உள்ளம் கவர் கோமாளி – வேலு சரவணன்

 

“………………………….”

பள்ளியின் பிரார்த்தனை மைதானம் மாணவர்களால் நிரம்பி வழிகிறது. வழக்கமாக மாணவர்கள் கூடுமிடத்தில் இருக்கும் சிறு சத்தம்கூட அங்கே இல்லை. எல்லோரும் எதையோ எதிர்பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்கள். மாணவர்களின் பின் வரிசையில் ஆசிரியர்கள் டேபிள் போட்டு அமர்ந்திருக்கிறார்கள்.

தூணில் மறைந்திருந்த கோமாளி ஒருவர், பலத்த ’ஹோய்’ ஓசையுடன் மாணவர்களின் மத்தியில் குதித்து வருகிறார். உடனடியாக ஆயிரம் வாட்ஸ் பாய்ந்த உற்சாகத்தில் மாணவர்கள் பதிலுக்கு எழுப்பும் குரல் விண்ணைத் தொடுகிறது. இத்தனை நேர நிசப்தம் இந்த ஆரவாரத்திற்கான முன் தயாரிப்புதானோ என்று சந்தேகம் எழுகிறது. அடுத்த ஒரு மணி நேரமும் அந்தக் கோமாளி, தன் குழுவினருடன் கதை சொன்னபடி நாடகம்போல நடித்துக் காட்டுகிறார். இடையிடையே மாணவர்களிடம் கேள்விகளையும் வீசுகிறார். அவர்களும் மிகுந்த உற்சாகமாக அக்கோமாளியின் கேள்விகளுக்குப் பதில் சொன்னபடி கதை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இது, தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் நிகழ்ச்சி என்று நினைத்து விடாதீர்கள். ‘வேலு மாமா’ என்று குழந்தைகளால் அன்புடன் கொண்டாடப்படும் பேராசிரியர் வேலு சரவணன் செல்லுமிடம் எல்லாம் இதே கதைதான். கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக குழந்தைகளுக்குக் கதை சொல்லியாகவும், நாடகக் கலைஞராகவும் அறியப்பட்டு வரும் வேலு சரவணன், இந்த ஆண்டின் ‘செல்லமே‘ விருது நாயகனாகிறார். அவரிடம் பேசுவதற்காக உதவிப் பேராசிரியராக அவர் பணியாற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கே சென்று சந்தித்தோம்.

”புதுக்கோட்டை பக்கத்துல இருக்குற கம்பர் கோயில்ங்கிற கிராமம்தான் நான் பிறந்த ஊர். எனக்கு எங்க ஊர்னா ரொம்பப் பிடிக்கும். ஒரு கடை கூட அங்கே கிடையாது. அம்புட்டு சின்ன ஊரு. எவ்வளவுதான் சுத்தினாலும் எல்லா முகங்களுமே தெரிஞ்ச முகங்களாக இருக்கும். எல்லோரையும் உறவுமுறை சொல்லி கூப்பிட்டுக்குவோம். பன்னிரண்டாவதுக்கு அப்புறம் மேலே படிக்க வைக்க, எங்க அண்ணன் என்னை அருப்புக்கோட்டைக்கு அனுப்பி வச்சார். அப்பத்தான் இந்த ஊரையும் மக்களையும் பிரியுறோமேன்னு எண்ணம் வந்துச்சு. அதனால படிப்பு மேல எனக்குக் கோவம் வந்துச்சு. அந்தக் கோபம் இன்னமும் இருக்கு.

