
பெற்றோர் சகோதரியுடன் செ. கார்த்திக்
தன்னம்பிக்கையும், லட்சிய வேட்கையும் கொண்ட எவரொருவரையும் வறுமையும், சூழ்நிலையும் அடிமையாக்கி வெற்றிகண்டிட இயலாது என்பதற்கு கார்த்திக் ஒரு உதாரணம். யார் அந்தக் கார்த்திக்?
ஐ.ஏ.எஸ். தேர்வில் 4 முறை நேர்முகத் தேர்வுக்குச் சென்று தோல்வியே மிஞ்சிய நிலையில் தொடர்ந்து உறுதியுடன் போராடி, தனது கடைசி வாய்ப்பில் (7-வது வாய்ப்பு) வெற்றி பெற்ற கோவில்பட்டியைச் சேர்ந்த இளைஞர்தான் கார்த்திக்.
தமிழைப் பேசுவதும், படிப்பதும் இழிவு என்று எண்ணும் இக்காலத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழை விருப்பப்பாடமாக எடுத்துப் படித்து வெற்றிக் கொடியை நாட்டியுள்ள கார்த்திக், தனது வெற்றிக்கு தன்னம்பிக்கையும், தமிழுமே முழுக் காரணம் என்கிறார்.
அகில இந்திய அளவில் 347-வது ரேங்க் எடுத்துள்ள அவருக்கு ஐ.பி.எஸ். பணி கிடைக்கும். இவரது தந்தை செண்பகம், சென்னை ரயில்பெட்டி தொழிற்சாலையில் கடைநிலை ஊழியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாயார் மல்லிகா. சகோதரி விக்னேஷ்வரி பி.எஸ்.சி.பட்டதாரி. சென்னை அயனாவரத்தில் வசித்து வருகின்றனர்.
தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடா முயற்சி ஆகிய மூன்றும் தனது வெற்றிக்கு காரணமாக இருந்தாலும், தனது குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பும், ஆதரவும் தனது வெற்றிக்கு காரணம் என்கிறார் கார்த்திக்.
தான் திருமணம் செய்து கொண்டால் தம்பி படிப்பதற்கு பணம் இருக்காது என்று எண்ணி, முதலில் தம்பி ஐ.ஏ.எஸ். ஆகட்டும்; திருமணத்தைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தனது திருமணத்தையே இதுவரை தள்ளிப்போட்டுள்ளார் கார்த்திக்கின் சகோதரி விக்னேஷ்வரி. அதிலிருந்தே அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் தியாகமும் தெரியும்..
எனக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த சகோதரிக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதுதான் இதற்கு மேல் எனது முதல் வேலை என்று கார்த்திக் சொல்லும்போது அவரது கண்கள் கலங்குகின்றன.
இருந்தாலும் அவரை நாம் தேற்றி தொடர்ந்து பேசியபோது இந்த வெற்றி சிகரத்தைத் தொட்டுவிட தான் கடந்துவந்த பாதையின் அனுபவத்தை அவர் நம்முடன் மனம் திறந்து பகிர்ந்துகொண்டது:
‘‘மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) கல்வி நிறுவனத்தில் 2001-ம் ஆண்டு பி.டெக். (புரடக்ஷன்) படித்து முடித்தேன். பட்டப்படிப்பை முடித்ததும் என்னுடன் பயின்ற சக நண்பர்கள் எல்லாம் மேல்படிப்பை படிப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருந்தனர். ஆனால் என்னால் எதுவும் யோசிக்க முடியவில்லை. காரணம் எனது கஷ்டமான குடும்பசூழல்.
அப்பா வாங்கிய சொற்பமான சம்பளம் குடும்பத்தை நடத்துவதற்கே சரியாக இருந்தது. இதனால் மேல்படிப்பைத் தொடர்வதும், அதற்காகப் பெற்றோரிடம் இருந்து பண உதவி எதிர்பார்ப்பதும் முடியாததாக இருந்தது.
இதனால் அடுத்து என்ன செய்வது என்ற குழப்பமான சூழலில் இருந்தபோது என்னை சந்தித்த பள்ளித் தோழி தமிழரசி, சிறிய வயதில் நீ என்ன ஆக வேண்டும் என்று கேட்டால் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்று சொல்வாயே, நீ ஐ.ஏ.எஸ். படித்தால் என்ன? அதற்கு அவ்வளவு பணம் செலவாகாது. வீட்டில் இருந்து கொண்டே தேர்வுக்கு தயாராகலாமே என்று கூறினார்.
இதையடுத்துதான் எனது சிறு வயது கனவை நனவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். எனது குடும்பம் இருந்த சூழ்நிலையில் வீட்டில் இருந்தே படிக்கலாம் என்று தோழி சொன்னது நூறு சதவீதம் சரியெனபட்டது.
இதைத்தொடர்ந்து ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயாராவது குறித்து சென்னையில் ஏற்கெனவே தயாராகிக் கொண்டிருந்த சக நண்பர்களை அணுகிக் கேட்டேன். அவர்களோ, ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவதற்கு முறையான பயிற்சி அவசியம். அந்தப் பயிற்சி சென்னையில் கிடைக்காது. தில்லியில்தான் உண்டு என்றார்கள்.
நண்பர்கள் இப்படி சொன்னது எனது தலையில் இடி விழுந்ததுபோல் இருந்தது. நம் குடும்ப சூழலில் தில்லி போய் படிப்பதா? என்று நினைத்து எதுவுமே புரியாமல் வாழ்க்கையை பற்றி யோசிக்கவும் முடியாமல் பேதலித்தேன்.
நான் வழக்கம்போல் இல்லாமல் மகிழ்ச்சி இழந்து இருப்பதை அறிந்த எனது தந்தை, ஏன் ரொம்ப சோகமாக இருக்கிறாய் என்று கேட்டார்.
விஷயத்தை சொன்னால் அப்பா கஷ்டப்படுவாரே என்ற எண்ணம் அவரிடம் விஷயத்தை சொல்லவிடாமல் தடுத்தது; மற்றொருபுறம் ஐ.ஏ.எஸ். ஆகியே தீர வேண்டும் என்ற வேட்கை அவரிடம் சொல்லாமலும் இருக்க முடியவில்லை.
ஒரு வழியாக விஷயத்தை சொல்லிவிட்டேன். நான் சொன்னதுமே, இதற்காகவா மனம் நொந்துபோய் உள்ளாய், கவலைப்படாதே நான் உன்னை தில்லிக்கு அனுப்பி வைக்கிறேன் என்று கூறி, கடனைவாங்கி அப்பா என்னை தில்லி அனுப்பி வைத்தார்.
நானும் ஐ.ஏ.எஸ். கனவோடு ரயில் பயணத்தைத் தொடங்கினேன். தில்லியில் உள்ள இன்ட்ராக்ஷன் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். சில மாதங்களே பயிற்சி பெற்ற நிலையில் குடும்பச் சூழலால் தொடர்ந்து அங்கு என்னால் தங்கி படிக்க இயலவில்லை.
இதனால் வாங்கியப் புத்தகங்களை மூட்டைக் கட்டிக்கொண்டு மீண்டும் சென்னைக்கே திரும்பினேன். இருந்தாலும் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற தாகமும், வேட்கையும் மட்டும் என்னுள் சிறிதளவும் குறையவில்லை.
குறுகிய காலத்தில் தில்லியில் பெற்ற பயிற்சி அனுபவத்தை வைத்து வீட்டில் இருந்தவாறே தேர்வுக்குத் தீவிரமாகத் தயாரானேன். அத்தருணத்தில் ஒருநாள் நான் பயின்ற இன்ட்ராக்ஷன் பயிற்சி மையத்தில் இருந்து திடீரென எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.
என்னிடம் பேசிய அந்நிறுவனத்தின் இயக்குநர் ஜோஜோ மேத்திவ், குடும்ப சூழலால் படிப்பை கைவிட்டுவிடாதே. உடனே நீ தில்லிக்கு கிளம்பி வா, உனக்கு வேண்டிய உதவியை நான் செய்கிறேன் என்றார்.
ஜோஜோ சார் அப்படி சொன்னதும் எனக்குள் ஆனந்தம் பெருக்கெடுத்தது. ஐ.ஏ.எஸ். ஆகியே தீருவோம் என்ற நம்பிக்கையும் வலுப்பெற்றது.
அப்பாவிடம் இருந்த 500 ரூபாயை வாங்கிக்கொண்டு அடுத்த சில தினங்களில் மீண்டும் தில்லிக்கு பயணம் ஆனேன். ஜோஜோ சார் சொன்னதுபோல் எனக்கு இலவச பயிற்சி, தங்கும் வசதி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார்.
இதனால் என்னால் படிப்பில் முழு கவனத்தையும் செலுத்த முடிந்தது. எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் ஐ.ஏ.எஸ். ஆகியே தீர வேண்டும் என்ற உத்வேகத்தோடு படித்தேன். ஒரு கட்டத்துக்குமேல் இன்ட்ராக்ஷன் பயிற்சி மையத்தில் வகுப்பு எடுத்துக் கொண்டே படிக்கும் அளவுக்கு என்னைத் தயார்ப்படுத்திக்கொண்டேன்.
