கடந்து போதல்.. (சிறுகதை)

பயங்கரமான அந்த அலறலில் உறக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்தேன். எனக்கு முன்னமே கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்திருந்தாள் ரேவதி.

எத்தனையாவது அலறலில் உறக்கம் கலைந்தது என்பது தெரியாது. ஆனால் ரேவதி முதல் சத்தத்திலேயே எழுந்திருக்க வேண்டும். படுக்கையில் விழுந்த பின் இடையில் நான் எழுவதென்பது நடக்காத காரியம். அவளோ எனக்கு நேரெதிர் இரண்டு முறையாவது எழுந்து விடுவாள். பல முறை கனவுகளினால் பயந்து போய் என்னை எழுப்பி,எழுப்பி சோர்ந்து போய் படுத்திருக்கிறாள். இதை காலையில் அவளே சொல்லும் வரை எனக்கு தெரியாது. இப்படியான நானே எழுந்திரித்திருக்கேன் என்றால் அந்த அலறலை உங்களின் கற்பனைக்கே விடுகிறேன்.

புனேயில் பணியாற்றிக்கொண்டிருந்த எனக்கு பதவி உயர்வோடு மும்பைக்கு மாற்றல் என்றவுடன் முதலில் திக்கு முக்காடிப் போனோம். எங்களது காதல் திருமணம் கூட அங்குதான் நடந்தது. ஒரே அலுவலகத்தில் பணியாற்றி வருகிறோம் என்பதால் என் மாற்றத்துடன், அவளுக்கும் பணி மாற்றல் உடனே கொடுத்து விட்டார்கள்.

பொதுவாக பெரு நகரங்களில் வசிக்கும் மக்கள் அண்டை வீட்டு மனிதர்களிடம் அறிமுகமாகிக் கொள்ள மாட்டார்கள் என்பதற்கு மும்பையும் தப்பவில்லை. பெரும்பாலும் எல்லா வீடுகளின் கத்வுகளுமே தாழிடப்பட்டே காட்சியளித்தன. அது உட்பக்கமாகவும் இருக்கலாம், வெளிப்பக்கமாகவும் இருக்கலாம்.

ஒருவார கால ஓட்டல் வாசத்திற்கு பின் ஓர் அடுக்கு மாடி குடியிருப்பின் இரண்டாம் தளத்தில் ஒரு வீடு வாடகைக்கு கிடைத்தது. வீட்டின் உரிமையாளர் தமிழர் என்பதால் கூடுதல் முன் பண தொல்லைகளின்றி எளிதாக குடியேறிவிட்டோம். வீட்டின் உரிமையாளரான திருநெல்வேலி அண்ணாச்சிக்கு ஆறுவீடுகளும், இரண்டு மளிகை கடைகளும் இருந்தன. வீட்டுக்கு தேவையான மளிகைப் பொருட்களையும் அவரிடமே வாங்கி (பற்றில் தான்!) சமையலறையை நிறைத்து விட்டோம். கடைப் பையனே வந்து காலையில் பால் பாக்கெட்டையும் கொடுத்துவிடுவான் என்பதால் ஏக வசதியாக உணர்ந்தோம்.

ஐந்து மாடிகள் உடைய, நான்கு கட்டிடங்களை கொண்ட குடியிருப்பு அது. ஒரு தளத்திற்கு நான்கு வீடுகள் என் மொத்தம் இருபது வீடுகளை கொண்டிருந்தது ஒரு கட்டிடம். அனேகமாக எல்லோருமே சொந்த வீட்டுக்காரர்கள் தான். வெளி ஆட்களுக்கு வாடகைக்கு விடக்கூடாது என்று சொஸைட்டி மூலம் முடிவு செய்திருப்பதால், எங்களை சொந்த மச்சினன் என்றி சொல்லித்தான் வீட்டுச்சாவியை கொடுத்தார் அண்ணாச்சி.

இரண்டு அறை, தனி சமையலறை, அழகான கொண்ட வீடு அது. எங்களிருவருக்கும் சற்று அதிகமாகவே இருந்தது அது. மும்பைக்கும், இந்த புதிய வீட்டுக்கும் நாங்கள் வந்து நேற்றோடு நான்கு மாதங்கள் முடிந்துவிட்டது.

