ஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர்கள்- 5 (ஆதித்யா மோகன்)

ஆதித்யாவின் இசைக்கு ஆட்டிசம் தடையில்லை!
ஆங்கிலத்தில்: மிருணாளினி சுந்தர்.                       தமிழில்: ரமேஷ் வைத்யா.

 

adidya2

ஆதித்யா மோகன் சிறு பிள்ளையாக இருந்தபோது எதையும் உணரத்தெரியாது. “நான் அவன் அம்மா என்பதையே அவன் புரிந்துகொண்டானா என்பது எனக்குத் தெரியாது” என்கிறார் ஆதித்யாவின் அம்மா ஜெயஸ்ரீ. அவரே தொடர்ந்து, “அவனால் பேச முடியவில்லை. எதையும் கிரகித்துக்கொள்ள முடியவில்லை. எப்போதும் பதற்றமாகவே இருப்பான். அவன் ஒரு ஆட்டிச நிலைக் குழந்தை” என்கிறார்.
ஆனால் இப்போது இந்த 24 வயது இளைஞர் ரசிகர்கள் முன்னிலையில் ஒரு மணி நேர கர்நாடக இசைக் கச்சேரி செய்ய முடிந்த ஓர் ஆள். ஆதித்யாவின் குடும்பமே இசைக்கும் கடவுளுக்கும் நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறது. இசையில் அவன் ஒரு மேதை. இதை நான் அவன் அம்மா என்பதால் சொல்லவில்லை. அவன் பிறந்து ஆறு மாதங்கள் ஆனபோதே பாடல்களை ஹம்மிங் பண்ணவும் பாடவும் ஆரம்பித்தான். இசை அவனுக்குள் இருந்தது. எங்களுடையது ஓர் இசைக்குடும்பம் என்றே சொல்லலாம். நானும் பாடுவேன். என் கணவரும் பாடுவார். ஓய்வு நேரங்களிலெல்லாம் இருவரும் அவனுக்குப் பாடிக்காட்டுவோம். அப்போதெல்லாம் நாங்கள் பாடுவதை நிறுத்திவிட்டால் நிரம்பப் பதற்றம் ஆகிவிடுவான். இசைதான் அவனை அமைதிப்படுத்தும். எனவே, அவனது இசை ஆர்வத்தைத் தெரிந்துகொள்ள நாங்கள் அதிகப்படியாகப் பிரயத்தனப்படவில்லை” என்கிறார் ஜெயஸ்ரீ.
இரண்டு வயதிலேயே ராகங்களை அடையாளம் காணத் தொடங்கினான் ஆதித்யா. சில வருடங்களாக அவர்கள் குடும்பம் மும்பையில் இருந்தது. அப்போதுதான் ஒரு சுபதினத்தில் ஆதித்யா பெற்றோரை ஆச்சரியப்படுத்தினான்.
ஜெயஸ்ரீ சொல்கிறார், “ என் கணவர் மும்பை சண்முகானந்தா ஹாலில் நடக்கும் இசை வகுப்பில் கலந்துகொள்வார். வகுப்புக்கு ஆதித்யாவையும் அழைத்துக்கொண்டு போயிருந்தோம். இசை ஆசிரியர் வீணையில் ஒரு ராகத்தை இசைத்தார். இவன் உடனடியாக அந்த ராகத்தின் ஆரோகணத்தைப் பாடியதோடு அது பைரவி ராகம் என்று சொல்லவும் செய்தான். அதைத் தொடர்ந்து என் கணவர் இவனுக்கு சாகித்தியங்களில் பயிற்சி கொடுத்ததோடு அதன் ஸ்வரங்களையும் சொல்ல ஆரம்பித்தார். அவனை ஏதேனும் ஒரு விஷயத்தில் ஈடுபடுத்தி வைப்பதற்காக இந்த இசைப் பயிற்சியை இருவரும் நாள் முழுதும் மேற்கொள்வார்கள்.”
ஆதித்யாவுக்கு மூன்று வயதானபோது ப்ரீத்தி சாகரின் நர்சரிப் பாட்டுகள் என்றால் அவனுக்கு ரொம்பச் செல்லம். அந்தப் பாட்டுகளைக் கேட்பான். கூடவே பாடவும் முயற்சிப்பான். படிப்பு என்றால் மட்டும் ஏதோ வித்தியாசமாக இருந்தது. “Z-யில் இருந்து ஆரம்பித்து A-யில் முடிப்பான். எண்களும் அப்படித்தான். பெரிதில் இருந்து சிறிது. ஆனால், எப்போதும் புதிதாக எதையாவது கற்றுக்கொள்ள விரும்பினான். தன் மூளைக்கு வேலை கொடுத்து, கற்றுக்கொள்ள எங்கள் கருத்தை எதிர்பார்த்தபடியே இருப்பான்.

ஏராளமான நேரத்தை அவனுக்கு புது விஷயங்களைக் கற்றுக்கொடுப்பதிலேயே செலவிட்டோம். ஏனெனில் அவனை பிஸியாக வைத்திருப்பது மிகவும் கடினமான காரியம்” என்கிறார் ஜெயஸ்ரீ. ஆறு வருடங்களுக்கு முன் கணவர் மோகனோடு சென்னைக்குப் பெயர்ந்துவந்தார் ஜெயஸ்ரீ.

adidya

இசைப் பயிற்சியை ஆதித்யா நிறுத்தவே இல்லை. இசையில் அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டி வந்தது. அவனது முதல் கச்சேரி அரங்கேறியபோது, அவனுக்கு 11 வயது. “ஒரு கச்சேரி ஏற்பாடு செய்து அவன் என்ன செய்கிறான் என்று பார்க்க நினைத்தோம். பிரமாதமாகப் பாடி எங்களுக்கு இனிய அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டான்” புன்னகைக்கிறார் ஜெயஸ்ரீ. அதிலிருந்து பல கோயில்களில் ஏராளமான கச்சேரிகளைச் செய்துவிட்டார் ஆதித்யா.

அவனுடைய குருவான ஏவிகே ராஜசிம்மனுக்குத்தான் நன்றி என்கிறார் ஜெயஸ்ரீ. “அவரால்தான் என் மகனைச் சரியாகப் புரிந்துகொள்ள முடிந்தது. நான்கு வகுப்புகளுக்கு அடுத்து என்னிடம், ‘ஆதித்யாவுக்கு கல்பனா ஸ்வரங்கள் எல்லாம் எப்படித் தெரிந்தது?’ என்று கேட்டார். இசையில் ஆதித்யா ஒரு மேதை, 2017 மார்ச்சில் இருந்து சபாக்களில் பாட ஆரம்பித்தான்.

முதல் கச்சேரி கிருஷ்ண கான சபாவில். அவ்வளவு பெரிய வித்வான்களோடு ஒரு கச்சேரி ஹாலில் இவன் பாடுவான் என்று நாங்கள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. இன்று சபாக்கள் அவனைப் பாட அழைக்கின்றன” அம்மாவின் சொற்களில் பெருமிதம்.

ஆட்டிச நிலைக் குழந்தைகளுக்குப் பொதுவாக நடத்தைப் பிரச்னைகள் இருக்கும். அச்சமயங்களில் சமாளிக்க முடியாத சிரமம் இருக்கும். தெரப்பி தேவைப்படும். “ரசிகர்கள் முன்னால் பாட வேண்டும் என்று ஆதித்யாவுக்கு நாங்கள் எந்த அழுத்தமும் கொடுத்ததில்லை. அவனிடம் நாங்கள் எந்த எதிர்பார்ப்பையும் வைத்துக்கொள்ளவில்லை. கடற்கரைக்கு அழைத்துப் போவோம். அலைகளுக்காகப் பாடச் சொல்வோம். இசையில் அவனுக்கிருக்கும் ஆர்வமே முக்கியம். மனிதர்களைச் சந்திப்பதிலோ கலந்துபோவதிலோ அவனுக்கு ஆர்வம் இல்லை. அதுவே அவன் இசையில் அதிகமாகக் கவனம் செலுத்த உதவிற்று என்று நினைக்கிறேன். எதிர்மறையான ஒரு விஷயம் வெற்றி பெற உதவிற்று என்று யூகிக்கிறேன்” இப்போதும்தான் புன்னகைக்கிறார் ஜெயஸ்ரீ.

 

நன்றி(செய்தியும், படமும் ): தி டைம்ஸ் ஆப் இந்தியா, ஏப் 12, 2017

This entry was posted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், இசை, கட்டுரை, தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம் and tagged , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.