7. எச்சில் இலைகளில் பசியாறிய ஈ.வேரா!

முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்யும் தலம். ஒவ்வொரு மண் துகளிலும் கடவுளின் உருவத்தை பார்க்க முடிகின்ற தேசம். பாலிலும் தேனிலும் குளித்து எழும் மனிதர்கள். செழிப்பும் வனப்புமாய் இருக்கும் குடிமக்கள். வாழும் காலத்திலேயே ஒருவன் சொர்க்கத்தை பார்க்க வேண்டுமென்றால் காசி போனால் போதும், எல்லா மனிதர்களின் பாவங்களை போக்கும் புனித கங்கை நதி ஓடும் பூமியின் சொர்க்கம். பசி என்று எவரும் இருந்து விட முடியாது.. செல்வந்தர்கள் பல அன்னதான சத்திரங்களை உருவாக்கி வருவோர், போவோர் எல்லோருக்கும் உணவு அளித்துக்கொண்டே இருக்கிறார்கள். இப்படி தான் கேட்டு பூரித்துப்போன காசி நகருக்கு வந்து சேர்ந்தார் ராமசாமி.

அதுவரை ராமசாமியுடன் இருந்த பிராமணர்கள் இருவரும் இவரை தனியே விட்டு விட்டு பிரிந்து போயினர். மொழியும் தெரியாமல் வழியும் புரியாமல் காசி நகர வீதிகளில் உலா வரத்தொடங்கினார். மாமிச மலைபோன்ற உடம்புடைய மனிதர்களை ரிக்சாவில் வைத்து எலும்பு மனிதர்கள் இழுத்து செல்லும் காட்சியைப் பார்த்தார் ராமசாமி. சாலையோரங்களில் ஆண், பெண் இல்லாத பிச்சைக்காரர்களும், உடலுறுப்புகள் பாதிப்படைந்து நோய் கண்ட வியாதிக்காரர்களும் தர்மம் கேட்டு குரல் கொடுத்தபடி கிடந்தார்கள்.

பண்டாரங்களும், பாராயணம் செய்பவர்களும் சொல்லித்தந்த காசி போல அந்த நகரம் இல்லை. தங்களின் வயிற்றுப்பாட்டுக்கு அவர்கள் பொய் மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளனர் என்பது புரியத்தொடங்கியது. சத்திரங்களை தேடிப் பார்த்தார் ஏதும் கண்ணில் படவில்லை. கையில் இருக்கும் காசை செலவளித்து ஒரு நாளை ஓட்டி விட்டார்.

பசி அதன் வேலையை வயற்றுக்குள் செய்யத்தொடங்கி இருந்தது. மறுநாள் காலையிலேயே புறப்பட்டுப் போனார். லட்சுமண்காட், ஹஸ்சி காட் உட்பட்ட பல பகுதிகளில் சத்திரங்களைத் தேடி அலைந்த போது தான் அன்னதான சத்திரம் என்று தமிழில் எழுதப்பட்ட ஒரு சத்திரத்தைக் கண்டதும் பெரும் மகிழ்ச்சி கொண்டார் ராமசாமி. இனி கொஞ்ச காலத்திற்கு கவலை இல்லாமல் காசியில் கழித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் அந்த சத்திரம் நோக்கிப் போனார்.

இவரது மீசை உடைகளை கண்ட உடன் அத்திரத்தின் வாசலில் இருந்த காவலாளி உள்ளே விட மறுத்தான். அவனிடம் சண்டை போட்டார் ராமசாமி. ஆனால் அவனோ.. அந்த சத்திரம் பிரமணர்களுக்காகவே கட்டப்பட்டுள்ளது என்றும் மற்றவர்களுக்கு உணவளிக்க முடியாது என்றும் ராமசாமியை துரத்தி விட்டான்.

ஐத்ராபாத்திலிருந்து உடன் வந்த இரு பிராமணர்களும் தன்னை தனியே விட்டுப் போனதின் காரணம் புரிந்தது. தான் இல்லாமல் போய் இருந்திருந்தால் அவர்கள் நிச்சயம் பிச்சை மட்டுமே பெற்று சாப்பிட்டிருக்க முடியும். முருகேச முதலியார் மாதிரியானவர்களின் நட்பு கிடைத்திருக்காது. இவ்வளவு சீக்கிரம் காசி வந்திருக்கவும் மாட்டார்கள். தன்னால் உதவிகளை பெற்றுக்கொண்டவர்கள் இப்படி நடு நோட்டில் நிற்க வைத்துவிட்டார்களே என்ற எண்ணம் சோர்வை ஏற்படுத்தியது. வெளியில் நடப்பது ஏதுமறியாத பெருங்குடல் சிறுங்குடலை திண்றுகொண்டிருக்கிறதோ என்ற அச்சம் கொள்ளும் அளவுக்கு வயிற்றில் வலி எடுத்தது. அது பசியால் ஏற்படும் வலி என்பதை உணர்ந்து கொண்ட ராமசாமி.. வேறு சத்திரங்களைத் தேடி அலைந்தார்.

