பிள்ளைத் தமிழ் 7

(கற்றல்குறைபாடு- தொடர்பாக)

பள்ளி செல்லும் பிள்ளைகளில் 10 முதல் 15 சதவீதம் பேர், விதவிதமான கற்றல் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இத்தகவலை, டிஸ்லெக்ஸியா அசோசியேஷன் ஆப் இந்தியா என்னும் அமைப்பு சொல்கிறது. இதுவொரு தோராயமான கணக்குதான் என்றாலும், என்னளவில் இது கண்டிப்பாக அதிகமாகவே இருக்கக்கூடும். ஏனெனில், நானே கற்றல் குறைபாடு உடையவன். நான் எந்த புள்ளிவிவரங்களுக்குள்ளும் சிக்காமல் வளர்ந்து வந்துவிட்டேன்.

இந்தக் கற்றல் குறைபாடு என்ற வார்த்தை, நிச்சயம் பலருக்கும் பரிச்சயமானதாகவும் அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஆனால் சுறுசுறுப்பான, பொதுஅறிவு மிக்க, புத்திசாலித்தனமான, அதே நேரம் மதிப்பெண்களோடு மட்டும் யுத்தம் நடத்தும் குழந்தைகளைச் சந்தித்திருப்பீர்கள், அல்லது நீங்களேகூட அவ்வாறான ஒருவராக இருக்கக்கூடும்.

அறிவுத்திறனில் பெரிய குறைபாடு ஏதும் இல்லாமல் ஆனாலும், வழக்கமான கற்றல் முறைகளின் வழி கற்றுக்கொள்ள மட்டும் சிரமப்படும் மாணவர்களின் சிக்கல்தான் இந்தக் கற்றல் குறைபாடு – Learning Disability.

*

இது ஒரு நோயல்ல! குறைபாடு மட்டுமே. எனவே, இதற்கு மருத்துவ சிகிச்சைகள் எதுவும் தேவையில்லை. தேவையானதெல்லாம், அன்பும், பரிவுடன் கூடிய புரிதலும் மட்டுமே. கற்றுத்தரும் முறையில் சில அடிப்படை விஷயங்களை மாற்றிக்கொண்டாலே, இக் குறைபாடு உள்ள குழந்தைகளையும் நன்கு படிக்கவைத்துவிட முடியும்.

கண்டறிவது!

இக்குழந்தைகளை எப்படி அடையாளம் காண்பது? உலகம் முழுவதும் அதற்கென சில வரைமுறைகளை உருவாக்கி வைத்துள்ளனர். உங்கள் குழந்தையிடம், கீழ்க்காணும் அறிகுறிகள் தொடர்ச்சியாகத் தென்பட்டால், உடனடியாக உரிய நிபுணர்களைத் தொடர்புகொண்டு மதிப்பீடு செய்வது நல்லது. இதில், நாம் எவ்வளவு விரைவில் நம் குழந்தையின் குறைபாட்டைப் புரிந்துகொண்டு, கற்பித்தல் முறைகளை மாற்றிக்கொள்கிறோமோ, அவ்வளவுக்கு குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லது.

 • பிள்ளைகள் எழுதும்போது, அதிகப்படியான எழுத்துப் பிழைகள்..
 • இடவல வரிசையைப் புரிந்துகொள்வதில் குழப்பம்..
 • மோசமான கையெழுத்து..
 • எழுதும்போது, எழுதுகோலை வழக்கத்துக்குமாறாகப் பிடித்துக்கொள்ளுதல்..
 • ஒன்றுபோலத் தோன்றும் எழுத்துகளையோ வார்த்தைகளையோ மாற்றிப் படிப்பது / எழுதுவது. (உதாரணமாக, b என்னும் எழுத்தை d என்று படிப்பது, no என்னும் வார்த்தையை on என்று படிப்பது.. இப்படி).
 • ஒரே வார்த்தையை, பல்வேறு எழுத்துப் பிழைகளுடன் ஒவ்வொரு முறையும் மாற்றி எழுதுவது..
 • கணிதம், தர்க்கம் போன்றவற்றைப் புரிந்துகொள்ள சிரமப்படுவது..
 • எண்களையும் இடவலமாக மாற்றி எழுதுவது, அல்லது படிப்பது (59 என்பதை 95 என்று புரிந்துகொள்வது)..
 • மணி பார்க்கக் கற்றுக்கொள்வதில் சிரமம்..
 • காலம் சார்ந்த சொற்களை சரியாகப் புரிந்துகொள்ள முடியாமை (நேற்று, இன்று, நாளை போன்ற விஷயங்களைக் குழப்பிக்கொள்ளுதல்)..
 • அதிகப்படியான ஞாபக மறதி..
 • மறதி காரணமாக, அடிக்கடி பொருள்களைத் தொலைப்பது..
 • நுட்பமான வேலைகளைச் செய்வதில் சிரமம் – ஷு லேஸ் கட்டுவது, மணி கோர்ப்பது போன்ற செயல்களை, சொல்லித் தந்தாலும் செய்யமுடியாமல் போவது..
 • வழக்கமான நேர அட்டவணையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அதை ஏற்றுக்கொள்வதில் சிரமம்..
 • ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளை அடுத்தடுத்துச் சொன்னால் குழம்புவது..
 • பள்ளிக்குப் போக மறுத்து அடம் பிடிப்பது..

மேற்குறிப்பிட்ட சிக்கல்கள் உங்கள் குழந்தைகளிடம் அடிக்கடி காணப்பட்டால், உடனடியாக அவர்களைத் தகுந்த நிபுணர்களிடம் அழைத்துச் சென்று மதிப்பீடு செய்துகொள்ளுங்கள்.

மாத்தி யோசி!

கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளை, பொதுவாக சோம்பேறித்தனம் அல்லது திமிரின் காரணமாக படிப்பில் அலட்சியம் காட்டுவதாக தவறாகப் புரிந்துகொண்டுவிடுவது நம் வழக்கம். அதன் காரணமாக, இக்குழந்தைகளைத் தொடர்ச்சியாக பள்ளியிலும் வீட்டிலும் திட்டிக்கொண்டே இருப்பது, அவர்களின் ஆளுமையையே மாற்றிவிடும். தங்களின் இயலாமை, அதைப் புரிந்துகொள்ளாத வீட்டு/பள்ளிச் சூழல் போன்றவற்றால், இக்குழந்தைகள் கல்வியின் மீதே ஆர்வம் இழந்துவிடுவர்.

இந்தச் சூழலைக் கையாள, பெற்றோரும் ஆசிரியர்களும்தான் முயற்சிக்க வேண்டும். ஒரு குழந்தை படிப்பில் சுணங்கினால், அதன் பின்னணியில் இப்படியான குறைபாடுகள் இருக்கக்கூடுமோ என்பதே, முதல் சந்தேகமாக இருக்க வேண்டும். அதை விடுத்து, அக்குழந்தைகளைக் கடுமையாகத் திட்டுவதும், அடிப்பதும், ஒருபோதும் நல்ல தீர்வைத் தராது.

அதேநேரம், கற்றல் குறைபாடு என்பது மிகவும் மோசமான ஒரு விஷயம் என்று நினைக்கத் தேவையில்லை. இக்குறைபாடு உள்ள குழந்தைகளுக்குப் பெரும்பாலும் கலை, விளையாட்டு போன்ற துறைகளில் நல்ல ஆர்வம் இருப்பதைக் காண முடியும். அவர்களின் தனித்திறனைக் கண்டறிந்து ஊக்குவிப்பதன் மூலம், அவர்களை வாழ்வில் முன்னேற்றவும் முடியும்.

நம்பிக்கை மனிதர்கள்

கற்றல் குறைபாட்டுடன், சாதனையாளர்களாகத் திகழ்ந்தவர்கள் எண்ணற்றவர்கள். அவர்களில் சிலரைத் தெரிந்துகொள்வது நமக்கு நம்பிக்கையூட்டக்கூடும்.

 • லியனார்னோ டாவின்சி (பல்துறை வித்தகர்)
 • பிகாஸோ (ஓவியர்)
 • அகதா கிறிஸ்டி (நாவலாசிரியர்)
 • மேஜிக் ஜான்சன் (அமெரிக்க கூடைப்பந்து வீரர்)
 • ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (ஹாலிவுட் இயக்குநர்)
 • டாம் குரூஸ் (ஹாலிவுட் நடிகர்)
 • பொமன் இரானி (ஹிந்தி நடிகர்)

வகைகள்

கற்றல் குறைபாடு என்பது பல்வேறு வகைக் குறைபாடுகளுக்கான பொதுப் பெயர். (Spectrum Disorder). இதில் உள்ள பல்வேறு வகைக் குறைபாடுகளில் சில இங்கே..

 1. டிஸ்லெக்ஸியா – மொழித்திறன் குறைபாடு (Dyslexia)

மொழி சார்ந்த கற்றல் குறைபாடான இதில், எழுதுவது, படிப்பது, படித்ததை புரிந்துகொள்வது, மனத்தில் பதித்துக்கொண்டு, பின் தேவைப்படுகையில் நினைவுகூர்வது போன்ற திறன்கள் பாதிக்கப்படலாம்.

 1. டிஸ்கால்குலியா – கணிதத் திறன் குறைபாடு (Dyscalculia)

எண்களையும், கணிதக் குறியீடுகளையும் புரிந்துகொள்வதில் இருக்கும் சிக்கல். இவர்களுக்கு, கடிகாரத்தில் மணி பார்ப்பது போன்ற எண்கள் சம்பந்தப்பட்ட சிறு செயல்களில்கூட சிரமம் இருக்கும்.

 1. டிஸ்கிராபியா – வரைகலைத் திறன் குறைபாடு (Dysgraphia)

எழுதும் திறனில் ஏற்படும் சிக்கல். எழுத்துப் பிழைகள், போதுமான இடைவெளி விட்டு எழுத முடியாமை, மிகவும் பெரிதாகவோ அல்லது மிகவும் சிறியதாகவோ எழுதுவது, காகிதத்தில் இருக்கும் இடத்தை சரியாகத் திட்டமிடாது எழுதுவது என இதிலும் பலவகைகள் உண்டு.

 1. டிஸ்ப்ராக்ஸியா – தொலைவு உணரும் திறன் குறைபாடு (Dyspraxia)

இது, தசைகளை ஒருங்கிணைப்பதில் வரும் ஒருவகைச் சிக்கலாகும். இதன் காரணமாக, நடமாட்டம், ஒத்திசைவு, சமநிலை பேணுவது, உட்காரும் விதம் போன்றவற்றில் இவர்களுக்குத் தடுமாற்றம் இருக்கும்.

 1. கேட்பதை உள்வாங்கும் திறன் குறைபாடு (Auditory Processing Disorder – APD)

காதில் கேட்கும் ஒலிகளை சரியாக உள்வாங்கிப் புரிந்துகொள்வதில் இருக்கும் இயலாமை. ஒலி அளவு அதிகமாக இருந்தாலும், உச்சரிப்புத் தெளிவாக இருந்தாலுமே, இவர்களால் கேட்கும் வார்த்தைகளைச் சரியாக உள்வாங்க முடியாது. இது காது கேளாமை (செவிட்டுத்தன்மை) அல்ல; காதில் விழும் ஒலியைப் பிரித்தறியும் மூளையின் திறனில் உள்ள குறைபாடு இது.

 1. பார்வைப் புலனுணர்வு சார்ந்த கற்றல் குறைபாடு (Visual Perceptual / Visual Motor Deficit)

பார்ப்பது, வரைவது, படியெடுப்பது போன்றவற்றில் ஏற்படும் இவ்வகைச் சிக்கல்கள், கண்கள் மூலம் கிடைக்கும் தகவல்களை மூளை புரிந்துகொள்வதில் ஏற்படும் சிக்கலால் உருவாகிறது. ஒரே மாதிரி தோன்றக்கூடிய எழுத்துகள், வடிவங்கள் போன்றவற்றைக் குழப்பிக்கொள்வது, கண்ணுக்கும் கைக்குமான ஒத்திசைவில் சிக்கல்கள், பேனாவையோ பென்சிலையோ மிக அதிக அழுத்தத்துடன் பற்றிக்கொள்வது, பொருள்களைப் பிடிப்பது, வெட்டுவது போன்றவற்றில் சிரமம் என இவ்வகைக் குறைபாடு உடையோர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பலவிதம்.

இக்குறைபாட்டினை எப்படிக் கையாள்வது? குழந்தைகளுக்கு என்ன மாதிரி உதவிகள் செய்து, அவர்களை இதிலிருந்து மீண்டெடுப்பது குறித்தெல்லாம், அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

(தொடரும்)

This entry was posted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு, பிள்ளைத்தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *