பூமிக்கு அடியில் ஒரு மர்மம் – சிறார் நாவலுக்கான முன்னுரை.

புதியகதையுடன் உங்களைச் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி! இக்கதையின் களம் நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரில் நடைபெறுகிறது. சில
இடங்கள் நிஜத்தில் உள்ளவை. மற்றவை வழக்கம்போலக் கற்பனையானவை.

இதுவொரு சாகச, த்ரில்லர், சஸ்பென்ஸ் வகைக்கதை. எனது முந்தைய கதைகளைப் போலவே இதுவும் பதின்பருவத்தினருக்கான கதைதான். இதில்
சில நண்பர்கள் சேர்ந்து, ஒரு சுரங்கத்தைக் கண்டறிகின்றனர். அதன் உள்ளே இருப்பதை அறியவும் சுரங்கத்தின் இன்னொரு வாசலைத்தேடியும் அவர்கள்
அதற்குள் நுழைகின்றனர். அங்கே அவர்களுக்கு என்ன நேர்கிறது? அங்கே எதையெல்லாம் பார்க்கிறார்கள் என்பதைப் படித்து அறிந்துகொள்ளுங்கள்.
கதையை வாசிக்கத்தொடங்கிய உடனேயே அது, உங்களைக் கையைப் பிடித்து அழைத்துச்செல்லும். அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டால் வாசிப்பு
இன்பத்தை அனுபவிக்கமுடியும்.

இந்தப் பூமி என்பது நம்மைப் போன்றவர்களுக்கானது மட்டுமல்ல, இங்கே வாழும் அனைத்து உயிர்களுக்குமே சொந்தம் தான். நமக்கு இந்தப் பூமியில்
வாழ நமக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ, அதே உரிமைச் சின்னஞ்சிறு எறும்புக்கும்கூட உள்ளது. எறும்புகளுக்கு இருக்கும் அதே உரிமை
இச்சமூகத்தால் புறந்தள்ளப்படும் மாற்றுத்திறனுடையோருக்கும் குறைபாடுகளுடன் வாழ்வோருக்கும்கூட உண்டு. இக்கதையின் வழியாகவும்
இதனைப் பதிவு செய்திருக்கிறேன். பிறரை ஏளனம் செய்யவோ, புறந்தள்ளவோக்கூடாது என்பதை எப்போதும் மனதில் நிறுத்திக்கொள்வோம்.
அப்புறம், உங்களிடம் ஒரு வேண்டுகோள். இந்த மர்மக்கதையின் முடிவை யாரிடமும் கூறவேண்டாம். ஏனெனில் மர்மக்கதைகளை முடிவு
தெரியாதவரை மட்டுமே சுவாரஸ்யமாக இருக்கும். முடிவு தெரிந்து மர்மம் விலகியபின் அக்கதை இன்னொரு கதைபோலாகிவிடும். அதனால்
இக்கதையின் முடிவைப் பற்றி மட்டும் யாரிடமும் சொல்லவேண்டாம்.

இக்கதையில் வரும் இடங்களைச் சுற்றிக்காட்டிய தம்பிகள் கென்னுக்கும், நெப்போலியனுக்கும் எனது அன்பான நன்றி. கதையினைப் படித்து, கருத்துக்கூறிய எழுத்தாளர்கள் ஆசிப் மீரான், துரையரசு, சரவணன் பார்த்தசாரதிக்கும் ஸ்பெஷல் நன்றி!

எப்போதும் எனது எழுத்திற்குத் துணை நிற்கும் அன்புமனைவி லக்ஷ்மிக்கும், மகன் கனிவமுதனுக்கும் அன்பு.

இந்நூலை அழகுற அச்சிட்ட வானம் பதிப்பகம் மணிகண்டனுக்கும் சிறப்பான
ஓவியங்களைத்தீட்டிய ஓவியர் பிள்ளைக்கும் நன்றிகள்.

நன்றி
தோழமையுடன்
யெஸ்.பாலபாரதி

(2020ஆண்டு வந்திருக்கவேண்டிய நாவல், 2021இல் தான் வெளி வந்துள்ளது)