மரப்பாச்சி சொன்ன ரகசியம் நூலுக்கு சிறார் இலக்கியத்தின் உயரிய விருதான சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்காருக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து (28.09.2021) வாழ்த்தும் பாராட்டும் பெற்றேன்.

முதல்வரை சந்திக்கும் வாய்ப்பில், தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மாற்றுத்திறன் குழந்தைகளின் மேம்பாட்டிற்கு அரசு சில முன்னெடுப்புகளை செய்தால் நன்றாக இருக்கும் என எனக்குத் தோன்றியதை, ஒரு மனுவாக எழுதி எடுத்துச்சென்று, முதல்வரின் கைகளில் நேரடியாகச் சேர்த்தேன். உறைக்குள் வைத்து கொடுத்த மனுவை உடனடியாக பிரித்து, கோரிகைக்களைப் படித்த முதல்வர் அதனை உதவியாளரிடம் அப்படியே கொடுத்தார்.

முதல்வரின் கவனத்திற்கு நான் கொண்டு சென்ற கோரிக்கைகள் இவைதான்.

  1. அறிவுசார் வளர்ச்சிக்குறைபாடு உடைய குழந்தைகளுக்கான, அரசு சிறப்பு பள்ளி மாநிலத்திற்கே ஒன்றுதான் உள்ளது. இதனை, குறைந்த பட்சமாக மாவட்டத்துக்கு ஒரு பள்ளி திறக்கவேண்டும்.
    *
  2. 18 வயது பூர்த்தியடைந்த ஆதரவற்ற, மனவளர்ச்சி குன்றியோருக்கு பராமரிப்பு இல்லங்கள் மாவட்டத்திற்கு ஒன்று உருவாக்கவேண்டும்.
    *
  3. அறிவுசார் வளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகளை தொடக்க நிலையில் கண்டந்து, பயிற்சிகொடுக்க உதவும் ஈ. ஐ. (E.I) செண்டர்கள், தற்போது மாவட்ட அளவில் உள்ளன. இதனை தாலுகா அளவில் கொண்டு வந்து மேலும் பல செண்டர்கள் திறக்கப்படவேண்டும்.
    *
  4. ஆட்டிசம், மூளை முடக்குவாதம், தசைச்சுருக்கு நோய் போன்ற பாதிப்புக்குள்ள குழந்தைகளின் தெரபி வகுப்புகளுக்கு அதிகப்படியாக செலவு ஆகிறது. தெரபி வகுப்பு செலவுகளை சமாளிக்க பெற்றோர் சிரமப்படுகின்றனர். முதல்வர் கருணை கொண்டு, சிறப்புக் குழந்தைகளுடைய பெற்றோரை அரசு காப்பீடுதிட்டத்தில் சேர்க்கவேண்டும். (இதில் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர் என்ற விதி தளர்த்தப்படவேண்டும். சிறப்புக்குழந்தைகளுடைய எல்லா பெற்றோருக்கும் அக்குழந்தையின் தெரபி வகுப்பு செலவுக்கு என தனி காப்பீடு அட்டை கூட வழங்கவேண்டுகிறோம்)
    *
  5. தெரப்பி வகுப்புகளை முறைப்படுத்த, கட்டணங்களை அரசே நிர்ணயித்து அறிவிக்க வேண்டும். சமூக நலத்துறையிலிருந்து குழு அமைத்து, திடீர் ஆய்வுகள் மூலம் பயிற்சி நிலையங்களில் நடக்கும் முறைகேடுகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கலாம். முறையாகப் படிக்காத ஆசிரியர்களை வைத்து நடத்தப்படும் செண்டர்களை மூடவும், நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
    *
  6. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஆரம்பப்பள்ளிகளிலும், நடுநிலைப் பள்ளிகளிலும் குறைந்தபட்சமாக ஒரு சிறப்பாசிரியரும், ஒரு உதவியாளரும் நியமிக்கப்பட வேண்டும். (இது ஆரம்பப் பள்ளி அளவிலேனும் ஒருங்கிணைந்த கல்விமுறை நன்கு இயங்க அடிப்படையான தேவையாகும்.)

-இவற்றை கருணையோடு இந்த அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறேன். ஒவ்வொரு கோரிக்கையும் அதனதன் அளவில் முக்கியமானவையே, எனவே இதில் எது நிறைவேற்றப்பட்டாலுமே எனக்கும் என்னைப்போன்ற பலருக்கும் மகிழ்ச்சி தான். ஏனெனில் இதன் மூலம் சிறப்புக் குழந்தைகளுடைய பல பெற்றோர் பலனடைவார்கள்.