கவாலி பாடல்

மும்பையில் வாழ்ந்த காலங்களில் அதிக நேரத்தை விழுங்கியது, மின் தொடர் வண்டி பயணங்கள் தான். வீட்டில் உறங்கிய பொழுதுகளை விட மின் தொடர் வண்டியில் உறங்கிய நாட்கள் அதிகமாக இருக்கும்.

அப்படி ஒரு பயணத்தின் போது, முதல்முதலில் கவாலி பாடல் ஒன்றை கேட்டேன்.

”நிலவைத்தொடும் மனிதா- கேள்
மரத்தின் விந்தையை” என்று தொடங்கும் அந்த பாடல் பல நாட்களுக்கு என்னை வதைத்துக் கொண்டிருந்தது. பொதுவாக கவாலி பாடல்கள் உருதுமொழியில் தான் இயற்றப்படுகிறது. அதன் இசை வடிவம், கொஞ்சம் ஆட்டம் கொடுக்கக்கூடியது என்பதாலே என்னவோ.., மேன்மக்களால் கண்டுகொள்ளப்பட்டதாக தெரியவில்லை. கஜல் அளவுக்கு பேசப்படவும் இல்லை. ஆனாலும் இன்றும் பெருவாரியான அடித்தட்டு மக்களின் பாடல்களாகவே உள்ளது கண்கூடு. இறைவழிபாடு, காதல், தத்துவம் என சகலத்தையும் கவாலியில் கேட்கமுடியும்.

ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலும் மரத்தின் பயன்பாடு எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை மிக அழகாக பதிவு செய்திருப்பார்கள்.

இங்கே எழுதப்பட்டிருக்கும் தத்துவப்பாடல்கள் எதிலும் அடக்கிவிட முடியாது இதனை. பாடலின் முதல் வரியை மட்டுமே நினைவு வைத்திருந்து, மும்பை நண்பர்களிடம் பல நாட்கள் கேட்டபிறகு தான் அது கவாலி வகைப்பாடல் என்று அறிந்துகொண்டேன்.

அப்புறம் கொஞ்ச நாளைக்கு கவாலி பாடல்கள் பின்னாடியும், பாடுற இடங்களையும் தேடி அலைஞ்சது தனிக்கதை. 🙂

சமீபத்தில்.. இணையத்தில் தேடிய போது அப்பாடல் சரியான வடிவில் மேடையில் பாடிய போது எடுக்கப்பட்ட வீடியோ கிடைத்து. அது இங்கே..

அதே பாடலில் சபா ஒன்றில் பாடியபோது எடுக்கப்பட்ட வீடியோவும் கிடைத்தது. அது இங்கே..

எதை உங்களால் ரசிக்க முடிகிறதோ. அதை ரசியுங்கள். 😉

உருது மொழியில் எழுதப்பட்ட இப்பாடலை உருது/இந்தி அறிந்தவர்களின் உதவியுடன் மொழிப்புரையுடன் கேட்டு மகிழுங்கள். :))

இது போன்ற இன்னும் நிறைய கவாலி பாடல்கள் கூகிளாண்டவரின் உதவியில் கிடைத்தது. கேட்டுக் கொண்டிருக்கிறேன். நீங்களும் அனுபவியுங்கள். தமிழ்நாட்டில் வேலூர் புரட்சி பற்றி அப்பகுதிகளில் கவாலி பாடுவதாகவும் அறிகிறேன். (ஒரு முறை ம.க.இ.க நடத்திய கலை இரவில் அவர்களின் நிகழ்ச்சி பார்த்த நினைவு உள்ளது)