ஆமை காட்டிய அற்புத உலகம் 3ஆம் பதிப்பு

இது சிறுவர் இலக்கியத்தில் எனது முதல் நூல். 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல்பதிப்பு வெளியானது. அப்போதே பரவலான கவனத்தை இந்த நூல் பெற்றது என்றுதான் சொல்லவேண்டும். பெற்றோரும் ஆசிரியர்களும் மட்டுமல்லாது பல சிறுவர்களும் வாசித்து மகிழ்ந்த நூல் இது.

வெளியான காலத்தில் அதுவரை வெளிவந்துகொண்டிருந்த சிறார் நூல்களில் இருந்து இது வேறு ஒரு புதிய பாய்ச்சலை நிகழ்த்திக்காட்டியது. புனைவும் அறிவியலும் இணைந்த இந்த நடையை பின்னாலில் சிலர் தொட்டுப் பார்த்தனர். அதோடு இப்படியான ஒரு வடிவம் என்பதே அதுவரை இல்லாத ஒரு புதுமுயற்சியே! இந்த நூலுக்கான ஓவியங்களை வழிய அண்ணன் யூமா வழிகாட்டினார். ஓவியர் சொக்கலிங்கம் தனது அற்புதமான தூரிகையினால் அபரிதமான பங்களிப்பு செய்தார். வடிவமைப்பிலும் பாரதி புத்தகாலயத் தோழர்கள் குணா, காளத்தி ஆகியோரின் உழைப்பில் சிறப்பாக வெளியானது.
2017ஆம் ஆண்டு பிப்ரவரியிலேயே இரண்டாம் பதிப்பும் கண்டது. (இடையில் நூலகத்திற்கு தனிப்பதிப்பு அச்சானது)

எனது சிறார் வாசகர்களில் பலருக்கும் இந்த நூல் மிகவும் பிடித்த ஒன்று. இன்றைக்குமே இந்த நூலுக்கு சிறார்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு. இந்த நூல் இன்று மூன்றாம் பதிப்புக்கு சென்றுள்ளது.