மாரியம்மன் கோவிலில் தீச்சட்டி எடுங்க!

சென்னை வந்து இரண்டு வருடங்கள் முழுமையாகி விட்டது. மும்பையில் இருந்து 2005 செப்டம்பர் கடைசி வாரத்தில் வந்திறங்கினேன். மும்பையிலேயே பழக்கமாகி விட்ட நண்பன் ஒருவன் இருந்ததால் அவனுடன் ஜாகையை வைத்துக்கொண்டாகி விட்டது. சென்னை வந்து நிறைய நண்பர்களையும் பெற்று வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

அறை நண்பனுக்கு பெண் பார்த்து முடிவு செய்திருக்கிறார்கள். அனேகமாக இன்னும் நாள் குறிக்கப்படாத அவனுடைய திருமணம் வரும் 2008 மே மாதம் இருக்கலாம். எனக்கும் அவனுக்கும் சரியான புரிதல் இருந்ததால்.. வேறு எவரையும் பாட்னராக சேர்த்துக்கொள்ளாமல்.. நாங்கள் இருவருமே வீட்டு வாடகையை பகிர்ந்து கொண்டோம்.

இனி நான் தனி இடம் பார்க்க வேண்டும். என் சிடுசிடு குணத்தை பொருத்துக் கொள்ளக் கூடிய நண்பர்கள் கிடைப்பது கடினம் என்பதால்.. தனித்து வீடு பார்க்க வேண்டும். அல்லது இருவர் தங்கும் அறையை முழுவதுமாக நானே எடுத்துக்கொண்டு மேன்சன் வாழ்க்கைக்கு தயாராக வேண்டும்.

என்னுடன் படித்த எத்தனையோ தோழன்களுக்கும், தோழிகளுக்கும் மணம் முடிந்திருக்கிறது. ஏன் நான் காதலித்த பெண்களுக்கும் கூட மணம் முடிந்து போய் இருக்கிறது. அப்பொதெல்லாம் ஏற்படாத இனம்பிரிக்க முடியாத ஒரு சோகம் இப்போது மனதில் எழுகிறது.

மோட்டுவளையை வெறித்தபடி தனித்து இருக்க வேண்டியதிருக்கும். பேச்சுத்துணைக்கு ஆள் இல்லாமல் நானே கேள்வி கேட்டு பதில் சொல்லிக்கொள்ள வேண்டியதிருக்கும். (தி.மு.க தலைவர் கருணாநிதி மாதிரி) உடம்பு முடியாமல் படுக்கையில் கிடந்த பல சமயங்களில் உணவு வாங்கி வந்து, எழுப்பி சாப்பிடு.. என்று சொல்லியது போல இனிச் சொல்ல ஆள் இருக்காது. என்னை போல எத்தனையே மனிதர்கள் மேன்சனிலும், ஹாஸ்டல்களிலும் ஆண்களும் பெண்களுமாக இருக்கக்கூடும். தொடக்கத்தில் எல்லாமே கொஞ்சம் கடினமானவையாகத்தான் தெரியும். பழகிக்கொள்ளலாம் என்று வையுங்கள்.

எனக்கும் அவனுக்கும் இருக்கும் பொதுவான சில நணபர்கள் தொலைபேசியில் இந்த மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டோம். அப்போது ஒருவன் சொன்னான்.., “அண்ணே.. அடுத்த கல்யாணம் உங்களோடதா இருக்கட்டும்” என்று. சிரித்துக்கொண்டே வழக்கமான சமாளிப்பாக நான் சொன்னேன்.. “செஞ்சுட்டா போச்சு.. உன்னை மாதிரியான தம்பிகளுக்கு முதலில் கல்யாணம் பண்ணி வச்சுட்டா நல்லது தானே..” “யோவ்.. இப்படியே எல்லா பயலுகளையும் அனுப்பிகிட்டே இருந்தா எப்படியா?” என்று கோபப்பட்டவனிடம் நான் சொன்னேன். “படிக்கிற காலத்திலேயே உடன் படித்த நண்பர்களிடம் சொல்லுவேன்.. என்னோட கல்யாணத்துக்கு நீங்க எல்லாம் பிள்ளைகளோட வந்து ஆசிர்வாதம் பண்ணுங்கன்னு.. அதேயே தான் இப்பவும் சொல்லுறேன்.” (நண்பர்கள் சிலர் என்னை சம்சாரியாக்கியே தீர்வது தான் தங்கள் வாழ்நாள் லட்சியம் என்ற ரேஞ்சில் பெண் பார்க்கத்தொடங்கி விட்டது தனிக்கதை)

எனது பதிலில் எரிச்சலைடந்திருப்பான் போல.. சில நிமிடங்கள் மவுனமாக இருந்தது எதிர் முனை. “தம்பி.. என்னோட அப்பா கல்யாணம் செஞ்சுகிட்ட போது அவருக்கு வயசு நாற்பது.” என்று நான் திரும்பவும் அவனை சமாளிக்க முயன்றேன். “அது அந்த காலம்னே.. அந்த கால ஆளுங்களுக்கு உடம்பில் தெம்பு இருந்தது.. இப்ப அப்படியா..” அவன் குரலில் நிசமான அக்கரை தெரிந்தது. அடுத்ததாக அவன் சொன்னது சிரிப்பை வரவழைத்தது..” பேசாம.. பன்னாரிமாரியம்மன் கோவில.. தீச்சட்டி எடுங்க சீக்கரம் கல்யாணம் நடக்கும்.” 🙂

கிட்டதட்ட பத்து வருடங்களுக்கு மேலாக குடும்பத்தினருடன் இருந்து விலகி இருந்தவன்/ விலக்கி வைக்கப்பட்டவன். கடந்த சில வருடங்களாக தொலைபேசி உரையாடல்களோடும், அவ்வப்போது போய் அம்மாவை சந்தித்து வருவதோடும் நிற்கிறது. ஒரே வீட்டுக்குள் இருந்தாலும் தனித்தீவாகவே உணர்ந்து வாழ்ந்த காலகட்டங்களும் உண்டு.

நண்பர்கள் வட்டம் மட்டுமே என் சுக, துக்கங்களை உணர்ந்திருக்கிறது. அதே நட்புகள் தான் எனக்குள் இதே விசயங்களையும் விதைத்துச் சென்றிருக்கிறது. முறையான பராமரிப்பு இல்லாமல் வளரும் காட்டு செடி போல வளர்ந்துவிட்டேன்.

இச்சமூகம் சொல்லும் வழமையான வாழ்க்கை முறையில் இருந்து கொஞ்சம் வேறுபட்டுப் போய் இருக்கிறது என் தனி வாழ்க்கைமுறை. இது வரை நான் சந்தித்த அவமானங்களும், துக்கங்களும் என்னால் மட்டுமே விளைந்தவையாக நான் இன்றும் நினைத்து வருவதால் தான் மனதில் வன்மம் இல்லாம் வாழமுடிந்திருக்கிறது. அதுசரி.. இப்ப என்னத்துக்கு இந்த சொந்த கதை எல்லாம் என்று கேள்வி கேட்கத்தோன்றும்.

என்னை கல்யாணம் செய்துகொள்ளச்சொன்ன அந்த தம்பி, “நாங்க எல்லோரும் உங்களை விட்டு வெகுதூரம் போகுற மாதிரி இருக்கு. சீக்கரம் நீங்களும் கல்யாணம் காட்சின்னு செஞ்சுகிட்டா.. அப்பாடா உங்களுக்கும் பொறுப்பு வந்துடுச்சுன்னு எங்களுக்கும் ஒரு நிம்மதி வரும்” என்று சொன்ன வார்த்தை என்னை கொஞ்சம் யோசனை செய்ய வைத்திருக்கிறது.

ஒரு உண்மையைச்சொல்ல வேண்டுமானால்.. இது மாதிரியான நிசமான அன்புக்காக வேணும் தனித்து வாழ்ந்தே மடியலாம் என்ற எண்ணம் தோன்றுவதை தடுக்க முடியவில்லை.

இப்படியே இன்னும் கொஞ்ச காலம் இருக்க இருந்து விட்டு போகிறேனே.. எனக்காக திருமணம் குறித்த எண்ணம் தோன்றும் வரை! ப்ளீஸ்!!

—-

முன்பு ஒரு முறை இதே விசயத்தை சொல்லும் நண்பரின் கட்டுரை ஒன்றை மறுபிரசூரம் செய்திருந்ததை நினைவு படுத்துகிறேன். அதுல வந்து பின்னூட்டம் சொன்ன மாதிரியே.. இங்கேயும் வந்திருப்பதால்.. இதனை பின் இணைப்பாக சேர்த்திருக்கிறேன்.


Comments

17 responses to “மாரியம்மன் கோவிலில் தீச்சட்டி எடுங்க!”

  1. அண்ணனுக்குத் துணையாக நானும்!

  2. சிவஞானம்.ஜி Avatar
    சிவஞானம்.ஜி

    அப்டீங்கிறீங்க?
    உங்க யோசனை சரியானதா எனக்குத்தோணல்லே..

  3. என் வாழ்த்துகளை உங்கள் அறை நண்பர் “பாலா” அவர்களுக்குச் சொல்லவும்!

  4. இளா Avatar
    இளா

    சீக்கிரன் உங்களுக்கு கல்யாணம் பிராப்திரஸ்து!

  5. இளா Avatar
    இளா

    சீக்கிரமே உங்களுக்கு கல்யாணம் பிராப்திரஸ்து!

  6. இம்புட்டு சொல்றாங்கல்லே தம்பிங்க. பேசாம ஒரு கண்ணாலம் பண்ணிக்குங்க.
    நாங்கெல்லாம் கல்யாணத்துக்கு வந்து ‘ஜாம்ஜாம்’னு முடிச்சுக்கொடுப்பொமுல்லெ!

  7. ஆஹா…
    கொஞ்ச இன்னும் காலத்துக்கு ஜாலியாக பொறுப்புகளற்று இருக்கலாம்னு நெனைக்கிறேன். விட மாட்டீங்க போலத் தெரியுதே!
    மணமாகிப் போகவிருக்கும் நண்பனின் பிரிவுத்துயர் குறித்து எழுத நினைத்து.. ஏதோ தப்பா எழுதிட்டேன்னு நெனைக்கிறேன். 🙁
    ஆளாளுக்கு ஒரே டயலாக்கையே சொல்லிக் கிட்டு இருக்கீங்களேப்பா!
    இதுல தம்பி பிரின்ஸ் மட்டும் தான் ஆதரவா? ரொம்ம டாங்ஸ் தம்பி!! 🙂

  8. பாலா சரியா சொல்லி இருக்கீங்க, நண்பர்களை விட்டு பிரிவது மிகவும் கடினமானது, அதுவும் நெருங்கிய நண்பனான அறைத்தோழனை விட்டு பிரிவது மிக கடினம்.

    கொஞ்சம் பிரிச்சி பிரிச்சி எழுதியிருந்தால் படிக்க இன்னமும் வசதியாவும், சுலபமாகவும் இருந்து இருக்கும்.

  9. நன்றி சந்தோஷ்..,

    என்னைப் போல நீங்களும் உணர்ந்திருப்பது கொஞ்சம் ஆறுதல் தரும் செய்தி. நண்பர்கள் பின்னூட்டங்களைப் பார்த்த பின் எடிட் செய்து பின் இணைப்பாக ஒரு பத்தியை சுட்டியுடன் சேர்க்கும் போது, பிரிக்கப்பட்ட பத்திகள் ஒன்று சேர்ந்து விட்டதை கவனிக்க வில்லை. நீங்கள் சொல்லிய பின் கவனித்து சரி செய்து விட்டேன்.

  10. நானும் உங்களை மாதிரியே பேச்சுலராவே காலத்தை தள்ளிடலாம்னு பார்க்குறேன். 🙂

  11. ஆமாம் பாலா…லக்கி சொல்றமாதிரி பேச்சுலரா இருக்கறது தான் நல்லது…என்னை மாதிரி…ஓக்கே ?

  12. தலைக்கு ரெண்டு புள்ளைங்களை பெத்த பிறகு.. லக்கியும், ரவியும் இப்படி பேச்சிலர் வேசம் போடப் பார்க்குறது நாயமா? அதுலையும் என் வேதனை உங்களுக்கு நக்கலாகிப் போச்சு.. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  13. சாய் ராம் Avatar
    சாய் ராம்

    http://www.TamilMatrimony.com
    http://www.Jeevansathi.com/
    http://www.SimplyMarry.com
    http://www.in.match.com

    பாலா உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க மேற்சொன்ன தகவல்களை பதிக்கிறேன்.

  14. சாய்… இதுக்கு நான் ப்ளாக் முகவரி கொடுக்காமலேயே இருந்திருக்கலாம். கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

  15. சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா தனது பேட்டி ஒன்றில் ஒவ்வொரு மனிதனுக்கும் திருமணம் மிக அவசியம் என்ற வகையில் கூறியிருந்தார்.

    எனக்கொன்னவோ 100 சதவீதம் உணர்ந்து சொன்னார் என்றுதான் படுகிறது.

    அடித்து சொல்கிறேன் வாழ்க்கைக்கு நிச்சயம், காதலும் (நட்பு, அன்பு, காமம் இதெல்லாம் கடந்த) துணையும் மிக மிக அவசியம்.

    இதை நீங்கள் உணரும் வரை

  16. சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா தனது பேட்டி ஒன்றில் ஒவ்வொரு மனிதனுக்கும் திருமணம் மிக அவசியம் என்ற வகையில் கூறியிருந்தார். எனக்கொன்னவோ 100 சதவீதம் உணர்ந்து சொன்னார் என்றுதான் படுகிறது.

    அடித்து சொல்கிறேன் வாழ்க்கைக்கு நிச்சயம், காதலும் (நட்பு, அன்பு, காமம் இதெல்லாம் கடந்த) வாழ்க்கைத் துணையும் மிக மிக அவசியம்.

    இதை நீங்கள் உணரும் வரை வாழ்க்கையில் அமைதியைக் காணவே முடியாது.

    (முந்தைய பின்னூட்டத்தில் தவறுதலாக என்டரை தட்டிவிட்டேன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *