பேய் வீடு

உங்களுக்கு பேய்கள் பற்றித் தெரியுமா? பேய் கதைகள் கேட்டு இருக்கிறீர்களா..? புளிய மரத்தில் தூக்கு போட்டுக் கொண்ட சின்னையன் பேய், புருசன் கொடுமை தாங்காமல் கிணற்றில் குதித்து செத்துப்போன பொன்னம்மா பேய், காதல் மறுக்கப்பட்டதால் விஷம் குடித்து மரித்துப்போன கல்யாணி பேய்.. இப்படி பெயர் தெரிந்த பேய்கள் ஒரு புறமிருக்க. மோகினிப் பேய், ரத்தக் காட்டேரி, கொள்ளிவாய்ப் பிசாசு என  விதவிதமான பேய்கள், எல்லா பேய்களுக்கும் ஒவ்வொரு வித்தியாசமான கதைகள் எதற்கும் பஞ்சம் இருந்ததில்லை  அல்லது இருப்பதில்லை கிராமங்களில்.

இன்னும் கூட பெரு நகரவாசனை அறிந்திடாத ஊர்களில் பேய்கள் கதை வடிவில்  உயிர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும் ஊருக்கு வரும் அக்காவின் குழந்தைகள், தங்கி இருக்கும் ஒரு மாத காலமும் பேய்கதை சேகரிப்பில் ஈடுபடுவார்கள். ஊருக்கு வந்துவிட்டுப் திரும்பப்போகும் போது நிறைய பேய்கதைகள் அவர்கள் விரும்பியபடி சேர்ந்திருக்கும். அவர்களின் ஊருக்குப் போனதும் பள்ளியில் சகமாணவர்களிடம் இது பற்றி சொல்லி, அவர்களை வாய்பிளக்கச்செய்வார்களாய் இருக்கும்.

ஆனால் எனக்கு அவை பற்றிய பயம் அல்லது நம்பிக்கை இப்போது இல்லை. எட்டாம் வகுப்பு கோடை விடுமுறையில் ஒரு நாள் பேய் பற்றிய பயம் கரைந்து போனது. பயம் தெளிந்திற்கு காரணம் பாண்டி சித்தப்பா தான். நானும் பயந்த காலம் ஒன்று இருந்தது. கொஞ்சம் இருட்டினாலே.. கொல்லைப் பக்கம் போக துணைக்கு ஆள் தேடியதெல்லம் இப்போதும் நினைவில் இருக்கிறது. கனவு கண்டு பயந்து நடு இரவில் எழுந்து அம்மாவின் கதகதப்பான கைகளுக்குள் சுருண்டு தூங்கிய நாட்கள் இப்போதும் நினைத்தாலும் சுகமானவை. அந்த அன்பான கைகள் கோவில் கதவுகள் போல மிகவும் பிரம்மாண்டமாய் பாதுகாப்பானதாக பேய்களுக்கு தோன்றி இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். அம்மாவின் கைகளுக்குள் அடைக்கலமாகும் இரவுகளில் கனவில் கூட ஒரு பேய்யும் வந்ததில்லை என்பது விளங்காத ஆச்சரியம்.

வடக்கு ரதவீதியில் எங்கள் வீடு இருந்தது. அப்படியே கிழக்கு பார்த்து நேராக நடந்தால் அந்த பேய் பங்களா வரும். வடக்கு ரதவீதியும் கிழக்கு ரதவீதியும் சந்திக்கும் இடத்திலிருந்து தொடங்கும் இட்டிப்பிள்ளையார் சந்து. அச்சந்தின் முதல் கட்டிடம் இருந்தது நான் படித்த சரஸ்வதி துவக்கப்பள்ளி. அங்கிருந்து தொடங்கி கடற்கரையில் போய் முடியும் புடலங்காய் போல கொஞ்சம் வளைந்து போகும் நீளமான சந்து அது.  அந்த சந்தின் கடைசில் கடற்கரையை ஒட்டினார்ப் போல இருந்தது அந்த பங்களா. பலகாலமாய் பயன்படுத்தப்படாமல் சிதிலமடைந்து கிடந்தது. ஆட்கள் அதிகம் சஞ்சரிக்காத பகுதியில் கடலை பார்த்தவாறு அமைந்திருந்தது அந்த பங்களா. பாழடைந்த பங்களா.

பேய் படங்களில் காட்டுவார்களே அந்த இலக்கணம் கொஞ்சமும் குறையாத பங்களா. செதில் செதிலாய் தோல் உறிந்து கிடக்கும் சுண்ணாம்பு பூச்சு. கடற்காற்று உப்பரிப்பில் அது ஒரு சிவப்பு நிறத்தை தன் மீது பூசி கொண்டிருந்தது.

ஜன்னல், கதவுகள் நல்ல தேக்கு மரத்தில் செய்தவை. தேக்கின் நுண்வாசனையை இழந்து கரும்பழுப்பு நிறத்திற்கு மாறியிருந்தன. அழகிய வேலைப்பாடுகள் கோயில் கதவுகளை போல அந்த பங்களாவின் மரசட்டங்களுக்கு உண்டு. முகப்பு கதவு நுணக்கமாய் பூ வேலைப்பாடுடன் அழகிய வரைகோடுகளை கொண்டிருந்தது. செதுக்கப்பட்ட இடங்களில் ஏற்பட்டுள்ள குழிகளில் குளவிகள் கூடு கட்டி இருந்தன. கதவு முழுவதுமே ஏகப்பட்ட சின்னஞ்சிறு புற்று போன்ற குளவிகளின் கூடுகள் தூரத்தில் இருந்தே கண்ணுக்கு தெரியும். நுட்பமாய் பார்த்தால் அதனுள்ளே தத்ரூபமாய் செதுக்கப்பாடிருக்கும் நெருப்பை உமிழும் யாளிகளின் உருவமும் குதிரையும் மனித உருவமும் கலந்த புதுவகை விலங்கினம் போன்றதொரு தோற்றத்திலிருக்கும். அதில் ஆடவரும், பெண்களும் நிர்வாணத்துடன் மேலாடையில்லாமல் கையில் வாள், ஈட்டி போன்ற ஆயுதங்களுடன் இருப்பதைப் பார்த்தால் உயிருடன் வந்துவிடுவார்களோ என்று அச்சமேற்படுத்தும்.

பங்களாவை அருகில் சென்று பார்க்கும் அனுமதி பெண்களுக்கும், சிறுவர்களுக்கு எப்போதும் கிடையாது. அதுவும் விளக்கு ஏற்றிய பின் அந்த பக்கம் ஆண்கள் கூட போவதில்லை. பெரிய கோட்டை சுவர்கள் பேய் பங்களாவை தனக்குள் சிறை வைத்திருந்தன. அமாவாசை இரவன்று கடலைகள் அந்த பேய் பங்களாவின் கோட்டை சுவர்களை வன்மம் கொண்டு தாக்குமாம். அடுத்த நாள் காலை கோட்டை இரும்பு கேட் பாதி திறந்து கிடப்பதை எல்லாரும் பார்க்க முடியும். அதில் கடற்பாசிகள் தூக்கிலிட்டு தலைகொலை செய்து கொண்டது போல தொங்கிக்கொண்டிருக்கும்.

பேய் பங்களாவின் கோட்டை சுவர்களுக்கு உள்ளே விதவித மரங்கள் உண்டு. ஆளுயரத்திற்கு எருக்கங்செடிகளும் மண்டிகிடக்கும். இளம் சிகப்பு நிறத்தில் மஞ்சள் கோடுகள் பதிந்த விகாரமான பூக்கள் எப்போதாவது அந்த மரங்களில் பூக்கும். படபடவென இறக்கைகளை அடித்து கூட்டமாக பறக்கும் வௌவால்களை முதன்முதலாக அந்த பங்களாவில் தான் பார்த்தேன். பேய்கள் நிரம்பிய அந்த பங்களாவின் அமானுஷ்யம் என் பால்ய காலத்து கற்பனைகளில் பிரதான அங்கம் வகித்தது.

பொதுவாக அந்த நாட்களில் எல்லா வீட்டுத் திண்ணைகளும் திறந்து தான் இருக்கும். இப்போது எல்லாம் திண்ணைகள் இல்லாத வீடுகள் கட்டப்படுகின்றன.  இருந்த திண்ணைகளையும் கடைகளாக்கி காசு பார்க்கத்தொடங்கி விட்டார்கள் என்பது வேறு விசயம்.  தெருவில் வருவோர் போவோர் என யார் வேண்டுமென்றாலும் திண்ணை அமர்ந்து இளைப்பாறிச் செல்லலாம். ஆனால் அந்த பங்களா வீட்டைச் சுற்றிலும் ஆளுயரத்திற்கு கோட்டைச்சுவர் கட்டி வைத்திருந்தார்கள். அங்கு திண்ணை கிடையாது. கோட்டைச் சுவற்றைத் தாண்டி சிறிது தூரத்தில் வீடு ஆரம்பித்து விடும். கோட்டைச் சுவற்றின் வாசலில் இரும்பு கிரில் கேட் போட்டு சாத்தி வைத்திருந்தார்கள்.

எனக்கு விபரம் தெரிந்து அந்த வீட்டில் யாரும் வசித்ததாக நினைவு இல்லை. அந்த வீட்டைப் பற்றி நிறைய கதைகள் உண்டு. அதில் ஒன்று தான். ஜமீந்தாரின் ஒருவரின் வைப்பாட்டியின் வீடு அது. அவளுக்கும் ஜமீந்தாருக்குமிடையில் நடந்த  ஏதோ பிரச்சனையில் அவர் அந்த பெண்ணை கொன்று போட்டதாகவும் செய்தி உண்டு. அதன் பின் இந்த விபரங்கள் தெரிவிக்காமல் வீட்டை வடநாட்டு பணக்காரர் ஒருவருக்கு விற்றுவிட்டதாகவும் சொல்லுவார்கள்.

அங்கு குடிவந்தனராம் அந்த வட இந்திய தம்பதியினர். குழந்தைகள் இல்லாத அவரும் அவர் மனைவியும் அடிக்கடி புரியாத மொழியில் சண்டை போட்டுக்கொள்ளுவார்களாம், ஒரு நாள் அந்த பெண் தீயில் எரிந்தபடி தெருமுழுக்க ஓடி செத்து விழுந்ததாகவும், அவள் தற்கொலை செய்துகொண்டாள் என்றும், அந்த பணக்கரர் கொலை செய்து விட்டார் என்றும் பலவிதமாய் பேசிக்கொள்வார்கள்.

அப்பெண் மரணித்த சில ஆண்டுகள் உயிர் வாழ்ந்த அந்த பெரியவரும் வீட்டை விட்டு வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தாராம். அந்த வீட்டில் இருந்த வேலைக்காரன் கூட வட இந்தியன் தானாம். சூரிய வெளிச்சத்தையே பார்க்காமல் அந்த பணக்காரர் இறந்து போனதாகவும் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அவர் இறந்த பின் அந்த வேலைக்காரனும் காணாமல் போய்விட்டானாம். அதன் பின் அந்த வீட்டில் அவர்களின் பேய் உலாவுவதாக எல்லோரும் பேசத்தொடங்கினார்கள்.

தம்பி, தங்கச்சியை பயப்படுத்த நானே கூட பலசமயங்களில் பேய்கதைகள் சொல்லி இருக்கிறேன். சிறுவயதில் வீட்டின் பெரிய திண்ணையில் அமர்ந்து மின்சாரம் தடைபட்ட இரவில் தன் கணீர் குரலுடன் எங்களுக்கெல்லாம் பாண்டி சித்தப்பா பேய் கதை சொல்லுவார். அகண்ட கண்களும், கன்னத்தை மறைக்கும் பெரிய மீசையுமாய் லாந்தர் ஒளியில் அவரே பயங்கரமாகத் தெரிவார். பாண்டி சித்தப்பாவின் அனேக பேய் கதைகளின் களம் அந்த பங்களா வீட்டைச் சுற்றிதான் இருக்கும். கோவிலுக்கு போய் வந்த பிறகு தெருக்குழந்தைகளை எல்லாம் அழைத்து திண்ணையில் உட்கார்ந்து கதை சொல்ல ஆரம்பிப்பார். கதை முடிவதற்குள் பலர் வீட்டிற்கு ஓடிவிடுவார்கள். சிலரை அம்மாக்கள் வந்து அழைத்துப் போய் விடுவார்கள்.

நானும் என் சின்ன அண்ணனும் வீட்டுத் திண்ணையிலேயே உட்கார்ந்து சாப்பிட்டபடியே கதை கேட்டுக் கொண்டிருப்போம். பல நாட்களில் பாண்டி சித்தப்பாவின் கதை கனவில் வந்து பயந்து அலறி இருக்கிறேன். சில நாட்கள் பாண்டி சித்தப்பாவே கனவில் வந்து, பெரீ….ய மீசையை தடவிக்கொண்டே ஹ்..ஹ..ஹ்..ஹா.. என்று பெரியதாக சிரித்து பயங்காட்டி இருக்கிறார்.

அப்போதெல்லாம் சித்தப்பாவை வைது கொண்டே திருநீரு போட்டு தூங்க வைப்பாள் அம்மா. அடுத்த நாள் சித்தப்பா எங்கள் வீட்டுக்கு வரும் போது, சேர்த்து வைத்த கோபத்தை எல்லாம் கொட்டித்தீர்த்திடுவாள் அம்மா. அவரும் சிரித்துக்கொண்டே இனி பேய் கதை சொல்லமாட்டேன் என்று போய் விடுவார். ஆனாலும் மாலையே வந்துவிடுவர்.. திரும்பவும் கதை சொல்ல!

பாண்டி சித்தப்பா கல்யாணம் செய்துகொண்டவரில்லை. முனியப்பசாமி கோவிலில் அருகில் சோதிடம் சொல்லும் கடை வைத்திருந்தார். இருந்தார். கருப்பு கயிற்றில் நிறைய முடிச்சுகள் போட்டு கழுத்திலும் கையிலும் கட்டி இருப்பார். அவர் சொல்லுகின்ற எல்லா கதைகளிலும் கடைசியில் பேயை முனியப்பசாமி வந்து கொன்று விடும். ’செத்துப் போனாத்தான பேயாவாங்க.. அப்புறம் எப்படி திரும்பவும் கொல்ல முடியும்’ என்று கேள்வி கேட்ட ஆறுமுகத்தை கோபமாய் முறைத்துப் பார்த்து, திட்டி விட்டார் சித்தப்பா. அதனைத்தொடந்த ஒருவார காலத்திற்கு ஆறுமுகம் கதை கேட்கவும் வரவில்லை. பள்ளிக்கும் வரவில்லை. பயந்து போய்விட்டதாக கூறி சித்தப்பாவிடமே மந்திரித்த கயிறு வாங்கிப்போனார் அவன் அம்மா.

எங்கள் பக்கத்து வீட்டு பூங்காவனம் அத்தாச்சிக்கு ஒருநாள் திடீரென பேய் பிடித்துக்கொண்டாதாக வீட்டில் எல்லோரும் பேசிக்கொண்டார்கள். நான் அவரைப் பார்க்க ஓடிப்போனேன். ஆனால் என்னை யாரும் வீட்டில் உள்ளே விடவில்லை. எனக்கு முன்னமே என் வயதொத்த சில தெருபசங்க எல்லாம் வாசலிலேயே நிறுத்தப்பட்டிருந்தார்கள். நாங்கள் திண்ணையில் அமர்ந்து கொண்டோம். எங்களில் பெரியவனான வலம்புரி மட்டும் உள்ளே போய் பார்த்துவிட்டு வந்தான். உள்ளே பேய் பிடித்த அத்தாச்சி எப்படி ஆடிக்கோண்டிருந்தார் என்பதை வர்ணனையோடு அவன் சொல்லச்சொல்ல அடிவயிறு முட்டிக்கொண்டு சிறுநீர் வந்துவிடும்.

அந்த பேய் பங்களாவுக்கு அருகில் இருந்த வீடு சீனி மரைக்காயர் என்ற இஸ்லாமியரது வீடு. அவர்களை பேய் ஒருபோதும் தொந்தரவு செய்ததில்லை. வேற்று மதக்காரர்களை அந்த பேய் ஒன்றும் செய்யமுடியாது என்றும், இவைகளை விட அவர்கள் வசமிருக்கும் ஜீனி பூதம் பெரியது என்றும் வலம்புரி சொன்னான். அதனால் சீனிமரைக்காயர் வீட்டில் பிறக்காமல் போய்விட்டோமே என்று வருத்தப்பட்டதெல்லம் உண்டு.

ஊரே பயந்து நடுங்கிக்கொண்டிருந்தது. அந்த பங்களா வீட்டுப்பக்கம் என்னைப் போன்ற சிறுவர்கள் யாருமே போவதில்ல. அதுவும் சுட்டெரிக்கும் மதிய வேலையிலும், மாலையில் விளக்கு ஏற்றிய பின்னரும் பெரியவர்கள் கூட அந்த பக்கம் போய் வருவதில்லை. குறுக்குச் சந்தின் வழி அடுத்த தெருவுக்குள் போய் அந்த பக்கமாகத்தான் கடற்கரைக்கு போய் வந்தார்கள்.

எங்கள் பள்ளியில் எழுதாத சட்டமே இருந்தது. யாரும் அந்த பங்களாவின் பக்கம் போகக்கூடாது என்று. பங்களாவைப் பற்றிய கதைகள் ஊர் முழுக்க பலரால் பல விதத்தில் பரப்பப்பட்டு இருந்தது. எல்லா வாலிபர்களுக்கும் வயசாலிகளுக்கும் அந்த பங்களா குறித்து, சண்டை போடுவது மாதிரி காரசாரமாக பேசிக்கொள்ளுவார்கள்.

ஓர் ஆடி மாதத்தின் அந்தி சாயும் பொழுதில் சைக்கிள் ஓட்டிப்பழகிய சுவாரஸ்யத்தில் இடம் கவனிக்காது பேய் பங்களாவின் பக்கம் வந்துவிட்டேன். நாடகம் நடிக்க வந்த பட்டிணத்துக்காரி ஒருத்தியுடன் பாண்டிச்சித்தப்பா பதுக்கியதைப் பார்த்ததிலிருந்து எனக்கு அந்த பேய் பங்களாவின் மீது பயமற்றுப் போனது.

—-

நன்றி- படங்கள்:

http://oneveryscreen.com

http://www.myspaceanimations.com

http://www.animationplayhouse.com

http://media.bigoo.ws/content/halloween/gif_houses/halloween_houses_64.gif

குறிப்பு: May 20th, 2008ல் எழுதப்பட்ட இக்கதை விரிவுபடுத்தப்பட்டு மீள்பதிவு செய்யப்படுகிறது.

This entry was posted in புனைவு and tagged , , , , , . Bookmark the permalink.