புகை அது பகை

இன்றோடு நான் சிகரெட் புகைப்பகை நிறுத்தி ஓராண்டு முடிந்துவிட்டது. புகையில்லா இரண்டாம் ஆண்டில் அடித்து வைக்கிறேன்.

மஞ்சள் காமாலை, அம்மை, அல்சர் என எத்தனையோ முறை நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்த பொழுதுகளிலும் கூட சிகரெட் இல்லாமல் இருந்ததில்லை. 90களின் இறுதியில் சிகரெட் வாங்க காசில்லாமல் பீடி புகைத்துக்கொண்டு இருந்தேன்.

காலைக் கடன் கழிக்க, டீ குடித்தவுடன், உணவு செரிக்க, டென்ஷன் குறைக்க, புதிய யோசனைகளுக்கு என்று எப்போதும் புகைப்பதைத் தொடர, ஏதேனும் ஒரு காரணம் என்னிடம் இருக்கும். தொண்டை காய்ந்து போனால் சிகரெட் பிடிப்பதில் சுகம் இருக்காது என்று பாஸ் பாஸ், ஹால்ஸ், மிட்டாய் இவற்றுடன் லைட்டர் என ஒரு சின்ன பெட்டிக்கடையே என்னுடைய பேண்ட் பாக்கெட்டில் இருக்கும். அப்படித்தான் வலம் வந்துகொண்டிருந்தேன். (இப்போது நினைக்கவே அவமானமாக இருக்கிறது)

சிகரெட் விடப்போவதை பலமுறை வாய் வார்த்தையாக சொல்லிக் கொண்டிருந்தாலும் ஒரு போதும் அதற்கான முனைப்பு காட்டியதில்லை. மனது வந்து அரைநாள் அடிக்காமல் இருந்து பார்த்து, அதற்கும் சேர்த்து வைத்து புகைத்துத் தள்ளிய நாட்கள் உண்டு. 10 சிகரெட் என்றிருந்த சமயத்தில் அதன் அளவை குறைப்போம் என்று பாதி உடைத்து புகைப்பேன். அன்று 20 சிகரெட்டுகள் வாங்கி பாதி பாதியாக புகைத்திருப்பேன். இப்படியாக விடவேமுடியாமல் இருந்தது.

தினசரி இரவுகளில் தொடர் இருமல் இருக்கும். சிகரெட்டை எப்போதும் பாக்கெட் பாக்கெட்டாகவே வைத்திருப்பேன். வீட்டிலும் எனக்கென புகைக்க இடம் ஒதுக்கி, புகைத்துக் கொண்டிருந்தேன். நடு இரவில் சிறுநீர் கழிக்க எழுந்தால் கூட, ஒரு சிகரெட் புகைக்காமல் வந்து படுத்ததில்லை. எப்போதுமே உடனிருந்த சனியன் அது.

அதை விடவேண்டும் என்ற எண்ணம் மட்டும் கடந்த சில ஆண்டுகளாக இருந்துகொண்டே இருந்தது. எனக்கு முன்னமே இப்பழக்கத்தை கைவிட்ட, அதிஷா, தமிழ்ச்செல்வன், ராஜ்குமார் உட்பட பல நண்பர்களிடம் இதுபற்றி பேசி இருக்கிறேன். அவர்கள் சொல்லுவதைக் கேட்டபோது ஆசையாக இருக்கும். இதை செயல்படுத்துவது சுலபம் என்று அவர்கள் சொன்னாலும் என்னால் இவ்வளவு எளிமையாக விடமுடியும் என்று நான் நம்பியதில்லை.

இந்த சமயத்தில்தான் புகைப்பதை விட்டுவிட்டு, அதை ஒரு இயக்கம்போல அண்ணன் ஷாஜகான் முன்னெடுத்தார். புகைப்பதை கைவிட்ட, அவரின் அனுபவங்களை தொடர் பதிவுகளாக எழுதியும் இருந்தார். அவற்றை எத்தனை முறை படித்தேன் என்பது எனக்கேத் தெரியாது. மீண்டும் மீண்டும் படித்தேன். சிகரெட்டை விடவேண்டும் என்ற எண்ணம் மேல் எழும்போது எல்லாம் அப்பதிவுகளைப் படித்தேன். அவர் பதிவின் படி அறிந்துகொண்டு, கிஸ்மிஸ்(உலர் திராட்சை), எலக்காய் எல்லாம் வாங்கி சாப்பிட ஆரம்பித்தேன். கையில் சிகரெட் இருக்கும். புகைக்கும் எண்ணம் மேல் எழும்போது, கிஸ்மிஸ், எலக்காய் எடுத்து மெல்லுவேன். வழக்கமாக புகைக்கும் சிகரெட்டின் அளவில் ஒன்று குறைந்தது. ஆகா.. இது வேலை செய்கிறது என்று உணர்ந்துகொண்டேன்.

முழு பாக்கெட் வாங்குவதை நிறுத்தி, அரைப் பாக்கெட் ஆக்கினேன். (சிகரெட் கையில் ஸ்டாக் இல்லை எனில் எனக்கு ஒருவித நடுக்கம் ஏற்படும். எந்த வேலையும் ஓடாது. இரவில் தூங்கும்போதுகூட, ஸ்டாக் வாங்கி வைத்துவிட்டுத்தான் தூங்குவேன்) புகைக்கும் நேர இடைவெளி அதிகமானதும் கொஞ்சம் தெம்பு வந்தது.

ஒரு ஞாயிற்றுக்கிழமை புகைப்பதை விடுவது என முடிவெடுத்தேன். சனி இரவே, சிகரெட்டின் கை இருப்பை காலி செய்துவிட்டேன். ஞாயிறு பால் வாங்குவது தொடங்கி எங்கும் செல்லமாட்டேன் என்று சொல்லி, அன்று முழுவதும் வீட்டுக்குளேயே முடங்கினேன். ஒருவித டென்சன் இருந்துகொண்டே இருந்தது. முணுக்கென கோபம் வந்தது. எரிச்சலாகவே இருந்தது. நிறைய படுத்து உறங்கி அறைய நாளை ஒருவழியாக விரட்டியடித்தேன். ஒரு நாளை கடந்துவிட்டதும் நம்பிக்கை பிறந்தது.

அடுத்த நாள் அலுவலகம் சென்றதுமே அங்கு அடிக்கடி உரையாடும் தம்பி அன்பரசுவிடமும், அருகில் இருந்த தம்பி மனோவிடமும் நிலைமையை எடுத்துக்கூறி, நான் கொஞ்சம் கோபமாகவோ, எரிச்சலாகவோ நடந்துகொண்டால், பொறுத்தருளும்படி வேண்டிக்கொண்டேன். இரண்டாம் மூன்றாம் நாட்களும் முடிந்தன.

இடையில் குமட்டல், வயிற்றுக்கடுப்பு என எல்லா அறிகுறிகளும் தென்பட்டன. அவற்றைக் கடந்தேன். இந்த நேரத்தில் அண்ணன் ரமேஷ் வைத்தியா, “முடிவில் உறுதியாக இருங்க. இடையில் ஒருமுறைகூட புகைத்து விடாதீர்கள். ஒருவருஷம் விட்டுட்டு, திரும்பவும் புகைக்கத்தொடங்கி, இன்றுவரை விடாதவங்களைத் தெரியும்” என்று ஓர் எச்சரிக்கை மணியடித்தார்.

ஒரு வாரத்திற்குள்ளாக மீண்டும் புகைக்கவேண்டும் என்ற நமச்சல் மண்டைக்குள் ஏற்பட, அண்ணன் ஆர்.சி. மதிராஜ் அவர்களுக்கு போன் செய்து, என் நிலைமையைச் சொன்னேன். (இதில் அவர், எனக்கு முன்னோடி) அடுத்த பத்தாவது நிமிடம் என் முன்னால் வந்து தனது அனுபவங்களை எடுத்துச்சொன்னார். எந்த நிலையிலும் மீண்டும் சிகரெட் பக்கம் போய்விடாதீங்கன்னு அவர் சொன்ன நம்பிக்கை வார்த்தைகள் பெரிய பலமாக இருந்தது.

இப்பழக்கத்தில் இருந்து விடுபடச் சொல்லி, லக்ஷ்மி எப்போதும் வேண்டிக்கொண்டிருந்தார். அவரின் எண்ணத்தை ஒரு வழியாக நிறைவேற்றியிருக்கிறேன். இப்போதெல்லாம் மற்றவர்களைப் புகைப்பதை விடச்சொல்லி நானும் பேசி வருகிறேன்.

சுமார் 26 ஆண்டுகள் தினம் குறைந்தது 20 சிகரெட்டுகள் என்று புகைத்துத்தள்ளிய என்னால் விடமுடியும் என்றால், எவராலும் விடமுடியும் என்றே நம்புகிறேன்.

இந்த புகைக்கும் பழக்கத்தில் இருந்து மீள உதவிய அத்தனை நண்பர்களுக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

-யெஸ்.பாலபாரதி
05.01.2021

புகைஇல்லாபெருவாழ்வு

புகை_பகை

சிகரெட்விட்டகதை

This entry was posted in அனுபவம், தகவல்கள் and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 3 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.