சிறார் இலக்கியத்தில் மாற்றுத்திறனாளிகள்

பொதுவாக கலை மக்களுக்காக என்னும் எண்ணமுடையவன் நான். அது எந்த வடிவத்தில் இருந்தாலும் அதில் மக்களுக்கான விஷயங்கள் பேசப்படவேண்டும் என்னும் பிரங்ஞையுடன் செயலாற்ற முனைபவன். சிறுவர் இலக்கியத்திலும் கூட எனது நிலைபாடு அதுதான்.

சிறார் இலக்கியத்தில் வாசிப்பு இன்பத்திற்காக மட்டுமே கதைகள் எழுதப்பட வேண்டும் என்பதையோ, அறிவுரைகளே வரக்கூடாது என்பதிலோ எனக்கு உடன்பாடில்லை.

அதே நேரம் நேரடியான பிரச்சாரக் கதைகள் இன்றைய குழந்தைகளுக்கு சற்று அலுப்பூட்டும் என்பதையும் உணர்ந்தே இருக்கிறேன். கதையின் முடிவில் இக்கதையினால் அறியப்படும் நீதி யாதெனின் என்ற பாடப் புத்தகத் தொனியும் தேவையில்லைதான்.

ஆனால் கதைகளினூடாக விழுமியங்கள், குடிமைப் பண்புகள் குழந்தைகளுக்கு சொல்லித்தரப்படுவது மிகவும் அவசியம் என்பதே என் கொள்கை.

எனது சிறுவயதில் குப்பைகளை குப்பைத்தொட்டியில் தான் போடவேண்டும் என்றும் சாலையில் வீசி எறியக்கூடாது என்றும் கதைகளின் வழி படித்திருக்கிறேன். இன்றும்கூட சாக்லேட் மாதிரியாவனைகளை பயணங்களில் சாப்பிட்டால்கூட அந்த கவர்களை சேர்த்து எடுத்து வந்து குப்பைத் தொட்டியில்தான் போடுகிறேன்.

இன்றைய இளைஞர்களும், வளரிளம் பருவத்தினரும் குடிமைப் பண்புகளைக் கைவிட்ட ஒரு தலைமுறையாக மாறி நிற்பது என்பது கடந்த பல ஆண்டுகளாக குழந்தைக் கதைகளில் எவ்வித விழுமியங்களும் பேசப்படுவதில்லை என்பதன் விளைவுதான். (சிக்னலில் நிற்காமல் செல்வது, வரிசை ஒழுங்கை மதிக்காமல் இருப்பது போன்றவை உதாரணங்கள்)

கதைகளில் அறிவுரைகள் வேண்டாம் சரி, ஆனால் சகமனிதனை மதிக்கும் குடிமைப் பண்புகள் கூட இல்லாமல் போனால் எப்படி? குடிமைப்பண்புகள் அற்றவர்களாக இன்றைய பல குழந்தைகள் வளருவதற்கு அறிவுத்தளத்தில் இயங்குகின்ற எல்லோருக்குமே பங்கு உண்டு.

ஒரு முறை, குழந்தைகள் நல உளவியலாளர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது குழந்தைகளின் நடத்தை சிக்கல் பற்றி பேச்சு திரும்பியது. குழந்தைகளுக்கு எப்படி கவுன்சிலிங்க் கொடுப்பீங்க என்ற போது, அவர் சிரித்து விட்டு குழந்தைகளுக்கு மனதில் பதியும்படி எதைச் சொல்ல வேண்டுமானாலும் ஒரே வழிதான் உள்ளது – காலகாலமாக நம்மிடம் இருக்கும் கதை சொல்லல்தான் அந்த வழி. எனவே நல்லது கெட்டது எதுவானாலும் அவர்களுக்கு கதைகள் மூலம் சொல்லித்தான் அவர்களின் நடவடிக்கைகளை நாம் மாற்ற முடியும் என்றார்.

இதனை இங்கு சொல்லக்காரணம், சிறுவர் கதைகளும் அதில் விழுமியங்களும் எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்தவே..

சரி நண்பர்களே! நாம் இப்போது தலைப்பிற்குள் போவோம்.

எனது சிறுவயதில் இங்கொன்றும் அங்கொன்றுமாக சில சிறார் கதைகளில் மாற்றுத்திறனாளி பாத்திரப்படைப்புகளைப் படித்துள்ளேன். ஆனாலும் கூட அவை எல்லாம் இன்றைய நமது புரிதலில் பார்த்தோமேயானால் சொல்லிக்கொள்ளும்படி இருந்ததில்லை.

சிறார் கதைகளில் முந்தைய படைப்பாளிகளுக்குப் பின் வந்த இன்றைய நவீன படைப்பாளர்களில் பலரும் கொஞ்சம் விஸ்தாரமான பார்வையோடு உள்ளனர். மாற்றுத்திறனாளி பாத்திரப்படைப்புகளை நேரடியாக கொண்டுவரும் முயற்சிகள் குறைவு என்றாலும் பிறமொழியில் வந்துள்ள படைப்புகள் தமிழுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இங்கே இன்னொன்றையும் குறிப்பிட்டுச்சொல்லவேண்டும் என நினைக்கிறேன். சிறார் இலக்கியத்தில் உலக அளவில் ஆங்கிலம், ஜெர்மன் போன்ற மொழியில் மாற்றுத்திறனாளி பாத்திரப்படைப்புகள் கொண்ட அனேக படைப்புகள் வந்துள்ளன./ வருகின்றன. இந்தியாவில் தமிழை விட, மலையாளம், பெங்காலி, இந்தி, இந்திய ஆங்கிலம் போன்ற மொழிகளில் தொடர்ச்சியாக பல படைப்புகள் வந்துகொண்டே உள்ளன.

அப்படி ஒன்றுதான் சுஜாதா பத்மநாபன் எனும் சிறப்புக் கல்வியாசிரியர் ஒருவர், ஆங்கிலத்தில் எழுதிய கதையான – ஸ்கூலுக்குப் போகிறாள் சுஸ்கித்.

வீல்சேரில் இருக்கும் குழந்தை பள்ளிக்கூடம் செல்ல ஆசைப் படுகிறது. கரடு முரடான பாதையை செப்பனிட்டு, அவளை ஆசிரியரின் உதவியுடன் பள்ளிக்கு அழைத்துச்செல்வதுதான் கதை.

(கதைச்சுருக்கம்)

இக்கதை இந்திய அளவிவில் மிகவும் பிரபலமான கதையை அண்ணன் உதயசங்கரின் சிறப்பான மொழிபெயர்ப்பில் தமிழில் புக்ஸ்பார் சில்ட்ரன் வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் என்.சி.ஆர்.டி நிறுவனம் இதனை 4ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடநூலிலும் சேர்த்துள்ளது.

^^^

இப்போ இன்னொரு கதை. பவனாமேனன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதியதை தமிழுக்குத்தந்தவர் எழுத்தாளர் என்.சொக்கன்.

காடு உங்களை வரவேற்கிறது (கதை சுருக்கம்)

https://storyweaver.org.in/v0/stories/download-story/36727-kaadu-ungalai-varaverkkirathu.pdf

^^^^^

நம்மில் பலருக்கும் கிரிக்கெட் விளையாட்டு தெரியும். பெண்கள் கிரிக்கெட்டர்ஸ் பற்றியும் தெரிந்திருப்போம். பார்வைக் குறைபாடுடையவர்களுக்கான கிரிக்கெட் பற்றியும், அதில் போட்டிகள் நடப்பது பற்றி அறிவோமா? நம் பிள்ளைகளுக்கு அதுபற்றி சொல்லிக்கொடுத்திருப்போமா?

அக்குறையைப் போக்குகிறது, “தயாரா? ஆம்! விளையாடு!” என்னும் நூல்.  அருந்ததி நாத் என்பவரின் ஆங்கிலக்கதையை தமிழில் ராஜம் ஆனந்த் என்பவர் மொழிபெயர்த்துள்ளார். (கதைச் சுருக்கம்)

https://storyweaver.org.in/v0/stories/download-story/44719-thayaara-aam-vilaiyaadu.pdf

’காடு உங்களை வரவேற்கிறது’,  â€™ தயாரா ஆம்! விளையாடு’ ஆகிய கதைகளை ப்ரதம் புக்ஸ் வெளியிட்டுள்ளது. இவை இணையத்திலேயே கூட இலவசமாக வாசிக்கக் கிடைக்கின்றன.

+++++++++++++++

மொழிபெயர்ப்பு கதைகள் போதும் என எண்ணுகிறேன். சிறுவர் இலக்கியத்தில் நிறைய பொழிபெயர்ப்பு பணியைச் சிறப்பாகச் செய்துள்ள அண்ணன் யூமாவாசுகியின் நேரடி சிறார் நாவல், “தூய கண்ணீர்” சிறப்பாக வந்துள்ள முக்கியமான படைப்பு. பதின்மர் இளக்கிய வகைமைக்குள் வரக்கூடிய நூல் இது. (தன்னறம் பதிப்பகம் வெளியீடு)

(கதைச் சுருக்கம்)

^^^^^^^^^^^^

இங்கே இன்னொரு படைப்பையும் சுட்டிக்காட்டவேண்டிய தேவை உள்ளது. எழுத்தாளர் க.சீ.சிவக்குமார் அவர்களின் மகள் ஸ்வேதா சிவசெல்வி எழுதிய ‘பயங்களின் திருவிழா’ சிறார் நாவலை தமிழுக்கு தந்தவர் அண்ணன் உதயசங்கர்.