நண்பகல் வரை கண்ணில் பட்ட எல்லா சத்திரத்திங்களில் இருந்தும் விரட்டியடிக்கப்பட்டார். முதல் சத்திரத்தில் சொல்லப்பட்ட அதே பதிலைத் தான் எல்லா சத்திர காவலாளிகளும் சொன்னார்கள். கடைசியாக ஒரு சத்திர காவலாளியிடம் உள்ளே போக அனுமதி கேட்டு சண்டை போட்டுக் கொண்டிருந்த போது.. மற்றவர்கள் சாப்பிட்டு முடித்த எச்சில் இலைகளை வெளியில் இருந்த குப்பைத்தொட்டியில் வந்து போட்டு விட்டுப் போனார்கள்.

ஒரு பக்கம் இனம் தெரியாத கோபம், மற்றொரு பக்கம் காதடைக்கும் பசி. காவலாளியுடன் ஈடுபட்டிருந்த வாக்குவாததை விட்டுவிட்டு குப்பைத் தொட்டி நோக்கிப் போனார் ராமசாமி. அங்கிருந்த தெரு நாய்களை விரட்டி விட்டு.. தொட்டிக்குள் இருந்த எச்சில் இலைகளை எடுத்து தரையில்வைத்தார். அதன் முன் நன்றாக அமர்ந்து கொண்டார். இலைகளில் மிச்சமிருந்த சோற்றை காலி செய்யத்தொடங்கினார். நெய் வாசமிக்க அந்த பதார்த்தங்கள் தன் வீட்டை நினைவு படுத்தின. கண்களில் கண்ணீர் பெருகி பார்வையை மறைத்தது. புறங்கையால் அதனை துடைத்து விட்டு சோற்றை வழித்து, வாயில் வைத்து வயிற்றுக்குள் தள்ளினார். இலைகள் மலமலவென காலியாகின.

கொஞ்சம் தெம்பு வந்தது போல இருந்த்து. நிமிர்ந்து உட்கார்ந்தார். இனியும் புரட்டர்கள் பேச்சை நம்பி காசியில் பிழைக்க முடியாது. ஏதாவது வேலை செய்து பிழைத்துக்கொள்ளலாம் என்று வேலை தேடி அலைந்தார். மொழி தெரியாததினால்.. போன இடங்களில் இருந்து எல்லாம் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விட்டார்கள். சரி.. காசியை சுற்றிய போது பார்த்த மடங்கள் அன்னச்சத்திரங்களில் சென்று வேலை கேட்டார். அங்கும் இவரை ஒரு மனிதராகக் கூட மதிக்காமல் விரட்டி விட்டனர். முகத்தில் இருக்கும் பெரிய மீசையும், தன் கிராப் வைத்த தலை முடியினாலும் தான் இந்த நிலை என்று உணர்ந்துகொண்டு, மொட்டை போட்டு மீசையையும் மழித்து விட்டார். ஆடையும் காவிக்கு மாறி இருந்தது.

கங்கை ஆற்றின் கரையில் இறந்து போனவர்களுக்கு காரியம் செய்து முடித்த பின், பண்டாராங்களை அழைத்து சோறு போடுவதைக்கண்டார். ராமசாமியும் வரிசையில் நின்று சாப்பிட்டார். சில நாட்கள் பண்டாரங்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டுவிடும். சீனியர் பண்டாரங்கள் இவரை ஓரங்கட்டி விடுவார்கள். வியாபரத்தில் கெட்டிக்காரராக இருந்து என்ன பயன்.. பண்டாரங்களுடன் போட்டி போட்டு.. சாப்பிட முடியாமல் போனது.

தனக்கு இது சரிப்பட்டு வராது என்று சாமியார்கள் மடங்களைத்தேடி போனார் வேலை கேட்டு.., ஒரு மடத்தில் பூஜைக்கு வில்வம் பறித்துக்கொடுக்கும் வேலை கிடைத்தது. அதோடு காலை மாலை இரு வேலைகளிலும் விளக்கு ஏற்ற வேண்டும், சம்பளம் கிடைக்காது. தினம் ஒரு வேலை மட்டும் சாப்பாடு போடுவோம் என்றார்கள். சரி என்று ஒப்புக்கொண்டார். வயிற்றுக்கு வஞ்சனை இருந்தாலும் வேலை கிடைத்து விட்டது.

