காவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை

அறிவுசார் வளர்ச்சியில் குறைபாடுடைய பிள்ளைகள் தொலைந்துபோவதும் பின் கண்டுபிடிக்கப்படுவதும் தொடர்ந்து வரும் சூழ்நிலையில்தான் பிரவீன் இறந்து போனார்.

26 வயதான பிரவீன், சிறப்புகுழந்தைகளுக்கான பள்ளியான வித்யாசாகரில் படித்தவர். டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஹோட்டல் சவேராவின் உணவகத்தில் உதவியாளராக வேலையும் பார்த்து வந்தார். அவரைத் தினமும் காலையில் அம்மாவோ அப்பாவோ பேருந்தில் ஏற்றி, ஹோட்டல் வாசலில் இறங்கிவிட்டு விட்டுப் போவார்கள். அதே போல மாலையிலும் திரும்பி வந்து அழைத்துச்செல்வார்கள். இது அவர்களின் தினப்படி வழக்கம்.

கடந்த ஜனவரி 13ஆம் தேதி, காலையில் வழக்கம் போலப் பேருந்து நிறுத்ததில் பிரவீனும் அவர் அம்மாவும் நின்றிருந்தனர். அவர்கள் செல்லும் பேருந்து கூட்டமாக வந்தது. மகனைப் பின் வாசல் வழியாக ஏறச்சொல்லிவிட்டு, அம்மா முன்வாசல் வழியாக ஏறிவிட்டார். இரண்டு முன்று நிறுத்தங்கள் தாண்டியதும் கொஞ்சம் கூட்டம் குறைந்தபின்னர் பிரவீனைத் தேடினால் ஆளைக் காணோம். பஸ்ஸில் விசாரித்தால், அவர் ஏறவே இல்லை என்ற செய்தி தெரிகிறது. உடனடியாக அவர் கீழே இறங்கி, சாலையைக் கடந்து, பழைய இடத்திற்கு வந்தால் அங்கும் அவர் இல்லை. அக்கம்பக்கத்தில் விசாரித்தும் தேடியும் பார்த்தும் பயனில்லை. அவர் அடுத்து வந்த பேருந்தில் ஏறியதாக யாரோ சொல்ல, அதையும் ட்ரேஸ் செய்தும் கண்டு பிடிக்க முடியாமல் போக, செய்தித்தாள், வாட்ஸ் ஆப், பேஸ்புக் என அவர் காணாமல் போன தகவல் பறக்கிறது. காவல்துறையில் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டுவிட்டது. அவர்களும் நாலா பக்கமும் தேடுகின்றனர். ஆனால் பிரவின் கிடைக்கவில்லை.

நேரம் ஆக ஆகப் பசியால் பிள்ளை வாடிவிடுவானே என்ற கவலை பெற்றோருக்கு. அவர்களும், உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரும் தேடியபடியே இருந்தனர்.

தன் வீட்டு முகவரி எல்லாம் பிரவீனுக்குத் தெரியும். ஆனால் வலியப்போய் இன்னொருவரிடம், தான் தொலைந்து விட்டதாகச் சொல்லவோ, இதுதான் என் முகவரி அங்கே கொண்டுபோய்ச் சேருங்கள் என்றோ சொல்லத்தெரியாது.அவர் மட்டுமல்ல. அறிவுசார் வளர்ச்சியில் குறைபாடுடையே அனேகரும் இப்படித்தான் இருப்பர்.

அன்றைய இரவு மட்டுமல்ல தொடர்ந்து நான்கு நாட்கள் பிரவீன் பற்றிய எந்தத் தகவலும் இல்லாமல் அப்பெற்றோர் மிகுந்த மனவலிக்கு உள்ளானார்கள்.

16ஆம் தேதி, இவர்கள் சொல்லும் வயதொத்த இளைஞன் ஒருவனின் சடலம் மருத்துவமனையில் இருப்பதைக் கவனத்தில் கொண்ட காவல்துறை, அப்பெற்றோரை அழைத்து அடையாளம் காட்டச்சொல்கிறது. பதைபதைப்புடன் வந்த அவர்கள் இலகுவாகப் பிரவீனின் உயிரற்ற உடலை அடையாளம் கண்டுகொண்டனர். கதறி அழ.. அவர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

காணாமல் போன மறுநாள் 14ஆம் தேதி அதிகாலை 3 மணிக்குப் பசியும் உறக்கமுமின்றித் திக்குத்தெரியாமல் சாலையில் நடந்துகொண்டிருந்த பிரவீன் மீது தண்ணீர் லாரி மோதி, சம்பவ இடத்திலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டது. அடையாளம் காணமுடியாமல் அரசு மருத்துவமனையின் பிணவறையில் பிரவீன் கிடக்க, இது தெரியாமல் எல்லோரும் வீதிகளில் அவரைத்தேடி அலைந்துகொண்டிருந்தனர்.

இப்படி ஊருக்கு ஊர் சிறப்புக்குழந்தைகள் காணாமல் போவதும், அவர்களில் பலர் வீடுவந்து சேர்வதும் தினம் தினம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. சிலரது மரணமும் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கிறது..

முன்னமே சொன்னதுபடி, இப்படியான அறிவுசார் வளர்ச்சிக்குறைபாடு உடைய சிறு வயதுக் குழந்தைகள் காணாமல் போனால், சமூகத்தின் கண்களில் பளிச்செனப் பட்டுவிடுவர். அதே சமயம் பிரவீன் போலப் பாதிப்பு குறைந்தவர்கள் அதுவும் இளைஞர்கள் என்றால் பிறர் கண்களில் சந்தேகம் வராது. அவர்கள் அழுதாலோ, தகராறு செய்தாலோ அன்றிப் பிறர் கவனம் திரும்பாது.

தான் தொலைந்துவிட்டோம் என்பதைக்கூடச் சொல்லத்தெரியாமல் விடிய விடிய வீதிகளில் அலைந்துகொண்டே இருப்பார்கள். அவ்வளவுதான். நாமாகச் சென்று பேசினாலே ஒழிய அவர்கள் சிறப்பியல்பு குழந்தைகள் என்பதை நம்மால் அறிய முடியாது.

இந்நிலையில் இப்படிக் காணாமல் போகும் சிறப்புக்குழந்தைகளையும் இளைஞர்களையும் எதிர்கொள்ள நேர்ந்தால் எப்படி அடையாளம் காண்பது, கையாள்வது எப்படி என்று காவல்துறையினருக்கு ஓர் அறிமுக வகுப்பு நடத்தினால் என்ன என்று தோன்றியது.

இதுபற்றிப் பேராசிரியர் டி.எம்.என். தீபக்கிடமும், (டிச.3 இயக்கம்) நண்பர் ஐயன் கார்த்திகேயனிடமும் (ஆசிரியர், -முனைவு/ யூ டர்ன்) பேசினேன். இருவரும் சென்னை தியாகராயர் நகர் காவல் துணை ஆணையர் அரவிந்தனிடம் பேசினர். அவரும் பட்டறைக்கு இசைந்தார். அதன்படி கடந்த 07.04.2018 அன்று காலை 11 மணிக்கு, தி.நகர் காவல் துணை ஆணையர் அலுவகத்தில் இருந்த அரங்கில் அரும்பு அறக்கட்டளையின் சார்பில், “ ஆட்டிச நிலையாளர்களைப் புரிந்துகொள்வோம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு பட்டறை சிறப்பாக நடந்தது. தி.நகர் சரகத்திற்கு உட்பட்ட காவல்நிலையங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட ஆய்வாளர்களும், துணை ஆய்வாளர்களும் கலந்துகொண்டனர்.

பொதுவாக அறிவுசார் வளர்ச்சிக்குறைபாடு உடையோரின் மொழி, நடத்தை, உடல்மொழி போன்றவை எப்படி இருக்கும். எப்படி அவர்களைக் கையாள்வது என்பது போன்ற விபரங்களை மிகச்சிறப்பாக எடுத்துரைத்தார் மருத்துவர். தேவகி.

குறிப்புகளை எடுத்துக்கொண்ட காவலர்கள், தங்களின் சந்தேகங்களையும் கேட்டுத் தெளிவு பெற்றனர். மாற்றுத்திறனுடையோரின் உலகம் பற்றியும் நாம் அறிந்துகொள்வது அவசியம் என்பதால் இப்பட்டறைக்கு ஏற்பாடு செய்ததாகத் துணை ஆணையர் அரவிந்தன் தனது நன்றியுரையில் குறிப்பிட்டார். கிடைக்கும் வாய்ப்புகளில் தொடர்ந்து இதைப் பட்டறைகளை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்.

குறுகிய கால இடைவெளியில் இந்நிகழ்வினை மிகச்சிறப்பாக நடத்தி முடிக்க உதவிய பத்திரிக்கையாளர் ஐயன் கார்த்திக், அவரது நண்பர், பேரா. தீபக், பண்புடன் குழும நண்பர்கள் உதயன், தமிழ்ச்செல்வன் மற்றும் எப்போதும் போலத் துணை நிற்கும் மருத்துவர் தேவகி ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கிய துணை ஆணையர் அரவிந்தனுக்கும் அரும்பு அறக்கட்டளை தனது நன்றியை பதிவு செய்கிறது.

#ஆட்டிசம் #விழிப்புணர்வு #அரும்பு #ஆட்டிச_விழிப்புணர்வு#autism #awareness #ஆட்டிசம் #விழிப்புணர்வு

Via: https://www.facebook.com/arumbutrust/posts/1849593972004741

This entry was posted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், தன் முனைப்புக் குறைபாடு and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.