6. பிச்சை எடுத்து சாப்பிட்ட ராமசாமி

ஊரை விட்டு காசிக்கு போவது என்று முடிவு செய்ததும்.. யாரையாவது துணைக்கு அழைத்து செல்வது என்ற முடிவுக்கு வருகிறார் ராமசாமி. தொலை தூர பயணம். அதுவும் மொழி தெரியாத வடக்கு தேசத்தை நோக்கி போகப்போகிறோம். தனியாளாகப் போய் அவதி படுவதைக்காட்டிலும் கூட்டுக்கு ஆள் இருந்தால் சிரமம் தெரியாது. அவரின் அழைப்பை ஏற்று, உடன் வர சம்மதித்தவர்கள் இருவர்.

ஒருவர் ராமசாமியின் தங்கையின் கணவர். மற்றொருவர் நணபர். மூவருமாக ஈரோட்டை விட்டு சென்னைக்கு வந்து சேர்ந்தார்கள். செண்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வாரணாசி போகும் ரயிலைப் பற்றி விசாரித்தார்கள். அதிக நேரமிருந்தது. அருகிலேயே ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்கள். பயணக்களைப்பு நீங்க குளித்து, புத்துணர்ச்சியாகி வெளியே சாப்பிட வந்தார்கள் மூவரும்.

கையில் காசு இருந்தது. நல்ல கடையாக தேடி அலையும் போது தான் அவரைப் பார்த்தார்கள். ஈரோட்டுக்காரர் ஒருவர் சாலையின் எதிரில் இருந்த கடை வாசலில் நின்று ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். வெங்கட்டர் அனுப்பிய ஆளாக இருக்குமோ என்ற பயன் இவர்களைத் தொற்றிக்கொண்டது. ஊரை விட்டு வந்த இந்த இருபத்தி நாலு மணிநேரத்தில் தாங்கள் காணமால் போன செய்தி எத்தனை பேருக்கு சொல்லப்பட்டதோ.. எத்தனை இடங்களில் இவர்களைத் தேடி ஆட்கள் அலைகிறார்களோ.. சாலைக்கு அந்த பக்கம் நிற்கும் நபர் கூட தங்களைத் தேடி வந்தவராக இருக்குமோ.. ஏகப்பட்ட குழப்பங்கள் தோன்றி மறைந்தன.

அவர் கண்ணில் பட்டுவிடாமல் இவர்கள் நழுவினாலும், உள்மனதில் பயம் இருந்து. பின்னால் எவர் நடந்து வந்தாலும் சந்தேகத்துடனே பார்க்க வேண்டி இருந்தது. எதிரில் கடந்து போகிறவர்களியும் ஈரோட்டுக்காரராக இருக்கக்கூடுமோ என்ற அச்சத்தினூடாகவே கடந்து போக வேண்டி இருந்தது. ஒருவழியாக உணவை முடித்துக்கொண்டு அறைக்கு திரும்பிய பின்னும் பதட்டம் குறையவில்லை.

இப்படியான மனநிலையிலையே நாட்களை நகர்த்த முடியாது என்று முடிவுக்கு வருகின்றனர் மற்ற இருவரும். தங்களின் எண்ணத்தை ராமசாமியிடம் சொல்லிப்பார்த்தார்கள். ஊருக்கு திரும்பிப் போய் விடுவது என்று அவர்களின் முடிவு ராமசாமிக்கு கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனாலும் அவர் திரும்பவும் ஈரோட்டுக்கு வரப்போவதில்லை என்ற முடிவில் உறுதியாக இருந்தார். இவர்களும் விடாமல் வாதம் செய்து பார்த்தார்கள். பயனில்லை. ராமசாமி தன் எண்ணத்தை மாற்றிக் கொள்வதாக இல்லை.

இருவரையும் சென்னையிலேயே விட்டு விட்டு தனியாளாக ரயில் ஏறினார் ராமசாமி. அவர்கள் ஈரோட்டுக்கு திரும்பி விட்டார்கள். பெஜவாடா என்று அழைக்கப்பட்ட அறைய விஜயவாடா நகரத்தின் வந்து இறங்கினார் ராமசாமி. அங்கு தான் வெங்கட்டராமைய்யர் என்ற சமஸ்கிரத பண்டிதர், கணபதி அய்யார் என்ற கிராம முன்சீப் அறிமுகமும் ஏற்படுகிறது. அவர்கள் இருவரும் இவரைப் போலவே காசி செல்ல திட்டமிட்டு வந்திருந்தவர்கள். சரி.. காசி போய்ச் சேரும் வரை பேச்சுத்துணைக்காவது ஆள் கிடைத்த மகிழ்ச்சி ஏற்பட்டது.