“என்னம்மா.. எப்போ எழுந்திருச்ச..?”

“எங்கே.. தூங்கினாத்தானே.. எழுந்திருக்க முடியும்?”

“என்னாடா.. சொல்றே..”

’ஆமாம்ப்பா.. சாப்ட உடனே நீங்க வந்து படுத்துட்டீங்க.., சமையல் கட்டுல எல்லா வேலய முடிச்சுட்டு, பாத்ரூம் போய்ட்டு வந்து, படுக்கையில சாஞ்சதுமே இந்த சத்தம் ரம்பமாயிடுச்சு’ என்று சொல்லும் போதே கொட்டாவி வந்தது அவளுக்கு.

மணியை பார்த்தேன். இரண்டு நாற்பது. என்ன சத்தமது என்பதை அறிந்து கொள்ள.. சட்டையை மாட்டி வாசல் கதவை திறந்து பார்த்தேன். நடை பாதை விளக்குகள் தவிர வேறு வெளிச்சம் ஏதுமில்லை. எல்லா வீடுகளின் கதவுகளுமே உட்பூட்டியிருந்தன. எங்களிருவரின் தூக்கத்தை கெடுத்த அந்த அலறல் மற்றவர்களை பாதிக்காதது ஆச்சரியத்தை தந்தாலும், ஒரு வேளை இது பிரமையாக இருக்குமோ என்ற எண்ணம் எழுந்த போதே.. “யா…அல்லா….. ச்சோட்தே.. முஜே.. ச்சோட்தே..” என்ற சத்தம் நிஜத்தை உறைத்தது.

அரவமற்ற இரவு. வேகமாய் வீசிய குளிர்காற்று உடம்பில் பட்டதும் முடிகள் எல்லாம் குத்திட்டு நின்றன. மீண்டும் அமைதி நிலவியது. பாக்கெட்டிலிருந்து சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தேன். எந்த சத்தமுமில்லை. சில்வண்டுகளின் இரைச்சலைத்தவிர.

அப்படியே நடந்து பால்கனி வழியே சொஸைட்டியின் வாசலை எட்டிப் பார்த்தேன். எதையுமே உணராதவனாக வாட்ச்மேன் ராம்லால் தம்பாக்கூவை உள்ளங்கையில் வைத்து தட்டிக்கொண்டிருந்தான். திரும்பி வீட்டின் வாசற்கதவை தொட்டதும் மீண்டும் அதே சத்தம்.

இப்போது தெளிவாக உணர முடிந்தது. அந்த சத்தம் கட்டிடத்தின் பின் புறத்திலிருந்து தான் வந்தது. நடுநிசியில் போய் பார்ப்பதை விட , காலையில் பார்த்துக்கொள்ளலாம்.. என்ற யோசனையில் வீட்டுக்குள் வந்து,கதவை பூட்டிவிட்டு உள்ளறைக்குள் போனேன்.

“என்னாச்சு?’’

“ஒருபயலும் கதவ தெறக்கல.. வாட்சுமேனும் தேமேனு உக்காந்துருக்கான். நாம பில்ல்டிங் பின்னாடி தான் சத்தம் வருதுன்னு நெனக்கிறேன். காலயில பாத்துக்கலாம். பயப்படாம தூங்கு..”

விளக்கை அணைத்துவிட்டு கட்டுலில் விழுந்தேன். போர்வையை தலையோடு போர்த்திய ரேவதி, துணைக்கு என் வலது கையையும் உள்ளிழுத்துக்கொண்டாள்.

காலையில் இருவரும் அலுவலகம் செல்லும் அவசரகதியில் இருந்தோம். வாட்சுமேனையும் காணாததால் மாலையில் திரும்பும்போது கேட்டுக்கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் கிளம்பினோம்.