‘கட்டாயமா கல்லூரி போகணும்‘னு அண்ணன் ஏன் என்னைய அனுப்பினார்னா.. அந்த வருசம்தான் என்னோட அப்பா காலமானார். அப்பா இல்லாத பையனைப் படிக்கவிடாம தடுத்துட்டான்னு அண்ணனை யாரும் சொல்லிடக் கூடாதுன்னு, கஷ்டத்துலேயும் என்னைய கல்லூரிக்கு அனுப்பினார். நானும், அண்ணனுக்குக் கெட்டபேரு ஏதும் வந்துடக் கூடாதேன்னுதான் பி.எஸ்.ஸியே படிச்சேன். கல்லூரி ஆண்டுவிழாவுல நாடகம் எல்லாம் போட்டோம். அப்பத்தான் எனக்கு இதுல ஆர்வமே வந்தது. ஊருக்குள்ளேயும் நண்பர்களை வச்சுகிட்டு குட்டி குட்டியா நாடகங்கள் போட்டோம். கல்லூரி இறுதியாண்டுத் தேர்வு எழுதினதும், ஏதாவது வேலைக்குப் போயிடுவோம்னு தூத்துக்குடி பக்கம் பார்த்து வண்டி ஏறிட்டேன். ஏன்னா.. நான் பாஸாகவே மாட்டேன்னு நினைச்சேன். ரிஸல்ட் வர்ற அன்னிக்கு ’ரிசல்ட் பார்க்க வர்றியாடா?’ன்னு நண்பர்கள் போன் பண்ணி கூப்பிட்டாங்க. நான் வரலைன்னு சொல்லிட்டேன். ஆனா எப்படியோ பாஸாகிட்டேன். அதை நண்பர்கள் சொன்னபோது நம்பிக்கையே வரலை. அந்தச் சமயத்துலதான் தினசரி பத்திரிக்கைகளில் பாண்டிச்சேரியில நாடகத்துறை துவங்கப் போறாங்க. விருப்பமானவங்க விண்ணப்பிக்கலாம். பெரிய எதிர்காலமெல்லாம் இருக்குன்னு விளம்பரம் வருது. எனக்கு இந்த ஆட்டம் பாட்டத்துல ஆர்வம் இருக்குறது அண்ணனுக்கும் தெரியும். அவரு மனு போடச் சொன்னாரு. நானும் போட்டேன். இடம் கிடைச்சிடுச்சு. நாளைய சூப்பர் ஸ்டார் நாமதாண்டான்னு நினைச்சுகிட்டு வந்துட்டேன். ஆனா.. வந்த பிறகுதான் தெரிஞ்சது. இந்த உலகமே வேறன்னு. கொஞ்சம் மனசு சோர்வானாலும், சீக்கிரமே என்னை நானே தயார்படுத்திக்கிட்டேன்.

இங்கே வந்த பிறகுதான், நாடகத்துலேயே இத்தனை வடிவங்கள் இருக்குன்னு தெரிஞ்சுக்க முடிஞ்சது. நமக்கான இடம் இதுதான்னு படிக்க ஆரம்பிச்சுட்டேன். அதோட இந்திரா பார்த்தசாரதி, பிரபஞ்சன் மாதிரியான இலக்கிய உலகின் ஜாம்பவான்கள் எனக்கு ஆசிரியர்களாக இருந்திருக்காங்க. அதோட, இந்தத் துறையில படிக்க வந்தவங்களிலேயே நான்தான் வயசுலேயும் உருவத்துலேயும் சின்னப் பையன். மத்தவங்க எல்லாம் பெரிய பெரிய ஆளுங்க. இவங்க மூலமா வாசிப்புப் பழக்கமும் எனக்கு ஏற்பட்டுச்சு. பல புதிய விசயங்களும் அறிமுகமாச்சு.

அப்போ ஒரு நாடக விழா நடத்தினாங்க. அதுக்கு இயக்குனர் பாலச்சந்தர் எல்லாம் வந்திருந்தாங்க. மத்தவங்க நாடகங்களில் திரைக்குப் பின்னாடிதான் எனக்கு வேலை. நடிக்க வாய்ப்பு கிடைக்கலை. நான் ரொம்ப சின்னப் பையனா இருந்தது ஒரு காரணம். சின்ன வயசுல என்னோட தாத்தா சொன்ன கதை கடல் பூதம். என்னோட ஆசிரியர்கள்கிட்ட அனுமதி வாங்கி, அந்தக் கடல் பூதத்தை சிறுவர் நாடகமாக்கினேன். கூட படிச்சிகிட்டு இருந்தவங்கள வச்சே நாடகத்தைப் போட்டேன். நல்ல ரெஸ்பான்ஸ். எல்லோரும் பாராட்டினாங்க. அந்த விழாவுக்கு, பாண்டிச்சேரி பள்ளிக் கல்வி இயக்குநர் வந்திருந்தார். அவருக்கும் நாடகம் பிடிச்சிருந்தது. ‘பாண்டிச்சேரியில் இருக்குற எல்லா பள்ளிகளிலும் இதை நாடகமாகப் போடுங்க‘ன்னு சொல்லிட்டார். சந்து சந்தாக பாண்டிச்சேரி முழுக்க கடல் பூதம் போயிட்டு வந்தது. இதுவரைக்குமே சுமார் நாலாயிரம் தடவை போட்டிருக்கேன். அதேமாதிரி ‘குதூகல வேட்டை‘ன்னு ஒரு நாடகம். இதை மூவாயிரம் முறைக்கும் மேல் போட்டிருக்கோம். ‘தேவலோக யானை‘ன்னு ஒரு கதை. இதையும் ஆயிரம் முறைக்கு மேல போட்டிருக்கோம்.

வானரப்பேட்டைங்கற இடத்துலேயிருந்து நாடகம் போட ஒரு ஆசிரியை கூப்பிட்டாங்க. சரின்னு போய் இறங்கினா, அத்தனையும் பால்வாடி பசங்க. குட்டிக் குட்டி பாப்பாக்கள். அவங்களைச் சிரிக்க வைக்கணும். சவாலா எடுத்துகிட்டு கடல் பூதம் நாடகம் போட்டேன். அதுல ‘குபீர்‘னு பூதம் வந்தபோது, ஒரு பாப்பா ‘வீல்‘னு அலறிடுச்சு. அம்புட்டுதான்.. அங்க இருந்த ஆயா வெளக்குமாத்தைத் தூக்கிட்டு வந்துட்டாங்க. கடுமையா, ‘போங்கடா வெளியே‘ன்னு திட்டினாங்க. ஆனா, டீச்சர் ஆயாவைச் சமாதானப்படுத்தி, அந்தப் பாப்பாவைத் தூக்கிகிட்டு வெளியில போனாங்க. பூதம் வேடம் போட்டவன் ஒரு சின்னப் பையன். அவன் ஆயாவுக்குப் பயந்துகிட்டு தூணுக்குப் பின்னாடி போய் ஒளிஞ்சுகிட்டான். வெளியில வரல. அப்புறம் அவனையும் சமாதானப்படுத்தி அழைத்துவந்து நாடகம் போட்டோம். அந்த முழு நாடகத்தையும், பயந்து அழுத அந்தப் பாப்பா வெளியே இருந்த ஜன்னல் வழியா பார்த்துகிட்டே இருந்தது. கண்ணுல நீர் கோர்த்து இருந்த அந்தப் பாப்பா, ஒரு கட்டத்துல குலுங்கிக் குலுங்கிச் சிரிச்சது. இதை என்னால என்னிக்குமே மறக்க முடியாது.

பொதுவாகவே, நான் போற இடத்திலெல்லாம் பள்ளிக்கு ஒரு கோமாளி வேண்டும்னு பேசுவேன். ‘பாடம் பாடம்‘னு மாணவர்கள் சோர்ந்துபோய் இருக்கும் சமயம், திடீர்னு கலர் கலரா ஆடை அணிஞ்சுண்டு ஒரு பபூன் வகுப்பறைக்குள் வந்தால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும்? பட்டுக்கோட்டையில் ஒரு பள்ளியில இதை நடைமுறைப்படுத்தி இருக்கோம்னு அவங்க எனக்குச் சொன்னபோது உண்மையிலேயே ரொம்ப சந்தோசப்பட்டேன்.

வேலு சரவணன்
வேலு சரவணன்

நாடகம்னாலே, அது இரவு நேரத்துல போட்டாதான் நல்லா இருக்கும்னு ஒரு கருத்து இருக்கு. ஆனால், என்னோட நாடகங்களில் பலவும் பகலில் வெளிச்சத்தில் போட்டதுதான். அதோட, ‘நாடகம் போடப்போற இடத்துல மேடை வேணுமா சார்?’னு கேப்பாங்க. நான், வேண்டாம்னு சொல்லிடுவேன். குழந்தைகளையும் உள்ளடக்கிச் செய்யறது என்னோட நாடகமுறை. அதுக்கு எதுக்கு தனியா மேடை? எனக்கு மேடையின்னா, என்னிக்குமே அது குழந்தைகளின் மனசுதான்.

படங்கள்: வேலுசரவணனின் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து.

நன்றி: செல்லமே மாத இதழ் டிசம்பர்-2014