கல்யாணியக்காவின் பதினாறாம் வயதில் என்னை பெற்றெடுத்தாள் அம்மா. பாலூட்டி, குளிப்பாட்டி, சீராட்டி என்னை வளர்த்ததெல்லாம் கல்யாணியக்காதான்.

விபரம் தெரிந்த நாளிலிருந்தே அப்பா வேலைக்கு போய் பார்த்ததில்லை. அண்ணனும் வீட்டுக்கென பணம் செலவழித்ததில்லை. அதனால் எப்போதும் முணுமுணுப்புகள் அதிகமாகவே இருக்கும் வீட்டில்.

சம்பள நாளான மாதத்தின் ஏழாம் தேதி அன்று மாத்திரம் அமைதியாக அவளின் வருகையை ஏதிர் நோக்கி காத்திருப்பார்கள் எல்லோரும்.

தலைகுளித்து வந்ததும், காதோர நரை முடிகளை லாவகமாக மறைக்க முயலும் கல்யாணியக்காவிடம் அம்மா சொன்னாள், நாளைக்கு கன்னிமாவிளக்கு.. ஒரு அரை நாள் லீவு சொல்லீட்டு வந்துடு கம்பெனியில..சரியென தலையாட்டிய அவள்.. கல்யாணத்துக்கு வயது வரம்பு வச்சதுபோல கன்னிக்கும் வச்சிருக்கலாம் என்று முணுமுணுத்துக்கொண்டாள்.

மணமாகிப்போன தன் தோழிகளை சந்திக்கும் போதெல்லாம் அவர்களின் குழந்தையை கையிலெடுத்து.. அம்மாவென அழைக்கச்சொல்லுவதை இரண்டொரு முறை நான் பார்த்திருக்கிறேன்

வாதம் வந்து கையையும் காலையும் இழுத்து நடக்கும் அம்மாவின் முணுமுணுப்புக்கு பயந்து, ஈஸிச்சேரில் அமர்ந்து நாளிதழ்களில் வரன் தேடுவாதாய் காட்டிக்கொள்வார் அப்பா.

மாப்பிள்ளை வீட்டார் வரும் போதெல்லாம்.. பைத்தியம் மாதிரி.. நடுக்கூடத்தில் வேட்டியை அவிழ்த்துப் போட்டு.. அரையம்மணமாக அலைவார் அப்பா.

பலகாரம் தின்று விட்டுப் போன எல்லா மாப்பிள்ளை வீட்டார்களும் ஊருக்கு போய் சேர்ந்ததும் கடிதமெழுதுவதாக கூறிச்செல்வர். ஆனால்.. பாவம்.. அவர்கள் ஊருக்கு போய் சேர்வதேயில்லை என்று என்னிடம் கூறுவாள் கல்யாணியக்கா.

எது எப்படியான போதிலும் அண்ணனுக்கு அண்ணியுடன் மாதம் ஒரு வெளியூர் பயணமும், இரு சினிமாவும் நிச்சயம்.

அம்மா அவளோடு சண்டை பிடிக்கும் அன்றைய இரவுகளில் அதிகமாய் தலையணை நனைப்பாள். எப்போதும் அவளது தலையனையில் உப்பு பொறிந்த ஓவியக்கோடுகள் ஒன்றோடு ஒன்றாய் பிணைந்து காட்சிதரும்.

அன்று வேலைக்கு கிளம்பின கல்யாணியக்கா.. வீடு திரும்பவேயில்லை. அவள் வேலை பார்க்குமிடம், தோழிகளின் வீடு, பத்திரகாளியம்மன் கோவில்.. என எங்கு தேடியும் கிடைக்கவில்லை. களைத்துப் போய் இரவு வீடு திரும்பினர் அப்பாவும், அண்ணனும்.

பொழுது புலரும் நேரம் பாண்டி சித்தப்பாவின் மகன் ராசு ஓடிவந்து தகவல் சொன்னான்.., கல்யாணியக்கா கரையோரம் ஒதுங்கி கெடக்குறாயென..!

—-
(1996-ல் இலக்கியச் சோலையில் வெளியானது)


Comments

3 responses to “கல்யாணியக்கா”

  1. நல்லாயிருக்குங்க சிறுகதை….

  2. கல்யாணியக்கா கலங்க வைத்து விட்டார்.

    நல்ல கதைங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *