‘பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் (சோறு) கிடைக்காது’ என்று தமிழில் ஒரு முதுமொழி உண்டு. எவனொருவன் பொய் பேசுகிறானோ, அவன் உணவுகூடக் கிடைக்காமல் பசியால் துன்புறுவான் என்பதே இதன் பொருள்.

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின். (குறள் 292)

என்பது வள்ளுவனின் வாக்கு!

ஆகா, பொய் பேசுதல் என்பது இங்கே காலங்காலமாக இருந்துகொண்டிருக்கும் ஒரு விஷயம்தான். அதனால்தானோ என்னவோ, ஆட்சியைப் பிடிக்க நினைப்பவர்களும், நம்மை ஆள்பவர்களும் பொய்யர்களாக இருந்தும், நாம் கண்டுகொள்ளாமல் இருந்துவிடப் பழகியுள்ளோம்.

வேடிக்கையான ஒரு குட்டிக்கதை ஞாபகத்துக்கு வருகிறது. அந்த ஊரில் ஒரு பொய்யன் இருந்தான். சாதாரணப் பொய்யன் என்று எண்ணிவிட வேண்டாம். அவன் பொய்கூறுவதில் கைதேர்ந்தவன். அவனுக்கு ஒரு மகன் இருந்தான். மகனுக்கு ஐந்து வயது இருக்கும்போது, தன் மகன் பொய்யே சொல்வதில்லை என்பதைக் கண்டுகொண்டான்.

சரி, இவன் தன் புகழுக்கு(!) என்று முடிவு கட்டிய அந்தப் பொய்யன், பக்கத்து ஊரில் நடக்கும் திருவிழாவில் மகனைக் கொண்டுபோய் தொலைத்துவிட்டு வந்துவிடுவோம் என்ற நினைப்புடன், மகனை தோளில் தூக்கிக்கொண்டு திருவிழா நோக்கிப் போனான். இவன் ஊருக்கும், பக்கத்து ஊருக்கும் நடுவில் ஓர் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அதற்குள் இறங்கித்தான் அக்கரைக்குச் செல்ல வேண்டும். பொய்யனும் தண்ணீருக்குள் இறங்கி நடக்கலானான். ஆசையாகப் பெற்றெடுத்த மகனைத் தொலைக்கப்போகிறோமே என்ற கவலை, பொய்யனின் நெஞ்சை அடைத்தது. கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடியே நடந்துகொண்டிருந்தான்.

மார்பு அளவு தண்ணீரில் நடக்கும்போது, தோளில் அமர்ந்திருந்த மகன் கூறினான், ‘அப்பா! ஜனக்கூட்டமும், திருவிழா ராட்டினமும் தெரியுதுப்பா..’

இவனும் ‘ம்’ கொட்டியபடியே நடந்தான். இன்னும் கொஞ்ச தூரம் போனதும், ‘அப்பா.. அங்கிருக்கும் யானை எல்லாம் தெரியுதுப்பா’ என்றான் மகன். பொய்யனும் ‘ம்’ கொட்டினான்.

இன்னும் சில அடிகள் போனதும், ‘அப்பா! மீனுப்பா.. மீனுப்பா!’ என்றான் மகன்.

’எங்கடா.. மீனு?’ என்று எரிச்சலாகக் கேட்டான் அப்பன்காரன்.

‘பிடிச்சு, சுட்டுத் தின்னுட்டேன்ப்பா’ என்றான் மகன். பொய்யனுக்கு சந்தோஷம் தாளவில்லை.

அப்புறம் என்ன.. திருவிழாவைச் சுற்றிப் பார்த்துவிட்டு, அப்பனும் மகனும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர் என்று அந்த கதை முடியும்.

இது வேடிக்கையாகச் சொல்லப்பட்ட ஒரு கதைதான் என்றாலும், குழந்தைகளின் பொய்களைக் கொண்டாடும் மனநிலையில், இங்கே அநேக பெற்றோர் இருப்பதையும் காணமுடியும். உண்மையில், குழந்தைகளின் பொய்களை நாம் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையும், பொய் கூறுதலால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும் அவர்களுக்குப் புரியவைக்க என்ன செய்யப்போகிறோம் என்பதையும் நான் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!

பொதுவாக, குழந்தைகள் சுமாராக இரண்டு அல்லது மூன்று வயதில் இருந்தே பொய் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள் என்று உளவியலாளர்கள் சொல்கிறார்கள். அதாவது, வாக்கியங்களாகப் பேச ஆரம்பிக்கும்போதே பொய்யும் ஆரம்பமாகிவிடுகிறது என்று பொருள். இது, எந்தவிதத்திலும் பயப்பட வேண்டிய ஒரு விஷயமே அல்ல.