*

சர்ச் கேட்டின் நான்காவது பிளாட் பாரத்திலிருந்து விரார் பாஸ்ட் மின்தொடர் வண்டி பிடித்து, நாளசோப்ரா வந்திறங்கியபோது மணி எட்டு ஆகியிருந்தது. இது தான் எங்களிருவரின் நேரம். எட்டு மணி நேர வேலைக்கு போக வரயென நான்கு மணி நேரத்திற்கு அதிகமாய் திண்று கொண்டது மும்பை வாழ்க்கை.

இரவு சமையலுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிக் கொண்டு, பேசியபடியே சொஸைட்டியை அடைந்தோம். வாசலில் ராம் லாலை காணோம்.

“ரேவா.. நீ ரூமுக்கு போ.. நான் வாட்சுமேன பாத்துட்டு வாரேன்” என்றபடி அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறையை நோக்கி நடந்தேன்.

உள்ளே பம்ன் ஸ்டவின் சத்தம் கேட்டது.

‘ராம் லால்..’

“.. .. ..”

மீண்டும் சற்றே உரக்க சத்தமிட்டேன்.

‘ஹா.. சாப்!’ என்றபடி கதவை திறந்து எட்டிப் பார்த்தான்.

“உன்னால ஒரு வேல ஆவனுமே” என்று இந்தியில் சொன்னேன்.

‘தோ.. ரொண்டு நிமிஷத்துல வரேன் சாப்! இன்னும் ஒரு விசில் வந்துடுச்சுன்னா.. ஸ்டவ்வை அணச்சுட்டு வந்துடுவேன்’

அவன் வருவதற்குள் ஒரு சிகரெட்டை பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் பற்ற வைத்தேன். பாதி கரைவதற்குள்ளாகவே வந்து சேர்ந்தான் ராம் லால்.

டார்ச் லைட்டை எடுத்துக் கொள்ளும் படி கூறிவிட்டு, சொஸைட்டியின் வாயிற்கதவு நேக்கி நடக்கலானேன். பின்னாலேயே லைட்டுடன் ஓடிவந்தான் அவன்.

‘என்னாச்சு சாப்?’

நம்ம பில்டிங் பின்னாடி கொஞ்சம் பாக்கனும். வா.. சொல்றேன்” என்றபடி நான் சொஸைட்டியின் வெளிமதிற் சுவரை ஒட்டினார் போல நடக்கலானேன். டார்ச்சை உயிர்பித்து பின்னாடி அடியோற்றினான் ராம்லால்.

இடுப்பு உயரம் வளர்ந்த செடிகளைத்தள்ளி ஒதுக்கி விட்ட படி நடந்தோம். குப்பைகள்.., குப்பைகள்.. சிதறிக்கிடந்த குப்பைகள், பிளாஷ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட குப்பைகள், மது புட்டிகள் தவிர காய்ந்த சில நாப்கின்கள்.. வேறு எதுவுமில்லை. அங்கு யாரும் வந்து போனதற்கான அடையாளங்கூட இல்லை. ‘பின் எங்கிருந்து சத்தம் வந்திருக்கும்?’ யோசனையுடனே.. கீழிருந்து எனது ரூமை பார்த்தேன். வீட்டின் உள்ளறை தெரிந்தது.

‘ஏதுனாச்சும் விழுந்துடுச்சா.. சாப்?’

‘ஒன்னுமில்லப்பா’ இவனிடம் சொல்லி விடலாம் தான். ஆனால் நமக்கு மட்டுமே தோன்றிய பிரமையா இருந்தால்.. நகைப்புக்கு ஆளாக வேண்டியிருக்குமென்பதால் சொல்ல வில்லை.

‘போலாம் வா’ என்றபடியே நான் திரும்பினேன். என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு, திரும்பி நடக்கலானான். இப்போது அவன் முன்னால் போக நான் பின் தொடர்ந்தேன். சொஸைட்டியின் வாசலை அடைந்தவுடன் மீண்டும் கேட்டான், ‘என்ன  à®†à®šà¯à®šà¯ சாப்?’

‘ஒண்ணுமில்லப்பா.. பொறவு சொல்றேன்’ என்று அவனை அனுப்பி விட்டு மாடிப்படிகளில் ஏறினேன்.வீட்டுக்குள் நுளைந்ததுமே, ‘என்னப்பா ச்சு?’ என்று கேட்டபடி தேனீரை நீட்டினாள் ரேவா.

‘பில்டிங் பின்னாடி யாரையும் காணோம். யாரும் வந்து போனதுக்கான அடயாளங்கூட இல்ல’

‘அப்டீனா.. அந்த சத்தம்..’

‘அதுதா எனக்கும் புரியல.. ஒரு வேல ஏதாவது பிரமையா இருக்குமோ?’

‘அதெப்படிப்பா.. பிரமையா இருந்தா ஒருத்தருக்கு இருக்கலாம். நாம ரெண்டு பேருக்குமே எப்படி ஒரே சமயத்துல..? எனக்கென்னமோ பயமாயிருக்குப்பா.. வேற வீடு பாக்கலாமே?’

‘என்ன பேசற நீ.. நெனச்சவுடனே வீடு மாறதுன்னா.. ஆவுற காரியமா? மொல்ல பாத்துக்கலாம்’

‘ஒங்களுக்கென்ன மாசத்துல பத்துநாளு பார்டீங்கள பாக்கப் போற சாக்குல வெளியூர் கெளம்பிடுறீங்க.. இங்க தனிய கெடந்து பயந்து சாகுறது நாந்தானே..’

”என்னமோ நா விரும்மி ஊர்சுத்துற மாதிரி சொல்றீயே.. பூனாவுல இருந்தப்பையும் இப்படிதானே போய்கிட்டு இருந்தேன்..! இப்ப என்ன செய்யனுங்கிற?”

‘வீட்டுக்கார அண்ணாச்சிகிட்ட வெவரத்த சொல்லுவோம். வாங்க இப்பவே..’

பிணக்கத்தில் முடிய வேண்டிய பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாயிற்று. இருவரும் அண்ணாச்சியின் கடையை நோக்கி போனோம். இரண்டொரு வாடிக்கையாளர்கள் நின்று கொண்டிருக்கா.. கடைப் பையன்கள் இருவரும் பம்பரமாக சுழன்று கொண்டிந்தார்கள். அண்ணாச்சி யாருடனோ தொலைபேசியில் கதைத்துக் கொண்டிருந்தார். எங்களைப் பார்த்ததும் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு.., தன் பேச்சைத் தொடர்ந்தார். அவர் பேசி முடிக்கட்டுமென நாங்கள் காத்திருந்தோம்.

பத்து நிமிடத்தில் தனது பேச்சை முடித்துக்கொண்டவர், “ என்ன தம்பீ.. ஏதுனாச்சும் அயத்துடீங்களா?” என்று கேட்டார்.

“அதெல்லாம் ஒன்னுமில்லங்க அண்னாச்சி.. ஒங்கட்டதா ஒரு வெசயம் பேசனும்”

“டேய்.. கடய பாத்துக்க.. “ என்று சற்று வளர்ந்த கடைப் பையனிடம் சொல்லிவிட்டு, கடையிலிருந்து வெளியேறி, எங்களிடத்து வந்தார்.

“சொஸைட்டியில ஏதனாச்சும் சொல்லுதாய்ங்களா..?”

“அதொல்லாமில்லங்க.. கொஞ்ச நாள வீட்டுல தூங்க முடியல அண்ணாச்சி..” என்று தொடங்கினாள் ரேவதி.

“என்னம்மா.. ஆச்சு.. எவனாவது ஜகடா பண்றாங்களா?”

“அய்யையோ.. அதொல்லாம் ஒண்ணுமில்ல”

“பின்ன..”

“ராத்திரி பூரா ஒரே சத்தமா கேக்குது.. பில்டிங் பின்னாடி-யிருந்து தா வருதுன்னு நெனைக்கேன். உள்ளறையில படுத்தொறங்க முடியலை.. காதுக்குள்ளார வந்து கத்துற மாதிரி இருக்கு”

“ப்பூ.. இவ்வளவுதானா..”

“என்ன அண்ணாச்சி இப்படி சொல்லீட்டிய?” என்றோம் நாங்களிருவரும் அதிர்ச்சியில்!

“அது.. பயப்படுற மாதிரி ஒன்னுமில்லைங்க.. நம்ம பிளாட்டுக்கு நேர் கீழ் வீட்டுல.. ஒரு கோட்டிக்காரன் இருக்கான். அவந்தான் கத்தியிருப்பான். புனா ஆஸ்பத்திரியில இருந்தே அவன வெளியில அனுப்பு சுட்டாங்க.. வயசான ஆளு வேற.. நீங்களே சொல்லீடுங்க.. அவிய்ய பாத்துப்பாக.. நா வேண்னா நாளக்கி காலயில சொல்லிகிருதேன்” சொல்லிவிட்டு கடைக்குள் போய் விட்டார்.

ஒருவரையோருவர் பார்த்துக்கொண்டோம். திருமபவும் சொஸைட்டியை பார்த்து நடக்கத் தொடங்கினோம். எங்களின் தூக்கத்தை தின்ற அந்த சத்தத்திற்கு ஏன் மற்ற எவரும் எழுந்திரிக்க வில்லை? எதையுமே கேட்காதது போல வாட்ச் மேன் தம்பாக்கூ தட்டிக் கொண்டிருந்தது.. போன்ற எல்லா சந்தேகங்களும் பளிச்சென புரிந்தது. அவர்கள் அந்தக் குரலை பழகிப் போய் இருந்தார்கள்.

முதல் தளத்தில் அந்த வீட்டு வாசலில் இருந்த காலிங்பெலை அழுத்திவிட்டு சில நிமிடங்கள் காத்திருந்தோம். ஓர் இளம் பெண் கதவைத் திறந்து சிறிய இடைவெளி வழியாக எங்களைப் பார்த்தார். அவருக்கு பின்னால் சுவற்றில் பெரிய மெக்கா மசூதியின் படம் மாட்டப்பட்டிருந்தது.

‘என்ன வேணும்?’ – இந்தியில் கேட்டார்.

“நாங்க உங்க வீட்டுக்கு மேல் வீட்டுக்காரங்க.. உங்க கூட கொஞ்சம் பேசனும்.”

‘ஒரு நிமிசம்’ என்று கதவை சாத்திவிடார்.

மீண்டும் கதவு திறந்தது. இம்முறை கதவைத் திறந்தது முப்பது வயது மதிக்கத்தக்க ஓர் இளைஞன். தலையில் குள்ளா, மீசை மழித்த முகத்தில் தாடி.

‘ப்ளீஸ்.. கம் இன்..!’

நாங்கள் உள்ளே சொன்று ஓரத்தில் போடப் பட்டிருந்த சோபாவில் அமர்ந்தோம்.

‘சொல்லுங்க.. என்ன உதவி செய்யட்டும்?’ என்று அந்த இளைஞன் அழகான தன் இந்தியில் பேச்சை தொடங்கினான்.

“இல்ல.. அது.. வந்து..”

‘அட.. சும்மா.. சொல்லுங்க.. அதுசரி, மொதல்ல தண்ணிய எடுத்துக்குங்க.. டீ, குளிர் பானமா.. எது குடிப்பீங்க..?’

“பரவாயில்லங்க..”

‘ச்சே..ச்சே.. அப்படி சொல்லக்கூடாது. எது வேணும்னு சொல்லுங்க..’

“டீ போதும்”

‘நூர்.. சாயா மண்ணுமா’ என்று உள்ளறையை நோக்கி குரல் கொடுத்தான். வீட்டின் சுவர் முழுக்க உருது மொழியிலான பலகைகளும், விதவிதமான மசூதியின் படங்களும் மாட்டப் பட்டிருந்தன. பரஸ்பர அறிமுகத்தோடு பேச்சுதொடங்கியது.

தேனீர் வந்தது, கூடவே ஒரு தட்டு நிறைய காரியும். தேனீரை சுவைத்த படியே நேரடியாக விஷயத்திற்கு வந்தேன் நான்.

“கொஞ்ச நாள.. வீட்டுல தூங்க முடியல.. என் மணைவி ரொம்ப பயப்பறா..மாசத்துல பாதி நாளு ஆபீஸ் வேலயா வெளியிலயே தங்கிருவேன்.. இவ தனியா வேற இருக்கிறதாலா.. ரொம்பவே பயப்பறா.. நா என்ன சொல்ல வாரேன்னு புரியுதுங்களா..?”

‘இல்ல..சார்.. நீங்களே.. முழுசா பேசிடுங்களேன்..’ என்ற அவன் முகத்தில் ஏதோவொரு கலவர ரேகை படரத்தொடங்கியது.

“சரி.. நேரடியாவே விஷயத்துக்கு வந்துறேன்.. உங்க வீட்டுல யாருக்கோ மனநிலை சரியில்லையாம்.. அவரு போடுற சத்தம் தான் எங்க தூக்கத்த கெடுக்குது. அவர ஏதவது நல்ல மருத்துவமணையில சேர்துடலாமே..?”

‘ஒரு நிமிசம் ரொண்டு பேரும் உள்ளறை வரைக்கும் வர முடியுமா..?’ என்றபடி எழுத்தான் அவன். என் கைகளைப் பற்றி வேண்டாம் என்பது போல தடுத்தாள் ரேவதி.

‘பயப்படாதீங்க.. ஒன்னும் ஆகாது..’ ரேவாவின் கை மொழியை உணர்ந்தவன் போல பேசினான். மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே போனோம்.

அது ஒரு பெரிய அறை. ஒரு கட்டில் தென்பட்டது. போதிய வெளிச்சமில்லை. நீலக்கலரில் ஒரு ஜீரோ வாட்ஸ் மட்டும் எரிந்து கொண்டிருந்தது. மின் விசிறி சுழலும் சப்தம் கேட்டலும் புழுக்கத்தை வாசனையாலும் உணர முடிந்தது. அறைக்குள்ளும் ஹாலில் பார்த்தது போலவே சுவர் முழுக்க படங்கள்.

அந்த குறைந்த ஒளிக்கு கண்கள் பழகியதும், மெத்தை போடப்பட்ட கட்டிலில் ஒரு உருவம் சுருண்டு படுத்துக் கிடந்தது தெரிந்தது. அந்த உருவத்தை மெல்ல நெருங்கினான் அவன். ‘வாப்பா..’ என்று மெதுவாய் அவன் அழைத்ததும் சுருண்டு கிடந்த உருவம் அசைவது தெரிந்தது.

‘நூர் அந்த லைட்ட போடு’ என்று அவன் சொன்னதும், எங்களுக்கு பின்னால் நின்றிருந்த அவள். சுட்சை தட்டி விட, அறைக்குள் குழல் விளக்கின் வெளிச்சம் பரவியது. அந்த இளைஞனின் கைகளைப் பற்றியிருந்த அந்த பெரியவருக்கு அறுபது வயது இருக்கலாம். முகமே தெரியாத அளவுக்கு தாடி வளர்த்திருந்தார். அவர் கையில் பச்சை கலரில் ஒரு மாலையும் இருந்தது.

வெளிச்சத்தில் எங்களைப் பார்த்ததும் அவரின் முகம் மாறத்தொடங்கியது. அவ்விளைஞனின் கையை உதறி விட்டு, அவனையும் தள்லிவிட்டு, கட்டிலுக்கு கீழே ஒளிந்து கொண்டார். அந்த இளைஞன் குனிந்து.., ‘வாப்பா’ என்று ஏதோ சொல்ல எத்தனிப்பதற்குள் அவர் கத்தத் தொடங்கினார். வீடே அதிரும் படி அலரதொடங்கிய அவரது குரல் சுவர்களில் பட்டு அந்த அறைக்குள்ளேயே சுற்றியது.

‘ச்சோட்தே.. ச்சோட்தே.. யா.. அல்லாலாலாலா.. முஜே பச்சாவ்வ்வ்’ என்று மீண்டும் மீண்டும் அதையே சொன்னார். கூப்பிய அவரது கைகள் கட்டிலின் கீழ் தெரிந்தது. நான் திரும்பி ரேவதியை பார்த்தேன். வியர்த்துப் போன அவள் முகத்தில் அருளேயில்லை. அறையை விட்டு வெளியே போய்விடுவோம் என்பது போல சைகை செய்தாள்.

நான் குழப்பத்துடன் அந்த இளைஞனை பார்க்க.. அவன் எங்களை ஹாலுக்கு அழைத்து வந்தான். அந்த பெண் மட்டும் பெரியவரை சமாதனப்படுத்தும் விதத்தில்  à®ªà¯‡à®šà®¿à®•à¯ கொண்டிருந்தது கேட்டது.

“யாரிவர்.. என்னச்சு?”

’அவரு என் மனைவி நூர்ஜானோட அப்பா.. சொந்தமா பெரிய செருப்புக் கட வச்சிருந்தாரு. அவருக்கு அஞ்சு பொண்ணுகளும், ரெண்டு பையனுமா இருந்த அமைதியான குடும்பம் சார் அது. தொன்னூத்தி மூணுல நடந்த மதக்கலவரத்துல பாதிக்கப்பட்டவங்கள்ல.. எங்க குடும்பமும் ஒன்னு. கண் எதிரிலேயே மனைவி புள்ளைங்கன்னு எல்லோரையும் இவரு பலி கொடுத்துட்டுட்டாரு. அப்போ நூர்க்கு பதினாலு வயசு.. இவங்களோட பக்கத்து வீடு என்னோடது. என்னோட குடும்பமும் அந்த கலவரத்துல தான் பலியாகிடுச்சு. அப்ப நா உறவினர் வீட்டு விசேசத்துக்காக ஹைத்ராபாத்துல இருந்தேன்.

அந்த கலவரத்துல எல்லாத்தையும் எல்லாரையும் இழந்து, மனநிலை சரியில்லாத அப்பாவோட நூர் தனியா இருந்தா.. எனக்கும் யாரும் இல்ல. அவளுக்கும் யாருமில்லாதனால.. அவள நிக்காக் பண்ணிக்கிட்டேன். அவருக்கு சரியாகுறவரைக்கும் கொழந்த ஏதும் வேணம்னு முடிவு பண்ணி இருக்கோம்.

அவருக்கு எங்க ஆளுங்களத் தவிர வேறு யாரப் பாத்தாலும்.. அந்த கலவர சம்பவம் நினைவுக்கு வந்திடும். உயிர் பயத்துல அவர் கத்துரது வாடிக்கையாகிப் போச்சு சார்.

பூனாவுல தான் இத்தன நாள் வச்சிருந்தோம்.. அங்கேயும் கைய விரிச்சுட்டாங்க.. அதோட அவருக்கு கேன்சர் வேற இருக்குறது நாள.. ரொம்ப நாளக்கி இல்லனு சொல்லிட்டாங்க..  à®•à®Ÿà¯ˆà®šà®¿ காலத்தையாவது எங்க கூட அவரு இருக்கட்டுமேன்னுதா கொண்டு வந்துட்டோம். ப்ளீஸ்..சார்.. அவர் எங்க கூட கடைசி காலத்தயாவது கழிக்கட்டுமே.. சொஸைட்டியில எல்லோருக்கும் இந்த சத்தமும் பழகிப் போனது நாள அவங்க எல்லோரும் ஒத்துகிட்டாங்க..

இன்னும் கொஞ்ச காலம் தா சார்.. ப்ளீஸ்.. நீங்களும் ஒத்துகிட்டா எங்களுக்கு ஒரு மனசுக்கும் ஆறுதல் கிடைக்கும்..’ என்று அவ்விளைஞன் கைகள் கூப்பி தொழ.. ஆதரவாய்.. அவனது கூப்பிய கைகளை இறுகப் பற்றி விடைபெற்று வெளியே வந்தோம். மெல்லிய சாரல் காற்று ஒருவிதமாய் மனநிலையை சமன் செய்தது.

நன்றி: புதியபார்வை, ஏப்1-15.2006

This entry was posted in சிறுகதை and tagged , , , , , , , . Bookmark the permalink.

One Response to கடந்து போதல்.. (சிறுகதை)

  1. மனம் கனக்கிறதே மன்னவா 🙁
    வெறும் கதையென்று தேற்ற முடியவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.