எனது தளத்திற்கு வரும் வாசகர்களுக்கு நிப்மெட் பற்றி அறிந்த்திருப்பீர்கள். பலமுறை அதனைப்பற்றி நான் எழுதி உள்ளேன். பேசி உள்ளேன். ஆண்டுக்கு குறைந்தது 500 பெற்றோர்களையாவது அங்கே செல்லும்படி அறிவுறுத்தி வருகிறேன்.

நிப்மெட் என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட வளர்ச்சிக்குறைபாடு உடையவர்களின் மேம்பாட்டுக்கான நிறுவனம்.

சென்னை, முட்டுக்காடு பகுதியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. காங்கிரஸ்- திமுக ஆட்சியின் போது தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட நிறுவனம் இது. இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடு உடையவர்களுக்கா நாட்டில் உள்ள நிறுவனங்களிலேயே இது மிகவும் சிறப்பானது என பலமுறை விருதுகளையும் பெற்று உள்ளது. இந்த நிப்மெட் (NIEPMD) நிறுவனத்தை, தற்போது செகந்திராபாத்தில் உள்ள அறிவுசார் வளர்ச்சிக்குறைபாடு உடையவர்களின் வளர்ச்சிக்கான தேசிய நிறுவனத்துடன் (NIEPID) இணைக்க மத்திய அரசு முயற்சி எடுத்துவருவதாக செய்திகள் வருகின்றன. பல்வேறு சமூக ஆர்வளர்கள் இதனை எதிர்த்து குரல்கொடுத்து வருகின்றனர்.

ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுடையவர்களுக்கான இந்த ஆய்வு நிறுவனத்தை, அறிவுசார் வளர்ச்சிக்குறிபாடு உடையவர்களுக்கானதாக மட்டும் சுருக்கிடவேண்டாம் என்பதே எனது கருத்தும்! இதே முறையில் இந்நிறுவனம் சென்னையிலேயே தொடர்ந்து இயங்கவேண்டும். அவசியமெனில் அறிவுசார் வளர்ச்சிக்குறைபாடு உடையவர்களின் வளர்ச்சிக்கான தேசிய நிறுவனத்தை (நிப்பிட் -NIEPID) தமிழகத்தில் தொடங்கின மத்திய அரசு நினைத்தால், இதே வளாகத்தில் தனியொரு கட்டிடத்தில் கொண்டுவரலாம்.

அல்லது நம்மாநிலத்தின் வேறு எங்காவது தொடங்கலாம். சிறப்பான முறையில் இயங்கி வரும் நிப்மெட்டை, ஒரு குறைபாடு உடைய நிறுவனமாக மாற்றுவதே, அதன் தலைமையை இடம் மாற்றுவதே தேவையற்றது. இம்முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிடவேண்டும்! மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், இப்பிரச்சனை சார்பாக தொடக்கத்திலேயே தலையிட்டு, இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். மாநிலத்தில் உள்ள இதர அரசியல்கட்சிகளும் மத்திய அரசின் இச்செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, இது நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமாய் பல சிறப்புக்குழந்தைகளின் பெற்றோர்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
–யெஸ்.பாலபாரதி