ஒடிசா பயணமும் டெங்கு காய்ச்சலும்

சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கும் விழா, நவம்பர் 14ஆம் தேதி ஒடிசாவின் புவனேஸ்வரத்தில் என்றதுமே ஒருவித உற்சாகம் தொற்றிக்கொண்டது. வரலாற்றுச்சிறப்பு மிக்க இடங்களின் சிலவற்றையாவது பார்த்துவிடவேண்டும் என்று ஆசைப்பட்டேன்.  நவம்பர் 13ஆம் தேதி மாலை இங்கிருந்து ஒடிசா கிளம்பும்போதே.. சற்று உடல்நலமில்லைதான். புட் பாயிசன் என்ற அளவில் மருத்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டு, புவனேஸ்வரம் சென்று இறங்கினேன்.

ஆர்.பாலகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ்

என்னுடைய முழு பயண விவரங்களையும் முன்னதாகவே, அங்கு உயரிய பதவியில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஆர்.  à®ªà®¾à®²à®•à®¿à®°à¯à®·à¯à®£à®©à¯ சாருக்கு அனுப்பி வைத்திருந்தேன். விமானநிலையத்திலேயே பிக் அப் செய்ய வாகனம் வந்துவிட்டது. அதில் ஏறி ஹோட்டல் அறைக்கு சென்றுவிட்டேன்.

சாகித்ய அகாடமி துணைத்தலைவர் மகாதேவ் கௌசிகிடமிருந்து விருது பெற்றுக்கொண்டபோது

மறுநாள் மாலை விருது வழங்கும் நிகழ்ச்சி. காலை முதலே ஜுரம் அடிக்கத்தொடங்கியது. 104 டிகிரி. மருத்துவர் கொடுத்துவிட்ட, பாரசிட்டமால் எடுத்துக்கொண்டு ஓய்வு எடுத்தேன். மதியத்திற்கு மேல் கொஞ்சம் தேறினேன். ரெடியாகி விழாவில் கலந்துகொண்டு, விருதையும் பெற்றுக்கொண்டு அறைக்கு வந்துவிட்டேன்.

மீண்டும் இரவு முழுக்க ஜுரம் தூக்கி அடித்தது. (106 டிகிரிவரை சென்றது. பாதி மயக்க நிலையில் இருந்தேன்) திங்கட்கிழமை காலை எழுத்தாளர்கள் சந்திப்பு நிகழ்வில் உரையாற்ற முடியாத அளவுக்கு உடல் நிலை மோசம். தொல்லை செய்யவேண்டாம் என நினைத்து, தவிர்த்து வந்தவன் வேறு வழி இன்றி, பாலகிருஷ்ணன் சாருக்கு விஷயத்தைச்சொல்லி, வாட்ஸ் ஆப்பில் செய்தி அனுப்பினேன். அடுத்த சில நிமிடங்களிலேயே தொலைபேசியில் அழைத்து கடிந்துகொண்டவர், உடனடியாக அவ்வூரில் தலைமை அரசு மருத்துவமனைக்கு உதவியாளருடன் அனுப்பி வைத்தார். அங்கேயே எல்லா சோதனைகளும் எடுக்கப்பட்டன. மாலை டெங்கு என உறுதியானது.

ப்ளேட்லெட் அளவை வைத்து, உள்ளூரில் சென்னையில் என பல இடங்களில் விசாரித்து, எனது பயணத்திட்டத்தில் மாறுதல் செய்யவேண்டியதிருக்குமா என்றெல்லாம் பலருடன் கலந்து பேசி, எனக்கு அப்டேட் செய்தார் பாலகிருஷ்ணன்சார். அப்போதுதான் நல்ல உணவு இன்றி கனியும் சிரமப்படுவதைச்சொன்னேன். அதன் பிறகு அன்று முழுமைக்கும் அவர்கள் வீட்டில் இருந்தே உணவு வந்து சேர்ந்தது. அந்தப் பயணத்தில் கனி நல்ல உணவு சாப்பிட்டது என்பது அன்றுதான். அதோடு புவனேஷ்வரத்தின் தமிழ் சங்க ஆட்களையும் அவசர உதவிக்கு என அனுப்பி வைத்தார். அவர்களும் பழங்கள், கஞ்சி என்று கொடுத்து சிறப்பாக கவனித்துக்கொண்டனர்.

தோழர் எம்.ஜெ.பிரபாகர்
ஹேமா ராகேஷ்

சென்னை வந்து இறங்கும் முன்னரே, தோழர் பிரபாகரும் அவரது மருமகளும் ஊடகவியலாளருமான ஹேமா மூலம் ஓமந்தூரார் மருத்துவமனையில் டாக்டர் ரமேஷிடம் பேசி வைத்திருந்தனர். ஒடிசாவில் எடுத்த மருத்துவ ரிப்போர்ட்டுடன் ஓமந்தூராரில் சென்று சேர்ந்தேன்.  உடனடியான, தரமான மருத்துவ சேவை தொடங்கினர். மெல்ல மெல்ல உடல்நலம் தேறி வீட்டுக்கு வந்துவிட்டேன்.

அதற்கு நடுவிலேயே கனிக்கு டெங்கு பாசிட்டிவ் என்று உறுதியானது. அச்சப்படத் தேவை இல்லை என மருத்துவர் சொல்லி இருந்தாலும் அவரின் அறிவுறுத்தலின் படி தினமும் ரத்த மாதிரிகள் எடுத்து பிளேட்லெட் அளவையும் கவனித்துக்கொண்டே வருகிறோம். பப்பாளி இலைக் கஷாயம், பப்பாளி மாத்திரை போன்றவற்றை அவனுக்கு தந்து வந்தாலும் பிளேட்லெட் எண்ணிக்கையில் முன்னேற்றமில்லை. ஆனால் பிளேட்லெட் குறையும் விகிதம் டெங்குவில் காணப்படும் இயல்பான மாற்றம்தான் என்றும், வீட்டு கவனிப்பே அவனுக்குப் போதுமானது என்றும் மருத்துவர் சொல்வதால் மனதை தேற்றிக் கொள்கிறோம். முழுமையாக இந்த வளையத்திலிருந்து நாங்கள் விடுபட்டு வர இன்னும் சில நாட்கள் ஆகலாம்.

சரவணன் பார்த்தசாரதி

ஆனாலும் அந்நிய நிலத்தில், ஆபத்துக் காலத்தில் தோன்றாத் துணையாக நின்று உதவிய அண்ணன் பாலகிருஷ்ணன் அவர்களுக்கும், துவண்டு ஊர் வந்து சேர்ந்தவனை தோள் கொடுத்துத் தேற்றிய தோழமைகள் பிரபாகர் மற்றும் தம்பி சரவணன் பார்த்தசாரதி ஆகியோருக்கும் ஈரம் காயும் முன் நன்றி நவிலவே இந்தப் பதிவு.