தினம் அதிகாலை மூன்று மணிக்கே குளித்து சுத்தபத்தமாக வில்வம் பறித்து பூஜைக்கு தயாராகி விட வேண்டும். ராமசாமி வேலைக்கு சேர்ந்த சமயமோ கடும் பனி கொட்டும் குளிர் சமயம். சும்மாவே குளிப்பதற்கு ஆயிரம் சாக்கு போக்கு சொல்லும் ராமசாமியா குளிரில் குளிப்பார். கங்கை கரைக்குச் சென்று துண்டை கங்கையாற்றில் நனைப்பார். ஈரமாக்கிய துண்டைக்கொண்டு உடலை துடைத்துக்கொள்ளுவார். பின் வேஸ்டியை நனைத்து ஈரமாகவே அதையும் அணிந்து கொள்வார். இப்பொது குளியல் போட்ட எபெஃக்ட் வந்துவிடும். தயாராக வைத்திருக்கும் விபூதியை தண்ணீரில் குழைத்து பட்டை போட்டுக்கொள்வார். உடல் சூட்டில் தண்ணீர் காய விபூதி பளிச்சென்று தெரியத்தொடங்கும். அப்படியே வில்வம் பரித்து ஓலைக்கூடையில் போட்டுக்கொண்டு மடத்துக்கு வந்து விடுவார்.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற சொலவடை போல.. ராமசாமியில் இந்த வேலை அதிகநாள் நீடிக்க வில்லை. காலைக்கடனை முடித்து, கால் கழுவ கங்கைக் கரைக்கு வந்த சாமியார் ஒருவர், கரையில் நின்றுகொண்டு ராமசாமி போடும் வேசத்தைப் பார்த்து விட்டார். இத்தனை நாளாக குளிக்காமல் தான் இவன் வில்வம் பறித்து வ்ருகிறான.. அல்லது இன்று மட்டும் இப்படி நடந்து கொள்கிறான என்ற சந்தேகம் அந்த சாமியாருக்கு வந்தது. அவசர அவசரமாஅக் தன் பணியை குடித்துக்கொண்டு, மடத்துக்கு திரும்பி பெரிய சாமியாரிடம் தான் கண்டவற்ரை போட்டு உடைத்தார்.

இந்த விபரங்கள் ஏதும் தெரியாத ராமசாமி, வழக்கம் போல வில்வம் பறித்து முடித்து விட்டு மடத்துக்குள் நுழைய முற்பட்ட போது தான் கவனித்தார். மடத்துச்சாமியார்கள் எல்லோரும் கூடி வாசலிலேயே நின்றுகொண்டிருந்தார்கள். வில்வக்கூடையை கீழே வைத்து விட்டு என் கேள்விக்கு உண்மையான பதிலைச்சொல்லு என்று கேட்டார் பெரிய சாமியார். கூடையை கீழே வைத்து விட்டு கேளுங்கள் என்றார் ராமசாமி. இன்று குளிக்காமலா.. வில்வம் பறித்தாய்? ஆமாம் என்று அலட்சியமாக பதில் வந்தது. எத்தனை நாளாக இப்படி நடக்குது? கொள்ளை நாளாக இப்படித்தான் நடக்குது. அடப்பாவி!ஆண்டவனுக்கு செய்யப்படும் பூஜையில் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது தெரியாதா..? இப்படி குளிக்காமல் இந்த பணியில் ஈடுபடுவது என்பது பெரிய குற்றம் என்பது தெரியாதா? நாங்கள் எல்லோரும் குளித்து சுத்தமாக இருப்பதை பார்த்துமா உனக்கு அறிவு வரவில்லை? என்று கேள்விகளை அடுக்கினார் பெரிசு. அது எல்லாம் சரி சாமி.. ஆனா.. உலகையே காக்கும் உங்க ஆண்டவன் ஒரு நாளும் குளித்துப் பார்த்ததே கிடையாதே. அப்ப அதுமட்டும் சரியா? அந்த ஆண்டவனையே உங்களில் ஒருவர் தானே குளிப்பாட்டி விடுகிறீர்கள்? என்று எதிர்க்கேள்வி கேட்க.. சாமியார்களுக்கும் ராமசாமிக்குமிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்கு வாதம் சண்டையாகி மடத்தை விட்டு சாமியார்களால் வெளியேற்றப்பாட்டார் ராமசாமி.

(தொடரும்)
——————

This entry was posted in பெரியார் வரலாறு. Bookmark the permalink.

9 Responses to 7. எச்சில் இலைகளில் பசியாறிய ஈ.வேரா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.