’ஏன் சார்.. இன்னிக்கு மழை வருமா?’
“தெரியலைங்களே..”
‘என்ன இப்படி சொல்லீட்டிங்க.. பத்திரிக்கையில வேலை செய்யுறதா சொன்னீங்களே..?
“?…!…?”
—
”சார், இந்த சிக்னலில் இருக்கற சிவப்பு விளக்குக்கெல்லாம் டைம் வருதே, அது என்ன கணக்குங்க?”
“தெரியலீங்களே….”
”என்ன சார், டிவில வேலை செய்யறீங்க, இது கூடத் தெரியலீன்றீங்களே?”
—–
“ரஜினிகாந்த்லாம் என்ன சம்பளம் வாங்குவார்ங்க?”
“தெரியலையே சார்”
”தெரியலையா? நீங்கல்லாம் என்ன ஜர்னலிஸ்ட்டோ?”
—
இது மாதிரியான கேள்விகளை பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு மனிதர்களிடம் சந்தித்துள்ளேன். ஆனால் இதெல்லாம் ஜர்னலிஸ்டாக இருக்கும் ஒருவன் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
இது மாதிரியான கேள்வி கேட்கும் மனநிலை சாதாரண பாமர மக்கள் என்றில்லாமல் இன்று நிறைய வாசிக்கும்.. படித்த மக்களிடமும் நிறைந்து இருக்கிற்து என்பதை தமிழ்ச்செல்வன் கலந்து கொண்ட இந்த கேணி சந்திப்பு எனக்கு உணர்த்தியது.
நான் கலந்து கொண்ட கேணியின் முதல் கூட்டம் இது. என் மனம் கவர்ந்த எழுத்தாளர்களில் ஒருவரான தமிழ்ச்செல்வன் கலந்து கொள்கிறார் என்கிற ஒரு காரணத்திற்காகவே துணைவியாரோடு இந்த கூட்டத்திற்கு போயிருந்தேன். அவருக்கும் ச.தமிழ்ச்செல்வனின் எழுத்துக்கள் பிடிக்கும்.
இவர் எழுதிய ‘அரசியல் எனக்கு பிடிக்கும்’ என்ற சிறு நூலை அன்பளிப்பாக பாரதி புத்தகாலயத்திலிருந்து வாங்கி, சுமார் நூறு பேருக்கும் மேல் கொடுத்திருப்பேன். தமிழுக்கு கிடைத்த ஒரு நல்ல சிறுகதையாளர்.. கட்டுரையாளராக மாறிப்போனதில் எனக்கு கொஞ்சம் வருத்தமே.
ச. தமிழ்ச்செல்வன் மதுரகவி பாஸ்கரதாசின் பேரன் என்பதும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயலாளராக இருக்கிறார் என்பதும், எழுத்தாளர் கோணங்கியின் மூத்த சகோதரர் என்பதும் உபரி தகவல்கள்.
நாங்கள் போய் சேர்ந்த போதே தமிழ்ச்செல்வன் பேச ஆரம்பித்திருந்தார். நூற்றைம்பதிற்கும் குறையாமல் கூட்டம் கூடி இருந்ததைப் பார்த்த போது உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு இலக்கிய நிகழ்வில் இத்தனைபேரை நான் பார்ப்பது இது தான் முதல் முறை.
சுமார் ஒன்றரை மணி நேரம் தமிழ்ச்செல்வன் அவருடைய தொழிற்சங்க அனுபவங்கள், அறிவொளி இயக்க அனுபவங்கள் போன்றவற்றையெல்லாம் பேசினார்(ஏறக்குறைய இன்று பேசிய எல்லா விஷயமுமே அவரால் ஏற்கனவே புத்தகங்களில் எழுதப்பட்டவைதான்).
பேசி முடித்தபின் கேள்வி நேரம் ஆரம்பமானது.
”ஜோதி பாசு 95 வயதில் இறந்தார். ஆனா ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட் 88 வயசுலயே இறந்துட்டாரே, ஏன்?” என்ற ரீதியிலான கேள்விகளைத் தவிர அநேகமாக தொழிற்சங்கம், அறிவொளி இயக்கம், மார்க்ஸிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு, சினிமா, நித்தியானந்தா.. உட்பட எல்லாவற்றைப் பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டன. நான் கட்சியின் மீதான விமர்சனங்களை கட்சிக்குள் மட்டுமே பேசுவேன் என்று அவர் தெளிவு படுத்திய பின்னும்.. கட்சி குறித்தான கேள்விகளே அதிகம் முன் வைக்கப்பட்டன்.
இதில் அவர் பணியாற்றிய தொழிற்சங்கம் குறித்தும், அறிவொளி இயக்கம் பற்றியும் கேட்கப்பட்ட கேள்விகள் நியாயம் என்பேன். அதே சமயம்.. தமிழ்ச்செல்வன் ஒரு மார்க்சிஸ்ட் கட்சிக்காரர் என்பதால்.. அவரிடம் கட்சி பொதுச்செயலாளரிடம் கேட்கவேண்டிய எல்லா கேள்விகளையும் நம்மவர்கள் அடுக்கியது வேடிக்கையாக இருந்தது.
அக்கட்சியில் டீக்கடை வைத்திருக்கும் ஒருவர் உறுப்பினராக இருப்பார். ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் உறுப்பினராக இருப்பார்.. அவரிடமும் போய்.. சீன கம்யூனிசம், கியூபா கம்யூனிசம்.. யுயெஸ்ஸார்.., பெர்லின் சுவர்.. என்றெல்லாம் கேள்வி கேட்போமா நாம்.. என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
’வீர்யம் குறைவாக உள்ளது ஏதாவது ஒரு லேகியம் சொல்லுங்களேன்..’ என்ற ரீதியிலான கேட்விகள் தவிர அனேகவகையான கேள்விகளும் எழுத்தாளர் ஜெயமோகனிடம் கேட்கப்படுகின்றன. அவரும் சளைக்காமல் எல்லாவற்றுக்குமே பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். (இவற்றை தொகுத்து ஜனவரி புத்தக கண்காட்சியில் நூலாக கொண்டு வந்துவிடுவார் என்பது வேறு விசயம்.)
இவரைப் பார்த்ததினாலோ அல்லது படித்ததினாலோ.. எல்லாவற்றிற்கும் எழுத்தாளனுக்கு பதில் தெரிந்திருக்கவேண்டும் என்ற முடிவுக்கு இவர்கள் வந்திருப்பார்கள் போல. ஆனால்.. எழுத்தாளனாக இருப்பதனாலேயே எல்லா கேள்விகளுக்கும் பதில் தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை என்றே கருதுகிறேன்.
சுமார் இரண்டு மணி நேரம் திறந்தவெளியில் அமர்ந்திருந்தேன். அந்த சமயத்தில் ஒரு கொசு கூட கடிக்கவில்லை என்பது எனக்கு வியப்பிலும் வியப்பாக இருந்தது. மேலும், இந்த நிகழ்வுக்கு செல்லும் முன் பெயர் காரணமான கேணியை எட்டிப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் கடைசியில் மறந்து போய் வந்துவிட்டேன். அடுத்த வாய்ப்பில் நிச்சயம் எட்டிப் பார்க்க வேண்டும். 🙂
சந்திப்புக்கும், கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்திருந்த கேணி தோழர்களுக்கு நன்றிகள்!!
—
ச.தமிழ்ச்செல்வனின் வலைப்பதிவு முகவரி:- http://satamilselvan.blogspot.com/
Pingback: விடுபட்டவை » வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணன் வண்ணதாசன் வாழ்க! – கேணி- அனுபவம்