2003, 2004, 2006 ஆகிய மூன்று ஆண்டுகள் நேர்முகத் தேர்வுவரை சென்றேன். ஒவ்வொரு தடவையும் நேர்முகத் தேர்வுக்குச் செல்லும்போது இந்தத் தடவை நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு செல்வேன். ஆனால் தோல்விதான் மிஞ்சும்.
தோல்வி ஏற்படும்போதெல்லாம் மனதில் வலி எடுக்கும். எனினும் சில மணித்துளிகளில் மீண்டு வழக்கம்போல் படிப்பைத் தொடங்கிடுவேன்.
ஒவ்வொரு ஆண்டும் தேர்வு முடிவு வெளி வரும்போதெல்லாம் எங்களது குடும்பத்தார் ஆவலுடன் இருப்பர். நான் பெயிலாகிவிட்டேன் என்று சொல்லும்போதெல்லாம் அவர்கள் என்னிடம் நேரடியாக வேதனையை வெளிப்படுத்தியதில்லை. மாறாக ஆறுதல்தான் கூறுவார்கள். நான் தோல்வி கண்டபோதெல்லாம், கவலைப்படாதே; தொடர்ந்து படி, உன்னால் முடியாவிட்டால், யாராலும் முடியாது என்று தன்னம்பிக்கை ஊட்டுவார் எனது பெரியப்பா சுடர்.
2009-ல் கடைசி வாய்ப்பில் நான் நேர்முகத் தேர்வு சென்று தேர்வு முடிவு வெளியானபோது எங்களது வீட்டில் வழக்கத்தைவிட பலத்த ஆவலுடன் இருந்தார்கள். நான் வெற்றி பெற்றதைத் தொலைபேசி மூலம் கூறும்போது எனது அப்பாவும், அம்மாவும் விம்மி அழுதேவிட்டார்கள்.
அந்தத் தருணத்தை என்னால் மறக்க முடியவில்லை. மறக்கவும் முடியாது.
ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற கனவோடு தேர்வெழுதி தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் ஒரே விஷயம்தான். இந்த உலகில் முடியாது என்பதே எதுவும் கிடையாது. ‘தோல்விகள் என்பது தோற்றுப்போவது அல்ல; முயற்சிக்காமல் இருப்பதே உண்மையான தோல்வி’ என்ற ஜார்ஜ் எட்வர்ட் உட்பெரியின் வாசகத்தை நெஞ்சில் நிறுத்தி உறுதியோடு போராடுங்கள். வானம் தொட்டுவிடும் தூரம்தான்..!
————–
நன்றி:- தினமணிகதிர்(30.05.2010)
இவரைப் பற்றி தம்பி சென்ஷி போட்ட பதிவின் சுட்டி இதோ!
———————
//இவரைப் பற்றி தம்பி சென்ஷி போட்ட பதிவின் சுட்டி இதோ!
//
இன்னா மேட்டரு
கார்த்தியின் வெற்றிக்கும் அவரின் கடின உழைப்புக்கும் பாராட்டுகள்.
அவரின் குடும்பத்தாருக்கு வாழ்த்துகளும் உறு துணையாக இருந்தமைக்கு பாராட்டுகளும்.
//இந்த உலகில் முடியாது என்பதே எதுவும் கிடையாது. ‘தோல்விகள் என்பது தோற்றுப்போவது அல்ல; முயற்சிக்காமல் இருப்பதே உண்மையான தோல்வி’ என்ற ஜார்ஜ் எட்வர்ட் உட்பெரியின் வாசகத்தை நெஞ்சில் நிறுத்தி உறுதியோடு போராடுங்கள். வானம் தொட்டுவிடும் தூரம்தான்..!//
நெகிழ்ச்சியான உண்மையான வரிகள்.
நண்பனின் நம்பிக்கையைப் பற்றிய செய்தி வாசிக்க மகிழ்வைத் தருகிறது. அவருக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்..
மேலும் மேலும் பலப் பல சாதனைகளை புரிந்து வாழ்வில் வெற்றிபெற நண்பனாய் இறைவனை வேண்டுகிறேன்.
கார்த்திக் அவர்களின் தன்னம்பிக்கையும் உழைப்பும் அடைந்த வெற்றியும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அவர் மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன்.
நல்ல பகிர்வு. நன்றி.