குழந்தையின் வளர்ச்சிப் பாதையில் இதுவும் ஒரு அங்கம். குழந்தை, ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு மனம் இருக்கும், அதில் தன்னைப் பற்றிய உருவகம் வெவ்வேறாக இருக்கும் என்பதை ஒரு குழந்தை புரிந்துகொள்ளத் துவங்கிவிட்டது என்பதன் அறிகுறிதான் அதன் பொய்கள். எனவே, குழந்தையின் சமூகப் புரிதல் வளர்கிறது என்ற வகையில், நாம் இதை மகிழ்வாகவே எடுத்துக்கொள்ளவேண்டி இருக்கிறது.

என்னென்ன காரணங்களுக்காக சிறு குழந்தைகள் பொய் சொல்லக்கூடும்?

  • பொய்யென்ற கருத்தை அறியாமல் சொல்வது..
  • தன்னைப் பற்றிய நல்ல மதிப்பீட்டை உருவாக்குவதற்காகச் சொல்வது..
  • விளைவுகளைத் தடுக்க – தண்டனைகளில் இருந்து தப்புவதற்காகச் சொல்வது..
  • கவன ஈர்ப்புக்காகச் சொல்வது..

பொய் சொல்வது வளர்ச்சியின் அங்கம் என்றால், அதை நாம் ஏன் தடுக்க வேண்டும், பொய் சொல்லட்டும் என்று குழந்தைகளை விட்டுவிடலாமா? நிச்சயம் இல்லை. அவர்களுக்குப் பொய் சொல்வது தவறு என்று புரியவைத்தே தீர வேண்டும்.

ஆனால், ஒருபோதும் குழந்தைகளை அடித்தோ, திட்டியோ பொய் சொல்வதை நிறுத்த முடியாது. உண்மையில், அதிகமான தண்டனைக்குள்ளாகும்போது, குழந்தைகள் தெளிவாகவும், பொருத்தமாகவும் பொய் சொல்லவே கற்றுக்கொள்கிறார்கள். அதேபோல, அதிகக் கட்டுப்பாடுகள் உள்ள குடும்பத்துக் குழந்தைகளே, அதிகம் பொய் சொல்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

எனவே, குழந்தைகளிடம் நட்பார்ந்த முறையில் உரையாட வேண்டும். பொய் சொல்வதன் தீமைகளையும், அதைவிட முக்கியமாக உண்மை சொல்வதன் உயர்வையும் பேசியும், கதைகள் மூலமும் புரியவைக்க வேண்டும். தான் சொல்லும் பொய் மற்றவர்களை எப்படி பாதிக்கும் என்பது தொடங்கி, தங்களது நம்பகத்தன்மையை குலைக்கும் என்பது வரையிலான பின்விளைவுகளை, பல்வேறு கதைகள் மூலம் சொல்லிப் புரியவைக்கலாம்.

உதாரணமாக, புலி வருது, புலி வருது என்று பொய் சொல்லி ஏமாற்றும் ஒருவன், உண்மையிலேயே புலி வந்து உதவி கோரி கத்தும்போது, யாரும் அவனை நம்பாமல் போவது என்கிற கதை, மிக அழகாக பொய்யினால் நம்பகத்தன்மையை இழப்பதைப் பற்றிப் பேசும். அரிச்சந்திரன் கதையோ உண்மையின் உயர்வைப் பேசுகிறது. இப்படியான கதைகளை, குழந்தைகளின் வயதுக்கேற்றவாறு சொல்வதன் மூலம், வாய்மையின் உயர்வைக் குழந்தைகள் மனமார உணரச் செய்யலாம்.

தவறுகள் செய்துவிட்டாலும், அதை ஒப்புக்கொண்டால் குழந்தைகளைப் பாராட்டுங்கள். அதேநேரம், தவறின் விளைவுகளையும் தெளிவாகச் சுட்டிக்காட்டத் தவறாதீர்கள். இதன்மூலம், செய்த தவற்றை மறைக்கக் குழந்தைகள் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் ஆக்கிவிட முடியும். பொய் சொல்வதற்குத் தரும் தண்டனைகளைவிடவும், உண்மையைப் பேசினால் கிடைக்கும் பாராட்டுகள் வலிமையானவையாக இருக்கும் பட்சத்தில், இயல்பாகவே குழந்தைகள் வாய்மையின் பக்கம் வந்துவிடுவார்கள்.

பொய் என்பது பிறவியினால் வருவது அல்ல; அதுவொரு பயிற்சி, அவ்வளவுதான். இது உளவியல் அணுகுமுறையால் சரிசெய்யக்கூடிய ஒரு பழக்கம்தான்.

எல்லாவற்றையும்விட முக்கியமாக, பெற்றோர்கள் குழந்தைகளின் முன்பு முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டியது அவசியம். பெற்றோர்களாகிய நாம், வீட்டுக்குள்ளேயோ வெளியிலோ, குழந்தைகளின் முன்னிலையில் பொய் சொல்வோமாயின், அதன்பிறகு ஒருபோதும் அவர்களுக்கு நல்லொழுக்கத்தைப் போதிக்க முடியாது என்பதை நம் மனத்தில் நிறுத்த வேண்டும்.