’ஈழம்-ஆன்மாவின் மரணம்’ கார்ட்டூன் தொகுப்பு ஓர் அறிமுகம்

நான் மும்பையில் வசித்த காலங்களில் அறிமுகமானவர்களில் பாலாவும் ஒருவர். எனக்கு முன்னமே சென்னைக்கு வந்து குமுதத்தில் கார்டூனிஸ்டாக வேலைக்கு சேர்ந்தவர். திசை தெரியாமல் திக்கற்றுப் போய் சென்னை வந்திறங்கியபோது, தாயைப் போல அணைத்து, அரவனைத்த இளவல் இவன்.

பாலகிருஷ்ணன் என்பது தான் அவரின் இயற்பெயரும். எங்களிருவருக்கும் பெயரில் இருந்த ஒற்றுமை கருத்துக்களில் பலசமயங்களில் இருந்ததில்லை. அதனாலென்ன… நட்பு வேறு அரசியல் பார்வை வேறு என்று இருவருக்குமே புரிந்திருந்ததால்.. இன்றும் இந்த நட்பு இனிமையாக தொடர்கிறது.

ஈழம் பற்றி எரிந்துகொண்டிருந்த சமயங்களில் ஒரு படைப்பாளியாக தனது எண்ணங்களையெல்லாம் தூரிகை வழி சித்திரமாகினார் பாலா. குமுதம் மாதிரியான ஒரு வெகுஜன ஊடகத்தில் இருந்து கொண்டே இதை நிகழ்த்தியிருப்பதென்பது நிச்சயம் பெரும்பாடுதான். இவரது கேலிச்சித்தரங்களில் இருக்கும் உஷ்ணம் எளிமையாக எல்லோரையுமே தாக்கவல்லது.

கார்டூனிஸ்ட் பாலாவின் வார்த்தைகளில் சொல்லுவதெனில்.., ”….ஈழத்தில் தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட போது இங்கு தமிழன் ’மானாட மயிராடவில்’ மூழ்கியிருந்தான். முள்ளிவாய்க்கால் துயரம் முடிந்து ஓராண்டு ஆகிறது. காட்டிக்கொடுத்தவர்களும்.. கூட்டிக்கொடுத்தவர்களும்.. அடுத்து யாருக்கு என்ன பதவி வாங்கலாம்.. அடுத்த பாராட்டு விழா எங்கு.. என்று சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். போர்க்குற்றம் என்றார்கள்.. விசாரணை என்றார்கள்.. ஆனால் எதும் நடந்து விடவில்லை.. வழக்கம் போலவே மறதி குணம் அதிகம் கொண்ட தமிழினம்.. வலி சுமந்த வாரமாக அனுசரித்து விட்டு.. அடுத்த தேர்தலில் ஓட்டுக்கு எவ்வளவு கொடுப்பார்கள் என்று யோசிக்க ஆரம்பித்து விடும்…

ஈழத்தமிழினம் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்த போது தொப்புள் கொடி உறவான தாய் தமிழகத்தில்.. எவ்வளவு கேவலமாக நாடகம் நடத்திக் கொண்டிருந்தார்கள்… கலகக்காரன் முத்துக்குமாரின் மூலம் உருவான எழுச்சியை எப்படி முடக்கினார்கள்.. என்பதை வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தேன். தமிழகத்தில் வெளிவரும் இதழ்களிலேயே.. குமுதத்தில் மட்டுமே இந்த நாடகங்களை கடுமையாக விமர்சித்து கார்ட்டூன்கள் வெளியாயின.. ஈழப்பேரழிவு நடந்து முடிந்து ஓராண்டு ஆகிறது.. இதையொட்டி தமிழகத்தில் ஓட்டுப்பொறுக்கிகள்.. நடத்திய நாடகங்களை.. பதிவு செய்த எனது கார்ட்டூன்கள் ’ஈழம் ஆன்மாவின் மரணம்’ என்ற பெயரில் கார்ட்டூன் தொகுப்பாக குமுதம் பு(து)த்தகத்தில் இருந்து வெளிவந்துள்ளது. ஒரு துரோக வரலாற்றை பதிவு செய்ய உதவியாக இருந்த குமுதத்திற்கு மனமார்ந்த நன்றி…”

இப்படைப்புகளை வெளியிட உதவியதற்கும், நூலாக தொகுத்திருப்பதற்கும் குமுதத்திற்கு நன்றி!

நூலில் இருந்து சில கார்டூன்கள்…

—————–

ஈழம்-ஆன்மாவின் மரணம்’ கார்ட்டூன் தொகுப்பு
பக்கம்- 100.
விலை ரூ-65

குமுதம் பு(து)த்தகம் வெளீயீடு,
151.புரசைவாக்கம் நெடுஞ்சாலை,
சென்னை-10.
போன் 26422146/45919141
ஈ.மெயில்- puduthagam@kumudam.com
தொடர்புக்கு : சுதாகர்
9962090562

—————


Comments

One response to “’ஈழம்-ஆன்மாவின் மரணம்’ கார்ட்டூன் தொகுப்பு ஓர் அறிமுகம்”

  1. பாலாவின் கார்ட்டூன்களை சிலாகிப்பதா அல்லது ஒரு அவலத்தை வெறுமனே வேடிக்கை பார்க்கும் நிலையில் மட்டுமே இருப்பதைக் கண்டு வெதும்புவதா என புரியவில்லை!

    புத்தகத்தை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் பதிவு!

    பாலாக்களுக்கு வாழ்த்துக்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *