைப் பார்க்கப்போகிறோம்.

அறி(வியல்) புனைகதை என்பது பெரும்பாலும் எதிர்காலத்தைப் பேசக்கூடியதாக அமையும். அதில், தொழில்நுட்பத்தில் இப்போது நாம் காண்பதைக் காட்டிலும் கூடுதலான சில கூறுகள்  இருக்கலாம்.

அறிபுனைகதைகளின் உள்ளடக்கங்களில் சில விசேஷப் பொதுத் தன்மைகளைக் காணலாம். நம் பார்வைக்கு அப்பாற்பட்ட தொலைவில் இருக்கும் பிரபஞ்சத்தில் தொடங்கி, கடலுக்கடியில் நிகழும் சம்பவங்கள்வரை, இடைப்பட்ட பகுதிகளில் உள்ள அறியாப் பிரதேசங்களிலும் இக்கதைகள் தங்கள் சாகசங்களைச் செயற்படுத்தும்.

வாசகர்களுக்கு வேறோர் உலகத்தின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும். அறிந்திராத தொழில்நுட்பங்களைப் பற்றிப் பேசும். நாம் அன்றாடம் காணும் நடைமுறை உலகில் இல்லாத கற்பனைக் கூறுகளை அறிபுனைகதைகள் கொண்டிருக்கும்.

அறிபுனைகதைகளின் கருப்பொருட்களைக் கவனித்திருப்பீர்கள். காலத்தைத் தாண்டி பயணப்படுவது, விண்வெளிப் பயணம், தொழில்நுட்ப முன்னேற்றம், அறிவியல் ஆரூடம், தொழில்நுட்ப – அறிவியல் முன்னேற்றத்தின் விளைவுகளோடு போராட்டம் போன்றவை…

இந்த உள்ளடக்கத்தோடு வரும் அறிபுனைகதைகளையும் இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்துவிட முடியும். வல்லறிபுனைகதை, மென்னறிபுனைகதை.

இவற்றில் முதல் வகை, அறிவியல் உண்மையை அடிப்படையாகக் கொண்டது. இயற்பியல், வேதியியல், வானியல் போன்ற வரையறுக்கப்பட்ட, ஒப்புக்கொள்ளப்பட்ட அறிவியல் சிந்தனைகளில் இருந்து கிளைத்து எழுவது.

மென்னறிபுனைகதைகள் இரண்டு விதமாக இருக்கலாம். ஒன்று, அவை விஞ்ஞான ரீதியாக துல்லியம் அற்றவை.

இன்னொன்று, உளவியல், மானுடவியல், சமூகவியல் போன்ற சமூகம் சார்ந்த அறிவியல் கோட்பாடுகளைப் பற்றிக்கொண்டு கதை சொல்பவை. இந்த வகைப் பட்ட கதைகள் நெகிழ்வான சொல்லல் முறையைக் கொண்டிருப்பவை. இப்படிப்பட்ட வகைமையே, கதையின் அடிப்படையான செய்தியையும் அதில் செயல்படும் சம்பவங்களையும் எளிதில் புரியவைப்பவை.

அறிபுனைகதை நாவலின் வழக்கமான கூறுகள் என்னென்ன என்பதைப் பாருங்கள்…

காலப் பயணம்

ஓர் இடத்தில் இருக்கும் பொருளை அல்லது நபரை வேறோர் இடத்துக்கும் மாற்றும் டெலிபோர்ட்டேஷன்

பிற ஒருவரின் மனதுக்குள் புகுந்து அவரது சிந்தனையைக் கட்டுப்படுத்துவது, மொழி, குரல், காற்றுச் சார்பு போன்ற எந்த ஊடகமும் இல்லாமல் இரு மனங்கள், ஒன்றோடொன்று தொடர்புகொள்வது, மனதின் சக்தியாலேயே, அதாவது உபகரணங்கள் ஏதுமின்றி ஒரு புறப்பருப்பொருளை நகர்த்துவது போன்றவை.

ஏலியன்ஸ், வேற்று கிரக உயிரி வகைகள், வித்தியாசமான உயிரிச் சேர்க்கையால் உருவான அந்நிய ஜீவிகள், ஆகாயவெளிப் பயணம், அது தொடர்பான ஆராய்ச்சித் தகவல்கள், கோள்களுக்கு இடையிலான யுத்தம் நாமறிந்த பிரபஞ்சத்துக்கு இணையான ஆனால் நாமறியாத பிரபஞ்சங்கள், கற்பனைப் பிரதேசங்கள், நாமறிந்த வரலாற்றின் மேல் மாற்றுப் பார்வையைச் செலுத்தி வேறுவிதமாகக் கூறுவது, தொழில்நுட்பம் எப்படி எல்லாம் வரக்கூடும் என்கிற அனுமானம், அதிஜீவிகளாகக் கணினிகள், ரோபோக்கள்… இப்படியானவையே அறிபுனைகதைகளில் இடம்பெறுகின்றன, அல்லவா?

நீங்கள் இதுவரை வாசித்திருக்கும் அறிபுனைகதைகளில், எழுதப்பட்ட பாணி எப்படி உள்ளது என்று கவனித்திருக்கிறீர்களா?

அ) நம்மைச் சுற்றி இயங்கும் வாழ்வில் இருந்து மூலப் பொருள், சம்பவக் களம் எடுக்கப்படுகிறது.

அது, கூடுதலாகக் கற்பனை சேர்க்கப்பட்டு மேலும் கொஞ்சம் விஸ்தரிக்கப்படுகிறது. 

ஆ) எடுத்துக்கொண்ட விஷயத்தைப் பற்றி ஆய்வு மேற்கொள்வது.

அதன் விளைவாக, கதையில் நுணுக்கமான விவரங்களை இணைப்பது.

அதன் மூலம் கதையின் நம்பகத்தன்மையைக் கூட்டுவது.

இ) அந்தக் குறிப்பிட்ட நாவலுக்கென்றே விதிமுறைகளை உருவாக்கிக்கொள்வது, நாவல் முழுக்க அந்த விதிகளை மீறிவிடாமல் இருப்பது. (அறிபுனைகதைகளின் சுவாரசியத்தைக் கூட்டுவது இந்த விதிமுறைகளே.)

இந்த சட்டதிட்டங்களாலேயே கதாபாத்திரங்களுக்கும் வாசகர்களுக்கும் சவால்களை உருவாக்கி, அவற்றைத் தீர்ப்பது.

ஈ) என்னதான் வித்தியாசமான உலகின் பரப்பு காட்டப்பட்டாலும் கதையின் வேரை நடப்பு உலகோடு இணைத்தே வைத்திருப்பது.

ஆயிற்றா…

இப்போது, மிகுபுனைவுக் கதைகளின் தன்மைகள் என்னென்ன?

மிகுபுனைவு என்பதே உலகின் முதல் கதையாக இருக்கக்கூடும். அதீத ஆர்வத்தை ஊட்டுவதற்காக, இல்லாத ஒரு பொருளை விவரிப்பது; நடக்கவே முடியாத ஒன்றைச் சொல்வது போன்ற தன்மையோடுதானே முதல் கதை சொல்லப்பட்டிருக்க வேண்டும்?

இப்படியான கதைகளின் எளிய முன்னோடிகளாக புராணக் கதைகளைச் சொல்லலாம். தொன்மங்களில் வரும் வித்தியாசமான உயிரினங்களும் (யானைத் தலை உள்ள மனிதன்) அந்த உயிரினங்களின் விசித்திரமான செய்கைகளும் (யானைத் தலை மனிதன் ஒரு மூஞ்சூறின் மேல் அமர்ந்து பயணம் செய்வது) பல நூற்றாண்டுகளாக மிகுபுனைவில் தொடர்கின்றன.

நடைமுறை வாழ்க்கையோடு எவ்வகையிலும் தொடர்பு இல்லாத உயிரினங்கள் மிகுபுனைவுக் கதைகளில் வாழலாம். சாதாரண தர்க்கத்தால் புரிந்துகொள்ள முடியாத அதியதார்த்தச் சம்பவங்கள் இத்தகு கதைகளில் சாதாரணமாக நடக்கலாம்.

பகுத்தறிவுக்கும் அறிவார்ந்த சிந்தனைக்கும் பொருந்தாத சக்திகள் கொண்ட கதாபாத்திரங்கள் இங்கே சர்வ சாதாரணமாக உலவலாம். விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட சம்பவங்களை இங்கே நீங்கள் எதிர்கொள்ளலாம்.

சுவாரசியத்தை மாத்திரமே முன்னிறுத்துபவை இந்த மிகுபுனைவுக் கதைகள்.

3

இந்த இரண்டு வகைமையில் பாலபாரதியின் மந்திரச் சந்திப்பு என்கிற இந்தக் கதை எந்தத் தளத்தில் இயங்குகிறது என்பதை வாசகர்கள் கவனித்துப் பாருங்கள்.

மேலே விவரிக்கப்பட்டிருக்கும் இலக்கணங்களில் எவை எல்லாம் இந்தக் கதையில் செயல்படுகின்றன என்பதை குறித்துக்கொண்டே வாருங்கள். வாசிப்புச் சுகத்தோடு கண்டுபிடிப்பின் சுவாரசியமும் உங்களுக்குக் கிடைக்கும்.

அன்புடன்,

ரமேஷ் வைத்யா

****
(மந்திர சந்திப்பு – நூலுக்கு அண்ணன் ரமேஷ் வைத்யாவின் அணிந்துரை)