இதுவொரு அட்வென்சர் டைப் சிறார் நாவல். ஒரு திகில் பூங்காவிற்கு செல்லும் சிறார் பட்டாளம் சந்திக்கும் சவால்கள், திகிலும்தான் கதை. இதில் வாய்பேசமுடியாத ஒரு பாத்திரம் கதை முழுக்கவே மற்ற சிறார்களுடன் பயணிக்கும் படி கதையை எழுதி இருப்பார் ஸ்வேதா.

மாற்றுத்திறனாளிகளின் வலியை வேதனையை பேசும் கதைகளின் தேவை எவ்வளவுக்கெவ்வளவு இருக்கிறதோ.. அதே அளவு இதர கதைகளிலும் அவர்களின் பிரதிநிதித்துவமும் தேவையாக இருக்கிறது. அதனை ‘பயங்களின் திருவிழா’ சிறப்பாகச் செய்துள்ளது.

^^^

நானும் கூட மாற்றுத்திறனுடைய பாத்திரங்களை உள்ளடக்கிய படைப்புக்களை, “சந்துருவுக்கு என்னாச்சு?”,  â€à®¤à¯à®²à®•à¯à®•à®®à¯â€ என பெரியவர்களுக்கும், இளையோருக்கான கதைகளில் ’தலைகீழ் புஸ்வாணம்’, ’சேர்ந்து விளையாடுவோம்’,  à®…டுத்து வரவிருக்கும் ’பூமிக்கடியில் ஒரு மர்மம்’ ஆகிய நூல்களில் படைத்துள்ளேன்.

நான் இங்கே வைக்கும் கோரிக்கையே, சிறார் படைப்பாளிகள் எல்லோரும் அவரவர் கதைகளில், நாயகனாக இல்லாவிட்டாலும்  à®•à¯‚ட ஒரு பாத்திரமாகவாவது மாற்றுத்திறனுடையோர் வரும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து இப்படி அனேக படைப்புகளில் மாற்றுத்திறனுடையோர் பாத்திரங்களாக படைக்கப்படும்போது மட்டுமே,  à®µà®³à®°à¯à®®à¯ அடுத்த தலைமுறையினர் மாற்றுத்திறனுடையோரை அன்னியமாகப் பார்க்காத பார்வையும் ஸ்னேகப்பூர்வமான புன்னகையுடனும் அவர்களை இணைத்துக்கொண்டு பயணப்படுவர் என்பதே நிதர்சனம். இதுவே எனது வேண்டுகோளும்!

வாய்ப்புக்கு நன்றி வணக்கம்!

++++++++++++++++

பரிந்துரை நூற்பட்டியல் (இது முழுமையானது அல்ல. என் பார்வைக்கு பட்டு, நான் வாசித்தவை மட்டுமே!)

  1. ஸ்கூலுக்கு போகிறாள் சுஸ்கித் – சுஜாதா பத்மநாபன், தமிழில் உதயசங்கர்,ஓவியம் : ஜோதி ஹிரேமத் – பாரதி புத்தகாலயம்

2.காடு உங்களை வரவேற்கிறது – பாவனா மேனன், தமிழில்: என்.சொக்கன், ஓவியம்: Kavita Singh Kale , Pratham Books

  1. தயாரா? ஆம்! விளையாடு! – அருந்ததி நாத்,தமிழில்: ராஜன் ஆனந்த், ஓவியம்: ப்ரியங்கா குப்தா, Pratham Books
  2. சேர்ந்து விளையாடுவோம் – யெஸ்.பாலபாரதி, Pratham Books
  3. தூய கண்ணீர் – யூமா வாசுகி , தன்னறம் வெளியீடு
  4. பயங்களின் திருவிழா – தமிழில்: உதயசங்கர்
  5. சந்துருவுக்கு என்னாச்சு – யெஸ்.பாலபாரதி, பாரதி புத்தகாலயம்
  6. துலக்கம் – யெஸ்.பாலபாரதி – விகடன் பதிப்பகம்
  7. தலைகீழ் புஸ்வாணம் – யெஸ்.பாலபாரதி, வானம் பதிப்பகம்
  8. பூமிக்கு அடியில் ஒரு மர்மம் – யெஸ்.பாலபாரதி, வானம் பதிப்பகம் (2020 வெளியீடு)

+++++++++++++++++++

சிறார் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட (03.10.2020) ஜூம் மீட்டிங்கிள் ஆற்றிய உரையின் சுருங்கிய எழுத்துவடிவம்.

This entry was posted in கட்டுரை, சிறுவர் இலக்கியம், வாசிப்பனுபவம், புத்தகங்கள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 3 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.