அவர்களின் வழிகாட்டுதலின் படியே சென்று காசி போய் விடலாம் என்ற முடிவுக்கு வருகிறார் ராமசாமி. ஆனால்.. அவர்கள் இருவரும் கையில் தம்படி காசு இல்லாமல் இருந்தார்கள். ராமசாமியோ.. தங்ககாப்பு, காதில் கடுக்கண், கழுத்தில் தங்கச்சங்கிலி, இருப்பிலும் கூட தங்கத்தில் அரைஞாண் என்று ஒரு நடமாடும் நகைக்கடை போல இருந்தார். இப்படி இருந்தால் காசி போய் சேருவதற்குள்ளாக எல்லாவற்றையும் விற்றுத்தான் சாப்பிட வேண்டியதிருக்கும். எதுவும் இல்லாமல் இவர்களால் காசிக்கு போகும் போது தன்னால் மட்டும் அது முடியாமலா போய் விடும் என்ற எண்ணம் தோன்றியது. எல்லா நகைகளையும் கழட்டி ஒரு சின்ன துணியில் மூட்டையாக கட்டி இருப்பில் பத்திரப்படுத்திக்கொண்டார். அங்கிருந்து ஐத்ராபாத் போய்ச் சேர்ந்தார்கள். வழி நெடுக பரஸ்பர அறிமுகமும் ஏற்படுத்திக்கொண்டார்கள். அவர்களிருவருடனும் கருத்து வேறு பாடு கொண்டிருந்தார் ராமசாமி. அவர்கள் பாவத்தை தொலைத்து புனிதம் தேடி காசிக்கு போகிறவர்கள். இவரோ.. வீட்டின் கண்டிப்பில் வெறுப்புற்று சுதந்திரமாக வாழ காசியைத்தேர்வு செய்திருந்தார்.

ஐத்ராபாத் போய் சேர்ந்ததும்.. வீதிகளில் பிச்சை எடுக்கத் தயாரானார்கள் அய்யர்கள் இருவரும். ராமசாமிக்கு முதலில் தயக்கமாக இருந்தது. சத்தரத்திலேயே இருந்து விடுகிறேன். நீங்கள் போய் பிச்சை எடுத்துக்கொள்ளுங்கள் என்று தங்கி விட்டார். இவரின் பொறுப்பில் பொருட்களை வைத்து விட்டு அவர்கள் சென்று விட்டார்கள். மாலையில் அவர்கள் திரும்பி வந்ததும் பிச்சை எடுத்த அரிசி கொண்டு சமையல் செய்து சாப்பிட்டார்கள். ராமசாமியை அழைக்க வில்லை. ஆனால் பசி யாரை விட்டது. எவ்வளவு பெரிய செல்வந்தனாக இருந்த போதும் வயிற்றுக்கு வித்தியாசம் தெரியாதே.. ராம்சாமி அவர்களிடம் பசிக்கிறது என்றார். பிச்சை எடுக்க வராததினால் சோறு போட மறுத்தார்கள் அவர்கள். மறுநாள் கண்டிப்பாக வருவதாகக் கூறிய பின்னரே ராமசாமிக்கு உணவு அளிக்கப்பட்டது.

நேற்றைய போல இன்றும் சும்மா இருந்து விட முடியாது. மனதை தயார் செய்து அய்யர்களுடன் பிச்சைக்குச் சென்றார். மூவரும் சேர்ந்து சுற்றியதில் பிச்சைப் பொருட்கள் சீக்கரமே கிடைத்து விட்டது. சத்திரத்திற்கு திரும்பி கிடைத்த பொருட்களைக் கொண்டு சமையல் முடித்து, உணவருந்திய பின்னும் நேரம் பிச்சமிருந்தது. சத்திரத்தின் பெரிய திண்ணையில் அமர்ந்து கொண்டு வெங்கட்டராமய்யார்.. சமஸ்கிரத மொழியில் புராணத்தில் உள்ள அதிசியங்களை புகழ்ந்து சொல்லத்தொடங்கினார். அதை தமிழில் மொழிபெயர்த்து ராமசாமிக்கு சொன்னார் கணபதி அய்யர். கேட்டுக்கொண்டிருந்த ராமசாமியால் சும்மா இருக்க முடியாமல் தன் வழக்கமான பாணியில் எதிர் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். அதோடு புராணங்களில் இருக்கும் புரட்டுக்களைச் சொல்லியும் கிண்டல் செய்து வந்தார்.

