தாவணிக்கனவுகள்

குளித்து முடித்ததும் துவட்டிக்கொள்ளும் துண்டோடு இருக்கும் உறவு நம்மில் பலருக்கும் அதோடு முடிந்து விடுகிறது. சில சமயங்களில் இடுப்பில் கட்டிக்கொண்டு வீட்டுக்குள் அலைய நேர்ந்திருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு அதே துண்டு பயன்படும் விதம் குறித்து எத்தனை பேர் கவனித்திருப்பீர்கள். அதிலும் பெண்குழந்தைகளால் பயன்படுத்தப்படும் விதம் அலாதியானது.

பத்து வயது கூட நிரம்பாத சிறுமிகளில் பலர் துண்டை தலையில் சுற்றிக்கொண்டு இருப்பதை பார்த்திருப்பீர்கள். கூந்தலை அள்ளி கொண்டை போடுவது போலவோ, முன்பக்கம் கூந்தலைப் போடுவது போலவோ துண்டை பயன்படுத்துவதை பல சமயங்களில் கவனித்திருக்கலாம்.

இயற்கை இயல்பில் கொடுத்திருக்கும் தாய்மையை அக்குழந்தைகளின் சிறு வயதிலேயே அடையாளம் கண்டு விடலாம். சூழல் காரணமா அல்லது இயற்கையின் விதி காரணமா என்பதெல்லாம் எனக்கு அறியாது. என் சின்ன வயதில் சீத்துக்கள், கோலி, பம்பரம் என்று விளையாடிய சமயங்களில் மரப்பாச்சி பொம்மைகளுக்கு சோறூட்டி விளையாடிய சிறுமிகளைத்தான் அதிகம் பார்த்திருக்கிறேன்.

அந்த மரப்பாச்சி பொம்மைக்கு உணவூட்டுவது மட்டுமன்றி, பொட்டு வைத்து, பவுடர் பூசி, தாலாட்டு பாடி அதை உறங்க வைக்க முயன்ற சிறுவயது தோழிகளையும் அறிவேன். எனக்குத்தெரிந்து பெண் குழந்தைகளின் உலகம் வேறு ஆண்குழந்தைகளின் உலகம் வேறாகத்தான் இருந்திருக்கிறது.

வெறும் டவுசர் போட்டுக்கொண்டு விளையாட வெளியே வந்துவிடுவோம். ஆனால்.. பெண் குழந்தைகள் எப்போதும் முழுமையான ஆடைகள் தரித்துத் தான் வலம் வருவார்கள். அதிலும் சிறுமிகளாக இருக்கும் போது பெருவாரியானவர்கள் அரைப் பாவாடை தான் அணிந்து வருவார்கள். விசேசகாலங்களில் மட்டும் முழுப்பாவாடையோடு அவர்களை பார்க்கலாம். அதிலும் வீதியை கூட்டும் பட்டுப்பாவாடைகளை அணிந்து கொண்டு அவர்கள் வலம் வரும் போது முகத்தில் ஒரு பெருமை பொங்குவதை பார்க்க முடியும்.

எங்களுடைய விளையாட்டு முரட்டுத்தனமானதாகவே இருந்து வந்துள்ளதை இப்போது நினைக்கும் போது உணர முடிகிறது. ஆனால்.. நான் அறிந்த வகையில் அவர்களின் உலகம் மென்மையானதாகவே இருந்திருக்கிறது. சின்ன சின்ன சந்தோசங்களியேலே மகிழ்ந்து போகிறவர்களாகத்தான் இருந்து வந்திருக்கிறார்கள் பெண்கள். முழுப்பாவாடை அணிந்திருக்கும் சிறுமிகள் கைகளை நீட்டிக்கொண்டு இடமிருந்து வலமாகவோ, வலமிருந்து இடமாகவே வேகமாக சுற்றுவார்கள். பாராசூட்டின் குடை போக பாவாடை விரிந்து வரும் சமயத்தில் அப்படியே தரையில் அமர்ந்து பாவாடை பந்தின் நடுவில் இருப்பது அவர்களின் மகிழ்ச்சியான விளையாட்டுக்களில் ஒன்றாக இருக்கும். அதே போல.. பாண்டியாட்டத்தின் போது.. பாவாடையின் ஒரு பகுதியை இருப்பில் சொறுகிக்கொண்டு கட்டங்களை தாண்டுவது கூட அவர்களுக்கு பிடித்தமானதாக இருந்து வந்திருக்கிறது.

இன்னொரு முக்கியமான விசயம் அவர்களை எப்போதும் ஏக்கம் கொள்ளச்செய்வதாகவே இருந்திருக்கிறது. அது தாவணி அணிவது. சிறுவயதில் அதே துண்டை தாவணியாக சுற்றிக்கொண்டு அலைந்த எத்தனையோ சிறுமிகளை பார்த்திருக்கிறேன். பொதுவாக வயதுக்கு வந்த பின் தான் தாவணி அணிவது வழக்கம். வசதியற்ற பல வீடுகளில் வயதுக்கு வந்த பின்னும் அப்பா, அண்ணன்மார்களின் சட்டையை போட்டுக்கொண்டு அலைகின்ற நிறை சகோதரிகளை தெரியும். தாவணிகளில் பல அம்மாவின் புடவையாகவோ, அக்காள் பயன்படுத்திய பழைய தாவணியாகவோ தான் இருக்கும். தனக்கென ஒரு தாவணி வாங்கி அணிவது என்பது ஏழை குடும்பத்தில் பிறந்தவர்களின் கனவாகவே இருக்கும்.

தாவணி அணிவதற்கு கூட ஒரு வயது உண்டு. கல்யாண வயது ஆகும் வரை மட்டுமே தாவணியை அணிய வேண்டும். திருமணத்திற்கு ஏற்ற வயது ஆகி விட்டால்.. அப்புறம் புடவை தான். இது மரபாக எங்கள் பகுதியில் இருந்து வந்த விசயம்.

என்னதான் புடவை கட்டிக்கொண்டாலும், அவர்களுக்கு தாவணி மோகம் இருக்கத்தான் செய்கிறது. அதற்கான காரணங்கள் என்னவென்று முன்பொரு சமயம் சிலரிடம் கேட்டுப்பார்த்தும் இருக்கிறேன். அவர்கள் சொல்லும் விசயம் எனக்கு கொஞ்சம் புரியும் படி இருந்தாலும் அப்போது புரியவில்லை என்பது தான் நிசம். தாவணி அணிவது என்பது புடவையை விட இலகுவான காரியமாக இருந்திருக்கிறது. இன்னொரு காரணம் உளவியல் சம்பந்தப்பட்டது. தான் இன்னும் இளமையாகவே இருப்பதாக காட்டிக்கொள்ள தாவணி பயன்படுகிறது.

புடவை கட்டிக்கொள்ளுவதில் இருக்கும் நேர்த்தி போலவே தாவணி அணிவதிலும் ஒரு நேர்த்தி கடை பிடிக்கப்பட்டு வருகிறது என்பது ஆண்களில் பலருக்கு தெரியாத செய்தியாக இருக்கும். ஒரு முந்தியை இருப்பில் சொறுகிக்கொண்டு அப்படியே சுற்றி மறு முந்தியை தோளில் போட்டு விடுவதல்ல தாவணி கட்டுவது. இடுப்பில் சொறுகப்பட்டிருக்கும் பகுதியும் சுற்றிக்கொண்டு வரப்பட்ட பகுதியும் சந்திக்கும் இடம் கவிழ்த்திப் போட்ட (V) ஆங்கில எழுத்து /\ வடிவில் இருக்க வேண்டும். இது முன்பக்கம், பின் பக்கம் அதே ஆங்கில எழுத்து V வடிவில் சரியான தோற்றத்தில் இருக்க வேண்டும்.

தாவணிகளே வழக்கொழிந்து வரும் வேலையில் எதற்காக இப்படி தாவணி புராணம் பாடுகிறேன் என்று தோன்றலாம். வறுமையில் இருக்கும் மக்கள்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் ஒரு பெரிய தன்னார்வ நிறுவனத்திற்கு உதவி கேட்டு வந்திருந்த பல மனுக்கள் உண்மையானவை தான் என்று ஆய்வு நடத்த சென்னையின் பல்வேறு குடிசைப் பகுதிகளுக்கு சென்றிருந்தேன். கடந்த வாரத்தின் அப்படி போன பல வீடுகளில் நிலைமை என்னை மிகவும் பாதிப்படையச் செய்தது. நான் பார்த்து வந்த எல்லா குடும்பங்களுமே நிச்சயம் நிதி நெருக்கடியில் வாழ்ந்துகொண்டிருக்கும் குடும்பங்கள் என்பதால் எல்லாவற்றிற்கும் உதவலாம் என்று ரிப்போர்ட் கொடுத்து விட்டேன்.

அப்படி போன சமயங்களில் பல வீடுகளில் தாவணிகளை பார்க்க நேர்ந்தது. இம்முறை நான் பார்த்த தாவணிகள் எதும் இளவயதுக்காரர்கள் அணிந்தது அல்ல. முப்பத்தி ஐந்து வயதைக் கடந்த மணமாகாத பெண்களும், நாற்பதை தொட்டு விட்ட பெண்களும் தான்.

இந்த வயதிலும் ஏன் அவர்களுக்கு மணமகவில்லை. நாற்பதைக்கடந்த பின்னும் எந்த வறுமை அவர்களை தாவணியில் வலம் வைத்திருக்கிறது என்றெல்லாம் யோசிக்கத்தொடங்கி விட்டது மனது. ஒரு கட்டத்தில் இளமையின் அடையாளமாக தெரிந்த ஆடை இன்று வறுமையின் சின்னமாக மாறிப்போய் இருக்கிறது.

இனி சினிமாவிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் தாவணிகளை பார்க்கும் போதெல்லாம் இந்த மக்களின் நிலை தான் கண்முன் வந்து நிற்கும். கால வெள்ளம் பல விதமான மாற்றங்களை கொடுத்திருக்கிறது. இவர்களின் வாழ்வும் மாறும் என்ற நம்பிக்கையோடு நானும் காத்திருக்கிறேன்.


Comments

7 responses to “தாவணிக்கனவுகள்”

  1. சரவணன் Avatar
    சரவணன்

    ///// இடுப்பில் சொறுகப்பட்டிருக்கும் பகுதியும் சுற்றிக்கொண்டு வரப்பட்ட பகுதியும் சந்திக்கும் இடம் கவிழ்த்திப் போட்ட (V) ஆங்கில எழுத்து /\ வடிவில் இருக்க வேண்டும். இது முன்பக்கம், பின் பக்கம் அதே ஆங்கில எழுத்து V வடிவில் சரியான தோற்றத்தில் இருக்க வேண்டும்.///
    தாவணியில ஒரு ஆராய்ச்சியே செய்துவிட்டேங்க பாலா ….நன்னா இருக்கு .

  2. //ஒரு கட்டத்தில் இளமையின் அடையாளமாக தெரிந்த ஆடை இன்று வறுமையின் சின்னமாக மாறிப்போய் இருக்கிறது//

    (-:

  3. தலைப்பை பார்த்ததுமே இளமை ஊஞ்சலாடும் என்று ஓடோடி வந்தேன்.

    உங்க வயதுக்கு ஏற்ற வகையிலேயே எழுதியிருக்கிறீர்கள் 🙂

  4. கலக்கலா சொல்லிகிட்டு வந்து ரொம்ப ‘செண்டி’ யா முடிச்சிட்டிங்க 🙁

  5. விளையாட்டு விஷயம்போல் ஆரம்பித்து நல்ல செய்திக்கட்டுரையை எழுதியுள்ளீர்கள், வாழ்த்துக்கள்.

  6. //இயற்கை இயல்பில் கொடுத்திருக்கும் தாய்மையை அக்குழந்தைகளின் சிறு வயதிலேயே அடையாளம் கண்டு விடலாம். சூழல் காரணமா அல்லது இயற்கையின் விதி காரணமா என்பதெல்லாம் எனக்கு அறியாது. //

    கொஞ்ச காலம் முன்பு பி.பி.சி.யில் இதனை பற்றி ஒரு விவரனப்படம் (Documentary?) படம் ஒளிபரப்பினார்கள். அதில் இதை போன்ற செயல்கள், உதா பெண்களுக்கு வித விதமான நிறங்களின் மீதான ஈர்ப்பு, ஆண்களுக்கு உடல் சார்ந்த விளையாட்டுகளின் மீதான் ஈர்ப்பு, போன்றவை அவர்களிடம் இயற்கையாக உள்ள பழக்கமாம். அவற்றினை பற்றி அருமையாக தொகுத்திருந்தார்கள்…

    /////
    ///// இடுப்பில் சொறுகப்பட்டிருக்கும் பகுதியும் சுற்றிக்கொண்டு வரப்பட்ட பகுதியும் சந்திக்கும் இடம் கவிழ்த்திப் போட்ட (V) ஆங்கில எழுத்து /\ வடிவில் இருக்க வேண்டும். இது முன்பக்கம், பின் பக்கம் அதே ஆங்கில எழுத்து V வடிவில் சரியான தோற்றத்தில் இருக்க வேண்டும்.///
    தாவணியில ஒரு ஆராய்ச்சியே செய்துவிட்டேங்க பாலா ….நன்னா இருக்கு .
    /////

    சும்மாவா பேரு வெச்சாங்க, பாலகிருஷ்ணன்னு…

  7. ஜொள் மழையில் நணையலாம் என வந்தேன். கண்ணீர் தான் மிச்சம். ஆமா தலை பெரியார் பதிவு என்னாச்சு ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *