பொறாமைப்படு!

kalki

கல்கி

பொறாமையின் பெருமையைக் குறித்து நீங்கள் எப்போதேனும் எண்ணிப் பார்த்ததுண்டோ? எனக்கும் இது வரையில் அது தெரியாமலேதான் இருந்து வந்தது, சில தினங்களுக்கு முன்பு அதன் பெருமை எனக்குச் சட்டென்று புலனாயிற்று பொறாமைப்படு’ என்னும் சூத்திரத்தில் நான் வாழ்க்கையில் வெற்றியடையும் இரகசியம் அடங்கியிருக்கிறது.

மேற்படி மகா ரகசியத்தை நான் எப்படிக் கண்டு பிடித்தேனென்று சொல்கிறேன் கேளுங்கள். ஒரு சமயம் நான் என்னுடைய சொந்தக் கிராமத்திற்குச் சென்றேன். நான் இறங்க வேண்டிய ஸ்டேஷனுக்கு முதல் ஸ்டேஷனில் எனக்குத் தெரிந்த ஒரு மனிதர் வந்து ரயிலேறினார். அவர் என் கிராமத்துக்குப் பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்தவர். நாங்கள் ஒருவரையொருவர் வீட்டு எருமைக் கன்றுக் குட்டியின் தேக செளக்கியம் உள்பட யோக கேடிமங்களெல்லாம் விசாரித்து முடித்தோம். பின்னர், ‘நம் ஸ்டேஷனில் வாடகை வண்டி கிடைக்குமா?’ என்று அவரைக் கேட்டேன். அதைப்பற்றி என்ன கவலை? என்னுடைய வண்டி வந்திருக்கும் என்றார் அந்த நண்பர். அந்தக் கணத்திலே வாழ்க்கையில் வெற்றியடையும் இரகசியத்தை நான் கண்டு பிடித்து, அதைக் கெட்டியாய் தலைப்பில் முடிந்து கொண்டேன்.

‘என்னுடைய வண்டி வந்திருக்கும்’ என்று அவர் கம்பீரமாய்ச் சொன்னபோது, என்னிடம் என்ன எதிர் பார்த்தார் என்று நினைக்கிறீர்கள்? “உனக்குச் சொந்த வண்டி கிடையாது. ஆகையால் நீ என்னிடம் பொறாமைப்படு” என்று அந்த நிமிஷத்தில் அவர் நெற்றியில் எழுதி ஒட்டியிருந்தது. ‘நல்ல வேளை இதற்குத் தான் உங்களைப் பான்ற நண்பர்களின் சிநேகம் வேண்டுமென்பது” என்று நான் பதிலளித்தேன். அப்போது அவர் முகத்தை மறுபடியும் நோக்கினேன். கொஞ்ச நஞ்சம் எனக்கிருந்த சந்தேகமும் நீங்கிவிட்டது. பொறாமையைப் போல் வாழ்க்கையில் வெற்றியடைவதற்குச் சிறந்த உபாயம் வேறில்லையென்று உறுதி பெற்றேன்.

ஸ்டேஷனரில் வண்டி வரவில்லை, ஒரு மணி நேரத்திற்கு முன்பாயிருந்தால் என்ன செய்திருப்பேன் தெரியுமா? ‘என்ன ஸார், மதிப்பாய் வண்டி வருமென்று சொன்னீர்கள். ஒன்றையும் காணோம்’ என்று அவரை மட்டந்தட்ட ஆரம்பித்திருப்பேன். ஆனால், இப்போது வாழ்க்கை இரகசியம் அறிந்தவனாதலின், அந்தப் பேச்சையே எடுக்கவில்லை. ‘சத்த வண்டி ஒன்று பிடிக்கலாமே?” என்றேன். ஆவணி மாதம், சாகுபடி காலம்; சத்த வண்டி, சத்தம் போடாத வண்டி ஒன்றையுமே பிடிக்க முடியவில்லை. கண்ணில் கண்டாலல்லவா பிடிப்பதற்கு என்னிடம் ஒரு கைப்பெட்டியும், படுக்கையும் இருந்தன. நண்பரிடம் சாமான் ஒன்றும் கிடையாது. ‘நாமே தலைக்கு ஒன்றாய் எடுத்துக் கொண்டு நடந்து போய் விடலாம் ஸார். இதிலெல்லாம் கெளரவ பாராட்டக் கூடாது’ என்று அவர் சொன்னார். கைப்பெட்டி நல்ல கனம். ஆனால், பார்ப்பதற்கு அந்தஸ்தாயிருந்தது அதை நண்பர் எடுத்துக்கொண்டார். நான் படுக்கையை துக்கிக் கொண்டேன்.

பாவம் கைப்பெட்டியின் கனத்தினால் அவர் தோள்கள் வெகு பாடுபட்டுக் கொண்டிருந்தன. அந்தச் சமயத்தில் அவரிடம் எனக்கேற்பட்ட நன்றியறிதவைச் சொல்லி முடியாது அந்த நன்றியைக் காட்டும் பொருட்டு அவர் என்ன காரியம் செய்யச் சொன்னாலும் செய்திருப்பேன். ஆனா அவர் கேட்டதென்ன? “என்னிடம் இன்னும் அதிக பொறாமைப்படு’ என்பதையல்லாது வேறெதுவுமில்லை. திவான்பகதூர் முருகப்பங்காருடன் தம்முடைய நெருங்கிய சிநேகிதத்தைக் குறித்தும், அவர் பிரிட்டிஷ் அரசாங்கத் தூதராய் நியூஸிலாந்து தேசத்துக்குச் சென்றபோது தாம் அவருடன் இலங்கை வரை போய் வந்ததைப் பற்றியும் அவர் கூறலானார். ‘ஆஹா பிரயாணம் செய்தால் அப்படியல்லவா செய்ய வேண்டும்? ரயில்வே ஏஜெண்ட் நேரில் வந்திருந்து எங்களுக்கு ஏற்படுத்தியிருந்த தனி முதல் வகுப்பில் ஏற்றிவிட்டுப் போனார், வழியெல்லாம் புஷ்ப ஹாரங்களும் பழங்களும் வந்து குவிந்து கொண்டிருந்தன அவற்றை நான் வாரி எல்லாருக்கும் கெர்டுத்துக் கொண்டிருந்தேன். அப்படியும் ஒருகூடை திராட்சைப்பழம் அழுகி போயிற்று இலங்கையில் அரசாங்க விருந்தினர்களாய் தங்கினோம். மூன்று மோட்டார் வண்டிகள் எப்பொழுது தயாராய்க் காத்துக் கொண்டிருந்தன..” இப்படி அவர் சொல்லிக் கொண்டே போனார். நானும் என்னால் கூடிய வரையில் முயற்சி செய்து எவ்வளவு பொறாமைப்படலாமோ அவ்வளவும் பட்டுக் கொண்டே வந்தேன். சாலையில் மைல் கணக்கு ஆக, ஆக, அவரிடம் என் நன்றியறிதலும், அந்த அளவில் என் பொறாமையும் ஏறிக் கொண்டே வந்தன.
பின்னால் இதைப்பற்றி நான் சாவகாசமாகச் சிந்தித்த போது, பழைய அனுபவங்கள் பல ஞாபகத்திற்கு வரலா யின. அவற்றில் ஒன்றை இங்கே சொல்கிறேன். நான் கிராமப் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அடுத்த ஊரிலிருந்து ஒரு நண்பர் அடிக்கடி வருவதுண்டு. அந்தப் பக்கத்திலேயே இந்த நண்பர்தான் முதன் முதலாகச் சைக்கிள் வண்டி வாங்கியிருந்தார், அவரைப் பார்த்து, “எப்பொழுது வந்தீர்கள்’ என்று யாராவது கேட்டால் ‘இப்பொழுதுதான் சைக்கிளில் வந்தேன்.” என்று பதில் சொல்வார் கொஞ்ச நாளைக்குப் பிறகு, ‘எப்பொழுது சைக்கிளில் வந்தீர்கள்?’ என்றே நான் கேட்கத் தொடங்கினேன். நல்ல வேளையாக நான் பரிகாசம் செய்கிறேனென்பது அவருக்குத் தெரியாது. ஆகவே, இன்று வரையில் அவர் என்னிடம் விசுவாசத்துடனேயே இருந்து வருகிறார்.
அப்போதெல்லாம் எனக்கு இந்த நண்பரைப் பற்றிக் கொஞ்சம் தாழ்வான அபிப்பிராயம் உண்டு. “பெரிய தற்பெருமைக்காரன்” என்று எண்ணுவேன். ஆனால், இப்பொழுது அவ்வெண்ணம் அடியோடு மாறிவிட்டது. இந்த நண்பருடைய நோக்கமென்ன? தான் சைக்கிள் சவாரி செய்வதைப் பற்றி நான் பொறாமைப்பட வேண்டுமென்பது தான். ஆனால், இது மனித வர்க்கத்துக்கே பொதுவாக ஏற்பட்ட தர்மம், உலகில் மனிதரெல்லாரும் மற்றவர்கள் தங்களிடம் பொறாமை கொள்ள வேண்டுமென்று ஆசைப்ப டுகிறார்கள். நானும் நீங்களும் இந்த விதிக்கு விலக்கல்ல. பின்னர் மேற்படி நண்பரை மட்டும் இழிவாய்க் கருதுவதின் பொருளென்ன?

பிறருடைய பொறாமைபோல் உலகில் ஒருவனுக்குச் சந்தோஷம் தரக்கூடியது வேறொன்றும் கிடையாது, ஸ்ர், திவான்பகதூர், ராவ்பகதூர் முதலிய பட்டங்களைப் பெரிய மனிதர்கள் ஏன் விரும்புகிறார்கள்? மற்றவர்களின் பொறாமையைக் கிளப்புவதற்காகத்தான் இல்லாவிடில் இந்தப் பட்டங்களில் என்ன இருக்கிறது? ஒத்துழையாமை இயக்கத்தின்போது பலர் இந்தப் பட்டங்களைச் சொல்லிக் கொள்ள வெட்கப்பட்டார்கள். ஏன்? ஜனங்கள் அப்பட்டங்களைக் குறித்துப் பொறாமைப்படுவதற்குப் பதிலாக இரக்கப்பட ஆரம்பித்தார்கள். அதுதான் காரணம்.

ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட மனிதர், தாம் ஒரு திவான் பகதூரின் சிநேகிதராயிருப்பது குறித்து என் பொறாமையைக் கிளப்ப விரும்பினார். அந்தத் திவான் பகதூர் என்ன செய்கிறார்? அவர் தமது சிநேகிதரிடம் ‘நேற்றுக்
கவர்னர் மாளிகையில் நடந்த விருந்தில் தங்களைக் காணோமே? அழைப்பு வரவில்லையா? ரொம்பவும் சிறப்பாய் நடந்தது’ என்று சொல்கிறார் கவர்னர் துரை செய்வதென்ன? சீனமக்குத் திரும்பிப் போனதும் தமது நண்பர்களையெல்லாம் கூட்டி வைத்துக் கொண்டு, இந்தியாவில் தமக்குக் கிடைத்த உபசாரப் பத்திரங்கள், வெள்ளிப் பெட்டிகள், ‘ஆஹா இந்தியா தான் சொர்க்க லோகம்” என்று கூறுகிறார். இவர்களெல்லாம் விரும்புவதென்ன? மற்றவர்களின் பொறாமையைத் தான்.

தேசியத் தொண்டர் ஒருவரை எடுத்துக் கொள்வோம் ”சென்னைப் பட்டணத்துக்கு மகாத்மா காந்தி வந்திருந்த போது, அவர் பக்கத்தில் நின்று விசிறிக் கொண்டிருந்தேன்” என்று அவர் தம் நண்பரிடம் சொல்லிப் பொறாமை மூட்ட முயல்கிறார் என்னுடைய பொறாமையைக் கிளப்பு முயன்று தோல்வியடைந்த இருவரைக் குறித்து மேலே சொன்னேனல்லவா? ஆனால், மற்றொரு சமயம் ஒரு நண்பர் இந்த முயற்சியில் வெற்றியடைந்தார். ‘திருச்சிக் லோகமான்ய திலகர் வந்திருந்தபோது நானும் கூட்டத்குப் போயிருந்தேன். திலகர் வருவதற்காக வழிவிட்டிதது. வழியின் பக்கத்தில் நின்றேன். திலகர் வந்த போது எல்லாரும் கைகூப்பி நின்றார்கள். நான் மட்டும் சட்டென்று குனிந்து, அவர் பாதங்களைத் தொட்டுக் கண்ணில் ஒத்தி கொண்டேன்” என்று அவர் சொன்னபோது, நான் உண்மையிலேயே அவரிடம் பொறாமை கொண்டேன்.

சென்ற வருஷம் நடந்த வேதாரண்யம் மகா நாட்டுக்கு நான் போயிருந்தேன். மகாநாடு முடிந்து ஜாகையிலிருந்து ஸ்டேஷனுக்குக் கிளம்பினேன். சாமான் எடுத்துவர ஆள் தேவையிருந்தது. ஜாகை வாசலிலிருந்த தொண்டரைப் பார்த்து, “போர்ட்டர் அகப்படுவானா?” என்று கேட்க எண்ணி, போர்ட்டர் என்று ஆரம்பித்தேன். இதற்குள் அத்தொண்டர் ‘போட்டோ எடுக்கப் போகிறார்களா?” என்று சொல்லிக்கொண்டு அவசரமாய் எழுந்து ஓடத்தொடங்கினார். அவரை நிறுத்தி இல்லை, இல்லை போர்ட்டர் வேண்டும்’ என்று செல்வதற்குப் பெரும் கஷ்டமாய்ப் போய்விட்டது. அத்தொண்டர் புகைப்படமெடுத்துக் கொள்வதில் இவ்வளவு ஆவல் காட்டிய காரணமென்ன; ‘பார்த்தாயா? வல்லபாய்க்குப் பக்கத்தில் நான் நின்று கொண்டிருக்கிறேன்’ என்று தம் நண்பர்களிடம் சொல்லி மகிழ்வதற்குத்தான். சென்னையிலே எனக்குத் தெரிந்த காங்கிரசு தொண்டர் ஒருவர் இருக்கிறார். அவர் வீட்டு மாடி முகப்பிலே தெருவில் போகிறவர்களுக்குத் தெரியும்படியாக சுமார் 200 புகைப்படங்கள் மாட்டியிருக்கின்றன. அவ்வளவு படங்களிலும் அத்தொண்டர் இல்லாத இடம் ஒன்றுகூடக் கிடையாது.

இவரைப்பற்றி நான் குறை சொல்வதாக நினைக்க வேண்டாம் தலைவர்கள் விஷயமென்ன? பத்திரிகையிலே படம் வருவதற்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் அதை நழுவவிடக்கூடிய தலைவர் ஒருவர் உண்டா? மிக அபூர்வம். சென்னையில் வாலிபர்கள் சங்கம் ஒன்று சில காலமாக வேலை செய்து வருகின்றது. இச்சங்க அங்கத்தினரின் படம் குறைந்தது மாதம் மூன்று தடவை பத்திரிகையில் வெளியாகி வருகின்றது. ஏனெனில், சென்னைக்கு வரும் எந்தப் பிரமுகருக்கும் ஒர் உபசார விருந்து நடத்தாமல் இவர் விடுவதில்லை. விருந்துக்காகப் புகைப்படமெடுக்கப் படுகிறதா, அல்லது புகைப்படமெடுப்பதற்காக விருந்து நடத்துகிறார்களா என்பது மட்டுந்தான் எனக்குச் சந்தேகமாயிருக்கிறது.

”எல்லாரையும் பற்றிச் சொல்லுகிறீரே? உம்முடைய சங்கதி என்ன?” என்று நீங்கள் கேட்கலாம். என்னுடைய சொந்தச் சங்கதி இரண்டொன்று சொல்லுகிறேன் கேளுங்கள் கொஞ்ச காலத்திற்கு முன்புதான் எனக்கு அறிமுகமான ஒருவர் இப்போது என் அத்தியந்த நண்பராயிருக்கிறார். அதன் காரணம் என்ன தெரியுமா? சொல்ல வெட்கமாயிருக்கிறது. அவர் ஒரு முறை, “நானும் எவ்வளவோ முயற்சி செய்து பார்க்கிறேன். உங்களைப் போல் எழுத முடியவில் லை’ என்று தெரிவித்தார். அப்படி என்னிடம் பொறாமை காட்டியதற்காக நான் அவரிடம் வெறுப்புக் கொண்டேனென்று நீங்கள் நினைக்கலாம் கிடையவே கிடையாது. அது முதல் அவரிடம் எனக்கு அபார அன்பு உண்டாகிவிட்டது.

மற்றொரு சமயம் நான் ரயில் ஏறினேன். வண்டியிலிருந்தவர்களில் ஒருவர் எனக்குக் கொஞ்சம் இடம் ஒழித்துக்கொடுத்தார். அவரை எனக்கு முன்பின் தெரியாது. அடுத்த ஸ்டேஷனில் நான் இறங்கியபோது அந்த மனிதர் பக்கத்திலிருந்தவரைப் பார்த்து, ‘அவர் யார் தெரியுமா?’ அவர்தான் ‘தமிழ்த் தேனீ என்று கூறியது என் காதில் விழுந்தது. (’தமிழ் தேனி’) என்ற பெயருடன் நான் சில காலம் எழுதியதுண்டு என்னும் குற்றத்தை ஒப்புக்கொண்டு விடுகிறேன். இராஜ நடையென்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என் வாணாளில் நான் எப்போதேனும் போலி இராஜ நடை நடந்ததுண்டானால் அந்தச் சமயத்தில் தானிருக்கவேண்டும். அன்று முழுவதும் அந்த மனிதர் யாராயிருக்கலாமென்றும், அவருக்கு எப்படி என்னைத் தெரியமென்றும் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

இத்தகைய அனுபவங்கள் தம் வாணாளில் கிடைய தென்று உங்களில் யாரேனும் நெஞ்சில் கை வைத்துக் கொண்டு சொல்ல முடியுமா? ஒரு நாளும் முடியாது. நீங்கள் ரயில் பிரானம் செய்கிறீர்கள், டிக்கட் பரிசோதகர் வந்து பக்கத்திலுள்ள குடியானவர்களிடம் டிக்கட் கேட்கிறார் உங்களை மாத்திரம் கேட்காமல் போகிறார். அப்போது உங்கள் கர்வம் ஓங்கி வளர்ந்து ரயில் கூரையைக்கூடப் பெயர்த்துவிட்டு மேலே கிளம்புவதில்லையா? ‘நம்மையெல்லாம் டிக்கட் கேட்க மாட்டார்கள். ஸார்! ஆசாமியைப் பார்த்தவுடன் தெரிந்து கொள்வார்கள்’ என்று எத்தனை சந்தோஷத்துடன் சொல்லுகிறீர்கள்? நம்முடைய சொந்தப் பெருமை மட்டுமல்ல, பிறருடைய சிறப்பைக்கூட நம்முடையதென நினைத்துக் கொண்டு சில சமயம் சந்தோஷமடைகிறோம். ‘நான் நேரில் பார்த்திருக்கிறேன்” என்ற பெருமைப் பேச்சைக் கேளாதவர் யார்? பார்த்தது மகாராஜாவின் தர்பாராயிருக்கலாம். காங்கிரஸ் மகாசபையாயிருக்கலாம்; பெருங்கலகம் நடந்த இடமாயிருக்கலாம்; காச் நகரமாயிருக்கலாம். தாஜ்மஹால் கட்டிடமாய் இருக்கலாம்: குற்றவாளியைத் தூக்குப் போட்ட சம்பவமாயிருக்கலாம்: பெரிய பாம்பு அடித்த இடமாயிருக்கலாம்; ஆகாய விமானமாயிருக்கலாம்; மோட்டார் விபத்தாயிருக்கலாம்; குதிரைப் பந்தயமாக இருக்கலாம். எதுவாயிருந்தாலும் ‘நான் நேரில் பார்த்தேன்’ என்று நீங்கள் பெருமையடித்துக் கொள்ளும் போது, மற்றவர்களுடைய, பொறாமையைக் கிளப்பவே விரும்புகிறீர்களென்பதை ஒப்புக்கொள்ளுவேன்.

நம்முடைய விஷயந்தான் இப்படியென்றால் நம்முடைய மனைவிமார், சகோதரிகள், குழந்தைகள் எல்லாரும் இதே நிலையில்தான் இருக்கிறார்கள். குழந்தை ராமு பள்ளிக்கூடத்திலிருந்து ஓடி வந்து, ‘அப்பா! எனக்கு பன்னிரண்டு மார்க்கு சீனுவுக்கு கோழி முட்டை!’ என்று உற்சாகம் ததும்பச் சொல்கிறான். தனக்கு 12 மார்க்குக் கிடைத்ததைவிடச் சீனு கோழிமுட்டை (பூஜ்யம்) வாங்கியதில்தான் அவனுக்கு அதிக சந்தோஷம். வீட்டில் சாதாரணமாயிருக்கும் பெண்கள் எங்கேயாவது வெளியில் போவதென்றால் ஒரு மணங்கு நிறையுள்ள பட்டுப்புடவையும் (இரவல் வாங்கியாவது,) அரை மணங்குக்குக் குறையாத நகைகளும் போட்டுக் கொண்டு கிளம்புவதேன்? மற்றப் பெண்களின் பொறாமையைக் கிளப்புவதற்குத்தான். உங்கள் சகோதரியாவது, மனைவியாவது அடுத்த முறை உங்களிடம் வந்து ‘கமலம் அசாத்திய ராங்கிக்காரி. அவளுடன் சகவாரமே உதவாது’ என்று சொல்லும்போது அதை அப்படியே நம்பிவிட வேண்டாம் உங்கள் சகோதரி அல்லது மனைவி பின் புடவை நகைகளைப் பற்றியோ, படிப்பு பாட்டுத் திறமைகளை பற்றியோ ஸ்ரீமதி கமலம் பொறாமைக் காட்டவில்லையென்று தெரிந்து கொள்ளுங்கள். கோபத்திற்குக் காரணம் அதுதான்.

கேவலம் மனிதர்களிடம் மட்டுமல்ல! இன்னும் உரிய இலட்சியங்களுக்காகப் பிறந்த மிருகங்களிடத்தில் கூட இந்தக் குண்ம் காணப்படுகின்றது. ஒரு சமயம் பிராணிக் காட்சிச்சாலை ஒன்றுக்குப் போயிருந்தேன். அங்கே ஒரு குரங்கும் ஒரு யானையும் மிகவும் சிநேகிதமாயிருந்தன. மற்ற குரங்குகள் யானையின் அருகில் போகவும் துணிவதில்லை. ஆனால், அந்த ஒரு குரங்கு மட்டும் யானையின் மேலேறியும், இன்னும் பலவிதமாகவும் விளையாடிக் கொண்டிருந்தது. இதைப்பற்றி அந்த குரங்குக்கிருந்த கர்வத்தைப் பார்த்து நான் மிகவும் வெட்கமடைந்தேன். ஏன் தெரியுமா? நம்மிடந்தான் இந்தத் துர்க்குன மென்றால், நமது மூதாதைகளான குரங்கு குலத்தினிடமுமா இது காணப்பட வேண்டுமென்ற எண்ண்ம். அந்தப் பொல்லாத குரங்கு யானையின் முதுகில் நின்று கொண்டு, மற்ற குரங்குகளைப் பார்த்துக் கெக்கிலி கொட்டிச் சிரித்தபோது
சாக்ஷாத் மனித அவதாரமே காணப்பட்டது. முதல் வகுப்பில் ரயில் பிரயாணம் செய்பவன் மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளை பார்ப்பது போலவும், சொந்த மோட்டாரில் போகிறவன் பாதசாரிகளை நோக்குவது போலவும், புதிதாய்த் திவான் பகதூர் பட்டம் பெற்றவன் மற்ற சாதாரண ஜனத்திரளைப் பார்ப்பது போலவும், அந்த மானங்கெட்ட குரங்கு தன் இனத்தைச் சேர்ந்த மற்றக் குரங்குகளைப் பார்த்தது. நிற்க,

இதுவரைக்கும் கூறியதிலிருந்து விளங்குவதென்ன? மனிதர்களுக்காககட்டும், மிருகங்களுக்காகட்டும், பிறருடைய பொறாமையைப் போல் மகிழ்ச்சி தருவது வேறொன்|றுமில்லை. பிறருடைய பொறாமையைக் கிளப்ப முடியாவிடில், அதைப் போல் துயரந் தருவதும் வேறு கிடையாது! ஆகவே உங்களுக்குச் சிநேகிதர்கள் வேண்டுமானால், பொதுவாக உலகில் நீங்கள் வெற்றிபெற வேண்டுமானால், ‘பொறாமைப்படுங்கள்’ என்று சொல்வேன்.
(கல்கியின் நகைச்சுவை கட்டுரைகளுக்கு நான் ரசிகன், அவரின் இக்கட்டுரை, ஏட்டிக்குப் போட்டி நூலில் இருந்து)

This entry was posted in நகைச்சுவை, வாசிப்பனுபவம், புத்தகங்கள் and tagged , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.