இதே வழக்கம் தினமும் தொடர்ந்து கொண்டிருந்தது. ராமசாமியின் மதிநுட்பத்தை அய்யர்கள் இருவரும் ரசித்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. தினம் இவர்கள் இப்படி பிரசங்கம் நடத்துவதும் அதை எதிர்த்து ராமசாமி எதிர்பிரசங்கம் நடத்துவதையும் அப்பகுதியில் இருந்த தமிழர்கள் கூடி நின்று வேடிக்கை பார்க்கலானார்கள். அப்படி வேடிக்கை பார்ப்பதோடு சும்மா இருந்து விடாமல் சில்லரைகளை கொடுத்து விட்டு சென்றார்கள். இவர்கள் மூவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. தினம் அலைந்து திரிந்து வீடு வீடாக பிச்சை எடுப்பதை விட இப்படி பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தாலே காசி போவதற்கான காசு சேர்த்து விடலாம் என்ற எண்ணம் எழுந்தது. ஆனாலும் பிச்சை எடுப்பதை நிறுத்த வில்லை. சாப்பிடுவதற்கு கிடைக்கும் காசை செலவளிப்பதை விட நாலு தெருவுக்கு போய் பிச்சை எடுத்து சாப்பிட்டு விடுவது உத்தமம் என்று தோன்றியது.

இவர்களின் தர்க்கத்தை காண தினம் மாலை வேலைகளில் சத்திரத்தில் மக்கள் கூடுவது வாடிக்கையாகி விட்டது. காலங்காலமாக சொல்லப்பட்டு வந்த கதைகளை அய்யர்கள் சொல்லுவதை, தன் தர்க்க திறமையால் கேள்விகளால் திறனச்செய்யும் ராமசாமியை மக்களுக்கு பிடித்துப் போனது. வேடிக்கை பார்க்க வரும் மக்கள் கூட்டத்தில் ஐத்ராபாத் சமாஸ்தானத்தின் ரெசிடென்சி ஆபிசில் தலைமை குமஸ்தாவாக இருந்த காஞ்சிபுரம் முருகேச முதலியாரும் ஒருவர்.

ராமசாமி பேசும் முறையும், விவாதிக்கும் தன்மையும் முருகேச முதலியாருக்கு அதிக மகிழ்ச்சியை கொடுத்தது. மூவரையும் தன் வீட்டில் சில நாட்கள் வந்து தங்கும் படி வேண்டினார். இவர்கள் தயங்கவே.. தன் வீட்டுப்பெண்கள் எல்லோரும் ஊருக்கு போய் இருப்பதால் தான் மட்டும் தனியாக இருப்பதால் கூச்சப்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். அதோடு இனி பிச்சை எடுக்காமல் தன் வீட்டில் இருக்கும் தானியங்களைக்கொண்டு சாப்பாடு சமைத்து தனக்கும் போட்டு விட்டு, நீங்களும் சாப்பிடலாம். பின் வழக்கம் போல தர்க்கத்தில் ஈடுபடலாம் என்றும் வேண்டிக்கொண்டதால் மூவரும் அவர் வீட்டிற்கு இடம் மாறினார்கள்.

ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்களே அப்படி அந்த அய்யர்களால் சும்மா இருக்க முடியவில்லை. முருகேச முதலியார் அலுவலகம் சென்ற பின், ராமசாமியை அழைத்துக்கொண்டு பிச்சைக்கு சென்று விடுவார்கள். மாலையில் முதலியார் வீடு வருவதற்குள்ளாகவே திரும்பி விடுவார்கள். ஒரு நாள் சமையால் அறைக்குள் வந்த முதலியார் பலரக ஆரிசிகளும், ஐத்ராபாத் செப்பு காசுகளும் இருப்பதைப் பார்த்து என்னவென்று கேட்க, ராமசாமி விசயத்தை சொன்னார். காசி போவதற்கு தங்களுக்கு பணம் தேவை என்று அவர்கள் சொல்லவும்.. ஐத்ராபாத்திலிருந்த தமிழ் உத்தியோகஸ்தர்களிடமிருந்து இரண்டு மூன்று ரூபாய் வசூல் செய்து கொடுத்தார் முதலியார்.

அதோடு நில்லாமல் எஞ்சினியர்கள், வியாபாரிகள் வீடுகளுக்கு அழைத்துச்சென்று கதா காலச்சேபம் செய்ய வாய்ப்பும் ஏற்படுத்திக்கொடுத்தார். இவர்களுக்கு ஐத்ராபாத் தமிழர்கள் மத்தியில் நல்லா கிராக்கி ஏற்பட்டது. ரங்கநாதம் நாயுடு என்பவர் வீட்டில் தினசரி காலட்சேபம் நடத்த ஆரம்பித்து விட்டார். அய்யர்கள் சமஸ்கிரதத்திலும், தமிழிலும் சொல்லும் ராமாயண, பாரத இதிகாச கதைகளை தெலுங்கில் சொல்லுவது ராசாமியின் வேலையாக இருந்தது.

வெறும் மொழிபெயர்ப்பாளனாக மட்டும் செயல்படாமல்.. அவர்கள் சொல்லும் கதைகளின் ஊடாக தன் கைச் சரக்கையும் கேள்விகளாய் ராமசாமி அவிழ்த்து விட்டார். உணையைச் சொல்ல வேண்டுமெனில் ராமசாமியின் பேச்சு மொழிபெயர்ப்பாக இல்லாமல் அவரின் சொந்த சரக்காகவே இருந்தது. மக்களிடம் மொழி பேதமின்றி இந்த குழு பிரபலமடைந்தது. வருமானமும் பெருகியது. இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது.

போதிய அளவு காசு சேர்ந்ததும் காசி செல்லும் திட்டத்திற்கு தயாரானார்கள். ஆனால் ஐத்ராபாத் நண்பர்கள் இவர்களைத் தடுத்துப் பார்த்தார்கள். முதலியார் ராமசாமியை தனியே அழைத்து அந்த அய்யர்களுடன் போகவேண்டாம் என்று சொன்னார். ராமசாமி மறுக்கவே.. சரி.. எப்போது உனக்கு என் உதவி தேவைப்பட்டாலும் தகவல் தா.. உதவத்தயாராக இருக்கிறேன். பயப்படாமல் போய் வா.. என்று கூறினார்.

முருகேச முதலியார் மேல் சந்தேகத்துடன் இருந்த ராமசாமிக்கு அவரின் வார்த்தைகளுக்கு இதமானதாக இருந்தது. தன்னிடமிருந்த எல்லா நகைகளையும் முருகேச முதலியார் வசமே கொடுத்து பத்திரமாக வைத்துக்கொள்ளும் படி சொன்னார். நகைகளை சீட்டெழுதி தன்னிடம், ஒரு படியும், முருகேச முதலியாரிடம் ஒரு படியும் கொடுத்தார். ஒரே மோதிரத்தை மட்டும் தன்னிடம் வைத்துக்கொண்டார். அதையும் கருப்பு கயிறு அரைஞாணில் கட்டிவைத்துக்கொண்டார்.

டிக்கேட் எடுக்காமலேயே காசி போய் விடலாம் என்ற அவர்களின் பேச்சை மறுத்து இருந்த பணத்தில் மூவருக்கும் கல்கத்தாவுக்கு டிக்கேட் எடுத்துக்கொண்டார் ராமசாமி. அப்படியும் நூறு ரூபாய் மிச்சமிருந்தது. அதை கலகத்தாவில் தாராளமாக செலவளித்தார்கள். முதலீடு போடாமல் சம்பாதிக்கும் கலையைத்தான் ஐத்ராபாத்தியேலே கற்றுக்கொண்டு விட்டதால்.. அத பணியை கல்கத்தாவிலும் செய்து, நாட்டுக்கோட்டை செட்டியார்கள் கொடுத்தபணத்தில் காசியை வந்து அடைந்தார்கள் மூவரும்.

This entry was posted in பெரியார் வரலாறு. Bookmark the permalink.

1 Response to 6. பிச்சை எடுத்து சாப்பிட்ட ராமசாமி

 1. சிவஞானம் ஜி says:

  பாரா 3 பயன்/பயம்
  பாரா 4 போகிறவர்களியும்/ போகிறவர்களையும்
  6 அறைய/ அன்றைய
  7 அய்யார்/ அய்யர்
  இருப்பிலும்/ இடுப்பிலும்
  இருப்பு/ இடுப்பு
  திறன/ தினற

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.