இன்று உலகம் முழுவதும் பிற உயிர்கள் குறித்து சிறிதும் அக்கறையின்றி கோரமான முறையில் மனித உயிர்களைக் காவு வாங்கிக்கொண்டிருக்கிறது வன்முறை. அதிகார போதை, அடிமைப்படுத்தும் எண்ணம், மதம் மற்றும், சாதி என வெவ்வேறு முகமூடிகளில் இப்பாதகச்செயல் நடந்துகொண்டிருக்கிறது.
கொத்துக்கொத்தாக மனித உயிர்கள் மாண்ட வரலாற்றினை நாம் உலக யுத்தம் என்ற பெயரில் படித்திருப்போம். அப்படி இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா வீசிய அணுகுண்டு ஜப்பானின் ஹிரோஷிமாவையும், நாகசாகியையும் சின்னாபின்னமாக்கியது. அந்த இரண்டாம் உலக யுத்தம் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களைத் தின்று தீர்த்த பின்தான் ஓய்ந்தது.
அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமாவில் குண்டு வீசிய அன்றைய தினத்தில் மாயி-சான் என்ற சிறுமியும் அவளது பெற்றோரும் எப்படி அந்த நாளை எதிர்க்கொண்டார்கள், என்னென்ன சிரமங்களுக்குள்ளானார்கள் என்பதைச்சொல்லும் நூல்தான் இது. உண்மையில் மாயி-சானின் வாழ்க்கையைவிட, போரின் கொடூர முகத்தைக்காட்டும் கதை இது. இக்கதையினைப் படிக்கும் சிறார்கள் எதிர்காலத்தில் வன்முறையையும், போரையும் விரும்பமாட்டார்கள் என்று நூலாசிரியர் தோசி மாருகி நம்பிக்கை தெரிவிக்கிறார். எனக்கும் நிச்சயம் அவரது கனவு நனவாகும் என்றே தோன்றுகிறது.
அடிப்படையில் ஓவியரான தோசி மாருகி எழுதிய இந்நூல் முதலில் ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டது. பின் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்றும் போர் மேகங்கள் சூழந்துள்ள ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளிலும் மனித மனங்களில் அமைதிக்கான விதைகளைத் தூவியபடி இருக்கிறது இந்நூல்.
குழந்தை இலக்கிய எழுத்தாளரான கொ.மா.கோ. இளங்கோ தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். மொழிபெயர்ப்பு பற்றிச்சொல்லுவதாக இருந்தால், மிக எளிமையாக மொழி நடையில் சிறுவர்கள் படிக்கும்போது, போரின் கோர முகத்தை உணர்ந்துகொள்ளும் எளிய மொழியைக் கையாண்டிருக்கிறார்.
உங்கள் வீட்டுச்சிறுவர்கள்… ஏன் நீங்களும் கூட, படிக்கவேண்டிய நூற்பட்டியலில் இதனை சேர்த்துக்கொள்ளுங்கள்!
(நன்றி: செல்லமே- ஆகஸ்ட் 2015)
+++++++++++++++++++
நூல்: மாயி-சான்
எழுதியவர்: தோசி மாருகி
மொழிபெயர்ப்பு: கொ.மா.கோ. இளங்கோ
வெளியீடு:-
புக் ஃபார் சில்ட்ரன், (பாரதி புத்தகாலயம்)
எண்: 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை- 600018
தொலைபேசி:- 044- 24332424