பிள்ளைத் தமிழ் 5

அறிந்தவர், தெரிந்தவர் வீட்டுப் பிள்ளைகளைக் கொஞ்சும்போது, சர்வ சாதாரணமாக நாம் கேட்கும் கேள்வி ‘என்னவாகப்போறே?’ என்பது. அந்தக் குழந்தையும், டாக்டர், கலெக்டர் என்று ஏதேனும் ஒரு பதிலைச் சொன்னதும், நாமும் பாராட்டிவிட்டு அடுத்தக் கேள்விக்குப் போவோம்.

அதே நேரம், நம் சொந்தக் குழந்தையை நோக்கி, நம்மில் எத்தனை பேர் அந்தக் கேள்வியை மனமாறக் கேட்கிறோம் என்று பார்த்தால், பலரிடம் பதில் இருக்காது. அப்படியே இருக்கும் என்றாலும், அக்குழந்தை சொல்லும் விஷயங்களை நாம் நம்பிக்கையோடு ஒப்புக்கொள்கிறோமா என்றெல்லாம் யோசித்துப் பார்த்தால், இல்லை என்றுதான் பெரும்பாலான பெற்றோர் ஒப்புக்கொள்ள நேரிடும்.

இங்கே, பெற்றோராகும் பலரிடம் ஒரு குணம் உருவாகிவிடுகிறது. குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது என்றும், நமக்கு மட்டும்தான் அவர்களின் நல்லது கெட்டது எல்லாவற்றையும் ஆலோசித்துத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு இருப்பதாகவும் நம்பிக்கொள்கிறோம்.

இப்படியாக, நாம் தயாரித்துத் தரும் ரெடிமேட் முடிவுகளுக்குள், குழந்தைகளால் நுழையமுடியாமல் போய்விட்டால், அது குழந்தைகளின் ஆளுமையையே பாதிக்கும் விஷயமாக மாறிவிடும் ஆபத்து இருப்பதை நாம் உணர வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன் என் நண்பரின் குடும்பத்தில் நடந்த கதை இது. அவருக்கு ஒரு மகள். நன்றாகப் படிக்கக்கூடியவள்தான். ஆனாலும், என்னவோ ப்ளஸ் 2-வில் மதிப்பெண் குறைந்துவிட்டது. நண்பரோ, அதற்காக சும்மா விட்டுவிடும் அளவுக்கு லேசுப்பட்டவர் இல்லை. தேடி அலைந்து, ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பணத்தைக் கொட்டிக்கொடுத்து, தான் உன்னதமானது என்று நினைத்த ஒரு துறையில் சீட் வாங்கி, அதில் பெண்ணைச் சேர்த்தும் விட்டார்.

கல்லூரியின் இரண்டாம் ஆண்டில் மகள் ஒரே புலம்பல். தினம் தினம் வீட்டில் சண்டை. எல்.கே.ஜி. செல்லும் பிள்ளைபோல, கல்லூரிக்குச் செல்லமாட்டேன் என்று அடம் வேறு. எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை என அவர் வருந்தியதைக் காண சகியாமல், ஓர் உளவியல் ஆற்றுப்படுத்துதலுக்கு (Psychological Counseling), வல்லுநர் ஒருவரிடம் அனுப்பிவைத்தேன்.

பெண்ணுக்கு, உணவக மேலாண்மை குறித்துப் படிப்பதில் ஆர்வம். பெற்றவர்களுக்கோ, பெண்ணை இன்ஜினீயர் ஆக்கியே தீர வேண்டும் என்ற ஆர்வம். நேரடியாகப் பெற்றோரை எதிர்த்துப் பேசும் வழக்கமே இல்லை என்பதால், ப்ளஸ் 2-வில் வேண்டுமென்றே குறைவான மதிப்பெண் எடுத்தபோதும், விடாமல் பெற்றோர் பணத்தைக் கொட்டி கல்லூரியில் சேர்த்துவிட்டிருக்கிறார்கள். தொடர் அழுத்தங்களைத் தாங்கமுடியாமல், அந்தப் பெண் சத்தியாகிரகத்தைக் கையில் எடுத்திருக்கிறார்.

அதன்பின், அதே கல்லூரியில் அவள் படித்துப் பட்டம் பெற்றதெல்லாம் தனிக்கதை. அதற்குள், அந்தப் பெற்றோருக்கும், அந்தப் பெண் குழந்தைக்கும் ஏற்பட்ட மன அழுத்தங்களைச் சொல்லி மாளாது.

எத்தனையோ விஷயங்களை, குழந்தைகளுக்காகப் பார்த்துப் பார்த்து திட்டமிடும் பெற்றோர்கள், அவர்களின் மனம் அறிந்து செயல்பட சில திட்டமிடல்களை, அவரவர் வசதிக்கு ஏற்ப வகுத்துக்கொள்ளுதல் அவசியம் என்றே நான் கருதுகிறேன். பதின்ம வயதை எட்டும்போதிலிருந்தே இத்திடமிடலை நாம் உருவாக்கிக்கொள்வது சிறந்தது.

  • குழந்தைகளோடு சேர்ந்து விளையாடுவது – அவர்களுடனான உறவை பலப்படுத்தவும், அவர்களின் ரசனை, ஆர்வம், தனித்திறன் போன்றவற்றைக் கண்டறியவும், விளையாட்டைப்போல உதவுவது வேறு எதுவும் இல்லை. எனவே, வாரத்தில் ஒன்றிரண்டு நாள்களாவது குழந்தைகளோடு விளையாடுவதைப் பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.
  • ஊக்குவியுங்கள் – எல்லாத் துறையிலும் குழந்தைகள் பங்கெடுப்பதை ஊக்குவியுங்கள். விளையாட்டுப் பயிற்சிகளோ, பாட்டு / வரைதல் என்று கலைத்திறனுக்கான வகுப்புகளோ, எதில் அவர்கள் ஆர்வம் காட்டினாலும், அவர்களைப் பங்குபெறத் தூண்டுங்கள். அதேநேரம், ஒரு வகுப்பில் சேர்த்திருக்கிறோம் என்பதாலேயே, அத்துறையில் குழந்தை விற்பன்னர் ஆகிவிட வேண்டும் என்று எதிர்பார்த்து, குழந்தைக்கு அழுத்தம் ஏற்படுத்தவும் கூடாது. அதனால், பரிசு, வெற்றி என்பதைவிட, கலந்துகொள்ளுதல் அவசியம் என்பதை உணருங்கள் / உணர்த்துங்கள்.
  • முன் முடிவு வேண்டாம் – இவள் / இவன் இவ்வளவுதான் என்ற முடிவை, குழந்தைப் பருவத்திலேயே எடுத்துவிடாதீர்கள். ஆரம்பக் கல்வியில் சுமாராகப் படித்த ஒருவர், பள்ளி இறுதி வரும்போது, படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து நல்ல மதிப்பெண் எடுக்கலாம். எனக்குத் தெரிந்த ஒரு பையன், ப்ளஸ் 2-வில்கூட சுமாரான மதிப்பெண்தான் எடுத்தான். ஆனால், அவனுடன் படித்த நண்பர்கள் எல்லோரும் பொறியியல் கல்லூரிக்குப் போனபோது, தான் மட்டும் கலை அறிவியல் கல்லூரிக்குப் போக நேர்ந்ததையே தனக்கான சவாலாக எடுத்துக்கொண்டு, இளங்கலை, முதுகலை இரண்டிலும் பல்கலைக் கழக அளவில் முதல் மதிப்பெண்ணும், தங்கப்பதக்கமுமாக வெளியேறினான். இன்று, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மிக உயர்ந்த பதவியில் இருக்கிறான். எனவே, யாரையும், எந்த நிலையிலும் இவ்வளவுதான் என்று முடிவு செய்துவிடக் கூடாது. அதிலும் பெற்றோர்களே, குழந்தையின் சிறு வயதிலேயே அப்படி முடிவெடுத்துப் பேசுவது, குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியைக் கண்டிப்பாகத் தடுக்கும்.
  • மனம் விட்டுப் பேசுங்கள் – பல இல்லங்களில், எப்போதுமே பெற்றோர் பேசுபவர்களாகவும், குழந்தைகள் கேட்பவர்களாகவும் இருக்கின்றனர். இது நல்ல வளர்ச்சிக்கு உகந்ததல்ல! பிள்ளைகளையும் பேசவிடுங்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும், புரிந்துகொள்ளவும் நீங்கள் எடுக்கும் முயற்சி, உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு மிகப்பெரிய பலமாக அமையும். அதை ஒவ்வொரு பெற்றோரும் உணர வேண்டும்.

  • ரசனையும், ஈடுபாடும், ஒவ்வொருவருக்கும் மாறுபடக்கூடியது. இதனை உணர்ந்துகொண்டால்.. பிள்ளைகளில் மகிழ்ச்சி மட்டுமல்ல, நம் ஓய்வுகாலமும் நிறைவானதாக இருக்கும்
This entry was posted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு, பதிவர் பட்டறை and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 3 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.